மக்களவைத் தேர்தல்: வாக்குப் பதிவு நிலவரம்

இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நிலவரம் தொடர்பான தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலாம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வாக்களித்த பிரபலங்கள்

    sivakarthikeyan

    பட மூலாதாரம், UGC

    நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

    “ புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்” என்று அவர், அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

    Vetri Maaran

    பட மூலாதாரம், UGC

    சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கை செலுத்தினார்.

    Prabhu

    பட மூலாதாரம், UGC

    சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்" என்றார்.

  2. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வாக்களித்தார்

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார்.

    வாக்கு செலுத்தியபின் செய்தியாளைகளிடம் பேசிய அவர் ‘இந்தியாவுக்கு வெற்றிதான்’ என்று ‘இந்தியா’ கூட்டணியைக் குறித்துக் கூறினார்.

    மேலும் தான் தன்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றியிருப்பதாகவும், அதேபோல் அனைவரும் ஆற்றிடவேண்டும் என்றும் கூறினார்.

    தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை

    பட மூலாதாரம், ANI

  3. முதற்கட்ட தேர்தல் இந்தியாவில் எங்கு நடக்கிறது?

    தேர்தல்

    பட மூலாதாரம், Getty Images

    இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 1 தொகுதிக்கும் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 102 இடங்களுக்கான வாக்குப் பதிவு இன்று நடக்கிறது.

    முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் மாநிலம் மற்றும் தொகுதிகள்

    தமிழ்நாடு - 39 தொகுதி

    புதுச்சேரி - 1 தொகுதி

    உத்தர பிரதேசம் - 8 தொகுதி

    பிகார் - 4 தொகுதி

    மேற்கு வங்கம் - 3 தொகுதி

    ஜம்மு காஷ்மீர் - 1 தொகுதி

    மகாராஷ்ட்ரா - 5 தொகுதி

    மத்திய பிரதேசம் - 6 தொகுதி

    அசாம் - 5 தொகுதி

    சத்தீஸ்கர் - 1 தொகுதி

    ராஜஸ்தான் - 12 தொகுதி

    திரிபுரா - 1 தொகுதி

    மணிப்பூர் - 1 தொகுதி

    உத்தராகண்ட் - 5 தொகுதி

    அருணாச்சல் பிரதேசம் - 2 தொகுதி

    மிசோரம் - 1 தொகுதி

    மேகாலயா - 2 தொகுதி

    சிக்கிம் - 1 தொகுதி

    அந்தமான், நிகோபார் தீவுகள் - 1 தொகுதி

    லட்சத்தீவு - 1 தொகுதி

  4. ராதிகா சரத்குமார் வாக்களித்தார்

    ராதிகா சரத்குமார்

    பட மூலாதாரம், UGC

    விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளியில் வாக்களித்தார். இதே வாக்குச்சாவடி மையத்தில் சரத்குமாரும் வாக்களித்தார்.

  5. கரூரில் வாக்களித்தார் அண்ணாமலை

    பாஜக தலைவர் அண்ணாமலையில் கரூர் தொண்டாம்பட்டியில் தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜனநாயகத்தின் வலிமை வாக்காளர்கள் தான். ஆள்பவருக்கும் நமக்கும் தொப்புள் கொடி உறவு இருக்கிறது. நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்” என்றார்.

  6. ரஜினிகாந்த் வாக்களித்தார்

    Rajinikanth casts vote

    பட மூலாதாரம், UGC

    சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கைப் பதிவு செய்தார். போயஸ் கார்டனில் வசிக்கும் அவர், தனியாக வந்து வாக்களித்தார். அதே பகுதியில்‘வேதா நிலையத்தில்’ வசித்து வந்த முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவும் இதே வாக்குச்சாவடி மையத்தில் தான் தனது வாக்கை செலுத்தி வந்தார்.

  7. கைகுலுக்கிக் கொண்ட தமிழிசையும் பிரேமலதாவும்

    தமிழிசை வாக்குப்பதிவு

    சென்னை சாலிகிராமத்தில் அருகருகே வசிக்கும் தேமுதிமுக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும், தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனும் ஒரே வாக்குச்சாவடி மையத்தில் தங்களுக்கான வாக்குகளை பதிவு செய்ய வந்திருந்தனர். அப்போது இருவரும் கை குலுக்கி சிரித்து பேசி பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர்.

  8. ‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம்’ – பிரதமர் மோதி

    நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    "2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது" என்று பதிவிட்டுள்ளார்.

  9. சௌம்யா அன்புமணி வாக்களித்தார்

    சௌம்யா அன்புமணி வாக்குப்பதிவு

    தருமபுரியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணி தனது வாக்கை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார்.

    அவர் வாக்கு செலுத்திய சிறிதுநேரத்திற்கு பிறகு தனது மகள்களுடன் வந்த அன்புமணி ராமதாஸும் தனது வாக்கைச் செலுத்தினார்.

    நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வாக்களித்தார்.

    தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சென்னை நீலாங்கரையில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

  10. எடப்பாடி பழனிசாமி, ப சிதம்பரம், தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர்

    சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பாஜக தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர்.

    வெயிலுக்கு முன்பாக வாக்களிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

  11. நாடாளுமன்ற தேர்தல்: நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை - 15 கேள்விகளும் பதில்களும்

  12. நடிகர் அஜித் வாக்களித்தார்

    அஜித்

    தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார்.

    முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.

  13. எந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பது என்பதை அறிவது எப்படி?

    வாக்குப் பதிவு

    ஒருவர் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமானால், வாக்காளராகப் பதிவுசெய்திருக்க வேண்டும். தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய இதற்கென உள்ள தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் ( https://electoralsearch.eci.gov.in/ )சென்று தேடிப் பார்க்கலாம்.

    பெயர் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில், அவர்கள் எந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்ற விவரமும் அதிலேயே இடம்பெற்றிருக்கும். அல்லது voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இதனைத் தெரிந்துகொள்ளலாம்.

    இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்துத் தெரிந்துகொள்ளலாம்.

    அல்லது 1950 எண்ணுக்கு ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்)பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பினால் உரிய தகவல்கள் வந்துசேரும். பொதுவாக வாக்குச் சாவடிகள் அவர்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் அமைக்கப்படும்.

  14. மக்களவைத் தேர்தலுக்கான மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது

    வாக்குப் பதிவு

    இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

    தற்போது பல்வேறு தொகுதிகளிலும் மாதிரி வாக்குப் பதிவு நடந்திருக்கிறது.

    21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

    “முதல்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 16.5 கோடி மக்கள் வாக்களிப்பார்கள். தேர்தல்கள் இந்தியாவின் புகழ்பெற்ற ஜனநாயகத்தின் வெளிப்பாடு. இதற்காக, வாக்குப்பதிவு எளிமையாகவும் தடைகள் இல்லாமலும் நடைபெற, இந்திய தேர்தல் ஆணையமும் அதன் பல லட்சம் அதிகாரிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அயராது உழைத்துள்ளனர்.” என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

  15. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு தொடர்பான நேரலைக்கு உங்களை வரவேற்கிறோம்.