ஐபிஎல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைடன்ஸ்… ராஜஸ்தானுக்கு வாய்ப்பு உண்டா?

ஐபிஎல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ்… ராஜஸ்தானுக்கு வாய்ப்பு உண்டா?

பட மூலாதாரம், BBCI/IPL

படக்குறிப்பு, குஜராத் டைடன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
    • எழுதியவர், அஷ்ஃபாக்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. பிரஷீத் கிருஷ்ணா வசம் பந்தை ஒப்படைத்தார் கேப்டன் சஞ்சு சாம்சன். 35 பந்துகளில் அரைசதம் விளாசிய வேகத்தில் முதல் பந்தை எதிர்கொண்ட மில்லர், ஸ்லாட்டில் விழுந்த பந்தை சிக்சருக்கு அடித்து அமர்க்களப்படுத்தினார். அடுத்த பந்தும் சிக்சர். இந்த முறை டீப் ஸ்குயர் லெக்கில். 3வது பந்தும் சிக்சர்.

இப்படியாக ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி ராஜஸ்தானிடம் இருந்து வெற்றியை பறித்தது மட்டுமின்றி குஜராத் டைடன்ஸை இறுதிப்போட்டிக்குள் நுழைய பெரிதும் உதவியிருக்கிறார் டேவிட் மில்லர்.

டாஸில் தோற்ற ராஜஸ்தான்

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் குஜராத் டைடன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே முதல் குவாலிஃபயர் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த முறையும் சஞ்சு சாம்சனுக்கு டாஸ் கைகூடவில்லை.

இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டாஸில் தோற்ற கேப்டன் எனும் பெயர் எடுத்திருக்கிறார் சஞ்சு சாம்சன். இதுவரை விளையாடிய 15 போட்டிகளில் 13ல் டாஸில் தோல்வி அடைந்திருக்கிறது சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் அணி.

இருந்தாலும் போட்டியை வெல்லும் முனைப்பில் முதலில் பேட்டிங் ஆட களமிறங்கியது ராஜஸ்தான். ஜெய்ஸ்வால் 3 பந்துகளில் ஆட்டமிழக்க, முதல் பந்தே சிக்சருக்கு விளாசி அதிரடியாகத் தொடங்கி வைத்த கேப்டன் சஞ்சு சாம்சன், 26 பந்துகளில் 3 சிக்சர் 5 பவுன்டரிகள் விளாசி 47 ரன்கள் எடுத்து சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார்.

பதுங்கி பாய்ந்த பட்லர்

அது வரை மிகவும் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த ஜாஸ் பட்லர், கேப்டன் விடைபெற்றதும் வேகமெடுக்கத் தொடங்கினர். முதல் 38 பந்துகளில் வெறும் 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பட்லர், அடுத்த 18 பந்துகளில் 50 ரன்கள் விளாசி எதிரணியை மிரட்டினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் அணி.

ஐபிஎல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ்… ராஜஸ்தானுக்கு வாய்ப்பு உண்டா?

பட மூலாதாரம், BCCI/IPL

189 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைடன்ஸ். முதல் ஓவரில் விக்கெட் எடுத்துக் கொடுப்பதில் நேர்த்தியான டிரென்ட் போல்ட் பந்துவீசத் தொடங்கினார். 2வது பந்திலேயே சாஹா டக் அவுட். நடப்பு தொடரில் இதுவரை 5 முறை முதல் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தியிருக்கிறார் டிரென்ட் போல்ட். இருப்பினும் அவரது வேகம் குஜராத்தை கட்டுப்படுத்தவில்லை. 2 வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - மேத்யூ வேட் இணை நிதானமாக விளையாடி 72 ரன்கள் சேர்த்தது. ரன் ஓடுவதில் நடந்த குழப்பத்தால் சுப்மன் கில் 35 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, மேத்யூ வேடும் 35 ரன்களில் அவுட்டானார்.

ரன் பொழிந்த மில்லர்

பின்னர் ஹர்திக் பான்டியா - டேவிட் மில்லர் ஜோடி களத்தில் நங்கூரமிட்டு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். முதல் 14 பந்துகளில் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்த மில்லர் கடைசி 24 பந்துகளில் மட்டும் 58 ரன்கள் குவித்து அசத்தினார். 27 பந்துகளில் 5 பவுன்டரிகளுடன் ஹர்திக் பான்டியா 40 ரன்கள் விளாச, 5 சிக்சர் 3 பவுன்டரிகளுடன் 38 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார் டேவிட் மில்லர்.டேவிட் மில்லர்.

ஐபிஎல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ்… ராஜஸ்தானுக்கு வாய்ப்பு உண்டா?

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, டேவிட் மில்லர்

இந்த ஜோடி 4வது விக்கெட்டிற்கு 106 ரன்கள் சேர்த்தன் மூலம் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

ஒரு தொடரில் அதிக முறை சேசிங்போது கடைசி ஓவரில் வெற்றிபெற்ற அணி எனும் பெருமையை படைத்திருக்கிறது குஜராத் டைடன்ஸ். ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்த அணிகளின் பட்டியலில் குஜராத் 3ம் இடத்தையும் பிடித்துள்ளது.

குஜராத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

ராஜஸ்தான் தோல்விக்கு என்ன காரணம்?

குஜராத்தின் அதிரடியை ராஜஸ்தான் பவுலர்களால் கட்டுப்படுத்த முடியாததே தோல்விக்கு காரணமாக மாறியது. சூழலை எதிர்கொள்ள ஆரம்பத்தில் குஜராத் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக எதிர்கொண்டது. அஷ்வின் 4 ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்தார். நடப்பு தொடரில் அதிக ரன்களை அவர் விட்டுக்கொடுத்தது இதுவே முதல்முறை. மிக்காய் ஒரு ஓவரில் வைடுகள் () சேர்த்து மொத்தம் 10 பந்துகளை வீசினார். இதில் ஒரு நோ பாலும் அடங்கும். அதில் 18 ரன்களை சேர்த்தது குஜராத் அணி.

எதிரணியின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் போனது ராஜஸ்தானுக்கு பின்னடைவாக மாறியது. ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவினாலும் குவாலிஃபயர் சுற்றின் 2வது ஆட்டத்தில் வெற்றிபெறும் பட்சத்தில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெறலாம்.

நடப்பு தொடரில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் இந்த வெற்றியின் மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :