You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை 2019: மார்ச் 8-இல் முடிவுகள்
பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை 2019 விருதுக்கான வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் இணைய வாக்கெடுப்பு முடிவுற்றது.
இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஐந்து இந்திய வீராங்கனைகளின் பெயர் பட்டியல் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிடப்பட்டது முதல் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான வீராங்கனைக்கு வாக்களித்தனர்.
தடகள வீராங்கனை தூத்தி சந்த், பாரா-பேட்மிண்டன் வீராங்கனை மானசி ஜோஷி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆகியோரே இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஐந்து வீராங்கனைகள் ஆவர்.
இந்த விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு முடிவுற்ற நிலையில், அடுத்த மாதம் 8ஆம் தேதி டெல்லியின் தாஜ் பாலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள விழாவில் வெற்றியாளர் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடபடவுள்ளது.
இதன் முடிவுகள் பிபிசி இந்திய மொழி சேவைகளின் இணையதளங்களிலும், பிபிசி ஸ்போர்ட்ஸ் பக்கத்திலும் வெளியிடப்படும்.
நாட்டின் தலைசிறந்த விளையாட்டு செய்தியாளர்கள், நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்களால் இந்த ஐந்து வீராங்கனைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை 2019 விருதை வெல்வதற்கு போட்டியிடும் ஐந்து வீராங்கனைகள் குறித்த சிறு அறிமுகம் இதோ:
1. தூத்தி சந்த்
வயது 23, விளையாட்டு: தடகளம்
பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தற்போது இந்திய தேசிய சாம்பியனாக திகழ்கிறார் தூத்தி சந்த். 2016 கோடைகால ஒலிம்பிக்ஸில் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு தகுதி பெற்ற மூன்றாவது இந்திய வீராங்கனை இவர். 2018ல் நடைபெற்ற ஜகார்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தூத்தி சந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார். 1998 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா இதில் வென்ற முதல் பதக்கம் இது. பல சர்ச்சைகளை கடந்து வந்த இவர், இந்தியாவின் சிறந்த தடகள வீராங்கனையாக விளங்குகிறார்.
2. மானசி ஜோஷி
வயது: 30, விளையாட்டு: பாரா-பேட்மிண்டன்
2019ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற பாரா-பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றவர் மானசி ஜோஷி. உலகின் தலைசிறந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனை பட்டியலில் இவர் முன்னணியில் உள்ளார். ஜகார்தாவில் 2018ல் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை தன்வசமாக்கிக் கொண்டார்.
2011ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் தனது இடது காலை இழந்தார் மானசி ஜோஷி. ஆனால், உலகின் தலைசிறந்த பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ வேண்டும் என்ற அவரது விருப்பத்தை அது தடுக்கவில்லை.
3. மேரி கோம்
வயது: 36, விளையாட்டு: குத்துச்சண்டை (ப்ளைவெயிட் பிரிவு)
பிரபலமாக மேரி கோம் என்று அழைக்கப்படும் மாங்க்டே சங்கினிசாங், இதுவரை எட்டு உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்ற ஒரே குத்துச்சண்டை வீரராவார் (ஆண்கள் அல்லது பெண்கள்). உலக தொழில்சாரா குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை 6 முறைகள் வென்றுள்ளார் மேரி கோம். ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனையாக மேரி கோம் திகழ்கிறார்.
மாநிலங்களவை உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட மேரி கோம், அவரது பெயருக்கு முன்னால் 'OLY' என்ற அடையாளத்தை வழங்கி உலக ஒலிம்பியன்ஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது.
4. பி.வி. சிந்து
வயது 24, விளையாட்டு: பேட்மிண்டன்
கடந்த ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் விளையாட்டு வீராங்கனையானார் பி.வி சிந்து. உலக சாம்பின்யன்ஷிப் போட்டிகளில் மொத்தம் 5 பதக்கங்களை அவர் வென்றுள்ளார். மேலும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் பிவி சிந்து.
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் முதல் 20 வீரர்களின் பட்டியலில் சிந்து செப்டம்பர் 2012ஆம் ஆண்டே இடம்பெற்றார். அப்போது அவருக்கு 17 வயதுதான். கடந்த நான்கு ஆண்டுகளாக முதல் 10 இடங்களில் தொடர்ந்து நீடித்து வருகிறார். வரவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பிவி சிந்து வெல்வார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் இந்திய பேட்மிண்டன் ரசிகர்கள்.
5. வினேஷ் போகாட்
வயது: 25, விளையாட்டு: மல்யுத்தம் (ஃப்ரீஸ்டைல் பிரிவு)
2018ஆம் ஆண்டு ஜகார்தா ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்களை வினேஷ். காமன்வெல்த் போட்டிகளிலும் இரண்டு தங்கப்பதக்கங்களை இவர் வென்றுள்ளார். 2019ல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக வென்ற வினேஷ், வெண்கலப்பதக்கம் பெற்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: