You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொழும்பு வன்முறை: செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் - 'தாக்குதல் நடத்தியவர்கள் குடிபோதையில் வந்தார்கள், காவலர்கள் தடுக்கவில்லை'
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ், இலங்கையிலிருந்து
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
கொழும்பு காலிமுகத் திடலில் நடந்த போராட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் குடிபோதையில் வந்தார்கள் என்றும் அவர்களை காவல்துறையினர் தடுக்கவில்லை என்றும் வன்முறையை நேரில் பார்த்தவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
திங்கள்கிழமையன்று காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் அடித்துச் சேதப்படுத்தினர். தாக்கப்பட்ட கூடாரங்களில் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் படையணி மூலம் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி முகாமும் ஒன்று.
"நான் அவர்களைத் தடுக்க முயன்றேன். ஆனால் உயிருக்கு ஆபத்து என்று கூறி எனது நண்பர்கள் என்னை அப்பால் அழைத்துச் சென்றனர்" என்று கூறினார் செயின்ட் ஜான் மருத்துவ முகாமில் பணியாற்றும் ஜேசன்.
காலி முகத்திடலில் வன்முறை தொடங்கிய தருணத்தில் என்ன நடந்தது என்பதை அவர் பிபிசி தமிழிடம் விளக்கினார்.
"நேற்று காலை 11 மணி இருக்கும். அப்போது அவசரமாக காலி முகத்திடலுக்கு வரும்படி அழைப்பு வந்தது. நான் சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த நேரம். இதே இடத்தில் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினார்கள். எங்களது மருத்துவ முகாமில் இருந்துவர்கள் அவற்றைக் காலால் தட்டிவிட்டு அப்பால் சென்றனர். புகைமூட்டம் அதிகமாக இருந்தது. அது மறைவதற்கும் இந்தப் பகுதிக்கு நிறையபேர் வந்து எல்லாவற்றையும் அடித்து உடைத்தனர்."
போராடுவதற்கான இடம் என்று அரசு குறிப்பிட்டிருக்கும் இடத்தில் "கோட்டா கோ கம" என்ற பெயரில் போராட்டக்காரர்கள் முகாமிட்டிருக்கின்றனர். இதில் மருத்துவ சேவை, நூலகங்கள், சூரிய மின் வசதி போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன. இவையும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
"பின்னால் இருக்கும் நூலகத்தை எரிக்க முயற்சி செய்தார்கள். வேறு இடங்களில் ஏற்கெனவே கூடாரங்களை எரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் எரிக்க விடாதீர்கள் என்று கத்தினேன். காவல்துறையினர் அருகில்தான் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை." என்கிறார் ஜேசன்.
"சுயேச்சையாக இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம். இந்த இடத்தில் யார் அடிபட்டாலும் அவர்களுக்கு முதலுதவி செய்வது எங்களது கடமை. எங்களது இடத்துக்கு வந்து கூடாரத்தையும் மருந்துகளையும் உடைத்துச் சென்றது ஓர் அராஜகம் என்றுதான் சொல்லலாம். எந்தச் சூழலும் முதலுதவி செய்யும் குழுக்களுக்கு இதுபோன்று யாரும் செய்வதில்லை. வந்தவர்கள் மதுபானம் அருந்தியிருந்தார்கள்."
ஜான் ஆம்புலன்ஸ் என்பது ஒரு தன்னார்வ அமைப்பு. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிக கவனத்தைப் பெற்றிருக்கிறது.
"ஆம்புலன்ஸ் சேவைக்கு அருகேயுள்ள மற்றொரு கூடாரத்தில் நிறைய இளைஞர்களும் இளம் பெண்களும் இருந்தனர். வந்தவர்கள் அவர்களையும் அடித்துக் காயப்படுத்தினார்கள். மாலை நேரத்தில் இங்கிருந்து காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற நேரத்திலும் ஆம்புலன்ஸை நிறுத்தி, உள்ளே யார் இருக்கிறார்கள் என்று பார்த்து தாக்க முயற்சி செய்தார்கள்" என்றார் ஜேசன்.
காலி முகத்திடலில் மட்டும் காயமடைந்த சுமார் 170 பேர் வரை முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தாக்குதல் நடந்த தருணத்தில் பணியாற்றிய மருத்துவர் அம்ஜர் பாட்சா கூறினார்.
"சிலருக்கு கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சிலருக்கு ரப்பர் புல்லட் தாக்கிய காயமும் ஏற்பட்டிருந்தது. சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. நேற்று இரவு வரை பலரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் வந்தார்கள். காவல்துறையினர் தாக்கியதில் ஒருவருக்கு முதுகுத் தண்டில் காயமேற்பட்டிருந்தது."
திங்கள்கிழமையன்று காலிமுகத்திடல், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகை அதையொட்டி அமைந்திருக்கும் கங்காராமா உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைகள் நடந்தன. வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்