You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை ஊரடங்கை மீறி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்
இலங்கை அரசாங்கத்தின் அவசர நிலைப் பிரகடனம், ஊரடங்கு, சமூக ஊடகங்கள் மீதான தடை போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை கொழும்பில் இன்று நடத்தியது.
கொழும்பு சுதந்திர சதுகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
எந்தவித காரணங்களும் இன்றி ஊரடங்கு சட்;டம் பிறப்பிக்கப்பட்டமை, அவசரகால சட்டத்தை அமல்படுத்தியமை, சமூக வலைத்தளங்களை முடக்கியமை உள்ளிட்ட பல காரணங்களை முன்னிலைப்படுத்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மின்சாரம் துண்டிக்கப்படுகின்றமை மற்றும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமையினால், பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கு மீளப் பெற்றதன் பின்னர், ஆட்சியாளர்களின் வீடுகள் முடக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
''ஆட்சியாளர்கள் அவசரகால சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து, ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து, சமூக வலைத்தளங்களை முடக்கி, இன்று இந்த நாட்டு மக்களுடைய ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்காக எடுக்கின்ற இந்த நடவடிக்கையை எதிர்த்து, அதற்கு எதிராக போராடுவதற்காக நாங்கள் சுதந்திர சதுக்கத்திற்கு வந்த இடத்திலே, சுதந்திர சதுக்கத்தை மூடி, அப்படியே முழுமையாக முற்றுகையிட்டிருக்கின்ற படையினருக்கு நாங்கள் சொல்கின்றது என்னவென்றால், இன்று படையினர் இருப்பது இந்த மக்களுடைய பாதுகாப்புக்காகவன்றி, இன்று ஆட்சியிலே இருக்கின்ற குடும்பத்தை பாதுகாப்பதற்காக அல்ல என்ற செய்தியை நாங்கள் உரத்து சொல்ல வேண்டும்.
அவசரகால சட்டம் என்றால், அதை பாராளுமன்றத்திற்கு 10 நாட்களுக்கு கொண்டு வர வேண்டும். அதன் பிறகு தான் அதனை நாடு முழுவதும் பிரகடனப்படுத்த முடியும் என்கின்ற ஒரு சட்டம் இருக்கின்ற போது, அதை நாங்கள் முறியடிப்பதற்கு போராடி கொண்டிருக்கின்றோம். இன்று வாழ வழியில்லாமல், உண்ண உணவு இல்லாமல், இன்று தங்களுடைய வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றவர்கள். தங்களுடைய பரீட்சைகளை எழுதுவதற்கு பரீட்சை வினாத் தாள்கள் கூட அச்சடிக்க முடியாத நிலைக்கு அரசாங்கம் போய் இருக்கின்றது என்கின்ற ஒரு நிலையிலே, இதற்கு எதிரான போராட்டம் நாடு முழுக்க நாளையுடன் இந்த ஊரடங்கு சட்டத்தை இவர்கள் மீளப் பெற்ற பிற்பாடு நாடு முழுக்க இருந்து வந்து இன்று ஆட்சியில் இருப்பவர்களின் வீடுகளை மறித்து இந்த மக்கள் போராட இருக்கின்றார்கள் என்பதை இந்த ஆட்சியாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவிக்கின்றார்.
ஒரு குடும்பத்தை பாதுகாத்துக்கொள்ள...
''இந்த நாட்டிலே ஜனநாயகம் மீறி, இந்த நாட்டு மக்களுக்கு எதிராக ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. எதற்காக ஊரடங்கு சட்டம்? ஊரடங்கு சட்டம் நாட்டிலே பிரகடனப்படுத்த வேண்டும் என்றால், அது மக்களை பாதுகாப்பதற்காக. ஆனால் இது மக்களை பாதுகாப்பதற்காக அல்ல. ஒரு குடும்பத்தை பாதுகாப்பதற்காக இந்த ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று அவசரகால சட்டம். எதற்காக அவசரகால சட்டம்? நாட்டிலே போரா நடக்குது? போர் நடக்காமல் இன்றைக்கு அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி, ஒரு குடும்பத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக இந்த நாட்டிலே வாழ்கின்ற 2 கோடிக்கு மேற்பட்ட மக்களுடைய வாழ்வை ஒரு கேள்விக்குறியாக்கியிருக்கின்றது இந்த அரசாங்கம்.
இந்த அரசாங்கம் உடனடியாக பதவியை விட்டு விலக வேண்டும். ஜனாதிபதி, பிரதமர் இந்த நாட்டை விட்டு செல்லவேண்டும். இந்த நாட்டு மக்களை இன்று வீதிக்கு இழுத்திருக்கின்றார்கள். சுதந்திரத்தை முழுமையாக நிறுத்தி வைத்திருக்கின்றார்கள். சுதந்திரம் கிடையாது. இன்று தொலைபேசியில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. பாடசாலை மாணவர்களுக்கு கூட இன்று ஆன்லைன் வகுப்புக்களுக்கு செல்ல முடியாது. அனைத்திற்கும் இன்று முட்டுக்கட்டை போட்டிருக்கின்றார்கள். ஒரு குடும்பத்தை பாதுகாப்பதற்காக இலங்கையின் யாப்பு மீறப்பட்டிருக்கின்றது" என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவிக்கின்றார்.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் என்பது இன்று ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாக்கும் சட்டமாகியுள்ளது
''இன்றைய தினத்திலே நாடு முழுக்க சுயேட்சையாக இளைஞர்கள், புதிய தலைமுறையினர் சேர்ந்து ஒரு தேசிய போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு எதிராக அரசாங்கம் சமூக ஊடகங்களை முடக்கி, அடக்கி, அவசரகால சட்டத்தை கொண்டு வந்து, ஊரடங்கு சட்டத்தை போட்டு, நிற்பாட்டி இருக்கின்றது. அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் சஜித் பிரேமதாஸ தலைமையிலே நாங்கள் வந்து இந்த ஆர்ப்பாட்டத்திலே கலந்துக்கொண்டிருக்கின்றோம். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் ஊரடங்கு சட்டத்திற்கு மயங்கி, அடங்கி ஒடுங்கி, வாயை மூடிக்கொண்டு வீட்டில் படுத்து தூங்குவோர் அல்ல. தூங்க மாட்டோம் நாங்கள். 24 மணித்தியாலங்களும் விழித்திருப்போம். தொடர்ச்சியாக போராடுவோம் நாங்கள். வெகு சீக்கிரத்திலே எங்களது அரசாங்கத்தை உருவாக்கி தீருவோம் நாங்கள். அது மக்கள் அரசாங்கமாக இருக்கும். இது ஒரு குடியரசு. இது சர்வதிகார நாடு அல்ல. கோட்டாபய ராஜபக்ஷ ஒரு அரசர் அல்ல. மன்னர் அல்ல. இன்று இருக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் என்பது, ராஜபக்ஷ பாதுகாப்பு சட்டம். அதை வைத்துக்கொண்டு அவர்கள், தங்களை பாதுகாத்துக்கொண்டிருக்கின்றார்கள்" என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.
"பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம், இன்று பொதுமக்களுக்கு எதிராக செயற்படுத்தப்படுகின்றது"
''இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு வருட காலத்திலேயே இந்த மக்களை மிகவும் மோசமான நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள். பொருளாதாரம் அழிந்து விட்டது. நாட்டிலே அடிப்படை தேவைகளுக்காக மக்கள் வீதிகளிலே இறங்கி, வரிசைகளில் நின்று, காலையிலிருந்து மாலை வரை கஷ்டப்படுகின்ற ஒரு நிலை வந்திருக்கின்றது. பிள்ளைகளுடைய கல்வி பாதிக்கப்பட்டிருக்கின்றது. மின்சாரம் வெட்டப்பட்டிருப்பதால், மக்களால் வீட்டிலே வாழ முடியாமல், படிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றார்கள். மிக மோசமான நிலை இந்த நாட்டிலே வந்திருப்பதனால், டொலருடைய பெறுமதி அதிகரித்து விட்டது. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால், சாதாரண மக்களினால் வாழ முடியவில்லை. எனவே நியாயத்தை கேட்கின்ற மக்களை அடித்து சிறைப்படுத்துகின்ற மக்களுடைய பாதுகாப்புக்கு கொண்டு வந்த, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தை, மக்களை எதிர்ப்பதற்காகவும், மக்களுடைய நியாயமான கோரிக்கையை மடங்குவதற்காகவும் அரசாங்கம் இன்று இந்த அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தியிருக்கின்றது" என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.
"ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டுள்ளது"
''இன்று நாட்டிலே மக்கள் விரோத ஆட்சியொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஜனநாயகம் குழித் தோண்டி புதைக்கப்பட்டிருக்கின்றது. ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி, தன்னிச்சையாக அவசர நிலைமை சட்டத்தை பிரகடனப்படுத்தினார். அதற்கு பிறகு தற்போது ஊரடங்கு சட்டத்தை பிரகடனப்படுத்தியிருக்கின்றார். ஜனாதிபதிக்கு ஒன்றை கூறிக்கொள்கின்றோம். அவசர நிலை சட்டம் அல்ல. ஊரடங்கு சட்டம் அல்ல. எதை பிறப்பித்தாலும் மக்களை நீங்கள் அடக்க முடியாது. மக்கள் கொதித்தெழுந்திருக்கின்றார்கள். அவர்களின் ஆதங்கத்தையும், கோபத்தையும் தடுக்க முடியாது. ஏனென்றால், மக்கள் இன்று அவ்வளவு துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். வாழ்க்கையில் அவர்கள் இப்படியான துன்பத்தை அவர்கள் கண்டதில்லை. அவ்வாறான துன்பங்களை பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். உங்களின் அடக்கு முறைக்கு மக்கள் பயப்பட மாட்டார்கள். இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் வேலைத்திட்டத்தை அவர்கள் நிச்சயமாக முன்னெடுப்பார்கள்" என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவிக்கின்றார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை, நீர் தாரை பிரயோகம்
இதனிடையே, கண்டி - பேராதனை பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது, போலீஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து பேரணியாக கண்டி நகருக்குள் பிரவேசிக்க முயற்சித்த மாணவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகத்தை அடுத்து, பல்கலைக்கழக மாணவர்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றுள்ளதுடன், குறித்த பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்