இலங்கையில் திடீரென அதிகரித்த துப்பாக்கி கலாசாரம் - 4 தினங்களில் ஐவர் உயிரிழப்பு

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இலங்கையில் கடந்த ஓரிரு தினங்களாக அதிக அளவிலான துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இதன்படி, கடந்த 4 நாட்களில் மாத்திரம் ஐந்து துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தங்காலை துப்பாக்கி பிரயோகம்

தங்காலை பகுதியில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 37 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேப் வாகனமொன்றில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அஹங்கம துப்பாக்கி பிரயோகம்

அஹங்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 27 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அளுத்கம துப்பாக்கி பிரயோகம்

அளுத்கம பகுதியில் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 43 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லாரி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் மீது இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

பாணந்துறை துப்பாக்கி பிரயோகம்

பாணந்துறை பகுதியில் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட மற்றுமொரு துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த இருவரில் ஒருவர் மீது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியிருந்தனர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 30 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஐவர் உயிரிழப்பு

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இந்த துப்பாக்கி பிரயோகங்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களுக்கும், போதைப் பொருள் வர்த்தகத்திற்கும் இடையில் தொடர்புகள் காணப்படலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவங்கள் தொடர்பில் போலீஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: