சைக்கிளில் உலகை வலம் வந்த முதல் மனிதர் இந்தியா பற்றி கூறியது என்ன?

பட மூலாதாரம், Corbis/Getty Images
ஜூல்ஸ் வெர்ன் எழுதிய புகழ் பெற்ற நாவலான '80 நாட்களில் உலகைச் சுற்றி' (Around the World in 80 Days) வெளியாகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஆங்கிலேயப் பயணி ஒருவர் உலகைச் சுற்றி வர முடிவு செய்தார்.
அந்த நாவலில் வரும் கதாபாத்திரம் ரயில் மற்றும் கப்பலில் பயணம் செய்ததைப் போல இல்லாமல், தாமஸ் ஸ்டீவன்ஸ் தனது பயணத்திற்கு ஒரு மிதிவண்டியைப் (சைக்கிள்) பயன்படுத்த முடிவு செய்தார்.
அவரது பயணம் 1884-இல் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. வீடு திரும்பியதும், 'மிதிவண்டியில் உலகைச் சுற்றி' (Around the World on a Bicycle) என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதினார்.
உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த இந்தப் புத்தகத்தில், வட அமெரிக்க கண்டம், ஐரோப்பா மற்றும் ஆசியா வழியாகப் பயணித்தபோது தான் பார்த்தவற்றைப் பற்றி அவர் விரிவாக எழுதியிருந்தார்.
முதல் இலக்கு - வட அமெரிக்கா
இங்கிலாந்தில் பிறந்த ஸ்டீவன்ஸ், 1871-இல் தனது 17-வது வயதில் அமெரிக்காவில் குடியேறினார். அவர் ஒரு விளையாட்டு வீரர் அல்ல, ஆனால் மிதிவண்டி ஓட்டுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் சைக்கிள் ஓட்டுவது பணக்காரர்களின் ஒரு பொழுதுபோக்காகக் கருதப்பட்டது.
அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் ஐசன்பெர்க்கின் கூற்றுப்படி, ஸ்டீவன்ஸை இவ்வளவு பிரபலமாக்கியது என்னவென்றால், "அவர் ஒரு சாதாரண மனிதர். ஆனாலும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் தன் இலக்கை எட்டி அவர் சாதித்துக் காட்டினார்".
ஆரம்பத்தில், வட அமெரிக்க கண்டத்தைக் கடப்பதுதான் ஸ்டீவன்ஸின் இலக்காக இருந்தது. அதை அவர் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பாஸ்டன் வரை மிதிவண்டியில் ஐந்து மாதங்களில் கடந்து முடித்தார்.
இந்தப் பயணத்திற்குப் பிறகு, பிரபலமான சைக்கிளிங் இதழ் ஒன்று அவருக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்க முன்வந்தது. இதனால் தனது பயணத்தை உலகம் முழுவதும் தொடர அவர் முடிவு செய்தார்.
ஏப்ரல் 1884-இல் அவர் சிகாகோவிலிருந்து இங்கிலாந்துக்குக் கப்பலில் பயணம் செய்தார். ஐரோப்பிய கண்டத்தைக் கடந்த பிறகு, அவர் துருக்கி, இரான், இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் வழியாக மிதிவண்டியில் சென்றார்.
ஸ்டீவன்ஸின் மிதிவண்டி இன்றைய மிதிவண்டிகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது. அது 'பென்னி ஃபார்திங்' (penny farthing) எனப்படும் ஒரு கனமான மாடல். அதன் முன் சக்கரம் மிகவும் பெரியதாகவும், பின் சக்கரம் மிகவும் சிறியதாகவும் இருக்கும்.
உள்ளாடைகள், ஒரு துப்பாக்கி, கூடாரமாகப் பயன்படுத்த ஒரு போர்வை, மற்றும் ஒரு மாற்றுச் சக்கரம் போன்ற சில அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே அவர் தன்னுடன் எடுத்துச் சென்றார்.

பட மூலாதாரம், Prisma/UIG/Getty Images
இஸ்தான்புல்லில் கிடைத்த அனுபவங்கள்
ஸ்டீவன்ஸ் 1885 கோடைகாலத்தில் இஸ்தான்புல்லைச் சென்றடைந்தார். ரமலான் மாதம் முழுவதும் காலட்டா என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார்.
இஸ்தான்புல் நகரை உலகின் "மிகப்பெரிய பன்முக கலாச்சார நகரங்களில் ஒன்று" என்று வர்ணித்த அவர், அங்குள்ள மக்கள், வீதிகள் மற்றும் நாகரிகம் ஆகியவற்றின் பன்முகத்தன்மையைக் குறிப்பிட்டார். காபி கடைகளின் வெளிச்சத்தில் மட்டும் தெரிந்த சிறிய சந்துகள் மற்றும் மக்கள் கைகளில் விளக்குகளுடன் நடந்து செல்லும் இரவு நேரக் காட்சிகளை அவர் அழகாக விவரித்துள்ளார்.
பெண்கள் தங்கள் முகத்திரைகளை அகற்றிவிட்டு, டிராம் மற்றும் படகுகளில் உள்ள பிரத்யேக அறைகளில் புகைபிடித்ததைப் பற்றியும் அவர் எழுதினார்.
ஸ்டீவன்ஸ் தனது பயணத் திட்டத்தின் அடிப்படையில், அந்த நகரத்தைப் பார்வையிடுவதற்கான ஒரு வழிகாட்டுதலையும் வழங்கினார்.
"இஸ்தான்புல் நகரில் ஒரு வழிகாட்டியுடன் பிற்பகலில் மேற்கொள்ளும் ஒரு உலாவில் தொல்பொருள் அருங்காட்சியகம், ஹேகியா சோபியா மசூதி, ஆடை அருங்காட்சியகம், 1,001 தூண்கள், சுல்தான் மஹ்மூத்தின் கல்லறை, உலகப் புகழ்பெற்ற கிராண்ட் பஜார், புறா மசூதி, காலட்டா கோபுரம் மற்றும் சுல்தான் முதலாம் சுலைமானின் கல்லறை ஆகியவை இருக்க வேண்டும்."
சூஃபி நடனச் சடங்குகள் மற்றும் நகரத்தின் வசதியான குடும்பங்களின் குடியிருப்புகள் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது ரமலான் சுற்றுப்பயணம் ஒட்டோமான் பேரரசின் கட்டடக்கலை மற்றும் மசூதி கோபுரங்களுக்கு இடையே தொங்கவிடப்பட்ட பண்டிகை விளக்குகள் மீதான அவரது ரசனையைப் படம்பிடித்துக் காட்டியது.

பட மூலாதாரம், Abdullah Freres/Buyenlarge/Getty Images
பயணத்தின்போது, அப்போதைய சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதின் (துருக்கி வரலாற்றில் அதிகம் விமர்சிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர்) படையணியையும் ஸ்டீவன்ஸ் சந்தித்தார். "சுல்தானின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எனது நோக்கம் நிறைவேறியது. ஆனால் அது ஒரு கண நேரம் மட்டுமே," என்று அவர் எழுதினார்.
துருக்கியின் முன்னணி தொழில்துறைப் பகுதிகளில் ஒன்றான இஸ்மிட் வளைகுடாவில், "வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கிராமங்கள் அந்தி வேளையில் பார்க்க மிகவும் அழகாக இருக்கின்றன" என்று எழுதினார்.
மத்திய அனடோலியா பிராந்தியத்தின் சாலைகளில், குர்திஷ் மக்களின் நாடோடி முகாம் ஒன்றைக் கண்டார். அந்த மக்களின் தாராள குணம் அவரை வெகுவாகக் கவர்ந்தது. தன்னை வரவேற்ற குர்திஷ் சமூகத்தின் தலைவரை "ஹூக்கா புகைக்கும் கண்ணியமான ஷேக்" என்று அவர் விவரித்தார். அவர்கள் தனக்கு அளித்த உணவு மற்றும் தான் கேட்காமலேயே தனக்காக அமைக்கப்பட்ட படுக்கை குறித்தும் அவர் வியந்து பாராட்டினார்.
துருக்கியின் பன்முகத்தன்மை குறித்து ஸ்டீவன்ஸ் எழுதியதற்குச் சான்றாக, ஆர்மீனிய பாதிரியார் ஒருவர் தனது பயணத்திற்காக பைபிள் ஒன்றைப் பரிசளித்ததையும் அவர் தனது குறிப்பில் சேர்த்துள்ளார்.

பட மூலாதாரம், ullstein bild via Getty Images
கிழக்கு நோக்கிய அடுத்தக்கட்டப் பயணம்
இரானில், ஷா நாசர் அல்-தினின் விருந்தினராக தெஹ்ரானில் சிறிது காலம் ஸ்டீவன்ஸ் தங்கியிருந்தார்.
தெஹ்ரானின் எல்லையில், ஜோராஸ்ட்ரியர்களின் அமைதிக் கோபுரங்களை (Towers of Silence) பார்ப்பதற்காக அவர் சிறிது நேரம் செலவிட்டார். இது இறந்தவர்களைப் புதைப்பது மண்ணை மாசுபடுத்தும் என்று நம்பப்பட்டதால், கழுகுகள் தின்பதற்காக உடல்கள் திறந்தவெளியில் விடப்பட்ட ஒரு பழங்கால இடமாகும்.
ஜோராஸ்டரின் நெருப்பு அணைக்கப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டதையும், ஒருகாலத்தில் அல்லும் பகலும் எரியூட்டப்பட்ட அந்த இடத்தின் கோபுரங்கள் ஒரு பழங்கால மதத்தின் எச்சமாக நிற்பதையும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், EDUCATION IMAGES/ GETTY IMAGES
இரானுக்குப் பிறகு, ஸ்டீவன்ஸ் ஆப்கானிஸ்தானுக்குப் புறப்பட்டார். இருப்பினும், அவரால் நாட்டிற்குள் நுழைய முடியவில்லை, எனவே காஸ்பியன் கடலைக் கப்பல் மூலம் கடந்து பாகு நகருக்கு (இன்றைய அஜர்பைஜானின் தலைநகரம்) சென்றார்; அங்கிருந்து ரயிலில் தற்கால ஜார்ஜியாவில் உள்ள படுமிக்குச் சென்றார். பின்னர் கப்பல் மூலம் இந்திய நகரமான கல்கத்தா (இன்றைய கொல்கத்தா) வந்து சேர்ந்தார்.
இந்தியாவில், அவர் தனது எழுத்துகளில் தாஜ்மஹால் நினைவுச் சின்னத்தைப் பெரிதும் புகழ்ந்து எழுதினார். வெப்பத்தைப் பற்றி அவர் குறைபட்டுக் கொண்டாலும், அதுவரை அவர் செய்த பயணத்தில் அங்குள்ள காட்சிகளும் வண்ணங்களும் தனக்கு மிகவும் பிடித்தமானவை என்று குறிப்பிட்டார்.
அங்கிருந்து ஹாங்காங்கிற்கும் பின்னர் சீனாவிற்கும் சென்றார். அவரது பயணத்தின் இறுதி இலக்கு ஜப்பானில் உள்ள யோகோகாமா ஆகும். அங்கு தான் சந்தித்த கிராம மக்களை "பண்பானவர்கள்" மற்றும் "மகிழ்ச்சியானவர்கள்" என்று ஸ்டீவன்ஸ் விவரித்தார்.
"வேறு எந்த தேசத்தையும் விட இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதில் சிறந்து விளங்குகிறார்கள்," என்று அவர் எழுதினார். கற்றல் மீதான குழந்தைகளின் ஆர்வத்தைக் கண்டு அவர் வியந்தார்.
இங்கேதான் அவர் தனது பயணத்தை 1886-இல் நிறைவுசெய்தார். இந்தப் பயணம் மொத்தம் இரண்டு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் நீடித்தது.
அவரது கணக்குப்படி, அவர் 13,500 மைல்கள் (22,000 கி.மீ) சைக்கிளில் பயணம் செய்துள்ளார். இதன் மூலம் மிதிவண்டியில் உலகப் பயணத்தை முடித்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் முதலில் தனது பயணக் குறிப்புகளை ஒரு பத்திரிகையில் தொடராகவும், பின்னர் 1887-இல் ஒரு புத்தகமாகவும் வெளியிட்டார்.
ஸ்டீவன்ஸ் மீதான விமர்சனங்கள்
ஸ்டீவன்ஸ் தான் சந்தித்த சமூகங்களைப் பாராட்டி விவரித்தாலும், அந்தக் காலகட்டத்துக்கே உரித்தான சில வழக்கமான வார்த்தைகளையும் பயன்படுத்தினார். அவர் சந்தித்த மக்களை பெரும்பாலும் "அரை-நாகரிகமானவர்கள்", "அழுக்கானவர்கள்", மற்றும் "அறிவற்றவர்கள்" என்று வர்ணித்தார்.
அவர் துருக்கியில் உள்ள சிவாஸ் (Sivas) என்ற இடத்திற்குச் சென்றபோது, "சராசரி ஆர்மீனிய கிராமவாசியின் மனம் அறியாமையிலும் தார்மீக இருளிலும் மூழ்கியுள்ளது" என்று எழுதினார்.
ஸ்டீவன்ஸின் துருக்கிப் பயணங்களைப் பற்றி ஆய்வு செய்து வரும் துருக்கிய எழுத்தாளர் ஐடன் செலிக் கருத்துப்படி, அன்றைய பல பயணிகளைப் போலவே இவரும் ஒரு "ஓரியண்டலிஸ்ட்" (orientalist). அதாவது, கிழக்கு நாடுகளின் கலாசாரங்கள் மற்றும் மக்களை ஒரு சார்புடைய மற்றும் குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்தவர்.
இருப்பினும், எழுத்தாளர் ராபர்ட் ஐசன்பெர்க், ஸ்டீவன்ஸின் பார்வை அவரது பயணம் தொடரத் தொடர மாற ஆரம்பித்தது என்று நம்புகிறார்: "அவர் ஒரு குறிப்பிட்ட கலாசாரக் கண்ணோட்டத்தில் இருந்துதான் பேசுகிறார். அவரிடம் அந்த விக்டோரியன் காலத்து அளவுகோல் இருந்தது. ஆனால் அவர் தாஜ்மஹாலுக்குச் சென்றபோது, அந்த இடத்தின் கட்டடக்கலையையும் கலையையும் பார்த்து மிகவும் வியந்துபோனார். முதல்முறையாக அதை வேறு எதனுடனும் அவர் ஒப்பிடவில்லை. அவர் அதில் அப்படியே மயங்கிவிட்டார்."

பட மூலாதாரம், Around the World on a Bicycle
மிதிவண்டியில் உலகைச் சுற்றி வந்த முதல் நபர் என்பதால், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் ஸ்டீவன்ஸின் கதைகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது. அறிஞர்களின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் பல அமெரிக்கர்கள் உலகின் மற்ற பகுதிகளை எப்படிப் பார்த்தார்கள் என்பதை அவரது குறிப்புகள்தான் வடிவமைத்தன.
ஸ்டீவன்ஸின் வாழ்க்கை, அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் சாச்ட்லெபென் மற்றும் தாமஸ் ஆலன் என்ற இளம் சாகசப் பயணிகளுக்கு ஒரு உத்வேகமாக அமைந்தது. இவர்களும் இஸ்தான்புல்லுக்கு மிதிவண்டியில் பயணம் செய்தனர்.
இவையனைத்தையும் தாண்டி, இரு சக்கரப் பயணத்தை மக்களிடம் பிரபலமாக்கியதில் ஸ்டீவன்ஸ் செய்த மிகப்பெரிய பங்களிப்புதான் அவரது மிக முக்கியமான பாரம்பரியம் என்று செலிக் நம்புகிறார், இதை அவர் ஒரு வகையான "மிதிவண்டிப் புரட்சி" என்று வர்ணிக்கிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































