வாசிப்பின் பலன்: நாம் விரும்பி படிக்கும் கதைகள் நம் சிந்தனையை எப்படி மாற்றுகிறது?

கதைகள்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

"யார் ஒருவர் கதைகள் கூறுகிறார்களோ அவர்களே இந்த உலகை ஆளுபவர்கள்", - இது ஒரு அமெரிக்க பழமொழி. கதைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவை நாம் ஒருவருக்கொருவர் எப்படி தொடர்புகொள்கிறோம், ஒரு விஷயத்தை நாம் எவ்வாறு தீர்மானிக்கிறோம் என்பதை மாற்றக்கூடியது. கதைகள் நம்மை எவ்வாறு மாற்றுகிறது என்பதை ஆராய்ந்தால், அது நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.

நீங்கள் நினைப்பதை விட கதைகள் ஏன் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை?

இது குறித்து தி ஒபன் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் டாக்டர் ஸோ வாங்கிங்கடன் விவரிக்கிறார்.

"நான் மிகவும் நல்ல ஆய்வு ஒன்றை படித்தேன். அந்த ஆய்வில், ஹாரி பாட்டர் புத்தகத்தில் இரண்டு பகுதிகளை நீங்கள் ஒருவருக்கு படிக்க கொடுத்தால், அவர்கள் தங்கள் சிந்தனையின் சக்தி கொண்டு ஒரு பொருளை நகர்த்தும் திறன் தனக்கு இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

பேய் கதைகள் போன்ற அச்சத்தை ஏற்படுத்தும் கதைகளை படிப்பவர்கள், தங்கள் பற்கள் மற்றவர்களை விட சற்றே நீளமாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

உளவியலாளர்கள் இதனை தன்மயமாக்கல் (Assimilation) என்று அழைக்கின்றனர். அதாவது, ஒரு புனைவு கதைகளில் இருக்கும் தன்மைகளை வாசிப்பவர் அதை தன்னுள் எடுத்துக்கொள்வதாகும்.

உளவியல் ரீதியாக, நாம் படிக்கும் கதைகள் நமக்குள் சில மாற்றங்களை நிகழ்த்துகின்றன.

1. ஒருவர் ஒரு கதையை வாசிக்கும்போது, அவர் அந்த கதை நடக்கும் உலகத்தில் முழுவதும் மூழ்கி போகிறார்.

2. வாசிப்பவர் தான் படிக்கும் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் குறித்த பார்வையை ஆராய்கிறார். நாம் கதைகளில் படிக்கும் சம்பவங்கள் நமக்கு நடப்பது போல தோன்றும்.

இந்த பண்புகள் இரண்டும், பிறரின் நிலையில் இருந்து சிந்திக்கும் திறனை அளிக்கிறது.

கதைகள்

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்து எழுத்தாளரும் திரைக்கதை எழுதுபவருமான அந்தோணி ஹோரோவிட்ஸ் கூறுகையில், " வாசிப்பு என்பது நாம் ஓய்வாக செய்யும் செயல் அல்ல. நீங்கள் ஓர் உலகத்தை உருவாக்குகிறீர்கள். நீங்கள் அந்த கற்பனை உலகத்தை கற்பனை மனிதர்களுடன் உருவாக்குகிறீர்கள். அதனால், கதை சொல்லும் உலகில் தொலைக்காட்சி, திரைப்படங்கள், திரையரங்குகள் என இருந்தாலும், என்னை பொருத்தவரையில், ஒரு புத்தகம் வழியாக கதைகளை அறியும் போது, அதற்கு ஈடாக எதுவும் வராது", என்கிறார்.

ஆனால், இதன் மூலம் நம் மூளையில் உண்மையில் என்ன நடக்கிறது?

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருக்கும் நரம்பியல் நிபுணர்கள், நாம் வாசிக்கும் போது மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் என்ன நடக்கிறது என்று கண்டறிய முயற்சி செய்கின்றனர்.

"எங்களுடைய ஆராய்ச்சி தனி வார்த்தைகளின் அர்த்தம் குறித்தது. உதாரணமாக, நீங்கள் 'ஒருவர் குதிக்கிறார்' என்ற வார்த்தையை படிக்கும் போது, நீங்கள் உண்மையில் குதிக்கும் போது, மூளையில் என்னென்ன பகுதிகள் துடிப்புடன் செயல்படுகிறதோ அவை அந்த வார்த்தையை படிக்கும் போதும் ஏற்படுகிறது.

கதைகள்

பட மூலாதாரம், Getty Images

இங்கு கேள்வி என்னவென்றால், மற்றொருவர் குதிக்கிறார் என்று படித்தால், நம்மூடைய மூளையின் பகுதி ஏன் செயல்படுகிறது? இதற்கான காரணம் ஒன்று, மிரர் நியூரான்கள் (Mirror Neurons). மற்றவர்கள் செய்யும் செயல்களை பார்க்கும்போது, மூளையில் இந்த நியூரான்கள் செயல்படும். பிறர் ஒரு செயலை செய்யும்போது, அதனை பார்க்கும்போது நாமும் அதை செய்ய இந்த நியூரான்கள் தூண்டுகிறது. நாம் வாசிக்கும்போது, நம் மூளையில் இதுவே நடக்கிறது.", என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் கொக்னேட்டிவ் நரம்பியல் நிபுணர் (cognitive neuroscientist) டாக்டர் ஓலாஃப் ஹாக்.

நாம் ஒருவர் சோகமாக இருப்பதாக படித்தால், நாமும் சோகமாக உணரலாம். நாம் ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதாக வாசித்தால், நாமும் மகிழ்ச்சியாக உணரலாம். இதற்கு ஒரு காரணம், நியூரோன்களாக இருக்கலாம். ஆனால், அதுவே முழு காரணம் ஆகாது.

புனைவு கதாபாத்திரங்கள் சுற்றி உங்கள் சிந்தனை இருக்கும்போது, அது கிட்டதட்ட ஓர் உண்மையான மனிதர் உங்கள் அருகே இருக்கும் உணர்வையே தருகிறது. இதனை பாராசோஷியல் ரிலேஷன்ஷிப் (Para social Relationship) என்று அழைப்படுகிறது. இதில் சுவாரஸ்சியமான விஷயம் என்னவென்றால், இதனால் நாம் தனியாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவது குறையும். உங்களின் தன்னம்பிக்கை உயரும். உங்களின் மனநிலை நன்றாக இருக்கும்.

சமூகத்தில் நடக்கும் விஷயங்கள், அரசியல் சிந்தாந்தங்கள் என நீங்கள் மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து மக்களின் பார்வையை மாற்ற விரும்பினால், அதற்கு மிகவும் சிறந்த வழி, கதைகள் வழியாக கூறுவதே.

மேலும் இது குறித்து ஆசிரியரான கீர்தி அஹிலன் கூறுகையில், "குழந்தைகளுக்கு கதைகள் மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு நம்மிடம் சொல்ல எப்போதும் ஏதோ ஒரு கதை இருக்கும். அது அவர்கள் இந்த உலகை புரிந்துக்கொள்ள மிகவும் முக்கியமான அம்சமாகும். அதனால், கதைகள் மற்றவர்களின் சூழ்நிலையை புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்கும். தனிமையை போக்கும் ", என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: