பார்தீவ் படேல் அனைத்து வகை கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு - என்ன நடந்தது?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

35 வயதான பார்தீவ் அஜய் படேல், அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புதன்கிழமை (டிசம்பர் 9) அறிவித்துள்ளார்.

"இன்று நான் அனைத்து ரக கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்து இருக்கிறார். பிசிசிஐ, குஜராத் கிரிக்கெட் சங்கம், ஐபிஎல் நிர்வாகம், தன் குடும்பத்தினர்கள், ரசிகர்கள், அணி தலைவர்கள் என அனைவருக்கும் நன்றி கூறிய அவர், கங்குலியைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து இருக்கிறார்.

பார்தீவ் படேல், கடந்த ஆகஸ்ட் 2002-ல், நாட்டிங்ஹாமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

2003ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக, குவின்ஸ்டவுனில் நடந்த ஒரு நாள் போட்டியில் பார்தீவ் படேல் களம் இறங்கினார். 2011ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான டி20 போட்டியில் இந்திய அணி சார்பாக அவர் களம் கண்டார்.

கடந்த ஜனவரி 2018-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்ஸ்பர்கில் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்தியாவுக்காக விளையாடியது தான் பர்தீவின் கடைசி டெஸ்ட் போட்டி.

அதே போல பிரிஸ்பன் நகரில், இலங்கைக்கு எதிராக, 21 பிப்ரவரி 2012-ல் விளையாடியது தான் பார்தீவ் படேல் இந்தியாவுக்காக ஆடிய கடைசி ஒரு நாள் போட்டி.

இங்கிலாந்துக்கு எதிராக மேன்செஸ்டரில் ஆகஸ்ட் 2011-ல் இந்திய அணி சார்பாக விளையாடியது தான் பார்தீவ் படேலின் கடைசி சர்வதேச டி20.

பார்திவ் படேல் தன் ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்கையில், மொத்தம் 25 டெஸ்ட், 38 ஒரு நாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளை விளையாடி இருக்கிறார்.

டெஸ்டில் 6 அரை சதங்களையும், ஒரு நாள் போட்டியில் 4 அரை சதன்களையும் அவர் பதிவு செய்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கெளரவ் கபூரின் 'பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்' எனும் தொலைக்காட்சி தொடரில் பார்தீவ் படேல் வெளிப்படையாக பேசினார். அப்போது அவர், ''கிரிக்கெட்டில் தோனி மிகச்சிறந்த வீரர், ஜாம்பவான். அந்த நேரத்தில் பலரும் நீ பிறந்த ஆண்டு சரியில்லை, நீ சில ஆண்டுகள் முன்கூட்டியோ அல்லது பல ஆண்டுகளுக்குப் பின்போ பிறந்திருக்க வேண்டும் என்றனர். ஆனால், தோனி கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்துக்கு முன்பே நாங்கள் எல்லாம் கிரிக்கெட் விளையாடி பயிற்சி எடுக்கத் தொடங்கிவிட்டோம். நாங்கள் மட்டும் மோசமாக விளையாடமல் இருந்திருந்தால், இன்று தோனியால் அணியில் இடம் பிடித்திருக்க முடியாது, முதலிடத்தைப் பிடித்திருக்க முடியாது" என்று கூறியிருந்தார்.

"உண்மையில் தோனி அளவுக்கு நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. அந்த வகையில், தோனியின் வெற்றிக்கு நாங்கள்தான் காரணம். நாங்கள் இல்லாமல் தோனியின் வெற்றி இல்லை,' என்று பார்திவ் படேல் தெரிவித்திருந்தார்.

2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பார்தீவ் படேல் வாய்ப்பு பெற்று 8 ஆண்டுகளுக்குப் பின் அணிக்குத் திரும்பினார். ஆனால், விர்திமான் சாஹா உடல் தகுதி பெற்றபின் மீண்டும் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

2018ஆம் ஆண்டில், இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றபோது 2-வது விக்கெட் கீப்பராக பார்தீவ் படேல் சென்றபோதிலும், அவரால் வாய்ப்பு பெற முடியவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அது தினேஷ் கார்த்திக்குச் சென்றது. இவ்வாறாக கிரிக்கெட் துறையில் தனக்கான அங்கீகாரம் குறைவாகவே இருப்பதாக பார்திவ் படேல் பல நேரங்களில் மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வந்த நேரத்தில், அவரது தனது கிரிக்கெட் போட்டி ஓய்வு தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: