ஆஸ்திரேலிய தீவில் பென்குவின்களை அழிக்கும் அரிய உயிரினம் - அதிர்ச்சித்தகவல்கள்

டாஸ்மேனியன் டெவில்கள்
பிரசுரிக்கப்பட்டது

வேகமாக அழிந்து வரும் டாஸ்மேனியன் டெவில்கள் என்றழைக்கப்படும் உயிரினத்தைக் காப்பாற்ற, ஒரு சிறிய தீவில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் அதிர்ச்சி தரும் பின்விளைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டாஸ்மேனியன் டெவில் விலங்குகள், அத்தீவில் இருக்கும் கடல் பறவைகளை அதிக அளவில் வேட்டையாடியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

2012ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவின் கிழக்கே மரியா தீவுக்கு ஒரு சிறிய எண்ணிக்கையில் இந்த டெவில்கள் அனுப்பப்பட்டன.

இந்தப் பாலூட்டிகள் ஒரு வகையான முகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்த இனமே உயிரிழந்து வருவதைத் தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்த நடவடிக்கையால் டெவில் உயிரினங்கள் மீண்டு விட்டன. இருப்பினும் இந்த உயிரினம் மீண்டு வர கொடுக்கப்பட்ட விலை கொஞ்சம் அதிகம் தான்.

இந்தத் தீவுக்கு டெவில்களை அறிமுகப்படுத்தியதால், சில பறவை இனங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று உள்ளூர் பாதுகாப்பு அமைப்பான பேர்ட் லைஃப் டாஸ்மேனியா தெரிவித்துள்ளது.

டாஸ்மேனியா தீவு

2012ஆம் ஆண்டில் இங்கு இருந்த 3,000 பென்குவின் ஜோடிகளை இப்போது காணவில்லை என அரசாங்க கணக்கெடுப்புகளை மேற்கோள்காட்டிக் கூறுகிறது பேர்ட் லைஃப் டாஸ்மேனியா.

"இந்த இனத்துக்கு ஓர் அடைக்கலமாகத் திகழ வேண்டிய தேசிய பூங்காவாக இருக்கும் தீவில் இருந்து 3,000 ஜோடி பென்குவின்கள் காணாமல் போவது என்பது பேரிடி." என இந்தக் குழுவின் ஆராய்ச்சியாளர் முனைவர் எரிக் வோஹ்லர் கூறினார்.

"இந்தக் கடல் தீவுகளுக்கு பாலூட்டிகளை அறிமுகப்படுத்தினால் என்ன நடக்கும் என ஆராய்ச்சி குறிப்பிட்டதோ, அதே தான் நடந்திருக்கிறது. இந்த விளைவு வியப்பளிக்கவில்லை," என்கிறார் முனைவர் வோஹ்லர்.

2011ஆம் ஆண்டில், டாஸ்மேனியாவின் முதன்மை தொழில்கள், பூங்காக்கள், நீர் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில், இத்தீவில் டாஸ்மேனியன் டெவில் உயிரினத்தை அறிமுகப்படுத்தினால், மரியா தீவில் உள்ள சிறிய பென்குவின் மற்றும் ஷியர் வாட்டர் என்ற பறவை உயிரினங்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

'பயாலஜிகல் கன்சர்வேசன்' என்கிற சஞ்சிகையில் கடந்த ஆண்டு பிரசுரிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், இந்த டாஸ்மேனியன் டெவில்கள், கடல் பறவையான ஷியர் வாட்டர்களின் ஒரு முழு தொகுப்பை முற்றிலும் அழித்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மரியா தீவில் உள்ள பறவை வளங்களை இந்த டெவில் உயிரினம், பெரிய அளவில் பாதித்துள்ளதாக முனைவர் வொஹ்லர் கூறுகிறார்.

டாஸ்மேனியன் டெவில்கள்

பட மூலாதாரம், Getty Images

டாஸ்மேனியன் டெவில்கள் பற்றிய துணுக்குகள்

• டாஸ்மேனிய டெவில்கள் உலகின் மிகப் பெரிய மாமிசபட்சி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு மார்சுபியல் வகை உயிரினம்.

• புற்றுநோய் தாக்கப்படுவதிலிருந்து தப்பினால், இந்த உயிரினம் ஐந்து வருடங்களுக்கு மேலாக காடுகளில் வாழும்.

• ஆண் டெவில்கள் 12 கிலோவும் பெண் டெவில்கள் 8 கிலோவும் எடையோடு இருக்கும்.

• மிக நுட்பமான கேட்கும் திறன் கொண்டவை.

• குறைந்தது 11 தனித்துவமான குரல் இவற்றுக்கு உண்டு.

• 1803ஆம் ஆண்டில் மாலுமிகள் இவற்றின் "அசாதாரணமான மற்றும் வித்தியாசமான" குரலை வைத்து குறிப்பிட்டதால், இவற்றிற்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலிய மற்றும் டாஸ்மேனிய அரசாங்கங்களின் கூட்டு முயற்சியான சேவ் தி டாஸ்மேனியன் டெவில் திட்டத்தின் (எஸ்.டி.டி.பி) கீழ் இந்தப் பாலூட்டிகள் இத்தீவுக்கு கொண்டு வரப்பட்டன.

டாஸ்மேனியன் டெவில்

பட மூலாதாரம், Getty Images

விலங்குகளின் பாதுகாப்பு நிலை குறித்த தரவுகளைப் பராமரிக்கும் ஐ.யூ.சி.என் ரெட் லிஸ்டால், டாஸ்மேனியன் டெவில்கள் ஆபத்தான உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக, கடந்த மாதம் டாஸ்மேனியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முனைவர் வோஹ்லர் கூறினார்.

இதைக் கருத்தில் கொண்டு, மரியா தீவிலிருந்து டெவில்களை வெளியேற்றுவது, அந்த உயிரினத்துக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்றும் வோஹ்லர் தெரிவிக்கிறார்.

இந்த திட்டம் "அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகள், மாறி வரும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப, தொடர்ந்து மாற்றியமைக்கப்படும்" என டாஸ்மேனியாவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

"டெவில்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரியாத வண்ணம், காக்க உதவும் இத்திட்டத்தின் ஒரு முக்கிய மையமாக மரியா தீவு இருக்கும்" என்றும் அந்த செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :