ஏர் ஃப்ரையர் Vs ஓவன் - நாம் உண்ணும் உணவை எதில் சமைப்பது அதிக நன்மை தரும்?

பட மூலாதாரம், Getty Images
2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஏர் ஃப்ரையர்களை வாங்குவது 400 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஏர் ஃப்ரையரில் மிகக் குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தியோ அல்லது எண்ணெய் இன்றியோ பொரிக்க முடிகிறது. எனவே இது மற்ற சமையல் முறைகளை விட ஆரோக்கியமானது எனக் கருத முடியுமா?
வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் இவ்வேளையில், ஏர்ஃப்ரையர், மின்சாரம் அல்லது ஆற்றல் நுகர்வை எவ்வாறு அதிகரிக்கிறது என்பது குறித்தோ அதற்கு ஆகும் செலவு குறித்தோ சிந்திக்க வேண்டியுள்ளது.
கிரெக் ஃபுட், பிபிசி ரேடியோ 4 இன் 'ஸ்லைஸ்ட்-பிரெட்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர். அவர் இது தொடர்பாக இரண்டு நிபுணர்களுடன் பேசி, ஏர்ஃப்ரையர்களின் நன்மைகள் மற்றும் வரையறைகளைப் புரிந்து கொள்ள முயன்றார்.
உணவின் நாலாபக்கங்களிலிருந்தும் வெப்பக்காற்றைப் பாய்ச்சி உணவைச் சமைக்கிறது ஏர் ஃப்ரையர்
ஏர்ஃப்ரையர் சுமாராக ப்ரெட் டோஸ்டர் அளவிலானது. சமையலறை மேடையில் பொருந்துகிறது. அது உள்ளே வைக்கப்பட்டுள்ள உணவைச் சுற்றி, மிக அதிக வேகத்தில் மிக வெப்பமான காற்றைப் பாய்ச்சி, சுற்றியடிக்கிறது.
ஜேக்கப் ராட்ஜிகோவ்ஸ்கி லண்டன் இம்பீரியல் கல்லூரியில் சமையல் கல்வி வடிவமைப்பாளராக உள்ளார். "இது அடிப்படையில் மிகவும் வலுவான மற்றும் மிகவும் வெப்பமான காற்று. நீங்கள் அதை ஒரு ஹேர் ட்ரையர் போல் நினைக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"இது அடிப்படையில் விசிறி-அடுப்பு போன்றது. ஆனால் அளவில் சிறியது. இதன் உள்ளே இருக்கும் மின்விசிறி மிக வேகமாகச் சுழலும்."
கன்வென்ஷன் ஓவனைவிட விரைவில் உணவு சமைக்கிறது ஏர் ஃப்ரையர்
"ஏர்ஃப்ரையரின் விசிறி மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் அதன் பெட்டி மிகவும் சிறியது, மேலும் இந்த முழு சாதனமும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 20 நிமிடங்களில் ஏர்ஃப்ரையரில் சிக்கன் லெக் பீஸை சமைக்க முடியும். அதை அடுப்பில் சமைக்க இன்னும் அதிக நேரம் ஆகும்." என்கிறார் ஜேக்கப்.
பெரிய கன்வென்ஷன் ஓவனில் சமைக்க, ப்ரீ ஹீட் செய்யவே அதிக நேரம் பிடிக்கும்.
ஆனால் உணவுப் பொருட்களை வைத்துச் சமைக்கும் இடவசதி மிகவும் குறைவாக இருப்பதால் ஒரே நேரத்தில் குறைந்த அளவு உணவை மட்டுமே சமைக்க முடியும்.
"நீங்கள் நான்கு அல்லது ஆறு நபர்களுக்கு சமைக்கிறீர்கள் என்றால், அது நேரத்தை மிச்சப்படுத்தாது, ஏனெனில் சிறிய அளவில் மீண்டும் மீண்டும் உணவை ஃப்ரையரில் வைத்துச் சமைக்க வேண்டியிருக்கும்," என்பது உணவு ஆய்வாளர்களின் கருத்து.
மொறு மொறு உணவு வகைகளுக்கு ஏர் ஃப்ரையர் ஏற்றது
பொதுவாக நாம் விளம்பரங்களில் பார்க்கும் பெரும்பாலான ஏர்ஃப்ரையர் மாடல்கள் சிக்கன் மற்றும் ஃப்ரைஸ் செய்வதாகவே காணப்படுகின்றன, ஏனெனில் நீங்கள் மொறு மொறு உணவுவகைகளைச் சாப்பிட விரும்பும் போது இந்தச் சாதனம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த உபகரணங்கள் உணவை மொறு மொறுப்பாக ஆக்குகின்றன என்று ஜேக்கப் கூறுகிறார். எனவே நீங்கள் மிகவும் கர கர மொறு மொறு உணவு வகைகளைச் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், இந்த உபகரணங்கள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
இது ஆரோக்கியத்திற்கு ஏற்றதா?
நிறைய சூடான எண்ணெயில் டீப்-ஃப்ரை செய்து சமைப்பதை விட ஏர்ஃப்ரையரில் சமைப்பது ஆரோக்கியமானது என்கிறார் ஜேக்கப்.
கன்வென்ஷனல் ஓவனில் சமைப்பதை விடவும் கூட இது ஆரோக்கியமானதாக இருக்கும்.
உருளைக்கிழங்கில் எண்ணெய் தெளித்துச் சமைத்தால் கூட, கிழங்கு அந்த எண்ணெயை உறிஞ்சிவிடும். ஆனால் ஏர்ஃப்ரையர்களைப் பொறுத்தவரை, எண்ணெய் ஒரு வடிதட்டின் மூலம் கீழே சென்று விடுகிறது.
"ஏர்ஃப்ரையரில் அதிக எண்ணெய் இருந்தால், அது தானாகவே வடிகட்டியில் விழுந்து தங்கி விடும். உங்கள் உணவில் வராது."
ஆனால் இதுவே ஆரோக்கியமான சமையல் முறை என்று கூறமுடியாது. நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ண விரும்பினால், ஆவியில் வேகவைத்த உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பிபிசியின் குட் ஃபுட் இதழின் ஆசிரியர் அன்யா கில்பர்ட் கூறுகையில், சில புதிய மாடல் ஏர்ஃப்ரையர்களில் 15 விதமான செயல்பாடுகள் உள்ளன. இது அந்த சாதனத்தை இன்னும் சிறப்பாக்குகிறது என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஓவனை விடக் குறைவான மின் நுகர்வு
இந்த முடிவுக்கு வரும் முன்னர், சைமன் ஹோபன் (பிபிசியின் ஸ்லைஸ்டு ப்ரெட் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்) ஒருவருக்கான கோழிக்கால் மற்றும் ஃப்ரைஸ் சமைக்க முயற்சித்தார். முதலில் அடுப்பில் வைத்துச் சமைத்த பிறகு அதே அளவு, ஏர்ஃப்ரையரில். சமைத்துப் பார்த்தார். இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டபோது மற்ற அனைத்து மின்சாதனங்களும் அணைக்கப்படுவதையும் அவர் உறுதி செய்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த இரண்டு வெவ்வேறு சாதனங்களில் உணவு சமைக்க எவ்வளவு மின்சாரம் செலவழிக்கப்பட்டது என்பதை மின் மீட்டரில் சரிபார்த்தார்.
"ஓவனில் சிக்கன் சமைக்க சுமார் 35 நிமிடங்கள் ஆனது, மீட்டரைப் பார்த்தபோது, 1.05 கிலோவாட்-ஹவர் மின்சாரத்தைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பிரையரில் அதே சிக்கனை சமைக்க 20 நிமிடங்கள் ஆனது, நான் பார்த்தேன். மீட்டரில், 0.43 கிலோவாட்-ஹவர் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது."
இது தவிர, ஃப்ரைஸ் செய்யும் போது, ஓவனில் சரியாக சுமார் ஒரு மணி நேரம் ஆகும். இதில் 1.31 கிலோவாட் மணி நேரம் மின்சாரம் செலவிடப்பட்டது.
அதேசமயம் ஃப்ரையரில் ஃப்ரைஸ் மிகக் குறுகிய நேரத்தில் தயாராகிவிட்டது.
சிமோனின் கூற்றுப்படி, "35 நிமிடங்களில் ஃப்ரைஸ் தயாராகிவிட்டன. இது ஒரு மணி நேரத்திற்கு 0.55 கிலோ வாட் என்ற விகிதத்தில் மின்சாரத்தை உட்கொண்டது."
ஓவனுடன் ஒப்பிடும்போது ஏர்ஃப்ரையரில் உணவு சமைக்கச் செலவாகும் மின்சாரம் பாதிக்கும் குறைவானது என்ற முடிவுக்கு வருகிறார் கிரெக்.
ஏர் ஃப்ரையர்,ஒவனுக்கு மாற்றாகாது ஆனால், அதிக செயல்திறன் மிக்கது
இருப்பினும், ஏர்ஃப்ரையர் ஓவனுக்கு முழுமையான மாற்றாகும் என்ற் ஜேக்கப் கருதவில்லை. "நிச்சயமாக... நீங்கள் ஒரு முழு கோழியை அல்லது டர்க்கியை ஏர்ஃப்ரையரில் சமைக்க முடியாது." என்கிறார் அவர்.
"ஆனால் இது மிகவும் அருமையான கண்டுபிடிப்பு என்று நான் நினைக்கிறேன். என்னிடம் ஒன்று உள்ளது, நான் அதை அதிகம் பயன்படுத்துகிறேன். அடுப்பு இல்லாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள விஷயம் என்று நான் நினைக்கிறேன்."
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























