இலங்கையில் அமலுக்கு வந்த அவசரகால சட்டம் - ஒரு விளக்கம்

இலங்கை

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இலங்கையில் அவசர கால சட்டம் மீண்டும் அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்காக இந்த அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்பான ஸ்திரமன்ற நிலைமை மற்றும் போராட்டங்கள் வலுப் பெற்ற நிலையிலேயே, கடந்த 14ம் தேதி அவசர கால நிலையை, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அவசரகால நிலைமை என்றால் என்ன?

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை அமுல்படுத்தும் வகையில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது. இலங்கையின் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 155ஆவது உறுப்புரையினூடாக அவசரகாலச் சட்டத்தினை பிரகடனப்படுத்தப்படும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் என்பது சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இலங்கையில் இருந்து வருகிறது.

அவசர காலம் என்பதனை - விதிவிலக்கான சந்தர்ப்பம், ஆபத்து அல்லது அனர்த்தம் தெளிவானதாக காணப்படும் சந்தர்ப்பம் என பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் வரைவிலக் கணப்படுத்துகிறது. இச்சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தலைக் கையாளும் பொருட்டு சாதாரண சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்படாத விசேட அதிகாரங்கள் அரசுக்கு வழங்கப்படுகின்றன என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள ஆவணமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அத்தியவசியத் தேவைகள் என்பனவற்றைப் பேணும் பொருட்டு - அவசரகால நிலையை, ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம்.

அவசரகால நிலைமையின் கீழ், அவசரகால ஒழுங்கு விதிகளை உருவாக்குவதற்கான தத்துவம் ஜனாதிபதிக்கு உள்ளது. யார் யாருக்கு என்னென்ன அதிகாரங்களை வழங்குவது, எவ்வாறான நடைமுறைகளையெல்லாம் அமுல்படுத்துவது அல்லது நீக்குவது என்பது தொடர்பிலான ஒழுங்கு விதிகளை அவர் உருவாக்க முடியும். அல்லது வலுவில் இருக்கின்ற ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தலாம்.

இலங்கை

பட மூலாதாரம், Getty Images

ஒரு மாத காலத்துக்கு வலுவிலிருக்கும் வகையிலேயே அவசரகால நிலைமையினை ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம். அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி 14 நாட்களுக்குள் அதற்கான அனுமதியை நாடாளுமன்றில் பெற்றுக் கொள்தல் வேண்டும். அனுமதி கிடைக்காது விட்டால், அவசரகால நிலை இல்லாமல்போகும். ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றின் அனுமதியைப் பெறுவதன் ஊடாகவே, அவசர கால நிலையை நீடிக்க முடியும்.

அவசர நிலையை அறிவிக்கும் அதிகாரம் எங்கிருந்து வருகிறது, யாரால் அறிவிக்க முடியும்?

அரசியலமைப்பின் 155வது பிரிவின் கீழ் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த ஜனாதிபதிக்கு முழு அதிகாரமும் உள்ளது.

அந்த அறிவிப்பு நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும், அதற்காக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். இந்த அறிவிப்பு நான்கு நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. அவசரகாலச் சட்டத்தின் பிரகடனம், அவசரகாலச் சட்டங்களை உருவாக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் உட்பட, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்துகிறது. இந்த விதிமுறைகள் வேறு எந்த சட்டத்தையும் மீறலாம். அதே சமயம், அவை அரசியலமைப்பை மீற முடியாது.

அவசரநிலை எவ்வளவு காலம் நீடிக்கும்?

ஜனாதிபதியால் பிறப்பிக்கப்படும் அவசரநிலை நடவடிக்கை, ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். (ஒரு மாதம் கடக்கும் முன் அவர் அதை ரத்து செய்யலாம் என்றாலும்). இந்த அறிவிப்பு நான்கு நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படும். அவசரகால நிலைமை ஒவ்வொரு 30 நாட்களுக்கும் நீட்டிக்கப்படலாம். ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: