IND Vs NZ: இந்திய அணியின் இரண்டாவது வெற்றி சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Phil Walter/getty images
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஞாயிற்றுகிழமை) ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் இருந்து நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணி 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரரான மார்டின் குப்தில் ஷர்துல் தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின், நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்டின் குப்தில் 33 ரன்களும் டிம் செய்ஃபெர்ட் 33 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளும் ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பட மூலாதாரம், DAVID ROWLAND/ getty image
20 ஓவரில் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரரான ரோகித் சர்மா 8 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ஆனால் ரோகித்துடன் களம் இறங்கிய ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித்துக்கு பிறகு களம் இறங்கிய கோலியும் நீண்ட நேரம் களத்தில் நிலைக்கவில்லை.
கோலிக்கு பிறகு களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். கே.எல். ராகுல் 50 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இறுதியில் 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றிபெற்றது. ஆட்டநாயகன் விருதை கே.எல். ராகுல் பெற்றார்.
நியூசிலாந்து அணியில் டிம் சௌதி 2 விக்கெட்களும் இஷ் சோதி ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த போட்டிக்கு பிறகு பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், "நாங்கள் இன்னும் 15-20 ரன் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்" என்று கூறினார்.

பட மூலாதாரம், Phil Walter/getty Images
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, "இன்று இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மைதானத்தை நன்றாக புரிந்து கொண்டு விளையாடினோம். இந்த தொடரை வெல்ல மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் வெல்ல வேண்டும்" எனக் கூறினார்.
இந்த தொடரில் இந்தியா பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் மூன்றாவது போட்டி, ஹாமில்டன் நகரிலுள்ள செடான் பார்க் மைதானத்தில் ஜனவரி 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:





















