You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க தூதராகும் இலங்கை முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க - யார் இவர்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
மஹிந்த சமரசிங்க அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவிற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதால், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதை அறிவித்திருந்தார்.
1956ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த மஹிந்த சமரசிங்க, அவுஸ்திரேலியாவில் லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் Bachelor of Economics (Honours) degree பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
யார் இவர்?
ஆரம்ப காலத்தில் இலங்கை வெளிநாட்டு சேவையில் இணைந்து கொண்ட மஹிந்த சமரசிங்க, அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளராக கடமையாற்றினார்.
1980களில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர தூதரகத்தின் ஆலோசகராகவும் பணியாற்றினார். அப்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச தீர்மானம் முன்மொழியப்படும் நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து அவர் குரல் கொடுத்து வந்தார்.
அத்துடன், அவர் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் மற்றும் சர்வதேச வானிலை அமைப்பு ஆகியவற்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஜெனிவாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் பணிபுரியும் போது, 1986 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அனைத்து ஆளும் குழுக் கூட்டங்களிலும், சர்வதேச தொழிலாளர் மாநாட்டிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
1987 இறுதியில் ஐ.எல்.சி. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 'தொழிலாளர் குடியிருப்பு' குறித்த வரைவுத் தீர்மானத்தை வெற்றிகரமாக சமர்பித்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு (UNHRC), ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) மற்றும் சர்வதேசம் உட்பட பல ஐநா அமைப்புகளுடன் மஹிந்த சமரசிங்க நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்றினார்.
இலங்கையின் மனித உரிமைகள் பணிக்குழுவின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவிப்பதற்கான நாடாளுமன்றக் குழுவின் நிறைவேற்று உறுப்பினராகவும் அவர் செயல்பட்டார்.
அரசியல் வாழ்க்கை
மஹிந்த சமரசிங்க 1988இல் அரசியலில் நுழைந்து மேல் மாகாணத்தின் மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அங்கு அவர் மாகாண சபையின், சபைத் தலைவராகவும், சுகாதார மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு மாகாண அமைச்சராகவும் பணியாற்றினார்.
1994 இல் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் 2000, 2001, 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2001 - 2004 காலகட்டத்தில், அவர் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சரவை அமைச்சராக பணியாற்றினார்.
இதேவேளை, 2001-2004 வரை அரசாங்கத்தின் பிரதம கொறடாவாகவும், 2004 - 2006 வரை எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் இருந்தவர்.
2006இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட இவர், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளராகவும் இருந்தார்.
அவர் 2006 - 2010 வரை பேரிடர் மேலாண்மை மற்றும் மனித உரிமைகள் அமைச்சரவை அமைச்சராகவும், 2010 - 2015 வரை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராகவும் பணியாற்றினார்.
மேலும், அவர் வர்த்தகம், தொழில்கள், நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராகவும் இருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்