You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Facebook Metaverse: மெய்நிகர் உலகில் வாழ்க்கை - இது எப்படி சாத்தியம்?
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன் நிறுவனத்தை ஒரு மெடாவெர்ஸ் (Metaverse) நிறுவனமாக மாற்றும் திட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மெடாவெர்ஸ் என்பது ஒரு ஆன்லைன் உலகம். அங்கு பயனர்களால் விளையாடவோ, வேலை பார்க்கவோ, ஒருவரோடு ஒருவர் நேரடியாக தொடர்பு கொள்ளவோ முடியும். இவை அனைத்து ஒரு மெய்நிகர் சூழலில் வி.ஆர் ஹெட்செட் பயன்படுத்தி செய்யலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம்.
நீங்கள் ஒரு விஷயத்தை இணையத்தில் பார்ப்பதை விட, அதிலேயே நீங்கள் இருக்கலாம் என மெடாவர்ஸை விவரிக்கிறார் மார்க்.
மக்கள் தொடர்ந்து ஜொலிக்கும் செவ்வக வடிவ எலெக்ட்ரானிக் சாதனங்கள் வழியாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது என 'தி வெர்ஜ்' என்கிற பத்திரிகையிடம் கூறியிருக்கிறார் மார்க்.
"மனிதர்கள் அப்படிப் பேசிப் பழகும் விதத்தில் பழக்கப்படவில்லை" என மொபைல் ஃபோன்களைச் சார்ந்திருப்பது குறித்தும் அவர் பேசினார்.
"இன்று நடக்கும் பல கூட்டங்களில், நீங்கள் ஒரு திரையில் பல முகங்களை காண்கிறீர்கள். அப்படியும் நாம் இதை முன்னெடுத்துச் செல்லக் கூடாது"
இன்ஃபினிட் ஆஃபிஸ்
அவர் கொடுத்த ஒரு மெடாவெர்ஸ் செயலி மூலம் முதலில் ஒரு 3டி கச்சேரியை மொபைல் ஃபோனில் கண்டுவிட்டு, பிறகு மெய்நிகர் மூலம் அதற்குள்ளேயே செல்ல முடிந்தது.
"பல மக்கள் பல்வேறு இடங்களில் இருந்தாலும், எல்லா மக்களும் ஒரே இடத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது. மேலும் நடனமாடுவது, உடற்பயிற்சி செய்வது என... 2டி செயலி அல்லது வலைதள பக்கங்களால் கொடுக்க முடியாது பல்வேறு புதிய அனுபவங்களை அந்த 3டி செயலி கொடுத்தது". என்கிறார் அவர்.
ஃபேஸ்புக் 'இன்ஃபினிட் ஆஃபிஸ்' என்கிற புதிய வசதி ஒன்றை தயாரித்து வருகிறது. அதில், பயனர்கள் தங்களுக்குத் தேவையானது போல, நல்ல வேலை பார்க்கும் சூழலை உருவாக்கிக் கொள்ளலாம்.
"எதிர்காலத்தில் வெறுமனே ஒருவரை அழைத்து பேசுவதற்கு பதிலாக, நீங்கள் ஒரு ஹாலோகிராமாக அவரது வீட்டு நாற்காலியிலோ அல்லது நான் ஒரு ஹாலோகிராமாக உங்கள் வீட்டு நாற்காலியிலோ வந்து அமரலாம். இது நாம் இருவரும் எந்த மாகாணத்தில் இருந்தாலும் சரி, எத்தனை கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் சரி, ஒரே இடத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும்." என்கிறார் அவர். "அது உண்மையில் சக்தி வாய்ந்ததாக இருக்கும்"
ஃபேஸ்புக் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து அதிகமாக முதலீடு செய்து வருகிறது. சமீபத்தில் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலரைச் செலவழித்து ஒகொலஸ் (Oculus) என்கிற மெய்நிகர் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை வாங்கியது ஃபேஸ்புக்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் ஹாரிசான் (Horizon) என்கிற ஒரு ஆன்லைன் மெய்நிகர் தளத்தை உருவாக்கியது. அத்தளத்தில் ஒகொலஸ் ஹெட்செட்டைப் பயன்படுத்தி பயனர்கள் கார்ட்டூன்களோடு பேசலாம்.
தற்போது இருக்கும் ஹெட்செட்டுகள் கணமானதாகவும், பழைமையானதாகவும் இருப்பதாக மார்க் சக்கர்பெர்க்கே ஒப்புக் கொள்கிறார். ஒரு நாள் முழுக்க அதில் மக்கள் பணியாற்றும் அளவுக்கு அதை மேம்படுத்த வேண்டும்.
ஃபேஸ்புக்கின் மெடாவெர்ஸ் செயலியை மெய்நிகர் வசதியிலோ, ஏ ஆர் என்கிற ஆக்மென்டட் ரியாலிட்டியிலோ, சாதாரண கணினியிலோ, மொபைல் ஃபோன்களிலோ, வீடியோ கேம் கன்சோல்கள் மூலமாகவோ பயன்படுத்தலாம்.
மெடாவெர்ஸ் தொடக்கம்
மெடாவெர்ஸ் ஒரு புதிய முப்பரிமாண இணையமாக இருக்கும் என தொழில்நுட்ப நிறுவனங்கள் நம்புகின்றன. டிஜிட்டல் உலகத்தை இணைக்கும் இத்தளத்தில் மக்கள் மெய்நிகர் வழியாக சுற்றித் திரிவார்கள் என நிறுவனங்கள் நம்புகின்றன.
நீல் ஸ்டீஃபென்சனின் 1992ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைவுப் புதினமான ஸ்னோ க்ராஷில் இந்த மெடாவெர்ஸ் பற்றி முதன்முதலில் கூறப்பட்டு இருந்தது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் மெடாவெர்ஸ் சாதனத்தை அனிமல் க்ராசிங், ஃபோர்ட்னைட், ரோப்லாக்ஸ் போன்ற வீடியோ கேம்களில் கொண்டு வர முயற்சித்தன.
இதில் நூற்றுக்கணக்கான கச்சேரிகள், போட்டிகள் நேரலை நிகழ்ச்சிகளாக நடத்த திட்டமிடப்பட்டன. இதில் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக் கணக்கான பயனர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளலாம்.
நடத்தை தரவுகள்
"இத்தளத்தை ஒரு பயனர் பயன்படுத்தும் போது கிடைக்கும் அளப்பரிய நுணுக்கமான தரவுகள் தான், ஃபேஸ்புக் வி ஆர் அல்லது ஏ ஆர் போன்ற சாதனங்களில் அதிகம் முதலீடு செய்வதற்கான காரணம்" என்கிறார் வி ஆர் நிபுணர் மற்றும் மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வெரிடி மெகின்டாஷ்.
"இப்போது வெறுமனே நான் எதை சொடுக்குவேன், எதைப் பகிர்வேன் என்பது மட்டுமல்ல, நான் எங்கு செல்ல விரும்புகிறேன், நான் எப்படி நிற்பேன், நான் எதை நீண்ட நேரம் பார்க்கிறேன், மிக சிறிய அளவில் செய்யப்படும் என் உடல் அசைவுகள், என நன் ஆழ் மனத்துக்கான நேரடிப் பாதை அது. இப்படிப்பட்ட தரவுகள் ஒரு தரவுகளை சேகரிக்கும் முதலாளிக்கு தங்கம் போன்றது"
ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் விண்வெளியையே தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாரம்பரிய பழமைவாத அரசாங்கங்களோ மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதற்கே திணறிக் கொண்டிருக்கிறார்கள். இது எதிர்காலத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆணுறை வழங்கப்படுவது ஏன்?
- வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியீடு: விளைவுகள் என்ன?
- ஒலிம்பிக் மாரத்தானில் 37ஆவது இடம் பிடித்தவருக்கு ஏன் ராஜ மரியாதை?
- பெகாசஸ் உளவு செயலி: இலக்கான தமிழ்நாட்டுத் தலைவர்கள் - புதிய தகவல்கள்
- ரூ.745 கோடி மதிப்புள்ள நீலக்கல் தொகுப்பு: வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்