நம்மில் சிலர் ஏன் எப்போதும் `லேட்' ஆக வருகிறோம்?

தாமதம் - மனித இயல்பு

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உங்கள் நண்பர்கள் கூட்டத்திலோ அல்லது குடும்ப உறுப்பினரில் ஒருவரோ எப்போதும் தாமதமாக வரும் பழக்கம் கொண்டவராக இருக்கலாம்...அவர் குறித்து சில நேரங்களில் நீங்கள் எரிச்சல் அடைந்திருக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் எப்போதும் தாமதமாக வருகிறார்கள் என நீங்கள் யோசித்தது உண்டா?

இந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள் இதில் மிகவும் மோசமாக இருக்கின்றனர்.

2014 ஆம் ஆண்டு யூ-கவ் (youGov) செய்த ஆய்வில், ஐந்தில் ஓர் அமெரிக்கர் ஒரு வாரத்திற்கு குறைந்தது ஒருமுறையாவது வேலைக்கு தாமதமாக செல்வது தெரியவந்தது.

எழுத்தாளர் க்ரேஸ் பேஸிக்கும் இதே சிக்கல்தான். தன்னுடைய நேரம் தவறும் பழக்கத்துடன் போராடும் அவர், அதைப்பற்றி ஆராய்ந்து புரிந்துக்கொள்ள முயற்சி செய்தார். லேட் என்ற புத்தகத்தின் எழுத்தாளர் இவர். இந்த புத்தகத்தில் நம்மில் சில தாமதமாக வருவது ஏன் என்றும் அதை சரி செய்து கொள்வதற்கான காரணங்கள் குறித்தும் விவரித்துள்ளார்.

தாமதமாக்குபவர்களின் இயல்பு என்ன?

"மனிதர்களின் இயல்பு என்பது இது ஒரு மணிக்கூண்டின் வளைவு போன்றது. ஒரு பக்க நுனியில் இருப்பவர்கள் 'நேரத்தை கடைப்பிடிப்பவர்கள்.' அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ஒரு இடத்திற்கு செல்ல நினைப்பார்கள்.

தாமதம் - மனித இயல்பு

பட மூலாதாரம், Getty Images

மறு பக்க நுனியில் இருக்கும் எங்களை போன்றவர்கள், 'நேரத்தை வளைப்பவர்கள்." அதாவது, தாமாதமாக்குபவர்கள். (Time benders)

நேரத்தை வளைப்பவர்களுக்கு 'ஒரே மாதிரியாக நாளை கழிப்பது பிடிக்காது.", என்கிறார் எழுத்தாளர் க்ரேஸ் பேஸி.

"வழக்கமான வேலைகள் எங்களுக்கு பிடிக்காது. எங்களுக்கு விரைவில் சலிப்பு ஏற்பட்டுவிடும்.

ஆனால் எங்களுக்கு ஆர்வம் இருக்கும் ஒன்றில் எங்களால் முழு கவனமும் செலுத்தமுடியும்.

அதேபோல நேரம் குறைவாக இருந்தால், எங்களால் நன்றாக வேலை செய்யமுடியும்.

ஓர் அலுவகத்திற்குள் நுழைந்து நேரத்தை வளைப்பவர்களை நீங்கள் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

பொதுவாக அவர்களின் மேசை ஒழங்கற்று இருக்கும். ஏனென்றால், அவர்கள் அடுத்த வேலையை தொடங்குவதற்கு முன், அதற்கு முன் எடுத்துக்கொண்ட வேலையை முடித்திருக்க மாட்டார்கள்", என்று விளக்குகிறார் கிரேஸ்.

தாமதம் - மனித இயல்பு

பட மூலாதாரம், Getty Images

அப்படியெனில், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது 'நேரத்தை வளைப்பவர்கள்' ' நேரத்தை வேறு வழியில் பார்ப்பதாக க்ரேஸ் பேஸி நம்புகிறார்.

"பெரும்பாலானவர்களை ஒப்பிடும்போது நேரம் பற்றிய எங்கள் கண்ணோட்டம் மாறுபட்டதாக இருக்கும்.

மனதளவில், எங்களுக்கு ஒவ்வொரு நிமிடத்தின் நீளமும் ஒரே மாதிரி இருக்காது.

எங்கள் நேரத்தின் வேகம் கூடும் அல்லது குறையும்.

நாங்கள் ஏதோ ஒரு வேலையில் மிகவும் ஆழ்ந்து போய்விடுவதால் நேரம் பற்றிய சிந்தனையே எங்களுக்கு இருக்காது.

மறுபுறம் எங்களுக்கு காலகெடு ஒன்று இருந்தால், நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்.", என்கிறார் க்ரேஸ் பேஸி.

தாமதமாக்குபவர்கள் குறித்து செய்த ஆய்வுகள்

வாஷிங்டன் பல்கலைகழக மனோதத்துவ நிபுணர்களின் 2016 ஆம் ஆண்டின் ஆய்வும் இவர் கூறுவதை பிரதிப்பலிக்கிறது.

நேரத்தை மூளையால் மதிப்பிடும் நமது திறனை அவர்கள் ஆராய்ந்தனர்.

இதை அவர்கள் நேர அடிப்படையிலான நினைவு என்று அழைக்கின்றனர்.

தாமதம் - மனித இயல்பு

பட மூலாதாரம், Getty Images

பரிசோதனையில் கலந்துகொண்டவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு வேலையை செய்துமுடிக்க வேண்டும். அவர்கள் கடிகாரத்தை பார்க்கவும் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், கடிகாரத்தை பார்க்கத்தோன்றாதவாறு ஆழ்ந்துபோகும்படியாக, கவனத்தை திசைதிருப்பும்படியாக பணிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகள் தெளிவாக இருந்தன.

நேரம் கடந்து செல்வதை மதிப்பிட்டு, அந்த நினைவுகளை வைத்து வருங்காலத்தில் சிறப்பாக திட்டமிடுவதில் சிலர் இயற்கையாகவே தேர்ச்சி பெற்றிருந்தனர்.

நாம் எல்லாவற்றிலும் தாமதமாக இருக்கிறோமா?

இல்லை.

அதற்கு க்ரேஸ் பேஸி, " என் ஆராய்ச்சியில் தெரிய வந்த மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் எல்லாவற்றிலும் தாமதம் செய்வதில்லை.

எது முக்கியமோ அப்போது நம்மால் நேரத்தை கடைப்பிடிக்க முடிகிறது.

தாமதம் - மனித இயல்பு

பட மூலாதாரம், Getty Images

அதாவது நமது தாமதம் காரணமாக பின்விளைவுகள் ஏற்படும் என்று நமக்கு தெரியும்போது, நாம் தாமதமிக்க வில்லை.

விமானத்தையோ அல்லது ரயிலையோ நாம் தவறவிடமாட்டோம்.

ஆனால் ஓர் உறுதியான காலகெடு (deadline) அல்லது விளைவுகள் இல்லாதபோது, அதாவது ஒரு சமூக நிகழ்வில் கலந்துகொள்வது போன்ற விஷயங்களில் நாம் மிக தீவிரமான 'நேரத்தை வளைப்பவர்களாக' இருக்கிறோம்.

அதாவது தாமதமாக சென்றால் பெரிதான பாதிப்புகள் ஏற்படாத இடத்தில் நாம் தாமதமாக செல்கிறோம்.

நாம தாமதமாக செல்வதன் விளைவுகளை நமது நண்பர்களோ அல்லது குடும்பத்தினரோதான் எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொரு நண்பர்கள் குழுவிலும் 'தாமதமாக வருபவர்' என்ற ஒருவர் இருப்பார்.

உங்கள் குழுவில் அப்படி யாரும் இல்லையென்றால், அது நீங்களாக இருக்கக்கூடும்.

ஆனால் நாம் ஒருவரை சந்திப்பது முக்கியம் என்று கருதினால் நிச்சயம் அப்போது தாமதமாக செல்லமாட்டோம் என்கிறார் க்ரேஸ்.

இதை சரி செய்ய நாம் செய்யும் பணிகளுக்கு காலக்கெடுவை (deadline) நிர்ணயிக்க வேண்டும் என்கிறார் அவர். அதை கடைப்பிடிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். அப்படி தவறவிட்டால் வரும் பாதிப்புகள் குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டும்.

"தாமதமாக வருபவர் என்று கூறப்படும் நபர்களிடம் ஒரு பிரச்னை என்னவென்றால், தங்கள் மரபணுக்களிலேயே அது இருப்பதாக நினைத்து கொண்டு அவர்கள் திருப்தியடைந்து விடுகிறார்கள். இதனால் அதை மாற்றி கொள்ள வேண்டும் என்றுகூட அவர்கள் நினைப்பதில்லை." என்கிறார் 'தி எக்ஸ்பெட்டேஷன் எஃவக்ட்' புத்தகத்தை எழுதிய டேவிட் ராப்சன்

தாமதம் - மனித இயல்பு

பட மூலாதாரம், Getty Images

எந்த ஒரு பழக்கத்தையும் மாற்ற முடியாதது என்றில்லை. முயன்றால் அதை நிச்சயம் செய்யலாம்.

நாம் சரியான நேரத்திற்கு வருவது, தள்ளிப்போடாமல் ஒரு வேலையை செய்வது என்று நமக்கு நாமே பயிற்சிகளை வழங்க முடியும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நமது அன்றாட பணிகள் உள்ளடங்கிய ஒரு விரிவான அட்டவணையை தயாரித்து அதை பின்பற்றலாம். கலைந்து கிடக்கும் மேசையை சீராக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவது, அறையை சுத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு நாம் அட்டவணையை தயார் செய்யலாம்.

இதை கடைப்பிடிப்பதன் மூலமும், அதை தொடந்தது செய்வதன் மூலம் இவை அனைத்தும் ஒரு பழக்கமாக மாறிவிடும்.

இது மூளையை சிறிது கட்டுப்படுத்த உதவும்.

எப்போதுமே தாமதமாக செல்பவர் என்ற அடையாளத்தை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது இல்லை.

விளைவுகளை உள்ளடக்கிய அர்த்தமுள்ள காலகெடுவை நிர்ணயிப்பதன் மூலம் நாம் இந்த பழக்கத்தை மாற்றமுடியும்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :