You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையின் 117 வயது மூதாட்டி காலமானார் - "மூத்த தாய்" என அரசால் சான்றளிக்கப்பட்டவர்
இலங்கையின் மிகவும் வயதான பெண் என அறியப்பட்ட வேலு பாப்பானி என்பவர் 117ஆவது வயதில் நேற்று செவ்வாய்கிழமை (29ஆம் தேதி) மரணமடைந்தார்.
களுத்துறை மாவட்டம் - தெடம்கொட பிரதேச செயலகத்திலுள்ள க்ளோடன் தோட்டத்தின் ஹெதரலியா பிரிவில் இவர் வசித்து வந்தார்.
உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக நேற்று 29ஆம் தேதி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றிரவு 7 மணியளவில் அவர் மரணம் அடைந்தார்.
வேலு பாப்பானியின் தேசிய அடையாள அட்டை மற்றும் முதியோர் அடையாள அட்டையில் உள்ள தகவலின் பிரகாரம், அவர் 1903ஆம் ஆண்டு மே மாதம் 03ஆம் தேதி பிறந்துள்ளார்.
வேலு பாப்பானியை 'இலங்கையின் மூத்த தாய்' எனக் குறிப்பிட்டு, 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 01ஆம் தேதி - சர்வதேச முதியோர் தினத்தன்று, அவருக்கு சான்றிதழொன்று வழங்கப்பட்டது. அதில் முதியோருக்கான தேசிய சபையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.
இவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் பிபிசி சிங்கள சேவை, இவர் தொடர்பில் வீடியோ கதை ஒன்றினைய தயாரித்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவில் வேலு பாப்பானியை கவனித்து வந்த மஹலெச்சுமி எனும் பெண், அவர் குறித்து பேசியிருந்தார்.
"நான் திருமணம் முடித்து வந்த நாளிலிருந்து இந்த ஆச்சியம்மா (பாட்டி) பக்கத்து வீட்டில்தான் இருக்கிறார். எனது மகனை சிறிய வயதிலிருந்து இந்த ஆச்சியம்மாதான் துாக்கி வளர்த்தார். நான் வெளிநாடு சென்ற பின்னரும் எனது பிள்ளையை இவர்தான் கவனித்தார். இப்போது எனது மகன் வளர்ந்து ஒரு பிள்ளையின் தந்தையாகி விட்டார். 'ஆச்சியம்மாவை மரணம் வரைக்கும் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று, எனது மகன் சொல்கிறார்" என, பாப்பானியை கவனித்து வந்த பெண் கூறியிருந்தார்.
இப்போது வேலு பாப்பானி நம்மிடையே இல்லை. இலங்கை தனது மூத்த பிரஜை ஒருவரை இழந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்