You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:

    • அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
    • கட்சி எம்எல்ஏக்கள் விரும்பினால் பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
    • ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • 'குமுதம்' இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மாரடைப்பால் காலமானார்.
    • மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பார்வையாளர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
    • அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பிகார் விதான் சௌதாவிலிருந்து பாட்னாவில் உள்ள ராஜ் பவனுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அக்கட்சி உறுப்பினர்கள் பேரணி நடத்தினர்.
    • இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை முற்றுகையிட்டு, பெண்கள் போராட்டம்.
    • மதுரை வணிகவரித்துறையினரால் 1 கோடி மதிப்பிலான, சுமார் 1 டன் கஞ்சாவை வாகன தணிக்கையின் போது மினி வேனுடன் பறிமுதல் செய்துள்ளனர்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    முன்னதாக, அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், சுரேன், ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழுவுக்கு எந்த நிபந்தனையையும் நீதிமன்றம் விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    சி.பாலகிருஷ்ணன் என்பவரால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு அதிமுக உட்கட்சி தேர்தல் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் நடத்தப்படும் பொதுகுழுவை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  4. பொருளாதார சரிவிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் ரணில் அரசின் திட்டங்கள் என்னென்ன?

  5. 'குமுதம்' பத்திரிகையின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மரணம்

    'குமுதம்' இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மாரடைப்பால் காலமானார்.

    குமுதம் ஆசிரியராக மட்டுமன்றி ஏராளமான ஆன்மிக புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார். 'தமிழச்சி ஆண்டாள்', 'ஆண்டவன் உங்கள் அருகில்', 'ஜகத்குரு', 'குறைதீர்க்கும் கோவில்கள்' உள்பட ஏராளமான ஆன்மிக புத்தகங்களைவெளியிட்டுள்ளார். இதுதவிர, ஏராளமான ஆன்மிக பயணக் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.

    இன்று காலை வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

  6. பதவியை விட்டு விலக தயாராக உள்ளேன்- உத்தவ் தாக்கரே

    “நான் முதலமைச்சராக நீடிக்கக்கூடாது என எந்த எம்.எல்.ஏ.வாவது விரும்பினால் நான் தற்போதே இந்த பதவியை நான் விட்டு செல்ல தயாராக உள்ளேன்” என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே காணொளி வாயிலாக பேசியுள்ளார்.

    "எத்தனை எண்ணிக்கை இருக்கிறது என்பது இரண்டாம்பட்சம்தான். ஆனால் அதிக எண்ணிக்கை கொண்டிருந்தால் ஜனநாயகம் வெற்றி பெறும். என்னுடையதாக நான் கருதும் என் ஆதரவாளர்களில் ஒருவர் எனக்கு எதிராக வாக்களித்தால்கூட அது அவமானம்."

    "பதவிகள் வந்து போகும். வாழ்க்கையின் மிகப்பெரிய வருமானம் என்னவென்றால் பதவியில் இருந்து நாம் என்ன செய்கிறோமோ அதிலிருந்து வரும் மக்களின் ஆதரவே மிகப்பெரிய வருமானம்" என அவர் பேசியுள்ளார்.

  7. முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயார் - உத்தவ் தாக்கரே

  8. ஆப்கானிஸ்தானில் பெரும் நிலநடுக்கம்: குறைந்தது 1000 பேர் பலி - 1500 பேர் காயம்

  9. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பக்திகா மாகாணத்தில் குறைந்தது 920 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம்

  10. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத் துறைக்கு கடிதம்

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனாமற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் வீட்டிலேயே ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் முழுமையாக குணமடையும் வரை விசாரணையை சில வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரியுள்ளதாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்.

  11. பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மூ அரசியலில் சாதித்தது என்ன?

  12. இலங்கைக்கு அனுப்பப்பட்ட 61 கோடியே 71லட்சம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள்

    தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் வி.டி.சி.சன் என்ற கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான்,

    “பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவதற்காக இரண்டாவது கட்டமாக இன்று இந்த கப்பலில் 14700 டன் அரிசி, 250 டன் ஆவின் பால் பொருட்கள், 50 டன் மருந்து பொருட்கள் என மொத்தம் 61 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மூன்றாம் கட்டமாக பொருட்கள் அனுப்பபடும் என்றார்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும் என தமிழக முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து மத்திய அரசின் அனுமதியுடன் கடந்த மே மாதம் சென்னையிலிருந்து கப்பலில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

  13. தொடங்கியது மகாராஷ்டிர மாநில அமைச்சரவை கூட்டம்

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அந்த மாநில அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. தற்போது நடந்து வரும் அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே காணொளி மூலமாக பங்கேற்கிறார் என ஏ.என்.ஜ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  14. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா

    மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பார்வையாளர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

  15. ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

  16. மகாராஷ்டிர மாநில ஆளுநருக்கு கொரோனா தொற்று

    மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து தற்போது அவர் ஹெச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மகாராஷ்டிராவில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அம் மாநில ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு வழங்குவதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

  17. அக்னிபத் திட்டத்தை திரும்பப் வேண்டி தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்

    அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பிகார் விதான் சௌதாவிலிருந்து பாட்னாவில் உள்ள ராஜ் பவனுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அக்கட்சி உறுப்பினர்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.

    மேலும் அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.