இலங்கை நெருக்கடி: இடைக்கால அரசாங்கத்திற்கு தயாராகும் ஜனாதிபதி

பட மூலாதாரம், Getty Images
இடைக்கால அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் ஆவண காப்பாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவிக்கின்றார்.
நாடு எதிர்நோக்கியுள்ள சமுக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதில் வழங்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இடைகால அரசாங்கத்தை ஸ்தாபிக்க விருப்பம் தெரிவித்துள்ளதுடன், பொருளாதார பிரச்னைகளை விரைவில் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதாக ஜனாதிபதி பதில் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்களை நடத்தி, அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்;த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக மெதகம தம்மானந்த தேரர் தெரிவிக்கின்றார்.
இடைக்கால அரசாங்கத்திற்கு நானே தலைவன்
இடைக்கால அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில், அது தனது தலைமையிலேயே ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.
இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் டளஸ் அழகபெரும அண்மையில் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் அமைச்சரவையில் அங்கம் வகித்த பலரும் தற்போது அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக நாடாளுமன்றத்தில் ஆளும் அரசாங்கத்துடன் இருந்த சுமார் 40 உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில், இந்த அரசாங்கத்தின் எரிசக்தி அமைச்சராக கடமையாற்றி, ஜனாதிபதியினால் வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சரும்,
நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
பிரதமருக்கு காலவகாசம்
பதவியிலிருந்து விலகுவதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்திலிருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை வழங்குவார்கள் எனவும் அவர் கூறுகின்றார்.
நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளடக்கம் குறித்து, தாம் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, ஒரு வார காலத்திற்குள் பிரதமர் பதவி விலகாத பட்சத்தில், தாம் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நம்பிக்கையில்லா
பிரேரணையை சபைக்கு கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
பிரதமர் தரப்பு பதில்
உதய கம்மன்பில கூறுவதை போன்று, பிரதமருக்கு எதிராக 120 நாடாளுமன்ற உறுப்பினர்களை தயார்ப்படுத்தியிருக்க முடியாது என பிரதமர் அலுவலகத்தின் உயர் அதிகாரியொருவர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். அத்துடன், உதய கம்மன்பிலவின் கருத்து தொடர்பில் பிரதமர் அல்லது அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





















