You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

"தவறு செய்து விட்டேன், ஆனால் பதவி விலக மாட்டேன்" - கோட்டாபய ராஜபக்ஷ

கடந்த காலத்தில் என்ன குறைகள் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான எனது பொறுப்பாகும் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. ஜஹாங்கிர்புரி வன்முறை - இதுவரை 23 பேர் கைது

    டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, ஜஹாங்கிர்புரியில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது நடந்த மோதல்கள் குறித்த விவரங்களை செய்தி முகமையான ஏஎன்ஐயிடம் அளித்த டெல்லி போலீஸ் உதவி ஆய்வாளர் மேத்தா லால், "சனிக்கிழமை அப்பகுதியில் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம் மசூதி அருகே சென்றபோது, இரு குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கல் வீச்சு நடந்தது. ஆனால், இரு குழுக்களும் அங்கிருந்து சென்றுவிட்டன," என்றார்.

    தற்போது நிலைமை முற்றிலும் கட்டுக்குள் உள்ளதாக டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தீபேந்தர் பதக் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை 23 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, டெல்லி காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் உட்பட 9 பேர் இந்த வன்முறையில் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    "சிலர் சமூக வலைதளம் மூலம் அமைதியை குலைக்க முயற்சி செய்கின்றனர். சமூக வலைதளங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்துவருகிறோம். சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை இடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

  2. இலங்கை நெருக்கடி: ராஜபக்ஷ குடும்பம் இல்லாத புதிய அமைச்சரவை பிரச்னையை தீர்க்குமா?

  3. தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

    தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை என, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "அங்கீகரிக்கப்பட்ட மின் பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படுவது தவிர்த்து தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் மின்வெட்டு இல்லை. எந்த காலத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    2,500 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்குக் கூடுதலாக தேவை. அதனை 3,500 மெகாவாட் கொள்முதல் செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மின்சார வாரியம் செய்துள்ளது. சீரான மின்வாரியம் செய்யப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

  4. ஸ்டாலின் விளக்கம்: ஆளுநரோடு விரோதம் இல்லை, ஆனால் ஏன் தேனீர் விருந்துக்குப் போகவில்லை?

  5. மத்திய அமைச்சர் எல். முருகன் தேவையில்லாமல் திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் - ஆர்.எஸ்.பாரதி

    மத்திய அமைச்சர் எல். முருகன் தேவையில்லாமல், திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில், "பொறுப்புள்ள பதவியில் அமர்ந்துள்ள எல்.முருகன் பொறுப்பற்ற முறையில் செய்திகள் வெளியிடுவது அவருடைய அறியாமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    திமுகவின் மீது அவதூறாக பேசுவதும் கருத்து தெரிவிப்பதையும் எல்.முருகன் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இளையராஜா பிரதமர் மோதி குறித்து தெரிவித்த கருத்துக்கு திமுகவைச் சேர்ந்த யாரும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவும் இல்லை. தெரிவிக்க விரும்பவும் இல்லை.

    பிரதமர் குறித்து, இளையராஜா கருத்து சொல்வது எல்.முருகன் வாதத்தின்படி, எப்படி கருத்து சுதந்திரமாகுமோ அதேபோல், இளையராஜாவின் கருத்து குறித்து விமர்சனம் செய்திட, மற்றவர்களுக்கும் சுதந்திரம் உண்டு என்பதை எல்.முருகன் புரிந்துகொள்ள வேண்டும்.

    தேவையில்லாமல், திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எல்.முருகனை எச்சரிக்க விரும்புகிறேன்.

    முரசொலி இடம் குறித்து தாங்கள் பேசியது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், ஒரு வழக்கினை தங்கள்மீது தொடர வழிவகுக்க வேண்டாம் என்றும், தங்களின் இப்போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால், திமுக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்பதனை எச்சரிக்கையாகவும் அறிவுரையாகவும் தெரிவிக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

  6. ஆளுநரின் தேநீர் விருந்தை நாங்கள் புறக்கணித்தது ஏன்? - சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

  7. லூவிவ் நகரில் ரஷ்யப்படைகள் தாக்குதல் - யுக்ரேன்

    யுக்ரேனின் லூவிவ் நகரில் இன்று காலை ரஷ்யப்படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், சண்டை நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறிய யுக்ரேனியர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் ஜன்னல்கள் நொறுங்கியதாக, லூவிவ் நகர மேயர் ஆன்ட்ரி சடோவி தெரிவித்துள்ளார்.

    மேலும், லூவிவ் நகரில் உள்ள யுக்ரேன் ராணுவ தளம் மற்றும் கார் டயர் பழுதுநீக்கும் மையம் ஒன்றில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில், 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    4 கார்கள் சேதமடைந்ததாகவும் தெரிவித்துள்ள அவர், சேதமடைந்த வாகனத்தின் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

  8. BBC Exclusive: நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு

  9. வடமாநில இளைஞரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டதாக இரண்டு பேர் கைது

    ஸ்ரீபெரும்புதூரில் போலீசார் என போலியாக நடித்து, வடமாநில இளைஞரிடம் கூகுள் பே மூலம் பணப்பறிப்பில் ஈடுபட்டதாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பாக, காவல்துறை தரப்பில் தெரிவித்ததாவது:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வைப்பூர் ஊராட்சியில் வாடகைக்கு குடியிருந்து வேலை செய்து வரும் லுட்பூர் ரகுமான் என்ற வடமாநிலத்தவர், வைப்பூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, காக்கி பேண்ட் அணிந்துகொண்டு புல்லட்டில் வந்த இருவர் ரகுமானை மடக்கி, தாங்கள் இருவரும் போலீஸ் எனக்கூறி, நீ என்ன கஞ்சா வைத்திருக்கிறாயா எனக்கேட்டு சோதனையிட்டுள்ளனர்.

    சோதனையில் ஏதும் கண்டறியாத நிலையில் பணம் கேட்டு அவரை மிரட்டி தாக்கியுள்ளனர். ரகுமான் தன் 5 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் அனுப்பி உள்ளார்.

    இதுதொடர்பாக, ரகுமான் ஒரகடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். பின்னர் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் போலி போலீஸ் என தெரியவந்தது.

    இதையடுத்து, காரணி தாங்கள் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (34), வஞ்சுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் (45) ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரித்தனர்.

  10. இந்தியாவில் விளிம்பு நிலை மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருப்பது ஏன்?

  11. "மெடலோடுதான் வருவேன்" என்றார், ஆனால்? இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வாவின் அதிர்ச்சி மரணம்

  12. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

    இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா `Dark Dravidian • Proud Tamizhan' என்று குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டுள்ளார்.

  13. கோடநாடு கொலை வழக்கில் தொடர் விசாரணை

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு இல்லத்தில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கை தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் 15-ம் தேதி கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆறுகுட்டியின் உறவினர்களிடமும் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில், கோவை மாவட்ட அம்மா பேரவையின் இணைச் செயலாளர் அனுபவ் ரவியிடம் கோடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக மூன்றாவது நாளாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

  14. இலங்கை: கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் 17 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

    இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

    கொழும்பு - கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் 17 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

    இதன்படி, புதிய அமைச்சர்களாக பதவியேற்றவர்கள்:

    • பொது நிர்வாக, உள்விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் - தினேஷ் குணவர்தன
    • கடற்றொழில் அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா
    • கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் - ரமேஷ் பத்திரண
    • பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க
    • போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர் - திலும் அமுனுகம
    • நெடுஞ்சாலைகள் அமைச்சர் - கனக ஹேரத்
    • தொழில் அமைச்சர் - விதுர விக்ரமநாயக்க
    • விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் - ஜனக்க வக்கும்புர
    • வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் - ஷெஹான் சேமசிங்க
    • நீர் வழங்கல் அமைச்சர் - மொஹான் பிரியதர்ஷன டி சில்வா
    • வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் - விமலவீர திஸாநாயக்க
    • எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் - காஞ்சன விஜேசேகர
    • விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் - தேனுக விதானகமனே
    • ஊடகத்துறை அமைச்சர் - நாலக்க கொடஹேவா
    • சுகாதார அமைச்சர் - பேராசிரியர் ஷன்ன ஜயசுமன்ன
    • சுற்றுச்சூழல் அமைச்சர் - நஷிர் அஹமட்
    • துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் - பிரமித்த பண்டார தென்னக்கோன்
  15. டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் கார் விபத்தில் உயிரிழப்பு

    மேகாலயாவில் நடந்த கார் விபத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்தார்.

  16. வணக்கம் நேயர்களே

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இதுவரை ஜோ மகேஸ்வரன் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகளாவிய முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்.

  17. இந்திய அணைகள் பாதுகாப்புச் சட்டம் பற்றி ஓரிரு நாளில் முடிவு: துரைமுருகன்

    இந்திய அரசின் அணைப்பாதுகாப்பு மசோதா குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்,

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் அணைப் பாதுகாப்பு மசோதா குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ''அணை பாதுகாப்புச் சட்டத்தில் எந்த பிரச்னையும் இல்லை. இந்த சட்டம் வருவதற்கு இன்னும் ஓராண்டாகும். வந்த பிறகுதான் விவரம் தெரியும்.

    இந்த சட்டம் வந்தால், அனைத்து அணைகளும் இதன் கட்டுப்பாட்டில் வரும். இதில், நமக்குள்ள பாதகங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும். வழக்குரைஞர்களுடன் ஆலோசித்துள்ளோம். இதில், தமிழ்நாட்டின் நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் கலந்தாலோசித்து, ஓரிரு நாளில் முடிவு செய்வார்.'' என்றார்.

  18. நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப தமிழ்நாடு ஆளுநர் முடிவு, பரணிதரன்

    மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்க அளிக்கக் கோரி மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களை குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முடிவு செய்துள்ளதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக மாநில ஆளுநர் செயலகம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு முறைப்படி ஓரிரு தினங்களில் தகவல் தெரிவிக்கப்படும் என்று ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்

  19. ஆளுநர் தேநீர் விருந்தில் ஏன் பங்கேற்கவில்லை? சட்டமன்றத்தில் முதல்வர் விளக்கம்

    ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் விளக்கமளித்தார். அத்துடன், தமக்கும் ஆளுநருக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளுநர் முடிவு செய்திருப்பதாக பிபிசி தமிழில் பிரத்யேகமாக நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில், முதல்வரின் இந்த பேச்சு வெளியாகியுள்ளது.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிக்கையை வாசித்தார்.

    அப்போது, ''ஏழரை கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் விலக்கு மசோதா கடந்த 210 நாட்களாக ஆளுநர் மாளிகையில் மேல் முடங்கிக் கிடக்கிறது. நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரின்றி இருக்கிறது. அதே ஆளுநர் மாளிகையில் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகும். சட்டமன்ற மாண்பை சிதைப்பதாகும். ஆகையல்தான் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.

    ஆளுநர் தனிப்பட்ட விரோதம் இல்லை. நேரில் சந்திக்கும் போதும் பொது மேடையிலும் ஆட்சியைப் புகழ்ந்து பேசியுள்ளார். ஆளுநருக்கு உரிய மரியாதை அளித்து வருகிறோம். அரசியல் எல்லைகளைக் கடந்த பண்பாட்டை காப்போம்.

    நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதாகும். எனது 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் நான் எத்த்தனையோ வலிகளையும் அவமானங்களையும் சந்தித்துள்ளேன். நான் கற்றுக் கொண்ட பாடம், என் கடன் பணி செய்து கிடப்பதே. தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்கும் அவமானங்களையும் வழிகளையும் தாங்கிக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பேன். தமிழ்நாட்டு மக்களின் உணர்வை அனைத்து மன்றங்களிலும் எதிரொலிப்போம். உரிமையை நிலைநாட்டுவோம்.

    இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கையைப் பொருத்து, நாம் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுப்போம் '' என்றார்.

  20. ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை. அவர் பழகுவதற்கு இனியவர் - முதல்வர் ஸ்டாலின்

    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு முதல்வரான தனக்கும் தனிப்பட்ட பகை ஏதுமில்லை என்றும். தனிப்பட்ட முறையில் அவர் பழகுவதற்கு இனியவர் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.