ஆப்பிள் ஏர்டேக்: வேவு பார்க்க பயன்படுத்தப்படும் சின்னஞ்சிறு கருவி குறித்து அச்சம்

Apple Airtag

பட மூலாதாரம், APPLE

    • எழுதியவர், ஜேம்ஸ் க்ளேட்டன் & ஜேஸ்மின் டையர்
    • பதவி, பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

ஆப்பிள் நிறுவனத்தின் 'ஏர்டேக்' (AirTag) சாதனங்கள் வேவு பார்க்க பயன்படுத்தப்படுவது குறித்த அச்சங்கள் நிலவி வரும் நிலையில், புதுப்பிக்கப்பட்ட ஏர் டேக் பாதுகாப்பு வழிகாட்டியை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்நிறுவனம் திங்கள்கிழமையன்று தனது பயனர்களின் இணையப் பாதுகாப்பு குறித்த தளத்தை சத்தமில்லாமல் வெளியிட்டுள்ளது. மக்கள் தங்களையும் தங்களின் தரவுகளையும் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை இந்த தனிப்பட்ட பயனர் பாதுகாப்பு வழிகாட்டி வழங்குகிறது.

ஆப்பிளின் நுட்பமான 'ஃபைண்ட் மை' (Find My) என்ற நெட்வொர்க்கைப் பயன்படுத்தி தொலைந்த பொருட்களைக் கண்டறிய ஏர் டேக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிறிய பொத்தான் வடிவமாக உள்ள இந்த ஏர்டேக் சாதனத்தை, சாவி அல்லது பணப்பை போன்ற பொருட்களில் பொருத்திக்கொள்ளலாம்.

இருப்பினும், இந்த ஏர்டேக்குகள் மக்களைக் கண்காணிக்க தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை பிபிசியும் பிற ஊடகங்களும் கண்டறிந்துள்ளன.

"தொழில்நுட்பம் மூலம் நடக்கும் அல்லது நடக்க வாய்ப்புள்ள துன்புறுத்தல்கள், பின்தொடர்தல்கள் அல்லது வன்முறைகளை கருத்தில் கொண்டு, ஆப்பிளின் இந்த புதிய தனிப்பட்ட பயனர் பாதுகாப்பு வழிகாட்டி வழிமுறைகளை வழங்குகிறது.

பயனர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதற்கான "படிப்படியாக" வழிமுறைகளை இந்த வழிகாட்டி காட்டுகிறது.

பயனர்கள், தங்களுக்கு தொடர்பில்லாத ஏர்டேக் மூலம், ஐ-போன் திரையில் தோன்றும் அறிவிப்பாக எச்சரிக்கை வரும் போது, என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஏர்டேக் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apple Airtag

பட மூலாதாரம், Getty Images

உங்களுக்கு சம்பந்தமில்லாத ஏர்டேக்கை கேட்டாலோ அல்லது கண்டாலோ என்ன செய்ய வேண்டும் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் ஒரு செயலியை எவ்வாறு பதிவிறக்கலாம் என்பதை இந்த வழிகாட்டி காட்டுகிறது. இந்த செயலி, பயனர்களுக்கு சம்பந்தமில்லாத ஏர்டேக்குகள் குறித்து எச்சரிக்கை அளிக்க உதவும்.

ஏர்டேக்குகள் அவர்களுக்கு தெரியாமல் அவர்களை கண்காணிப்பது குறித்து பல பெண்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த வாரம் பிபிசி செய்தி வெளியிட்டது.

தனது பையின் உட்புறத்தில் ஏர் டேக் ஒன்று ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டதாக ஒரு பெண் கூறினார்.

எலக்ட்ரானிக் ஃபிரான்டியர் ஃபவுண்டேஷனின் சைபர்-செக்யூரிட்டியின் இயக்குநர் இவா கால்பெரின் பிபிசியிடம் இவ்வாறு கூறினார்: "திருடப்பட்ட பொருட்களைக் கண்காணிக்கப் பயன்படும் ஒரு பொருளை நீங்கள் உருவாக்கினால், பின்தொடர்வதற்கான சரியான கருவியையும் நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள்."

Airtag

பட மூலாதாரம், Getty Images

மக்களைப் பாதுகாக்க பல பாதுகாப்புகளை தங்கள் நிறுவனம் உருவாக்கியது என்று ஆப்பிள் நிறுவனம் பிபிசியிடம் கூறுகிறது. ஆனால், தற்போது மேலும் ஏர்டேக்குகள் பாதுகாப்பதற்கான வழிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

ஏர்டேக்குகள் போன்ற கண்காணிப்பு சாதனங்களில் டைலும் (Tile) ஒன்று. இதுவும் மனிதர்களை கண்காணிப்பதற்கு எதிரான பாதுகாப்புகளுடன் வரவில்லை. ஆனால், தாங்கள் ஒரு புதுப்பிப்பில் பணியாற்றி வருவதாக டைல் நிறுவனம் பிபிசியிடம் தெரிவிக்கிறது.

2021ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஆப்பிள் ஏர்டேக்கை அறிமுகப்படுத்தியபோது, அவை "பொருட்களைக் கண்காணிக்கவே" வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் மக்களை கண்காணிக்கப்பதற்காக உருவாக்கப்படவில்லை எனவும் அந்நிறுவனம் தெளிவுப்படுத்தியது.

தனியுரிமை மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த ஆப்பிள் தயாரிப்புகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் பயனர்களுக்குக் இந்த வழிகாட்டி காட்டுகிறது.

  • ஒருவருடன் முன்பு பகிரப்பட்ட இருப்பிடத் தரவை பயன்படுத்த அளிக்கும் அனுமதியை எவ்வாறு அகற்றுவது
  • நீங்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்துவிட்டீர்கள் என்பதை தானாக ஒரு நண்பருக்கு தெரிவிப்பது எப்படி
  • அவசரகால உதவி கோரும் செய்திகளை எஸ்.ஒ.எஸ் (SOS) எப்படி அனுப்புவது

ஆப்பிள் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் இவ்வாறு கூறுகிறார்: "வாடிக்கையாளர் பாதுகாப்பை நாங்கள் மிகவும் முக்கியமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் ஏர்டேக்கின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: