"இலங்கை மக்களுக்கு உதவ நாங்கள் தயார்", - உதவி பொருட்களை படகுகளில் அனுப்ப முன்வரும் ராமேஸ்வரம் மீனவர்கள்

பட மூலாதாரம், Getty Images
இன்றைய (மே 1) நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசை அனுமதிக்கக் கோரி தமிழக சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனையடுத்து, தங்களின் படகுகளில் உதவி பொருட்களை அனுப்ப தயாராக உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தலைவரான ஜேசு ராஜா தெரிவித்துள்ளதாக 'டெய்லி மிரர்' செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
"80 கோடி மதிப்பிலான 40,000 டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான குழந்தைகளுக்கான 500 டன் பால் பவுடர் மற்றும் பிற பொருட்களை அனுப்ப மாநில அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையம் மூலமே அவற்றை மாநில அரசு அனுப்ப முடியும்", என ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், இலங்கைக்கு உதவி பொருட்களை கொண்டு செல்ல ராமேஸ்வரத்தில் உள்ள இயந்திர படகுகளை பயன்படுத்தலாம். அங்கு மக்கள் கஷ்டப்படும் போது, அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருப்போம்" என்று ஜேசு ராஜா கூறினார்.
இலங்கை தமிழர்களை இன்று சந்திக்கும் அண்ணாமலை
இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு இன்று நடைபெறும் தேயிலை தொழிலாளர்களின் மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதனை தொடர்ந்து, தமிழர் வாழும் பகுதிகளுக்கு சென்று தமிழ் மக்களின் கோரிக்கை, குறைகளை கேட்டறிய உள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நாட்டுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதுமட்டுமின்றி, இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வீடு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு நன்றி கூறும் விதமாக,தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இன்று நடத்தப்படும் மே தின விழாவில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் பிரதிநிதியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இலங்கை தமிழர்கள் அழைப்பு விடுத்தனர்.
இலங்கை தமிழரின் அழைப்பை ஏற்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார்.
இலங்கையில் இன்று நடைபெறும் தேயிலை தொழிலாளர்களின் மாநாட்டில் பங்கேற்ற பின்னர், யாழ்ப்பாணம் சென்று வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தியா சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளை பார்வையிடுகிறார். அங்குள்ள தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, வரும் மே 4ம் தேதி இலங்கையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
"பொருளாதார விவகாரத்தில் உண்மைதன்மையுடன் செயல்பட வேண்டும்"
பொருளாதார விவகாரம் குறித்து இலங்கை அரசு மக்கள் மத்தியில் உண்மைதன்மையுடன் செயல்பட வேண்டும் என பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளதாக 'தமிழ் மிரர்' செய்தி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நாடு எதிர்க்கொண்டுள்ள பொருளாதார பாதிப்பு எதிர்வரும் மாதங்களில் பாரிய நெருக்கடி நிலைமையை எதிர்க்கொள்ள நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கால தாமதப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளது எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வரி அறவீட்டை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை - இலங்கை நிதி அமைச்சர்
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வழிமுறையாக வரி அறவீடு அதிகரிக்கப்பட வேண்டும்; அதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாக 'வீரசேகரி' செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், ALI SABRY FB
இதனை சர்வதேச ஊடகமொன்றுக்கு, அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் வட் வரியை 8 சதவீதம் வரை குறைப்பதற்கு எடுத்த தீர்மானம் தவறானதாகும்", என்று நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்யக் கூடிய நிலைமையிலுள்ள இலங்கை போன்ற நாட்டுக்கு தற்போது நடைமுறையிலுள்ள வரி வீதம் எந்தளவிலும் போதுமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி வட் வரி வீதத்தினை நூற்றுக்கு 13 - 14 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 8 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்காக சுமார் 4 பில்லியன் டாலருக்கும் அதிக நிதி தேவையாகவுள்ளது.
அதனை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
































