"உத்தரபிரதேசத்தில் முன்பு மாஃபியாக்கள், குற்றவாளிகளே ஆதிக்கம் செலுத்தினர்": பிரதமர் மோதி விமர்சனம்

உத்தரபிரதேசத்தில் முன்பு மாபியாக்கள், குற்றவாளிகளே ஆதிக்கம் செலுத்தியதாக, பிரதமர் நரேந்திர மோதி விமர்சித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. காணாமல்போகும் காட்டுயிர்: இந்தியாவில் 10 ஆண்டுகளில் 984 புலிகள் பலி - காரணம் என்ன?

    புலி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    2021-ம் ஆண்டில் மொத்தம் 127 புலிகள் இந்தியா முழுக்க உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன. பி.டி.ஐ செய்தியின்படி, கடந்த வியாழக்கிழமை அன்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்தியளவில் 2021-ம் ஆண்டு 126 புலிகள் இறந்துள்ளதாகத் தெரிவித்தது.

    டிசம்பர் 29-ம் தேதி வரையிலான தரவுகளின்படி 126 புலிகள் என்றிருந்த நிலையில், டிசம்பர் 30-ம் தேதி மகாராஷ்டிராவிலுள்ள கச்சிரோலி பகுதியில் மற்றுமொரு பெண் புலி உயிரிழந்தது பதிவானது.

    அதற்கு முந்தைய 29-ம் தேதியன்று, மத்திய பிரதேசத்திலுள்ள சிந்த்வாராவில், ஒரு புலி உயிரிழந்தது. அதோடு சேர்த்து, அதிகளவிலான புலிகள் உயிரிழந்துள்ள மாநிலமாக, மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

    மேலும், கடந்த வாரத்திலேயே மேலும் ஒரு பெண் புலி மத்திய பிரதேசத்தின் டிண்டோரியில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. முதல்கட்ட சோதனையின்போது, விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பி.டி.ஐ செய்தி கூறுகிறது.

  2. கொரோனா மூன்றாவது அலை சுனாமிக்கு இணையாக உலகை ஆட்டிப்படைக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    மா. சுப்பிரமணியன்

    பட மூலாதாரம், MA. SUBRAMANIAN/ TWITTER

    படக்குறிப்பு, மா. சுப்பிரமணியன்: கோப்புப்படம்

    கொரோனா மூன்றாவது அலை சுனாமிக்கு இணையாக இருப்பதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொரோனா மூன்றாவது அலை, உலக சுகாதார மையம் சொல்வது போல டெல்டாவும், ஒமிக்ராவும் சேர்ந்து வீசிக்கொண்டிருக்கும் அலை. இது சுனாமி அலைக்கு இணையாக உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் படிப்படியாக அதிகரி்த்து நேற்று 1,489 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    நாளை திங்கள்கிழமை முதல் 15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, சைதாப்பேட்டையில் தொடங்கி வைக்கிறார். பள்ளிக்கல்வி, உயர்கல்வி துறைகள் ஒத்துழைப்புடன் தடுப்பூசி போடப்பட உள்ளது.

    வரும் 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசி 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது" என தெரிவித்தார்.

  3. குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: இறுதி அறிக்கை வரும் வாரத்தில் தாக்கல் என தகவல்

    ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

    குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட முப்படைகளின் கூட்டு ஆய்வறிக்கை வரும் வாரத்தில் விமானப்படைத் தலைமையகத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளதாக, பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    டிச. 8-ல் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து விசாரிக்க ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணை குழு அமைக்கப்பட்டது.

    இக்குழு விபத்து நடந்ததற்கான மனித தவறுகள் காரணமா என்பது உள்ளிட்ட பலதரப்பட்ட காரணங்களை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான ஆய்வறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையை சட்ட ரீதியாக ஆய்வு செய்து விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  4. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

    தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
    படக்குறிப்பு, தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

    புதுக்கோட்டை மாவட்டம் வெண்ணவால்குடி ஊராட்சிக்குட்பட்ட குருந்தடிமனை கிராமத்தில் கடந்த இரு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்த கன மழையால் குளங்கள் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் புகுந்ததால், 70 ஏக்கருக்கும் மேலான அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இதனால், அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை குறித்த நேரத்தில் பெய்ததால், நம்பிக்கையோடு விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்திருந்த நிலையில், கனமழையால் நெற்பயிர்கள் நாசமானதால், விவசாயிகள் பெரும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.

    உடனடியாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை முறையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  5. அண்டார்டிகாவில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் கோவிட் பாதிப்பு

    Antarctic outpost hit by Covid-19 outbreak

    பட மூலாதாரம், INTERNATIONAL POLAR FOUNDATION

    அண்டார்டிகாவில் உள்ள பெல்ஜியம் நாட்டின் ஆய்வாளர்கள் உள்ள ஓர் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில், கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் தொலைதூர பகுதிகளில் ஒன்றான இந்த இடத்தில், ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், இந்த தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல், பிரின்சஸ் எலிசபெத் போலர் நிலையத்தில் உள்ள 25 ஊழியர்களில் 16 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்புகள் குறைந்த அளவில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "இது அசாதாரணமான சூழல் அல்ல", என்று சர்வதேச போலர் அமைப்பின் (International Polar Foundation) திட்ட மேலாளர் ஜோசப் சீக் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

  6. ஆஸ்திரியாவில் பிறர் உதவியுடன் தற்கொலை செய்வதை அனுமதிக்கும் சட்டம்

    ஆஸ்திரியாவில் பிறர் உதவியுடன் தற்கொலை செய்வதை அனுமதிக்கும் சட்டம் ஜனவரி 1 முதல் அமலாகியுள்ளது.

    இதன் மூலம், தீவிர நோய்வாய்ப்பட்ட அல்லது நிரந்தரமாக பலவீன நிலையில் உள்ள பெரியவர்கள், இறப்பதற்காக உதவி பெற ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம்.

    இந்த விவகாரம் தொடர்பான அரசியலமைப்பு நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, டிசம்பர் மாதம் அந்நாட்டு நாடாளுமன்றம் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

    ஒவ்வொரு நோயாளியையும் இரண்டு மருத்துவர்கள் மதிப்பீடு செய்து, இந்த நடைமுறை கடுமையான ஒழுக்குமுறைகளுடன் கடைப்பிடிக்கப்படும்.

    இந்த மருத்துவர்களின் ஒருவர், வலிநிவாரண மருத்துவ நிபுணராக இருக்க வேண்டும். மற்ற வசதிகள் இருக்கும்போது யாரும் இறப்பதைத் தேர்ந்தெடுக்காததை உறுதி செய்ய, வலிநிவாரண சிகிச்சையை உருவாக்க அந்நாட்டு அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    தங்களின் வாழ்வை முடித்துக் கொள்ள வழிவகை செய்யும் 'பிறர் உதவியுடன் மேற்கொள்ளப்படும்' தற்கொலை, ஆஸ்திரியாவின் அண்டை நாடான சுவிட்சர்லாந்தில் சட்டபூர்வமாக உள்ளது.

    assisted suicide

    பட மூலாதாரம், Getty Images

  7. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குபவர் நந்தினி வெள்ளைச்சாமி.