You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் ஹசாரே கோப்பை: முதல் சுற்றிலேயே வெளியேறிய தமிழக கிரிக்கெட் அணி - என்ன காரணம்?
- எழுதியவர், மு. பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
சமீபத்தில் சையது முஷ்தாக் அலி தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி. ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே மிகப்பெரிய சறுக்கலை சந்தித்திருக்கிறது.
2021 விஜய் ஹசாரே டிராபியில் முதல் சுற்றோடு வெளியேறியிருக்கிறது தமிழ்நாடு. லீக் சுற்றில் விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்ற தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணி, பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து காலிறுதி வாய்ப்பை கோட்டை விட்டிருக்கிறது.
என்ன நடந்தது?
சையது முஷ்தாக் அலி டி-20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு இந்தூர் சென்றது தமிழக அணி. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரால் அந்தத் தொடரைத் தவறவிட்ட சீனியர் வீரர்கள், இப்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரால் விஜய் ஹசாரே தொடரில் ஆடவில்லை. இருந்தாலும், அந்தத் தொடரில் கலக்கிய அதே வீரர்கள் இருந்ததால், நம்பிக்கையோடு களமிறங்கியது.
தமிழக அணி தொடரை சிறப்பாகவே துவக்கியது. பலமான பஞ்சாப் அணி நிர்ணயித்த 289 என்ற மிகப்பெரிய இலக்கை சிறப்பாக சேஸ் செய்தது தமிழ்நாடு.
துவக்கவீரர் என்.ஜெகதீசன் சதமடித்து அசத்தினார். பாபா அபரஜித், ஷாரூக் கான் இருவரும் அரைசதம் அடித்தனர்.
நல்ல தொடக்கம் இருந்தும் தமிழ்நாடு அந்த ஃபார்மைத் தக்கவைக்கவில்லை. அடுத்த 2 போட்டிகளிலுமே தோல்வியடைந்தது அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
ஆந்திராவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் மட்டுமே எடுத்த தமிழ்நாடு, மத்திய பிரதேசத்துக்கு எதிராக 225 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோல்வியடைந்தது.
இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால், தமிழக அணியின் காலிறுதி வாய்ப்பு கேள்விக்குறி ஆனது. ஆனால், நான்காவது போட்டியில் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் அசத்தி ஜார்கண்ட் அணியை வீழ்த்தியது.
கடைசி போட்டியில் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், விதர்பா பந்துவீச்சை அடித்து நொறுக்கி 150 என்ற இலக்கை வெறும் 12-வது ஓவரிலேயே துரத்தி வென்றது.
லீக் சுற்றின் முடிவில் முடிவில் குரூப் பி பிரிவில் ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, ஜார்கண்ட், மத்திய பிரதேஷ் என 4 அணிகளும் 12 புள்ளிகள் பெற்றிருந்தன. ஆனால், ரன்ரேட் அடிப்படையில் ஆந்திரா முதலிடம் பிடித்து (0.732) காலிறுதிக்குள் நுழைந்தது. தமிழ்நாடு (0.65) இரண்டாம் இடம் பிடித்து வெளியேறியது.
தோல்விக்கு என்ன காரணம்?
இந்தத் தொடரில் தமிழக அணியின் செயல்பாடு சற்று ஏமாற்றம்தான். பஞ்சாப், ஜார்கண்ட் போன்ற சற்று வலுவான அணிகளை வென்றுவிட்டு, ஆந்திர பிரதேச, மத்திய பிரதேச அணிகளிடம் தோற்றிருக்கிறது. சையது முஷ்தாக் அலி தொடரைப் போல் பந்துவீச்சு உக்கிரமாக இல்லையென்றாலும், பேட்டிங்கில் ஏற்பட்ட குளறுபடிதான் இந்த சிக்கல்களுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
ஜார்கண்ட் அணிக்கெதிரான போட்டியைத் தவிர்த்து தமிழ்நாட்டிற்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. மற்ற நான்கு போட்டிகளில் ஒன்றில்கூட தொடக்க ஜோடி ஆறு ஓவர்களைத் தாண்டி விளையாடவில்லை. ஜெகதீசன் 217 ரன்கள் எடுத்திருந்தாலும், அதில் பெரும்பாலானவை முதல் போட்டியில் அடிக்கப்பட்டதே.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹரிநிஷாந்த், அருண் கார்த்திக் இருவருமே சொதப்பினார்கள். முதல் மூன்று போட்டிகளில் (அருண் கார்த்திக் - 5, ஹரிநிஷாந்த் 4, 6) மொத்தமே 15 ரன்கள்தான் எடுத்தார்கள். அபரஜித் மட்டும் ஜார்கண்ட்டுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.
தொடக்கத்தில் ஏற்பட்ட சொதப்பல் கடைசி வரை தொடர்ந்தது. தமிழகத்தின் சுழற்சி முறை கொள்கையும், பேட்டிங் வரிசையை மாற்றியதும் அந்த சறுக்கலுக்குப் பெருமளவு காரணமாக அமைந்தது.
ஹரிநிஷாந்த், கௌஷிக், பிரதோஷ் ரஞ்சன் பால் என வீரர்கள் போட்டிக்கு போட்டி மாறினார்கள். ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங் வரிசையும் மாறியது.
உதாரணமாக, முதல் போட்டியில் மூன்றாவது வீரராகக் களமிறங்கிய அபரஜித், அடுத்த போட்டியில் நான்காவது பேட்ஸ்மேனாக இறங்கினார். மத்திய பிரதேசத்துக்கு எதிராக ஆறாவதாகக் களம் கண்டவர், ஜார்கண்டுக்கு எதிராக துவக்கவீரராக களமிறக்கப்பட்டார். அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணியின் பேட்டிங் வரிசையும் மாறிக்கொண்டேதான் இருந்தது.
விஜய் ஹசாரே டிராபியில் சில பேட்ஸ்மேன்கள் பேட்டிங் வரிசை எப்படி மாறியது என்பதை இந்த பட்டியலில் பாருங்கள்.
பாபா அபரஜித் - 3, 4, 6, 1, 6
தினேஷ் கார்த்திக் - 4, 6, 4, 3, 1
ஷாரூக் கான் - 5, 8, 8, 6, 4
பாபா இந்திரஜித் - 6, 5, 3, 5, DNP
பேட்டிங் ஆர்டரில் ஒரு சில மாற்றங்கள் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். உதாரணமாக, கடைசி ஆட்டத்தில் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசம் வேண்டுமென்பதால் ஜெகதீசனோடு தினேஷ் கார்த்திக் ஓப்பனராக இறங்கினார். ஷாரூக் கான் நான்காவது பேட்ஸ்மேனாக முன்கூட்டி களமிறக்கப்பட்டார்.
அபரஜித் ஆறாவது வீரராகக் களம் கண்டார். ரன்ரேட் முக்கியம் எனும்போது அதிரடி வீரர் ஒருவர் முன்னால் களமிறக்கப்படுவதும், அபரஜித் போல நிதானமாக ஆடக்கூடியவர் பின்னர் களமிறக்கப்படுவதும் பொதுவான உத்திதான். ஆனால், மற்ற போட்டிகளிலும் அதைச் செய்தது ஏன் என விளக்கப்படவில்லை.
ஷாரூக் கானையும் முழுமையாக 'பின்ச் ஹிட்டராக' மட்டுமே கருதுகிறார்களா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. அந்த இரண்டு போட்டிகளிலும் அவர் எட்டாவது வீரராகவே களமிறக்கப்பட்டார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்கின்றன, பெரிய பார்ட்னர்ஷிப்கள் அமையவில்லை, மிடில் ஓவர்களில் ரன்களும் வரவில்லை. ஆனால், ஷாரூக் களமிறக்கப்படவே இல்லை. ரஞ்சி அனுபவம் கொண்ட ஒரு வீரர் மிடில்ஆர்டரில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
சையது முஷ்தாக் அலியில் இதுபோன்ற மாற்றங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாது. ஏனெனில், அது டி-20. இது 50 ஓவர் போட்டிகள். ஒரு தெளிவான திட்டம், நிலையான பேட்டிங் ஆர்டர் எந்த அணிக்குமே முக்கியம்.
பந்துவீச்சில் பெரிய பிரச்சனை இல்லாவிட்டாலும், முந்தைய தொடர்களைப்போல் தமிழக பௌலர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.
சையது முஷ்தாக் அலி தொடரில் தினேஷ் கார்த்திக்கின் மிகப்பெரிய ஆயுதமாக இருந்த முருகன் அஷ்வின், சாய் கிஷோர் கூட்டணி 57 ஓவர்களில் மொத்தமே 3 விக்கெட்டுகள்தான் வீழ்த்தியது. இதே கூட்டணி சையது முஷ்தாக் அலி தொடரில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தது.
சாய்கிஷோர் சிக்கனமாகப் பந்துவீசினாலும் அவரால் விக்கெட் வேட்டை நடத்த முடியவில்லை. தினேஷ் கார்த்திக்கின் இரண்டு முக்கிய ஆயுதங்கள் கைகொடுக்காமல் போனது ஒரு சறுக்கல்தான் ஆனால் வீழ்ச்சிக்கு பந்துவீச்சாளர்கள் காரணமல்ல.
தீர்க்கமான, நிலையான பேட்டிங் ஆர்டர் 50 ஓவர் போட்டிகளுக்கு மிகவும் முக்கியம். நல்ல தொடக்கமும் முக்கியம். தமிழகத்தின் இந்தத் தோல்வி உணர்த்துவது இந்த விஷயங்களைத்தான்.
பிற செய்திகள்:
- முஸ்லிம்கள் உடலை புதைக்க இரணை தீவு - இலங்கையில் தீராத சர்ச்சை
- உடையும் நிலையில் பா.ஜ.க - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி: புதுவையில் என்ன நடக்கிறது?
- கடற்கரை மணலை எடுத்து கட்டுமானமா? பாம்பன் புதிய ரயில் பாலப் பணியில் என்ன நடக்கிறது?
- திமுக, அதிமுகவிடம் தொகுதிகளைப் பெற சிறிய கட்சிகள் போராடுகின்றனவா? தீர்வு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: