ஒரு வெப்பமான நாளில் தண்ணீர் மட்டும்தான் குடிப்பதற்கு சிறந்ததா?

பட மூலாதாரம், Getty Images
வெப்பமான நேரத்தில் உடலில் இருந்து நீர்ச்சத்து குறையும் ஆபத்து உண்டு. ஆனால், அதுபோன்ற சமயங்களில் தண்ணீர் மட்டும்தான் குடிக்க வேண்டுமா?
நம் உடல் எடையில் பாதிக்கும் மேல் தண்ணீரால் ஆனதுதான். இந்த அளவுக்கு உடலில் தண்ணீர் இருக்க வேண்டுமென்றால் தினமும் ஆறு முதல் எட்டு க்ளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அறிவுரை சொல்லப்படுகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்காத திரவம் இது - சர்க்கரை கிடையாது, கலோரிகள் கிடையாது. ஆனால் வெப்பமான நாட்களில் அது மட்டும்தான் சிறந்ததா?
அது சூழலைப் பொறுத்தது.
பலநேரங்களில் பெரும்பாலானோருக்குத் தண்ணீரே போதுமானதாக இருக்கிறது. ஆனால் உடலில் நீர்சத்து குறைந்தால் நீங்கள் என்ன குடிக்க வேண்டும் என்பது உங்களது வேலையையும் உடல் வாகையும் சூழலையும் பொறுத்தது.
"வெப்பமான நாட்களில் வெளியில் வேலை செய்யும் ஒருவருக்கும் குளிரூட்டப்பட்ட காரில் அலுவலகத்துக்குப் பயணித்து வீட்டுக்குள் குளிரூட்டப்பட்டு அமர்ந்திருக்கும் ஒருவருக்கும் உள்ள தேவைகள் வேறு" என்கிறார் செயின்ட் ஆண்ட்ரூஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரான் மௌகன்.
சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கு அதிக திரவம் தேவைப்படும். ஆனாலும் இதில் வேறு சில அம்சங்களும் இருக்கின்றன
வியர்க்கும்போது தண்ணீரோடு உடல் உப்புக்களும் வெளியேறுகின்றன. இரண்டையுமே ஈடு செய்யவேண்டும். ஆனால் இவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது அதை சரிசெய்வதற்காக உடல் ஆஸ்மாஸிஸ் என்கிற முறையைக் கையாள்கிறது. செல்களின் வெளி உறை மூலமாக நீரை வெளியேற்றும் முறை இது.

பட மூலாதாரம், Getty Images
"வியர்க்கும்போது தண்ணீர் மட்டும் குடித்தால் தேவைக்கு மீறி உடலில் நீர் சேர வாய்ப்பு உண்டு. இந்த தேவையற்ற நீர் சிறுநீராக வெளியேறும்" என்கிறார் மௌகன். "இதுபோன்ற சூழலில் பால் குடிப்பது சிறந்தது. இயற்கையாகவே அதில் உள்ள உப்பும் லாக்டோஸ் என்கிற சர்க்கரையும் நம் குடலில் நீர்ச்சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவுகின்றன. இளநீரும் சிறந்த திரவம். இதில் உப்பு,பொட்டாசியம், கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவை இருக்கின்றன" என்கிறார்.
பாலில் உள்ள எலெக்டோலைட்டுகளும் சத்துக்களும் உடலுக்கு ஊட்டமளிக்கின்றன. இதனால் உடலுக்குள் பால் அதிக நேரம் தங்குகிறது, சத்துக்கள் உறிஞ்சப்படும் விகிதமும் அதிகரிக்கிறது. பாலில் இது நடப்பதற்குத் தேவையான சர்க்கரை இருக்கிறது. ஆனால் மற்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட திரவங்களோடு ஒப்பிடும்போது இது நல்லது. சர்க்கரை சேர்த்த திரவங்கள் குறுகிய காலத்தில் நீர்ச்சத்தை இழப்பதற்கே வழி செய்கின்ற என்கிறா மௌகன். இவற்றில் கரைமப் பொருட்கள் அதிகமாக இருக்கின்றன. செல்களின் வெளி உறைகள், தண்ணீரையும் மிக சிறிய மூலக்கூறுகளையும் மட்டுமே உள்ளே அனுப்புகின்றன. கரைமங்கள் குறைவாக இடத்திலிருந்து அதிகமாக உள்ள இடத்திற்குத் தண்ணீர் பயணிக்கிறது. அப்போதுதன் இரு இடங்களும் சமநிலைக்கு வரும். சர்க்கரை சேர்த்த திரவங்களில் கரைமங்கள் அதிகம் உள்ளதால் அவை இருக்கும் சிறுகுடலுக்கு உடனே தண்ணீர் பயணிக்கும். தண்ணீர் தேவைப்படும் வேறு உடல் உறுப்புகளுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போகலாம்.
இது ஒரு பக்கம் என்றால், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், சோடியம் போன்றவை சேர்க்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் பானங்கள் தண்ணீரை விட சிறப்பாக நீர்ச்சத்து தருகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
"சிறுகுடலிருந்து நீர் வெளியறாமல் உடலுக்குள் சேரும்வண்ணம் இந்த பானங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன" என்கிறார் நியூகாஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விளையாட்டு உடல் இயங்கியல் ஆசிரியர் ஓவன் ஜெஃப்ரீஸ்.
"விளையாட்டு வீரர்கள் அதிக நேரம் விளையாடும்போது நிறைய வியர்வையை இழக்கின்றனர். அவர்கள் உடலில் இருந்து குறையும் உப்புக்கள் மீண்டும் உள்ளே செலுத்தப்படவேண்டும். ஆனால் விளையாட்டு வீரர்களைத் தவிர மற்றவர்களுக்கு இது தேவையில்லை. சரியான உணவு, நாம் வழக்கமாகக் குடிக்கிற பானங்கள், இவை இருந்தாலே போதும்" என்கிறார் விளையாட்டு வீரர்களுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் சோஃபி கில்லர்.

பட மூலாதாரம், Getty Images
"ஸ்போர்ட்ஸ் பானங்களில் கார்பொஹைட்ரேட்டுகள் இருக்கின்றன. நாள்முழுக்க உட்கார்ந்தபடி வேலை செய்பவர்களுக்கு இது தேவையில்லை" என்கிறார் சோஃபி.
இது உப்புக்கும் பொருந்தும், பலர் ஏற்கனவே கூடுதலான உப்பையே உட்கொள்கிறார்கள்.
"உடலின் பல வேதி இயக்கங்களுக்கு சோடியம் தேவை. உடற்பயிற்சியின்போது ஏற்படும் வியர்வையில் அதிக அளவிலான சோடியத்தை இழக்கிறோம்" என்கிறார் சோஃபி.
ஒரு சராசரி உடற்பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் பானங்கள் தேவையில்லை என்கிறார் அப்ப்ளாச்சியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் பேராசிரியர் டேவிட் நெய்மன். நார்த் கரோலினா ஆராய்ச்சி வளாகத்தில் இவர் மனித செயல்திறன் ஆய்வக இயக்குநராகவும் இருக்கிறார்.
ஆனால் பொதுமக்களுக்கு நீர்ச்சத்து பற்றிய பிரச்சனைகளும் வருகின்றன. ஒருவாரத்தில ஐந்தில் ஒருவர் நீர்ச்சத்து இழப்பால் பாதிக்கப்படுகிறார் என்கின்றன ஆய்வுகள்.
"ஓடுவதற்கு முன்பாக ஒரு க்ளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு பழம் சாப்பிட்டால் போதும்" என்கிறார் நெய்மன். உடற்பயிற்சியின்போது பழம் சாப்பிடுவது உடல் மீள உதவும் என்று இவர் கண்டறிந்திருக்கிறார். "அரை வாழைப்பழத்தில் சர்க்கரைக்ளும் 24 வகை பாலிஃபீனால்களும் இருக்கின்றன. இவை உடலுக்குள் தண்ணீரைத் தேக்கி வைக்கின்றன. உடற்பயிற்சிக்குத் தேவையான சத்துக்களையும் தருகின்றன" என்கிறார்.
இது குழந்தைகளுக்கும் பொருந்தும் என்கிறார் க்வாடமாலாவின் புலன், இழப்பு, மூப்பு, வளர்சிதை மாற்ற ஆராய்ச்சிக் கழகத்தின் ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர் கேப்ரியலா மாண்டெநிக்ரோ. தினமும் பழமும் காய்கறிகளும் உண்ணும் குழந்தைகள் நீர்ச்சத்தோடு இருக்கின்றன என்று அவர் கண்டறிந்திருக்கிறார். குழந்தைகளும் முதியவர்களும் நீரிழப்பு அடையும் அபாயம் அதிகம் என்பதால், அவர்கள் நிறைய பழங்களும் காய்கறிகளும் உட்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவிக்கிறார்.
"பொதுவாக கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சேர்த்துக்கொண்டால் நீர் இழப்பு குறையும். இதற்கு மிக சுலபமான வழி, சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது. அப்படி செய்யும்போது உடலில் சேரும் தண்ணீர் உறிஞ்சப்படும், உடலிலேயே தங்கும். உறைகளின் நடுவே பயணித்து தேவையான உறுப்புகளுக்குப் போகும். நேரடியாக சிறுநீர்ப்பைக்குள் போகாமல் தடுக்கப்படும்" என்கிறார் சோஃபி.
நீரிழப்பைத் தடுக்க இன்னொரு வழி காப்பி, டீ அருந்துவது. இதுபோன்ற பானங்கள் நீரை இழக்கச் செய்கின்றன என்று சிலர் தயங்குவார்கள். ஆனால், நிறைய காப்பி குடித்து நீர் குடிக்காமல் இருந்தால் மட்டுமே இது நிகழும்.
கஃபீன் சேர்க்கப்பட்ட பானங்கள் சிறுநீரைப் பெருக்குகின்றன என்பது உண்மைதான். ஆனால் அவற்றிலும் தண்ணீர் இருக்கிறது என்பதால், சிறுநீரால் ஏற்படும் நீர் இழப்பை அது ஈடுசெய்கிறது என்கிறார் மௌகன். இன்னும் சொல்லபோனால், நமக்கு இந்த பானங்களைப் பிடிக்கும் என்பதால் இவற்றைக் குடித்து நீரிழப்பை சரி செய்வது ஒரு நல்ல வழி என்கிறார் இவர்.

பட மூலாதாரம், Getty Images
சில நேரங்களில், காப்பி டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு அதிகமான கஃபீன் பானங்கள் கூட நீரிழப்பை ஏற்படுத்துவதில்லை. தொடர்ந்து காப்பி குடிப்பவர்கள் சிறுநீர் பெருக்கத்துக்கு ஆட்படாமல் இருக்கிறார்கள். காப்பி குடிக்கும் பழக்கமுள்ள ஐம்பது ஆண்களை 2014ல் ஆய்வு செய்த சோஃபி, மூன்று நாட்கள் தொடர்ந்து நான்கு கப் காப்பி குடித்தாலும் தண்ணீர் குடித்தாலும் ஒரே மாதிரியான நீர் அளவுதான் அவர்கள் உடலில் சேர்கிறது என்று கண்டறிந்தார்.
"காப்பியில் திரவம் உண்டு. காப்பி குடித்து பழகியவர்களின் சிறுநீரகம், அதிலிருக்கும் திரவத்தை எடுத்துக்கொள்ளப் பழகிவிடும். அந்தப் பழக்கம் உள்ளவர்களுக்குக் காப்பி பானங்கள் நீரிழப்பை ஏற்படுத்தாது" என்கிறார் சோஃபி.
என்ன குடிக்கிறோம் என்பதைப் போலவே எப்படி அதைக் குடிக்கிறோம் என்பதும் முக்கியமானது. அன்றாடவாழ்வில் அதிக நீர்ச்சத்து, குறைவான நீர்ச்சத்து என்று உடல் பல்வேறு நிலைகளில் இருக்கும். ஒரு குறிப்பிட்ட அளவு நீரிழப்பு இருந்தால்தான் உடல் அதை உணரும் என்கிறார் ஜெஃப்ரீஸ். திரவத்தை எடுத்துக்கொள்ளும் நேரம் ஏற்கனவே கடந்திருக்கலாம் என்கிறார் அவர்.
"உங்களுக்கு தாகம் எடுத்தது என்றால், ஏற்கனவே அதுபற்றிய தேவைகள் உடலில் உருவாகி மாற்றம் வந்துவிட்டது என்று பொருள். இது நடக்காமல் இருக்கவேண்டுமானால் அவ்வப்போது தண்ணீர் குடிக்கவேண்டும்." என்கிறார் ஜெஃப்ரீஸ்.
"நிறைய தண்ணீரை ஒரே நேரத்தில் குடித்தால் அது உடலுக்குள் சேராமல் குடிநீராக வெளியேறும். ஒரு லிட்டர் தண்ணீரை வேகமாகக் குடித்தால் சிறுநீர்ப்பை திகைத்துவிடும். அது உங்களுக்கு நீர்ச்சத்து தராது. உங்கள் சிறுநீர் தெளிவான நிறத்தில் இருந்தாலும் அது நீர்ச்சத்துக்கான அடையாளம் அல்ல" என்கிறார் சோஃபி.
விளையாட்டு வீரர்களுக்கு நல்ல பானங்கள் கிடைப்பதுபோலவும் நாம் தண்ணீரோடு நிறுத்திக்கொள்ளவேண்டியிருப்பதுபோலவும் தெரியலாம். ஆனால் தண்ணீர் முக்கியமானது என்கிறார்கள் வல்லுநர்கள்.
"தண்ணீர் ஒரு மறக்கப்பட்ட ஊட்டச்சத்து. இலவசமானது, உடலுக்கு நல்லது, பற்களைக் கெடுக்காது" என்கிறார் சோஃபி.
கடந்த சில வருடங்களில் இது அதிகம் ஆராயப்படவில்லை என்றாலும் அது முக்கியமானது என்கிறார் மான்டிநெக்ரோ. "தண்ணீரின் முக்கியத்துவத்தை மறந்துவிட்டோம். அது ஒரு ஊட்டச்சத்து. தண்ணீரால் ஏற்படும் பல வளர்சிதை மாற்றங்கள் இன்னும் ஆராயப்படவில்லை" என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- தவறான சாக்ஸ் அணிந்தால் தண்டனை தரும் நாடு: என்ன நடக்கிறது பெலாரூஸில்?
- டெல்லியை உலுக்கும் 9 வயது சிறுமியின் மரணம்: 'பாலியல் வல்லுறவு என பெற்றோர் புகார்'
- நரேந்திர மோதிக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்க வல்லவர் சரத் பவாரா மமதா பானர்ஜியா?
- பெட்ரோலுக்கு அதிக வரி வசூலிப்பது மத்திய அரசா மாநில அரசா? #Factcheck
- விண்வெளி அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - 5 கேள்வி பதில்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























