உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: சென்னையில் குறைந்த வாக்கு சதவீதம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. சென்னையில் குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகியுள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

விக்னேஷ். அ and க. சுபகுணம்

  1. "கள்ள ஓட்டு போடவே திமுக இப்படிச் செய்கிறது" - ஹிஜாப் விவகாரத்தில் விளக்கமளித்த பாஜக முகவர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டில் அமைக்கப்பட்ட அல்-அமீன் உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் இஸ்லாமிய வாக்காளர்கள், ஹிஜாப் அணிந்துவந்ததால் அடையாளம் காண முடியவில்லை எனக் கூறி பாஜக முகவர் கிரிராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் தேர்தல் அதிகாரிகளிடம் அவரை வெளியேற்றக் கோரிய அதிமுக, மற்றும் திமுக முகவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மூலம் பாஜக பிரமுகர் கிரிராஜன் வாக்குச் சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    பாஜக முகவர் கிரிராஜன்

    அவருக்குப் பதிலாக பாஜக முகவராக உஷா என்பவர் நியமனம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து நீக்கப்பட்ட பாஜக முகவர் கிரிராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வாக்கு மையத்தில் 60 வயதுடைய வாக்காளரின் வாக்கினை 30 வயதுடைய நபர் ஹிஜாப் அணிந்து கொண்டு வாக்களிகின்றனர். இதனால் அடையாளம் காணும் வகையில், ஹிஜாபை அகற்றக் கூறியதால் திமுக நிர்வாகி யாசின் மற்றும் 20க்கும் மேற்பட்ட திமுகவினர் தகாத வார்த்தைகளால் பேசியும் தாக்கவும் முற்பட்டனர்.மேலும் அங்கிருந்த அதிகாரிகளும் என்னை வெளியேறுமாறு கூறினர்.

    திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதற்காக இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றன,” என்று குற்றம் சாட்டினார்.

  2. யுக்ரேன் தலைநகரை தாக்க ரஷ்யா திட்டமிடுவதாக அமெரிக்கா கணிப்பு

    யுக்ரேன் தலைநகரை தாக்க ரஷ்யா திட்டமிடுவதாக அமெரிக்கா கணிப்பு

    பட மூலாதாரம், EPA

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யுக்ரேன் மீது படையெடுக்க முடிவு செய்துள்ளார் என்றும், வரும் நாட்களில் அந்த தாக்குதல் நடக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த தாக்குதலில் யுக்ரேனிய தலைநகர் கீவ் குறிவைக்கப்படும் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்துள்ளதாகவும் கூறினார் பைடன்.

    ஆனால், இந்தத் தகவலை ரஷ்யா முழுவதுமாக மறுக்கிறது. யுக்ரேனில் இருந்து பிரிந்து சென்ற கிழக்குப் பகுதிகளில் போலியான பதற்றத்தை ரஷ்யா ஏற்படுத்த முயல்கிறது.

    இதனால் இதன்மூலம் தாங்கள் தாக்குதல் நடத்தினால், அந்தத் தாக்குதலை ரஷ்யாவால் நியாயப்படுத்த முடியும் என்று மேற்கத்திய நாடுகள் அஞ்சுகின்றன.

  3. காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: இந்திய துணை ராணுவத்தினர் இருவர் பலி

    காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், இந்திய துணை ராணுவத்தினர் இருவர் மற்றும் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டனர் என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவிக்கிறது.

    தெற்கு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள ஷோபியான் மாவட்டத்தில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ''சனிக்கிழமை காலை, ஜம்மு-காஷ்மீ காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ காவல் படையின் கூட்டுப் படை ஓர் ஆபரேஷனை நடத்தியது. அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திடீரென துப்பாக்கிச் சூடு தொடங்கியது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துப்பாக்கிச் சூடு இன்னும் நடந்து கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

  4. மதுரை ஹிஜாப் பிரச்னையை விசாரிக்க தேர்தல் ஆணையர் உத்தரவு

    தேர்தலின்போது காலையிலிருந்து சுமார் 30 முதல் 40 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. அவை மற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தேர்தல் நிலவரத்தை விரிவாகத் தெரிந்துகொள்ள...

  5. பொதுமக்களோடு நின்று வாக்களித்த நாமக்கல் ஆட்சியர்

    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

    பொதுமக்களோடு நின்று வாக்களித்த நாமக்கல் ஆட்சியர்
  6. "தனியாக வாக்களிப்பது கஷ்டமாக உள்ளது" - சசிகலா

    சசிகலா சென்னை தியாகராய நகரில் தனது வாக்கைச் செலுத்தினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. அதனால் அப்போது அவர் வாக்களிக்கவில்லை. இந்நிலையில், இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, "என் அக்காவுடன் (ஜெயலலிதா) சேர்ந்துதான் வாக்களித்திருக்கிறேன். இந்த முறைதான் நான் தனியாக வாக்களிப்பது கஷ்டமாக உள்ளது," என்று கூறினார்.

    சசிகலா
  7. உள்ளாட்சித் தேர்தல்: சுமார் 40 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது

    காலை 9 மணி நிலவரப்படி மாநகராட்சிப் பகுதிகளில் 5.78 சதவீதமும் நகராட்சிப் பகுதிகளில் 10.32 சதவீதமும் பேரூராட்சிப் பகுதிகளில் 11.74 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒட்டுமொத்த சராசரியாக 8.21 சதவீத வாக்குப் பதிவு நடந்துள்ளது.

    தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 30,735 வாக்குச்சாவடிகளில் 30-40 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதாகவும் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

    உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு

    அதோடு, இயந்திரம் பழுதான இடங்களில் 5 மணிக்கு மேல் கூடுதல் நேரம் வழங்கப்படாது எனவும் 5 மணிக்கு முன்பாக வந்து காத்திருப்போருக்கு வாக்களிக்க நேரம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

    காலை 9 மணி நிலவரப்படி நகர்ப்புறங்களில் மிகக் குறைவான சதவீதத்திலேயே வாக்குகள் பதிவாகியுள்ளன. செங்கல்பட்டில் 3.3 %, சென்னையில் 3. 96 %, கோயம்புத்தூரில் 6.8 சதவீத வாக்குகளுமே பதிவாகியுள்ளன.

  8. திண்டிவனத்தில் வாக்களித்த அன்புமணி ராமதாஸ்

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரொட்டிகார தெருவிலுள்ள 20வது வாக்குசாவடி மையத்தில், ராஜ்யசபா உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தனது வாக்கினை செலுத்தினார்.

    அன்புமணி ராமதாஸ்
  9. திருப்பூரில் 2,900 காவலர்களின் பாதுகாப்போடு வாக்குப் பதிவு

    திருப்பூரில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் 15 பேரூராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றன.

    மொத்தம் 440 வார்டுகளில் 1,920 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மொத்தம் 11,32,732 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூரில் 1,299 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருப்பூரில் 2,900 காவலர்களின் பாதுகாப்போடு வாக்குப் பதிவு

    அதில் 224 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 6,236 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2,900 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    காலை 9 மணி நிலவரப்படி 8 சதவீத வாக்கு பதிவாகியுள்ளன. இதில் மாநகராட்சியில் 7.76 வாக்குகளும் நகராட்சிகளில் 10.35 வாக்குகளும் பேரூராட்சிகளில் 6.13 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

  10. உள்ளாட்சித் தேர்தல்: ஈரோடு நகராட்சியில் அதிக வாக்குப்பதிவு

    ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி மற்றும் 42 பேரூராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 1,221 வாக்குசாவடி மையங்கள் உள்ள நிலையில் 434 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

    2,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்கு 60 வார்டுகள், மொத்தம் 4 நகராட்சிகளில் 102 வார்டுகளுக்கும் இதேபோல 42 பேரூராட்சிகளில் உள்ள 630 வார்டுகளுக்குத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஈரோடு மாவட்ட வாக்குப்பதிவு நிலவரம்

    ஈரோடு மாநகராட்சியின் 51வது சேர்ந்த திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 59 வார்டுகளுக்கு மொத்தம் 352 பேர் போட்டியில் உள்ளனர். பவானி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளில் 453 பேர் போட்டிட்டுள்ளனர்.

    42 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 630 வார்டுகளில் 20 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையிலும் இரண்டு வார்டுகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், 610 வார்டுகளில் 1,919 பேர் போட்டியில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 769 பதவிகளுக்கு 2,724 பேர் போட்டியிட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் காலை 11:00 மணி நிலவரப்படி 21.06% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநகராட்சியில்16.50% வாக்குகளும் நகராட்சியில் 27.13% வாக்குகளும் பேரூராட்சிகளில் 25.57% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

  11. தர்மபுரி மாவட்டம்: தற்போதைய வாக்குப் பதிவு நிலவரம்

    தர்மபுரி மாவட்டம்: தற்போதைய வாக்குப் பதிவு நிலவரம்

    தர்மபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி பத்து பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. தர்மபுரியில் உள்ள ஒரு நகராட்சி 10 பேரூராட்சியில் 190 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தமாக 801 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    முன்பே பாலக்கோடு பேரூராட்சியில் ஐந்தாவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அசினா மற்றும் 11 வது வார்டில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஆயிஷா ஆகிய இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 228 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தருமபுரியில், காலை 11 மணி வாக்கு பதிவு நிலவரப்படி, நகராட்சியில் 24.56%, பேரூராட்சியில் 27.61% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

  12. சேலம் - நோட்டா பட்டன் இல்லாததால் வாக்களிக்க மறுத்த சமூக ஆர்வலர்

    இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மின்னனு வாக்குப் பதிவு இயந்திரத்தில் நோட்டா பட்டன் வாய்ப்பு மறுக்கப்பட்டதைக் கண்டித்து சேலம் சமூக ஆர்வலர் பூமொழி வாக்களிக்க மறுத்துள்ளார்.

    அவர் உள்ளாட்சித் தேர்தல் சட்டப்பிரிவு 71ன் படி தான் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை சட்டப்படி பதிவு செய்துள்ளார். இதுகுறித்து நம்மிடம் பூமொழி கூறும்போது, "யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் இந்தியத் தேர்தல் சட்டப்படி உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி நோட்டாவில் நமது வாக்கைப் பதிவு செய்யலாம்.

    கடந்த உள்ளாட்சித் தேர்தல் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் வழங்கப்பட்ட வாய்ப்பு இந்த உள்ளாட்சித் தேர்தலில் மறுக்கப்பட்டதைக் கண்டித்து, எனது வாக்கை யாருக்கும் பதிவுசெய்யவில்லை என்பதை வாக்குச் சாவடியில் இருந்த உரிய படிவத்தில் சட்டப்படி பதிவு செய்தேன்," என்றார்

    நோட்டா பட்டன் இல்லாததால் வாக்களிக்க மறுத்த சமூக ஆர்வலர்
  13. ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு பாஜக வாக்குச்சாவடி முகவர் எதிர்ப்பு

    மதுரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த பெண்ணை, அதை நீக்குமாறு கூறி பாஜக வாக்குச்சாவடி முகவர் வலியுறுத்தியதால், அந்த வாக்குச் சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பாஜகவினரின் வலியுறுத்தலுக்கு, திமுக, அதிமுக உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். பின்னர் காவல்துறை தலையிட்டு, இரண்டு தரப்பையும் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறுமாறு கூறியது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    சிறிதுநேரம் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க பூத் முகவரை வாக்குபதிவு மையத்திலிருந்து அப்புறபடுத்திய பிறகு வாக்குபதிவு மீண்டும் தொடங்கியது. இதன் காரணமாக அல்-அமீன் பள்ளியில் செயல்பட்டு வரும் வாக்குச் சாவடியில் சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை நிலவி அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு கூடுதலாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  14. “தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது.” – பாமக நிறுவனர் ராதாஸ்

    "தமிழகத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்னை மூடிக் கொண்டு இருக்கிறது," என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு.

    நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் கூட்டங்களில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறவில்லை.

    நாற்காலிகளைத் தூக்கி அடிக்கும் சண்டைகள் தான் நிகழ்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரொட்டிகார வீதியிலுள்ள 20வது வாக்குச் சாவடிமையத்தில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் அவரது துணைவியார் சரஸ்வதி ஆகியோர் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

    பாமக நிறுவனர் ராமதாஸ்

    அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், "நகர்புற உள்ளாட்சித் தேர்தல் மிக முக்கியமானது. மக்களே ஆட்சி செய்வதற்காக ராஜீவ்காந்தி கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால் அது முழுமையாக நிறைவேறவில்லை. பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், நகர்புறங்களில் தேர்ந்தெடுக்கப்படும் பிரநிதிகள் கூட்டங்களில் ஆரோக்கியமான விவாதம் நடைபெறவில்லை. அங்கு நாற்காலிகளைத் தூக்கி அடிக்கும் சண்டைகள் தான் நிகழ்கின்றன," என்றார்அவர்.

    "நகர்புற தேர்தலில் பாமக மிகப் பெரிய வெற்றியைப் பெறும். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறது," என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  15. கோவை: பேரூராட்சி பகுதிகளில் அதிகளவில் வாக்குப்பதிவு

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.

    கோவை மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 8.6 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    கோவை வாக்குப்பதிவு நிலவரம்

    இதில் கோவை மாநகராட்சி தேர்தலில் 6.8 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில் நகராட்சிகளில் 10.08 சதவிகிதமும் பேரூராட்சிகளில் 13.42 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    கோவையில் மாநகராட்சி நகராட்சி பகுதிகளை விடவும் பேரூராட்சி பகுதிகளில் அதிகளவில் வாக்குப் பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

  16. கோவை: வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக-பாஜக உறுப்பினர்கள்

    கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் இன்று காந்திபுரம் பகுதியிலுள்ள சிஎம்எஸ் பள்ளியில் வாக்களித்தார்.

    அப்போது அவர் வந்த காரில் பாஜகவின் கட்சிக்கொடிஇருந்ததால் அதை வீடியோ எடுத்த திமுகவினர் இது தேர்தல் நடத்தை விதி மீறல் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் பாஜகவினர்

    திமுகவினர் வீடியோ எடுத்ததற்கு பாஜக ஊடக பிரிவைச் சேர்ந்த சபரி கிரிஷ் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் திமுகவினருக்கு பாஜகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குப் பதிவு தடைபட்டது.

    இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன்பிறகு வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  17. 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: 66 வயது நபர் பிடிபட்டது எப்படி?

    17 பெண்களை ஏமாற்றி திருமணம்:  66 வயது நபர் பிடிபட்டது எப்படி?

    எட்டு மாநிலங்களை சேர்ந்த 17 பெண்களை தமது மோசடி வலையில் வீழ்த்திய 66 வயது முதியவர் காவல்துறை வலையில் சிக்கியது எப்படி?

    மருத்துவராகவும், சில சமயங்களில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி போலவும் நடித்து 17 பெண்களை வலையில் சிக்கவைத்து மோசடி நபரை புவனேஷ்வர் போலீசார் கைது செய்துள்ளனர்.

    66 வயதான ரமேஷ் சந்திர ஸ்வைன், புவனேஷ்வரின் கண்ட்கிரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். திங்களன்று அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

  18. இதுவரை நடந்துள்ள வாக்குப் பதிவு நிலவரம்

    கடலூர் மாவட்டத்தில் காலை 10 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் 10.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் 11.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளில் 11.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

  19. கோவையில் வாக்குப்பதிவை நிறுத்துமாறு பாஜக போராட்டம்

    கோவையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு இன்று விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ராமநாதபுரத்தில் திமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை மாநகராட்சியின் 63வது வார்டில் உள்ள சரஸ்வதி திருமண மண்டபத்தில் இந்தப் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக பாஜகவினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

    கோவையில் பாஜகவினர் தேர்தலை நிறுத்துமாறு போராட்டம்

    இதனால் 63வது வார்டில் வாக்குப் பதிவைநிறுத்தக் கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனால் இங்கு பூத் ஸ்லிப் சரி பார்க்கும் பணி தான் நடைபெற்றதாக திமுக தரப்பில் கூறப்பட்டது.

    இரு கட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் வந்து கூட்டத்தைக் கலைத்தனர். இதன்பிறகு வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  20. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரம் மீனவர்கள் 6 பேர் கைது

    ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற வடிவேல் என்பவருக்குச் சொந்தமான ஒரு நாட்டுப் படகையும் அதிலிருந்து ஆறு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் காரை நகர் அருகே கைது செய்தனர்.

    மீனவர்களை விசாரணைக்காக யாழ்ப்பாண மாவட்ட மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரம் மீனவர்கள் 6 பேர் கைது