'வீடியோ காலில் கைலாய மலையை காட்டினர்' - தாய், தந்தையின் நிலை தெரியாமல் தவிக்கும் மகள்
கடந்த புதன்கிழமை நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா சென்ற பலரும் நேபாளத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு வெவ்வேறு சுற்றுலா நிறுவனங்கள் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனம் மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் கொண்ட ஒரு குழு நேபாளத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்களின் நிலை குறித்து அறிய உறவினர்கள் அந்நிறுவனம் வெளியே காத்திருக்கின்றனர்.
மறுபுறம் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் 49 பேர் கொண்ட மற்றொரு குழுவும் சுற்றுலா சென்றுள்ளனது. இவர்களின் நிலை குறித்த தகவல் தெரியவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் உறவினர்களின் நிலையை அறிவதற்காக சிலர் சுற்றுலா நிறுவனத்துக்கு வந்திருந்தனர். அவர்களால் உரிய தகவலைப் பெற முடியாத நிலையைப் பார்க்க முடிந்தது.
அவர்களில் ஒருவரான பொற்செல்வி கோபாலிடம் பிபிசி தமிழ் பேசியது. இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது தந்தை கோபால் அருணாச்சலம் மற்றும் தாய் சரஸ்வதி ராஜகோபால் ஆகியோர் கடந்த 14-ஆம் தேதி கைலாஷ் மானசரோவருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
"என்னுடைய பெற்றோர் ஆன்மிக பயணங்களை மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஓய்வுக்குப் பிறகு பத்ரிநாத், கேதார்நாத் சென்று வந்துவிட்டனர்" என்கிறார் பொற்செல்வி கோபால்.
"இந்த ஆண்டு கைலாய யாத்திரை செல்வது என முடிவு செய்தனர். ஜூன் மாதம் 22 -ஆம் தேதி கிளம்புவதாக இருந்தது. ஆனால், திபெத்தில் திருவிழா எனக் கூறியதால் தேதி தள்ளிப் போனது. ஜூலை மாதம் 14-ஆம் தேதி செல்வதாக இருந்த பயண தேதியும் தள்ளிப் போனது" என்கிறார் அவர்.
தனது பெற்றோர் தொடர் பயணத்தில் இருந்தாலும் தினமும் இரவு வாட்ஸ்ஆப் மூலமாக பேசியதாகக் கூறிய பொற்செல்வி கோபால், "கைலாய மலையை பார்க்கும்போது வீடியோ காலில் வந்து என்னிடம் காட்டினர். ஆனால் எந்தப் புகைப்படத்தையும் அவர்கள் பகிரவில்லை" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், " சாகாவில் இருந்து கிராங் கிளம்பிவிட்டதாக என் அப்பா கூறினார். கிராங் வந்த பிறகு அங்குள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். செவ்வாய்க் கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் பேசினேன். அதுதான் கடைசியாக அவர்களிடம் பேசியது" எனத் தெரிவித்தார்.
தனது பெற்றோரின் ஓய்வு காலத்துக்குப் பிறகு கைலாய பயணம் மிக முக்கியமானதாக இருந்ததாகக் கூறும் அவர், "இந்தப் பயணத்தை முடித்துவிட்டால், எங்கள் பிறவிப் பயனை அடைந்துவிடுவோம் என பெற்றோர் கூறினர். தற்போது அவர்களின் நிலையை அறிய முடியவில்லை" எனக் கூறுகிறார்.
"தனியார் சுற்றுலா நிறுவனத்துக்கும் பயணிகளின் நிலை குறித்து தெரியவில்லை. தூதரகம் மூலமாக ஏதேனும் தகவல் கிடைக்குமா என்பதற்காக செல்ல உள்ளோம்" என்கிறார் பொற்செல்வி கோபால்.
இதற்கிடையில் பேரிடரில் இருந்து தப்பியவர்களின் புகைப்படங்கள் வெளியானது.
தஞ்சையில் இருந்து ஒரே குழுவாகச் சென்ற 20 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுகுறித்து நேபாளத்தில் உள்ள ரத்தினகுமாரின் மகள் சுகன்யா, மற்றவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இதுபற்றி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் விவாதிக்கப்பட்டது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து எதிர்க்கட்சிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் முன்பே அமைச்சர் ராஜ்மோகன் பேசத்தொடங்கியதால் பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீண்ட நேர சலசலப்புக்குப் பிறகு, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பின் அமைச்சர் ராஜ்மோகன் மீண்டும் பேசத் தொடங்கிய அவர் நேபாளத்தில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து விளக்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



