இஸ்ரேல் vs இரான்: மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் வெடிக்குமா? அமெரிக்கா என்ன சொல்கிறது?

காணொளிக் குறிப்பு, மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் வெடிக்குமா? இஸ்ரேல் ஆதரவாக அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
இஸ்ரேல் vs இரான்: மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் வெடிக்குமா? அமெரிக்கா என்ன சொல்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

ஒரு புறம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலைக்கு பழி தீர்ப்போம் என சூளுரைத்து காத்திருக்கும் இரான், மறுபுறம், இஸ்ரேலை பாதுகாக்க மத்திய கிழக்கில் படைபலத்தை அதிகரிக்கும் அமெரிக்கா என அண்மைய நாட்களில் மத்திய கிழக்கில் எந்த நேரமும் மிகப்பெரிய போர் வெடிக்கலாம் என்கிற அளவுக்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.

இந்தச் சூழலில், மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை தனிப்பதுதான் தங்கள் நோக்கம் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐநாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே இரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த மாதம் வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாக பொறுப்பேற்கவில்லை. ஆனால், இஸ்ரேலே இக்கொலையை நிகழ்த்தியதாக இரான் குற்றம்சாட்டி வருகிறது. இந்தக் கொலைக்கு பதிலடி கொடுக்கப்படும் என இரான் எச்சரித்துள்ளதால், இஸ்ரேல் மீது எந்த நேரமும் இரான் தாக்குதல் தொடுககலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவது இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க உதவும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், "இரான் என்ன செய்கிறது என பாப்போம். தாக்குதல் தொடுத்தால் என்ன நடக்கிறது என பார்ப்போம் எதற்கும் பின் வாங்குவதாக இல்லை" என்றும் ஜோ பைடன் தெரிவித்தார்.

வரும் வியாழக்கிழமை போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோஹாவிலோ அல்லது கெய்ரோவிலோ நடைபெற உள்ளது. இந்தப் பேச்சு வார்த்தையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என ஹமாஸ் அதிகாரி அஹமது அப்துல் ஹதி கூறியதாக நியூயார்க் டைம்ஸ், ஸ்கை நியூஸ் ஆகியவை செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும், பாலத்தீன மக்களை வீடு திரும்பச் செய்யவும் வழிவகுக்கக் கூடிய போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமை நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், இஸ்ரேல் மீது எதிர்காலத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டால், அதில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்கவும் மற்றும் பிராந்திய மோதலைத் தவிர்க்கவுமே அமெரிக்கா விரும்புவதாக அதன் தூதர் லிண்டா தாமஸ் க்ரீன்பீல்ட் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான பாலத்தீன தூதர் ரியாத் மன்சூர், காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹெஸ்பொலாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இரான் மற்றும் லெபனானின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் தனது எக்ஸ் பக்கத்தில், இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஏஜென்ஸி எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க தயாராக இருக்கும் வகையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாகவும், எந்த இடத்திலும் தாக்கத் தேவையான வகையில் பல வகையான தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 10 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த தாக்குதலில் குறைந்தது 39,920 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)