இலங்கை ஜனாதிபதியை சந்தித்த மஹிந்த - ராஜிநாமா தகவலை மறுத்த பிரதமர் அலுவலகம்

பட மூலாதாரம், Getty Images
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அவரது வீட்டில் அந்நாட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேசியுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது தமது பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்ய முன்வந்ததாகவும் அதை பின்னர் கோட்டாபய ஏற்றுக் கொண்டதாகவும் சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின. இருப்பினும் இந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை மற்றும் அடிப்படையற்றவை என்று பிரதமரின் ஊடக செயலாளர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், PMO SRI LANKA
ஜனாதிபதியுடனான பிரதமரின் சந்திப்பு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
தொடரும் போராட்டங்கள் ரஞ்சன் அருண் பிரசாத், பிபிசி தமிழுக்காக வழங்கும் களத்தகவல்
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாடு தழுவிய ரீதியில் இன்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்ட போதிலும், நேற்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது.
அத்துடன், இன்று அதிகாலை முதல் அனைத்து சமூக வலைத்தளங்களும் முன்னறிவித்தல் இன்றி முடக்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
எனினும், ஐக்கிய மக்கள் சக்தி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று நண்பகல், ஊரடங்கு சட்டத்தை மீறி போராட்டத்தை நடத்தியது.
அதேவேளை, பேராதனை பல்கலைக்கழக மாணவர்களும் இன்று போராட்ட பேரணியை நடத்தியதுடன், அதனை கலைக்க பாதுகாப்பு பிரிவின் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தியிருந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில், நாட்டில் அனைத்து பாகங்களிலும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊரடங்கு சட்டத்தையும் மீறி மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
பெரும்பாலான இடங்களில் தன்னிச்சையாக சிறு சிறு குழுக்களாக வருகைத் தந்த பலர், வீதியோரங்களில் பாதைகளை ஏந்தி போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
இவ்வாறான நிலையில், கொழும்பின் சில பகுதிகளில் பாரிய அளவிலான போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக கொழும்பு - இராஜகிரிய பகுதியில் ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கானோர், அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
பாதைகளை ஏந்திய கோட்டாபய வீட்டுக்கு செல் என்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
இவ்வாறு போராட்டங்களை நடத்தியவர்களுக்கு வாகனங்களில் செல்லும் அனைவரும் ஒலி சமிக்ஞைகளை எழுப்பி, தமது ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
கடும் மழையுடனான வானிலை நிலவிய தருணத்திலும், இளைஞர் யுவதிகள் போராட்டத்தை கைவிடாது நடத்தியிருந்தனர்.
இன்றிரவு மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறும், தொலைபேசிகளில் ஒலியை ஒலிரவிட்டும் போராட்டத்திற்கு வலு சேர்த்திருந்தனர்.
கொழும்பு மாத்திரமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு சட்டம் மற்றும் அவசர கால சட்டம் ஆகியவற்றை பொருட்படுத்தாது மக்கள் இவ்வாறு ஒன்று திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
























