திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? - மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்
“என் அரசியல் எதிரி யார் என்பதை முடிவு செய்து விட்டேன்”, என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சென்னை, தி.நகரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் வெல்லும் - எந்த தொகுதி தெரியுமா? சுப்பிரமணிய சாமி கணிப்பு
படக்குறிப்பு, தமிழ்நாட்டில் பா.ஜக ஒரு தொகுதியில் வெற்றி பெறும் - சுப்பிரமணியசாமி
தமிழ்நாட்டில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜக ஒரு தொகுதியில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கணித்துள்ளார்.
மதுரையில் பாஜகவை சேர்ந்த சசிக்குமார் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் கட்டாயம் வெற்றி பெறுவார். அண்ணாமலை வெற்றி பெறுவதை பற்றி தெரியாது." என்றார்.
தமிழகத்தில் திமுக-பாஜக என களம் மாறி உள்ளதா என்ற கேள்விக்கு, "சிரித்தபடி, கனவு எல்லோருக்கும் இருக்கிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வேட்பாளர்களை எல்லா இடத்திலும் நிறுத்தலாம். அமைப்பு வலுவாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பணத்தை கொடுத்து விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. மக்கள் நம்ப வேண்டும்." என்றார்.
பாஜகவில் ஆளுநர் கூட ராஜினாமா செய்து கொண்டு வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர் என்ற கேள்விக்கு, "அது என் தலைவலி இல்லை. நான் எல்லாவற்றையும் பையில் வைத்துக்கொண்டு சென்றுவிடுவேன் என மோடி நினைப்பதால் என்னை தூரமாக வைத்துள்ளார். பாஜக கேட்டால் பிரச்சாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை." என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.
திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? - மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்
பட மூலாதாரம், ANI
“என் அரசியல் எதிரி யார் என்பதை முடிவு செய்து விட்டேன்”, என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சென்னை, தி.நகரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார்.
அவர் பேசியபோது, "சாதியம் தான் எனது முதல் அரசியல் எதிரி. இந்தியாவிற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது மிகவும் அவசியம்,” என்று கூறினார்.
மக்கள் நீதி மய்யத்தின் கட்சி நிர்வாகிகள் இடையே உரையாற்றிய அவர், “எனது தந்தை சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர். அவர் நினைத்திருந்தால் மந்திரி பதவியைக் கூட பெற்றிருப்பார். ஆனால் கடைசிவரை கதர் சட்டை போட்டுக் கொண்டு கட்சிக்கு உழைத்தார்.
அவர் வழி வந்தவன் நான். அதனால் தான் ‘ஹவுஸ் ஆஃப் கதர்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.
என்னை சந்தர்ப்பவாதி என்று கூறுகிறார்கள். சந்தர்ப்பவாதம் என்ற ஒன்றே இல்லை.
ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சி மீது வீசி எறிந்தீர்களே, இப்போது அந்தக் கட்சியில் போய் சேருவது சரியா எனக் கேட்கிறார்கள். ரிமோட் இன்னும் என்னிடம்தான் உள்ளது, தொலைக்காட்சியும் அங்கேயேதான் உள்ளது.
ஆனால் ரிமோட்டுக்கான பேட்டரியையும், தொலைக்காட்சிக்கான மின்சாரத்தையும் பறிக்க ஒரு சக்தி ஒன்றியத்தில் உருவாகிறதே, அதைத் தடுக்க வேண்டாமா? அப்படி இருக்கும்போது, ரிமோட்டை எறிந்தால் என்ன, வைத்திருந்தால் என்ன?” என்று கூறினார் கமல்ஹாசன்.
பட மூலாதாரம், ANI
“மோதி மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த விமர்சனமும் இல்லை. பிரதமர் என்பதற்கான மரியாதை அவருக்கு நிச்சயம் கொடுக்கப்படும். அதற்கு அர்த்தம் நான் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அவருக்கு மரியாதை அளிப்பேன், தன்மானத்தை விட்டு அல்ல.
சாதியை மறந்த மக்களுக்கு, மீண்டும் சாதியத்தைக் கற்றுக்கொடுக்கும் எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும் அதைத் தகர்க்க வேண்டும் என்பதே என் லட்சியம். மய்யம் என்பது கிடையாது, உங்கள் அரசியல் எதிரி யார் என்று கேட்டார்கள், இப்போது சொல்கிறேன் எனது ஒரே அரசியல் எதிரி சாதியம்தான்,” என்று கூறினார்.
“அப்படி என்றால் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிரானவன் அல்ல நான். இன்னும் யாரெல்லாம் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை சாதிவாரிக் கணக்கெடுப்பு மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும். எனவே இந்தக் கணக்கு வேண்டும்.
அப்போதுதான் அந்த மக்களுக்காகப் போராட முடியும். இதை முதலில் சொன்னவர் காந்தி. பலரும் இங்கு காந்தி முஸ்லிம்களுக்காக போராடி இறந்துவிட்டார் என்கிறார்கள், அவர் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்காகத் தனது உயிரைவிட்டார்.
அந்த மதச்சார்பற்ற தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் தேர்தலில் நிற்கவில்லை. எங்கள் கட்சியின் பலம் என்ன என்பதை இந்த ஆலோசனைக் கூட்ட புகைப்படங்களைப் பார்த்தால் தெரியும்,” என்று கூறினார் கமல்ஹாசன்.
மத்தியில் பா.ஜ.க. மீண்டும் வந்தால் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கும் ஆபத்து - மு.க.ஸ்டாலின்
பட மூலாதாரம், Getty Images
மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கே ஆபத்து வரும் என்று தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அச்சம் தெரிவித்துள்ளார்.
திருவாருரில் நடைபெற்ற திமுக கூட்டணி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தஞ்சை, நாகை தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "பாஜக திரும்ப ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது. நாட்டில் ஜனநாயகமே இருக்காது. நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. இவ்வளவு ஏன்? மாநிலங்களே இருக்காது" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், கண்ணுக்கு முன்னே ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டதை பார்த்தோம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தார். அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு மாறாக அதனை யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைத்தார்கள். முன்னாள் முதலமைச்சர்களும் இதற்கு தப்பவில்லை.
அங்கே சட்டமன்றம் இயங்கவில்லை. காஷ்மீருக்கு 5 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இப்போது கூட ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
இதுதான் பாஜ.க. பாணி சர்வாதிகாரம். இந்த நிலைமை நாளை தமிழ்நாட்டிற்கும் ஏற்படலாம். பா.ஜ.க. திரும்பவும் ஜெயித்தால் எல்லா மாநிலங்களுக்கும் இந்த நிலைமைதான். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்குமே இந்த நிலை வரவே செய்யும்" என்று பேசினார்.
"வேடந்தாங்கல் பறவை மாதிரி" - அன்புமணி ராமதாஸ் மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அன்புமணி ராமதாஸ் மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
அன்புமணி ராமதாசை வேடந்தாங்கல் பறவையுடன் ஒப்பிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சம் செய்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது. கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள வேளையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பாமக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக வெற்றிக்கு அதிமுக ஒத்துழைக்கவில்லை என்ற அன்புமணி ராமதாஸின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "அவர் வேடந்தாங்கல் பறவை மாதிரி அடிக்கடி கூட்டணியை மாற்றி வருகிறார்" என்று குற்றம்சாட்டினார்.
மேலும் தொடர்ந்த அவர், "வேடந்தாங்கலில் உள்ள ஏரியில் தண்ணீர் நிறைந்திருக்கும் போது பறவைகள் வரும், பின்னர் பறந்து விடும். மீண்டும் தண்ணீர் நிறையும் போது ஏரிக்கு பறவைகள் வரும். அதுபோல ஒவ்வொரு தேர்தலிலும் மாறிமாறி கூட்டணி வைப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அதுமட்டுமில்லை, பெரியவர் ராமதாஸ் ஒரு பேட்டியில் பாஜகவுக்கு பூஜ்யம் மார்க் தான் தர முடியும் என்றார். ஆனால், இன்று அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தக் கொண்டு அந்த கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியை ஆதரிக்கும் கட்சிதான் பாமக" என்று சாடினார்.
கும்பகோணம் அருகே பிடிபட்ட ரூ.12 கோடி நகைகள் யாருடையவை? ஆவணங்களை காட்டியும் பறக்கும் படை பறிமுதல் செய்தது ஏன்?
படக்குறிப்பு, கும்பகோணம் அருகே ரூ.12 கோடி மதிப்புள்ள தங்க நகைகளுடன் பிடிபட்ட லாரி
சென்னையில் உள்ள தனியார் நகைக்கடையில் இருந்து கும்பகோணம் கொண்டு செல்லப்பட்ட ரூ 12 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் என்ற இடத்தில், சென்னையில் இருந்து வந்த மினி லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மினி லாரியில் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
நகைகளை எடுத்து சென்ற வாகன ஓட்டுநர், தேர்தல் பறக்கும் படையிடம் சில ஆவணங்களை அளித்துள்ளார்.
அந்த ஆணவங்களில் உள்ள தகவலுக்கும், மினி லாரியில் இருந்த நகைகளின் அளவிற்கும் முரண்பாடுகள் இருப்பதை பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விஜயபாஸ்கருக்கு புதிய நெருக்கடி - சோதனைக்குப் பின் அமலாக்கத்துறை என்ன செய்கிறது?
படக்குறிப்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு புதிய நெருக்கடி
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, விஜயபாஸ்கர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களைப் பெற அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வழக்கின் விவரங்களையும் குற்றப்பத்திரிகை நகலையும் கேட்டு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களையும் அமலாக்கத்துறை கேட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக விஜயபாஸ்கர் ரூ.38 கோடி சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு காவல்துறை எஸ்.ஐ வங்கதேச ராணுவத்தால் கைது - ஏன்? என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Images
சட்ட விரோதமாக இந்திய எல்லையைக் கடக்க முயன்ற சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை வங்கதேச ராணுவம் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜான் செல்வராஜ் என்பவர் சென்னை தாம்பரம் சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஜான் செல்வராஜ் திருச்சி காவல்துறையில் அதிக நாட்கள் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2004 முதல் 2009 வரை காவல் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்த அவர், பின்னர் 2009 முதல் 2019 வரை காவல்துறையை விட்டு விலகி விட்டதாக அவருடன் பணிபுரிந்த காவல் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
அந்த நேரத்தில் சிங்கப்பூரில் இருந்த ஜான் பின்னர் மீண்டும் எஸ்எஸ்ஐ பணி உயர்வோடு காவல்துறையில் சேர்ந்துள்ளார். அவர் அடிக்கடி விடுப்பில் போவதால் நம்பத்தகுந்த நபர் இல்லை என்றே பலருக்கும் அபிப்ராயம் இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்புகூட அவர் 60 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றதாகச் சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வீட்டு திருமண நிகழ்வுக்குச் செல்வதாகக் கூறி 2 நாட்கள் விடுப்பில் சென்றுள்ளார் ஜான்.
பின்னர் தபால் வழியாக 12 நாட்கள் மருத்துவ விடுப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நிலையில்தான் அவர் வங்கதேச எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதுகுறித்த தகவல் வங்கதேச ராணுவத் தரப்பில் இருந்து தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, சேலையூர் காவல் நிலையத்தில் நீதிமன்றங்களுக்கு குற்றவாளிகளை அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த ஜான் செல்வராஜுக்கு சட்ட விரோத கும்பலுடன் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனை
பட மூலாதாரம், YEARS
நாடாளுமன்றத்தில் பணம் வாங்கிக்கொண்டு
கேள்வி கேட்ட வழக்கில் மக்களவையில் இருந்து நீக்கப்பட்ட திரிணாமூல்ம் காங்கிரஸின்
முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனையைத் தொடங்கியுள்ளது.
இம்முறையும் கட்சி அவருக்குப் பழைய கிருஷ்ணாநகர்
தொகுதியில் இருந்து சீட்டு வழங்கியுள்ளது. கொல்கத்தாவின் அலிபூர் பகுதியில் ரத்னாவலி
என்ற கட்டடத்தின் 9வது மாடியில் அமைந்துள்ள மஹுவாவின் பிளாட் தவிர மற்ற நகரங்களில்
உள்ள அவரது இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, லோக்பால் அறிவுறுத்தலின் பேரில் மத்திய புலனாய்வு
அமைப்பு அவர்மீது வியாழக்கிழமை எஃப்.ஐ.ஆரை பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக
6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு லோக்பால் உத்தரவிட்டுள்ளது.
பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவின் குற்றச்சாட்டுகள்
குறித்த முதன்மை விசாரணை அறிக்கை அடிப்படையில் சிபிஐ விசாரிக்க லோக்பால் உத்தரவிட்டார்.
துபாய் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இருந்து மஹுவா பணம் மற்றும் பரிசுகளைப்
பெற்றதாகவும், தொழிலதிபர்
கௌதம் அதானி மற்றும் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்விகள்
கேட்கப்பட்டதாகவும் துபே குற்றம் சாட்டியிருந்தார்.
இதே போல், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மாநில அமைச்சருமான அரூப்
பிஸ்வாஸின் சகோதரர் ஸ்வரூப் பிஸ்வாஸ் வீட்டில் சுமார் 70 மணிநேரம் வருமான வரித்துறை
சோதனை நடத்தியது. முன்னதாக வெள்ளிக்கிழமையன்று
போல்பூரில் உள்ள அமைச்சர் சந்திரநாத் சின்ஹாவின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அங்கிருந்து பணம், சில ஆவணங்கள் மற்றும் மொபைல் போனை கையகப்படுத்தியதாக
அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக இந்தச் சோதனை
நடத்தப்பட்டது.
புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் – வீடியோ அறிக்கையில் என்ன கூறினார்?
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனக்கு புற்றுநோய்
இருப்பதாகவும் அதற்கான சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிகிச்சை
இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது.
ஒரு வீடியோ அறிக்கையில், “சில நம்பமுடியாத கடினமான மாதங்களுக்கு”
பிறகு இதுவொரு ‘பெரிய
அடி’ என்று கூறினார். ஆனால், “நான் நன்றாக
இருக்கிறேன். நாளுக்கு நாள் வலுப்பெறுகிறேன்,” என்று அவர் ஒரு
நேர்மறையான செய்தியையும் கொடுத்துள்ளார். வேல்ஸ் இளவரசியின் புற்றுநோய் குறித்து அதிக
தகவல்கள் பகிரப்படவில்லை.
அவர் பூரண குணமடைவார்
என கென்சிங்டன் அரண்மனை நம்பிக்கை தெரிவித்துள்ளது. வேல்ஸ் இளவரசி வெளியிட்டுள்ள வீடியோ
அறிக்கையில், ஜனவரி
மாதம் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தபோது, தனது உடலில் புற்றுநோய்
இருப்பது தெரியாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பின் செய்த பரிசோதனையின்போது
உடலில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததாகத் தெரிவித்த அவர், “தனது மருத்துவக் குழுவினர் பிரிவென்டிவ்
கீமோதெரபி என்ற சிகிச்சையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும், அந்த சிகிச்சையின் ஆரம்பக்கட்டத்தில் தான் இருப்பதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
வேல்ஸ் இளவரசியின் கீமோதெரபி பிப்ரவரி இறுதியில் தொடங்கியது.
இந்த நேரத்தில் தனிப்பட்ட மருத்துவ தகவல்கள் எதையும் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று
அரண்மனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அது என்ன புற்றுநோய் என்றுகூட அவர்களால் சொல்ல
முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஐபிஎல்: ஆர்சிபியை காப்பாற்றிய டிகே-ராவத் - சிஎஸ்கே பவுலிங் எப்படி இருந்தது?
பட மூலாதாரம், IPL/Twitter
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடனத்துடன் ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசன் தொடங்கியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே இம்முறை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கியுள்ளது. முதலில் பேட் செய்த ஆர்சிபி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்துள்ளது.
டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்ளெஸிஸ் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். கோலி, டூப்ளெஸிஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். 2வது ஓவரில் இருந்து டுப்ளெஸிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து 35 ரன்களில் டூப்ளெஸிஸ் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பட்டிதார் டக்அவுட்டில் தோனியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். ஒரே ஓவரில் முஸ்தபிசுர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 6வது ஓவரை தீபக் சஹர் வீசினார்.
சஹர் வீசிய 3வது பந்தில் மேக்ஸ்வெல் ரன் ஏதும் சேர்க்காமல் தோனியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணி மேக்ஸ்வெல் என்னும் மிகப்பெரிய விக்கெட்டை இழந்தது. பவர்ப்ளே ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் சேர்த்தது.
பட மூலாதாரம், IPL/Twitter
நான்காவது விக்கெட்டுக்கு கோலியும், கேமரூன் கிரீனும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்தது. முஸ்தபிசுர் வீசிய 12வது ஓவரில் கோலி 21 ரன்கள் சேர்த்த நிலையில் ரவீந்திராவிடம் விக்கெட்டை இழந்தார்.
அதே ஓவரின் 4வது பந்தில் கேமரூன் கிரீன் 18 ரன்னில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். முஸ்தபிசுர் தனது 2வது ஓவரிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்து தடுமாறியது.
ஆறாவது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் இருவரும் ஜோடி சேர்ந்தனர். தொடக்கத்தில் இருவரும் மந்தமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 15 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 100 ரன்களைக் கடந்தது. ஆனால், 15வது ஓவர்களுக்குப் பின் ராவத், டிகே இருவரும் கியரை மாற்றி ரன் வேகத்தை அதிகரித்தனர்.
பட மூலாதாரம், IPL/Twitter
தீக்சனா வீசிய 16வது ஓவரில் டிகே ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசினார். தேஷ்பாண்டே வீசிய 18வது ஓவரில் ராவத் 2 சிக்ஸர், ஒருபவுண்டரி, டிகே ஒரு சிக்ஸர் என 25 ரன்கள் சேர்த்தனர். இந்த ஓவர்தான் ஆர்சிபி அணிக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதன்பின் ராவத், டிகே இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்தனர். முஸ்தபிசுர் வீசிய 19வது ஓவரில் ராவத் ஒரு சிக்ஸரும்,டிகே ஒரு பவுண்டரியும் விளாசி 16 ரன்கள் சேர்த்தனர்.
தேஷ்பாண்டே வீசிய கடைசி ஓவரில் கார்த்திக் பவுண்டரி அடிக்கவே, கடைசிப் பந்தில் ராவத் ரன் எடுக்க முற்பட்டு 48 ரன்னில் தோனியால் ரன்அவுட் ஆனார். டிகே 38 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 57 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணியை தூக்கி நிறுத்தினர்.
தென்காசி: ஓட்டுநர் பலியான விவகாரம்; 3 காவலர்கள் பணியிடை நீக்கம் - என்ன நடந்தது?
காவல்துறையினர் தாக்கியதில் ஓட்டுநர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், சம்பவம் நடந்த இடத்தில் சீருடையில் இருந்த மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் முருகன் (வேன் ஓட்டுநர் 37). இவரின் மனைவி மீனா. முருகனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
முருகன் சங்கரன்கோவில் வேன் ஸ்டாண்டில் சொந்தமாக வேன் ஓட்டி வருகின்றார்.
மார்ச் 8ஆம் தேதி மாலை சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்து மக்களை மகாசிவராத்திரியை முன்னிட்டு பஞ்ச பூதஸ்தலங்களில் ஒன்றான சங்கரன்கோவிலுக்கு வேனில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது சங்கரன்கோவில் நகரப் பகுதியில் முருகன் ஒட்டி வந்துள்ள வேனுக்கு முன்னாள் சென்று கொண்டு இருந்த ஆட்டோ மீது இடித்துள்ளார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
வேனில் இருந்த முருகனை ஓட்டுநர் இருக்கையில் இருந்து இழுத்துப் போட்டு மூன்று காவலர்கள் அடிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இச்சம்பவத்திற்குப் பின், வேனை சங்கரன்கோவில் காவல் நிலையத்திற்கு காவலர்கள் கொண்டு சென்றனர்.
முருகனின் மனைவியின் தம்பி சங்கர் குமார் காவல் நிலையத்திற்குச் சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் முருகன் வேனில் இருந்துள்ளார். உடனடியாக வேனை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்து பார்த்து உயிர் இழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், முருகனின் இறப்பிற்குக் காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவத்தின்போது, அங்கிருந்த மூன்று காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், தனக்கு உரிய நிவாரணம் வேண்டும் எனக் கோரி முருகனின் மனைவி மீனா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையில், சம்பவத்தின்போது அங்கிருந்த காவலர்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக வேட்பாளர் மாற்றம்: தருமபுரியில் சௌமியா அன்புமணி போட்டி
பட மூலாதாரம், Sowmiya Anbumani/Fb
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி போட்டியிடுவார் என கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசாங்கத்திற்குப் பதிலாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் செளமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.
தருமபுரி தொகுதியில் 2014இல் அன்புமணி ராமதாஸ் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், அன்புமணி ராமதாஸ் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். அப்போது, திமுக வேட்பாளர் செந்தில்குமார், அன்புமணி ராமதாஸைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், இந்த முறை அந்தத் தொகுதியில் மீண்டும் அன்புமணி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்ப்பட்டது. ஆனால், அவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளதால், அவரது மனைவி செளமியா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பட மூலாதாரம், HANDOUT
ஆனால், இன்று காலை வெளியான வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. அதைத் தொடர்ந்து, இன்று மாலை தற்போது வேட்பாளர் மாற்றப்பட்டு, செளமியா அன்புமணியை தருமபுரி தொகுதிக்கான வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
பாமக சார்பில் போட்டியிடும் 10 தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று காலை அக்கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது கட்சி சார்பில் விடுபட்ட காஞ்சிபுரம்(தனி) மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக ஜோதி வெங்கடேசனை அறிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகையில் பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்பு
பட மூலாதாரம், KPONMUDI/FACEBOOK
பொன்முடி மீண்டும்
எம்.எல்.ஏ ஆனதைத் தொடர்ந்து அவரை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவெடுக்க
கவர்னருக்கு உச்சநீதிமன்றம் 24 மணிநேரம் கெடு விதித்திருந்தது.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையில்
இருந்து தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்
தொடர்ந்து பொன்முடி மீண்டும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரானார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்
உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், சேகர்பாபும், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர் பங்கேற்றனர்.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தேமுதிக
பட மூலாதாரம், DMDK
தேமுதிக சார்பில் 2024 நாடாளுமன்றத்
தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய சென்னை தொகுதியில் முன்னாள்
எம்.எல்.ஏ.வும் கழக துணைச் செயலாளருமான ப.பார்த்தசாரதி போட்டியிடுகிறார். மேலும், திருவள்ளூர் தொகுதியில் கு.நல்லதம்பி, கடலூரில் பி.சிவக்கொழுந்து, தஞ்சாவூரில் பி.சிவநேசன், விருதுநகரில் வி.விஜய பிரபாகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - விருதுநகரில் ராதிகா போட்டி
பட மூலாதாரம், radikaasarathkumar/ Instagram
தமிழகத்தில் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார். முக்கியமாக, விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா போட்டியிடுகிறார்.
அந்த அறிவிப்பின்படி, தனித்தொகுதியான திருவள்ளூரில் பொன். வி. பாலகணபதி, வடசென்னையில் பால் கனகராஜ், திருவண்ணாமலையில் அஸ்வாத்தமன், நாமக்கல்லில் ராமலிங்கம், திருப்பூரில் ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பொள்ளாச்சியில் வசந்தராஜன், கரூரில் வி.வி. செந்தில்நாதன், தனித்தொகுதியான சிதம்பரத்தில் கார்த்தியாயினி, நாகப்பட்டினத்தில் எஸ்.ஜி.எம். ரமேஷ், தஞ்சாவூரில் எம். முருகானந்தம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சிவகங்கையில் தேவநாதன் யாதவ், (இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்), மதுரையில் ராம ஸ்ரீநிவாசன், விருதுநகரில் ராதிகா சரத்குமார், தென்காசியில் ஜான் பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக கூட்டணியிலிருந்து பிரிந்து தேர்தலை சந்திக்கும் பாஜக, 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இக்கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற சிறு கட்சிகளும் பாஜக கூட்டணியில் உள்ளன.
முன்னதாக, மற்ற 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. அதில் முக்கியமாக, கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையிலும் தென்சென்னையில் தமிழிசை சௌந்தரராஜனும் நெல்லையில் நயினார் நாகேந்திரனும் போட்டியிடுகின்றனர்.
பொன்முடிக்கு இன்று அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி
பட மூலாதாரம், ANI
தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைப்பது தொடர்பாக, மாநில ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
இந்நிலையில், இன்று மாலை 3.30 மணியளவில் பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவிப் பிரமாணம் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என, ஏ.என்.ஐ ஊடக முகமையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு மீண்டும் உயர்கல்வித்துறை அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
முன்னதாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தமிழக அமைச்சர் பொன்முடிக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து சட்டமன்ற உறுப்பினராக அவர் தொடர்வதற்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நீக்கப்பட்டது. தமிழக அமைச்சரவையில் மீண்டும் பொன்முடியை அமைச்சராக சேர்க்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.
பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று ஆளுநர் கூறியதாக தகவல் வெளியான நிலையில், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
பொன்முடி மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், தமிழக ஆளுநர் அவர் இன்னும் குற்றமற்றவர் என்பது நிரூபணமாகவில்லை எனக் கூறி பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிங்கி வாதத்தை முன்வைத்தார்.
மேலும் 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அமைச்சரை நியமிக்கும் முதலமைச்சரின் பரிந்துரையை எந்த ஆளுநரும் மறுத்ததில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு, உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்று சிங்வி கூறினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, "உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், அதை ஆளுநரால் எப்படி மறுக்க முடியும்," என்றார்.
"ஆளுநரின் இந்தச் செயல்பாடு எங்களுக்குக் கவலை அளிக்கிறது. உச்சநீதிமன்றம் ஒரு வழக்கின் தீர்ப்புக்கு தடை விதித்த நிலையில், ஆளுநர் எவ்வாறு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைப்பது அரசமைப்புக்கு எதிரானது என எப்படிக் கூற முடியும்?" என பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
”கேஜ்ரிவால்-ஐ சந்திக்கக்கூட குடும்பத்தினருக்கு அனுமதி மறுப்பு” - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சௌரப் பரத்வாஜ்
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவருடைய குடும்பத்தினருக்கு மத்திய அரசு தொல்லை அளிப்பதாக அக்கட்சி புகார் தெரிவித்துள்ளது.
டெல்லி அரசில் அமைச்சராக உள்ள சௌரப் பரத்வாஜ் இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், கேஜ்ரிவால் விவகாரத்தில் குறைந்தபட்சம் மனிதநேயம் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. கேஜ்ரிவாலின் வயதான பெற்றோர்களால் நடக்கக்கூட முடியாது. அவருடைய குடும்பத்தினர், ஆதரவாளர்கள், உறவினர்கள் யாரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை” என்றார்.
அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் வியாழக்கிழமை அவருடைய வீட்டில் வைத்து அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். புதிய மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
இரவில் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து, ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தை நேற்று இரவே நாடியது.
‘நீட் தேர்வுக்கு மாற்று’ - அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
பட மூலாதாரம், GETTY IMAGES
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, அதிமுக சார்பாக 33 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருந்தார்.
மேலும் மார்ச் 24ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் சார்பாக பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.
இதில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:
நீட் தேர்வுக்கு மாற்றாக 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசை வலியுறுத்தல்
ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெறுதல்
நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தல்
உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தல்
குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தல்
தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை
தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்
சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்துவோம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாற்றம் - சர்ச்சை வீடியோ காரணமா?
பட மூலாதாரம், Special Arrangement
படக்குறிப்பு, சூரியமூர்த்தி
திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, வி.எஸ். மாதேஸ்வரன் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி என முடிவாகி நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. அத்தொகுதியின் வேட்பாளராக, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டார். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாதி ஆணவப் படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையில் அவர் பேசியிருந்ததாக கூறப்படும் காணொளி சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. இதையடுத்து, சாதிய மனநிலை கொண்ட வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கருத்து எழுந்தது.
ஆனால், இப்படி தான் பேசவில்லை என்றும் இது பொய்யான வீடியோ என, இதுதொடர்பான வழக்கிலிருந்து தான் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் சூரியமூர்த்தி தெரிவித்திருந்தார்.
ஆனாலும், அவரை மாற்ற வேண்டும் என்ற கருத்து வலுத்தது. இந்நிலையில், நாமக்கல் தொகுதியின் வேட்பாளரை மாற்றி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, வி.எஸ். மாதேஸ்வரன் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர்.
சர்ச்சை காணொளியால் தான் வேட்பாளர் மாற்றப்பட்டாரா என்பது குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன், “ஏற்கனவே சூரியமூர்த்தியை நிறுத்தியதும் இப்போது வேட்பாளரை மாற்றியதும் கட்சியின் ஆட்சி மன்றக்குழுவின் முடிவுதான். உள்ளூரில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டி - பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பட மூலாதாரம், Facebook
படக்குறிப்பு, தங்கர் பச்சான்
நடைபெறவுள்ள 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். மேலும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, திண்டுக்கல் தொகுதியில் அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் கவிஞர் ம. திலகபாமா, அரக்கோணம் தொகுதியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் கே. பாலு, ஆரணி தொகுதியில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏவுமான அ.கணேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடலூர் தொகுதியில் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான், மயிலாடுதுறை தொகுதியில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ம.க. ஸ்டாலின், கள்ளக்குறிச்சி தொகுதியில் கட்சியின் மாநில துணைத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான தேவதாஸ் உடையார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தருமபுரி தொகுதியில் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசாங்கம், சேலம் தொகுதியில் சேலம் தெற்கு மாவட்டச் செயலாளர் ந. அண்ணாதுரை, விழுப்புரம் தொகுதியில் பாமக மாணவர் அணி மாநில செயலாளர் முரளி சங்கர் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
தருமபுரி தொகுதியில் 2014 மக்களவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார். ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் அத்தொகுதியில் தோல்வியடைந்தார். இந்நிலையில், அந்த தொகுதியில் மீண்டும் அவர் களமிறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர் அத்தொகுதியில் போட்டியிடவில்லை.