தமிழ்நாடு சிறப்பு டிஜிபியை இடைநீக்கம் செய்யாதது ஏன்? பாலியல் வழக்கில் நீதிமன்றம் கேள்வி

சித்திரிப்புப் படம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்திரிப்புப் படம்.
பிரசுரிக்கப்பட்டது

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியமான, சுவாரசியமான செய்திகள்:

தமிழ்நாடு சிறப்பு டிஜிபியை இடைநீக்கம் செய்யாதது ஏன்? பாலியல் வழக்கில் நீதிமன்றம் கேள்வி

பெண் போலீஸ் அதிகாரியிடம் பாலியல்ரீதியில் அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட தமிழ்நாடு சிறப்பு டி.ஜி.பியை இடைநீக்கம் செய்யாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசை கேள்வி எழுப்பியது என்று செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.

அந்த அதிகாரி தற்போது கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின்போது, அந்த உயரதிகாரி, தன்னை அவரது காரில் ஏற்றி பாலியல் தொந்தரவு செய்ததாக அந்த பெண் அதிகாரி கூறியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீசாரும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலியல் புகாரை கொடுக்க விடாமல் அந்த பெண் அதிகாரிக்கு பல தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான பாலியல் புகாரில் செய்யப்பட்ட விசாரணை ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் இருந்து பெற்று பார்வையிட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், புலன் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என உத்தரவிட்டார்.

பின்னர், இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை பரிசீலித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷே விசாரிக்கலாம் என அனுமதி அளித்தார். அதன்படி, இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் ஒரு பகுதியாக, அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞரிடம், ''பாலியல் புகார் கொடுக்க வந்த பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை தடுத்து நிறுத்தினார் என காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரை தமிழ்நாடு அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆனால், பாலியல் புகாரில் சிக்கிய அந்த சிறப்பு டி.ஜி.பி.யை ஏன் இதுவரை பணியிடை நீக்கம் செய்யவில்லை?'' என கேள்வி எழுப்பினார்.

அதற்கு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ''முறைப்படி விசாரணை நடக்கிறது. உரிய நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும்'' என்றார்.

இதையடுத்து நீதிபதி, ''இந்த வழக்கை வருகிற 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது, சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை இந்த உயர்நீதிமன்றம் உன்னிப்பாக கவனிக்கும்'' என கூறியதாக தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

பலாப்பழத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்

பலாப்பழம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்திரிப்புக்காக

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட வந்த வேட்பாளர் செந்தில்குமார் தனது சின்னமான பலாப்பழத்துடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வந்தார் என தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

திருப்பூர் வடக்கு தொகுதியில் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான வி.செந்தில்குமாருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வது வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இதில், தான் போட்டியிடும் சின்னமான பலாப்பழத்துடன் வேட்புமனு பெறும் திருப்பூர் மாநகராட்சி 1-ஆவது மண்டல அலுவலகத்து சென்றுள்ளார். அப்போது அங்கு திருப்பூர் வடக்கு சரக காவல் உதவி ஆணையாளர் வெற்றிவேந்தன் தலைமையிலான காவல் துறையினர் பழத்தை வெளியே வைத்துவிட்டு உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து, அந்தப் பழத்தை தனது காரில் வைத்து விட்டு வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றார். இதைத் தொடர்ந்து, திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் எம்.ஜெகநாதனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது, அதிமுகவை மீட்டெடுக்கலாம்: டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்
படக்குறிப்பு, டிடிவி தினகரன், கோப்புப்படம்.

"மக்கள் நினைத்தால் நம்முடைய கூட்டணி முதல் அணியாக வரும். நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தாண்டி திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. தேர்தலுக்கு பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம்" என்று பேசியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் என்று செய்தி வெளியிட்டுள்ளது இந்து தமிழ்திசை நாளிதழ்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசும்போது "நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தாண்டி திமுக ஆட்சிக்கு வரக்கூடாது" என்று பேசினார்.

தேர்தல் அறிக்கையில், வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு, மதுபான ஆலைகளுக்கு அனுமதி கிடையாது, மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும், 30 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்யப்படுவர் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன.

இக்கூட்டத்தில், பங்கேற்ற அவர்களது கூட்டணி கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசும்போது,

"தேசியக் கட்சியான எங்களை தமிழகத்தில் கொண்டு வாருங்கள். அவ்வாறு கொண்டு வரும் போது கூட்டணியில் இருந்து காயிதே மில்லத்தின் கனவுகளை நிறைவேற்ற வலியுறுத்துவோம். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் அண்ணா வழியில் இருந்து மாறி பிரதமர் மோடியின் வழியில் சென்று கொண்டிருக்கின்றன. திமுகவில் சிறுபான்மையின தலைவர்களுக்கே மதிப்பில்லாத சூழல் நிலவி வருகிறது. எனவே, அந்த கூட்டணி வெற்றி பெற்றால் சிறுபான்மையின மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது" என்றார் என்கிறது இந்து தமிழ்திசை செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :