You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

பருவநிலை மாற்ற மாநாட்டில் புதின் பங்கேற்க மாட்டார் : ரஷ்ய அரசு தகவல்

பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடக்க இருக்கும் பருவநிலை மாற்ற மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அக்டோபர் 20ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம், இத்துடன் இன்றைய நேரலை பக்கத்தை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. பருவநிலை மாற்ற மாநாட்டில் புதின் பங்கேற்க மாட்டார் : ரஷ்ய அரசு தகவல்

    பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடக்க இருக்கும் பருவநிலை மாற்ற மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    இதற்கான காரணம் எதையும் ரஷ்யா அளிக்கவில்லை. எனினும் பருவநிலை மாற்றம் ரஷ்யாவுக்கு முக்கியமானது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    கிளாஸ்கோவில் வரும் 31-ஆம் தேதியில் இருந்து நவம்பர் 12-ஆம் தேதி வரை பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடக்கிறது.

    இந்த மாநாட்டில் ரஷ்யா பங்கேற்காதது உலகளாவிய முயற்சிகளுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, மதிமுக கழக செயலாளராக துரை வையாபுரிக்கு தலைமைக்கழக செயலாளர் பதவி

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துரை வையாபுரிக்கு கழக பொறுப்பு வழங்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதில் பதிவான 106 வாக்குகளில் 104 வாக்குகள் துரை வையாபுரிக்கு கட்சிப் பதவி வழங்க ஆதரவாக கிடைத்தன.

    இது குறித்து இன்று மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "துரை வையாபுரிக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ள பதவி. நியமன பதவிதான். இதை செய்வதற்கு கட்சியின் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் உள்ளது. கட்சியின் விதிகளில் இதற்கான இடம் உள்ளது," என்று தெரிவித்தார்.

  4. நீட் இல்லை என வாக்குறுதி அளிக்க தடை விதிக்கக் கோரி மனு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ், பிரபுராவ் ஆனந்தன்

    தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொது இடங்களில் வாக்குறுதி வழங்க இடைக்கால தடை விதிக்கக் கோரி வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக ராமேஸ்வரத்தை சேர்ந்த வெற்றிவேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருக்கிறார்.

    அதில், "தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு நடத்தப்படாது என ஆளும் திமுக அரசு கூறியிருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. தமிழக அரசு "நீட் தேர்வு தடை செய்யப்படும்" என அளித்த உறுதியே மாணவர்களின் மன குழப்பத்திற்கும், சிலர் தற்கொலை செய்து கொண்டதற்கும் காரணம்.ஆகவே தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொது இடங்களில் வாக்குறுதிகளை வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் அழுத்தத்துக்கு ஆளான மாணவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர், அரசியல் கட்சிகள் வாய்மொழியாக வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரிய வழக்கில் வாக்குறுதிகளை சட்டத்திற்கு உட்பட்டே நிறைவேற்ற இயலும் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது," என தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அடுத்த விசாரணையை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  5. ஜல்லிக்கட்டில் வென்ற காளைக்கு பரிசுத்தொகை தாமதமாவதாக வழக்கு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு, பிரபுராவ் ஆனந்தன்

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற தனது காளைக்கு அறிவிக்கப்பட்டிருந்த கார் மற்றும் சான்றிதழை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆறு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் பாபு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதில், "2019ஆம் ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், எனது காளை மூன்றாம் பரிசு பெற்றது. அந்த உத்வேகத்தோடு 2021 ஜனவரி 16-ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் எனது காளை பங்கேற்றது. அதிக புள்ளிகளைப் பெற்ற எனது காளைக்கு முதல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற காளைக்கு கார் ஒன்றும், சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை பரிசு வழங்கப்படவில்லை. 2021ஆம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற எனது காளை கருடனுக்கு கார் மற்றும் சான்றிதழை வழங்கவும் அதுவரை 2022 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்தார்.

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்தோஷ் பாபுவின் மனு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து மனுதாரரின் மனுவை 6 வாரங்களுக்குள்ளாக பரிசீலிக்குமாறும் மனுதாரரின் காளையே முதல் பரிசு பெற்றது என உறுதி செய்யப்பட்டால் அதற்கான பரிசை 2 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

  6. தங்க நகைகளை உருக்கும் திட்டத்தின் மூலம் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தை கைவிடக்கோரி வரும் 26-ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம், ஏ.எம். சுதாகர்

    தங்க நகைகளை உருக்கும் திட்டத்தின் மூலம் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த திட்டத்தை கைவிடக் கோரி வரும் 26-ல் தமிழகம் ழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பராமரிக்கப்படும் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி இந்து முன்னணி காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் இந்து முன்னணியினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது.

    இதையொட்டி சேலம் திருவள்ளுவர் சிலையில் இருந்து பேரணியாக வந்த இந்து முன்னணி அமைப்பினர். சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் தங்களுடைய கோரிக்கை மனுவை கோட்டை மாரியம்மன் பாதத்தில் வைத்து வேண்டிக் கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், "கோயில்களில் உள்ள நகைகளை உருக்குவதற்கு தமிழக அரசுக்கு எந்தஅதிகாரமும் இல்லை. தமிழகத்தில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அதனை மீட்க ஆர்வம் காட்டாமல், இதுபோன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு வீணாக நேரம் செலவழித்து வருகிறது," என்றார்.

    "தங்க நகைகளை உருக்கும் திட்டத்தின் மூலம் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகள், கோயில்களுக்குத்தான் பயன்பட வேண்டும். அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். அதற்காக இந்து முன்னணி இந்த பிரசார யாத்திரையை நடத்தி வருகிறது. இந்த திட்டத்தை கைவிடக்கோரி வரும் 26-ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்." என்றார் காடேஸ்வரா சுப்பிரமணியம்.

  7. மோதிக்கு பகவத் கீதை வழங்கிய நமல் ராஜபக்ஸ

    மோதிக்கு பகவத் கீதை வழங்கிய நமல் ராஜபக்ஸ தமிழ், சிங்களம் ஆங்கிலம் மூன்று மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட பகவத்கீதை புத்தகத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளித்தார்.

    இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குஷிநகர் விமான நிலையத் திறப்பு விழாவுக்கு வந்தபோது அவர் இதை வழங்கினார்.

  8. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: 31-ஆவது கட்ட விசாரணை தொடக்கம், பிரபுராவ் ஆனந்தன்

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 31வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது

    கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர் இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    இதுவரை நடந்து முடிந்த 30 கட்ட விசாரணையில் மொத்தம் 1330 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் 962 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் 1237 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் 31 வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது. இதில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள், மாசு கட்டுப்பாட்டு வாாிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

  9. லக்கிம்பூர் சம்பவம் அரசை எதிர்க்கும் யாரும் கொல்லப்படுவார்கள் என்ற செய்தியை விடுக்கிறது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், ஏ.எம். சுதாகர்

    லக்கிம்பூர் விவசாயிகள் போராட்ட சம்பவம் மூலம் போராடுபவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படுவார்கள் என்பதையே மத்தியில் ஆளும் பாஜக அரசின் நடவடிக்கை உணர்த்துகிறது என்று கூறியிருக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்.

    சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. இலங்கை அரசு இந்திய அரசுடன் மிகுந்த நட்புடன் பல உதவிகளை செய்து வருகிறது. ஆனாலும் பாதிக்கப்படும் தமிழக மீனவர்கள் குறித்து மத்திய அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை," என்றார்.

    "லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக பிரதமர் குறைபட்சம் அனுதாபம்கூட தெரிவிக்கவில்லை. போராடுபவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படுவார்கள் என்பதையே பிரதமரின் நடவடிக்கை உணர்த்துகிறது," என்று முத்தரசன் கூறினார்.

    "பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை கட்டுக்கடங்காமல் இறக்கை கட்டி பறக்கிறது. எரிபொருட்கள் விலை உயர்வால் தற்போது அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு விதிக்கின்ற வரியே விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணம். மக்கள் பிரச்னைகள் பற்றி கவலை கொள்ளாமல், தங்களை தற்காத்துக் கொள்வதாக எதிர்கட்சி தலைவரின் நடவடிக்கைகள் உள்ளது. விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகின்ற 30ஆம் தேதி சைக்கிள் பேரணி நடத்தப்படும்," என்று முத்தரசன் தெரிவித்தார்.

  10. இலங்கையில் உள்ள தமிழக மீனவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

    இலங்கையில் மீட்கப்பட்ட தமிழக மீனவர் ராஜ்கிரணின் சடலத்தை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியிருக்கிறார் பாட்டாளி மக்கள ்கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் மீனவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சில இடுகைகளையும் பகிர்ந்துள்ளார்.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் முறைகேடு - தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் அதிமுக தலைவர்கள் புகார்

    தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தல்களில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

    இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் திமுக அரசு, முறைகேடு செய்து வெற்றி பெற்ற பலரை தோல்வி அடைந்தவர்களாக ஆக்கியுள்ளது. ஆளும் அரசின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையமும் மாவட்ட நிர்வாகமும் செயல்பட்டுள்ளன," என்று கூறினார்.

    "உதாரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 4,000க்கும் அதிகமான வாக்குகள் வெற்றி பெற்ற சூழலில் அதை அறிவிக்க தாமதம் செய்ததால் அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க சென்றார். ஆனால், ஆறு மணி நேரத்துக்குப் பிறகே அறிவிப்பு வெளிவந்தது."

    "ஆனால், திமுகவினர் வெற்றி பெற்றால் அது பற்றிய அறிவிப்பு உடனுக்குடன் வெளியிடப்பட்டது. திருப்பத்தூர் வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் ஆலங்காயம் என்ற தொகுதியில் ஆளும் கட்சி எம்எல்ஏ வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குப்பெட்டியை எடுத்ததாக செய்திகள் கூட வெளியிடப்பட்டன. ஆனால், அதில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை என்ன என்பது தெரியவில்லை "

    "பல இடங்களில் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளன. அது பற்றி விவரங்களை ஆளுநரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளோம். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை கேட்டுக் கொண்டுள்ளோம்."

    "இப்படிப்பட்ட முறைகேடுகள் நடக்கலாம் என்பதால்தான் நாங்கள் முதலிலேயே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதன்பேரில் முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும், இந்த தேர்தல் இந்திய ஜனநாயகத்தில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும், வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட வேண்டும் போன்ற பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனால், அதை சரிவர அரசு பின்பற்றவில்லை."

    "அதிமுக ஆட்சியின்போது இதேதேர்தலை நடத்த எங்களுடைய அரசு தயாராக இருந்தது. ஆனால், அப்போது நீதி்மன்றத்தை அணுகி தடையைப் பெற்றது திமுக என்பதை நினைவில் கொள்ள வேண்டும்," என்றார் எடப்பாடி பழனிசாமி.

    "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்தும் ஆளுநரிடம் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சரின் உதவியாளர் அனுமதியில்லாத பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்குமாறு போக்குவரத்து காவலர் ஒருவர் கூறுகிறார். அந்த காவலரை, காரில் இருந்த அமைச்சரின் உதவியாளர் கன்னத்தில் அறைகிறார். அந்த சம்பவம் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடக்கிறது. தனக்கு நேர்ந்த சம்பவத்தை புகாராக அந்த காவலர் அளிக்கிறார். ஆனால், அமைச்சரின் உதவியாளர் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டியதால் அந்த காவலர் பிறகு புகாரை திரும்பப் பெறுகிறார். இப்படிப்பட்ட நிர்வாகம்தான் இங்கே நடக்கிறது," என்றார் எடப்பாடி பழனிசாமி.

    திமுக அமைச்சர்கள் மீதான பழைய வழக்குகள் மீதான மக்கள் கவனத்தை திசை திருப்பவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது என்று கேள்வியொன்றுக்கு பதிலளித்த பழனிசாமி கூறினார்.

    சசிகலாவின் அரசியல் மறுபிரவேசம் குறித்து கேட்டதற்கு, "சசிகலா எதை சொன்னாலும் எங்களுக்கு கவலை இல்லை. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் கட்சியில் உறுப்பினரே இல்லை. தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றமும் அதிமுகவின் இன்றைய நிலையை உறுதி செய்துள்ளன," என்றார் எடப்பாடி பழனிசாமி.

  12. குஷி நகர விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி

    உத்தர பிரதேசத்தின் குஷிநகரில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்து வைத்தார்

    "குஷிநகர் சர்வதேச விமான நிலையம் உலகெங்கிலும் உள்ள செளத்த சமுதாயத்தின் பக்திக்கு அர்ப்பணம். இந்த இணைப்பின் மூலம் புத்தர் தொடர்புடைய இடங்களின் மேம்பாடு மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது," என்று விமான நிலைய திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோதி தெரிவித்தார்.

    இந்திய விமான சேவை திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் 900க்கும் மேற்பட்ட புதிய பாதைகளில் விமான சேவை வழங்க அரசு அனுமதித்துள்ளது. இதில் 350 வழித்தடங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. 50க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் அல்லது முன்பு சேவையில் இல்லாதவை செயல்படத் தொடங்கியுள்ளன.

    உத்தர பிரதேசத்தில், குஷிநகர் விமான நிலையத்திற்கு முன்பு 8 விமான நிலையங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன.

    லக்னெள, வாரணாசி மற்றும் குஷிநகருக்குப் பிறகு ஜெவார் சர்வதேச விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அது தவிர, அயோத்தி, அலிகார், அசம்கர், சித்ரகூட், மொரதாபாத் மற்றும் ஷ்ரவஸ்தி ஆகிய இடங்களில் விமான நிலையத் திட்டங்கள் செயலாக்கம் பெற்றுள்ளன.

    குஷி நகரில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெளத்த பிக்குகள் மற்றும் இலங்கை இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ ஆகியோருடன் வந்த இலங்கை விமானம் இந்த விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை கடலில் மூழ்கிய தமிழக மீனவரின் சடலம் மீட்பு

    தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த கோட்டைப்பட்டினம் மீனவரின் உடல் இலங்கை கடல் பகுதியில் சற்று முன்பு மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

    கடந்த 18ஆம் தேதி கோட்டைபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பல் மோதியதில் அந்த படகு நடுக்கடலில் படகு மூழ்கியது.

    படகில் இருந்த இரண்டு மீனவர்கள் நீரில் மூழ்கிய நிலையில், அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் மூன்றாவது மீனவர் மற்றும் படகை ஓட்டிய ராஜ்கிரண் நீரில் மூழ்கினார். அவரை கடந்த இரண்டு தினங்களாக இலங்கை, இந்திய கடற்படையினர் தேடினர்.

    இந்த நிலையில், ராஜ்கிரணின் சடலம், பருத்தித்துறையை அடுத்த காரைநகர் கடற்பரப்பில் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவரது உடல் தற்போது இலங்கையின் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை படிக்க இங்கே சொடுக்கவும்.

  14. வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு அமெரிக்கா கண்டனம்

    வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் நெட்ரைஸ் கூறுகையில், "இந்து சமூகத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஒட்டுமொத்த விவகாரமும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என வங்கதேச நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம்," என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள தமது ட்விட்டர் இடுகையிலும், "மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை என்பது அடிப்படை உரிமை," என்று குறிப்பிட்டுள்ளார்.

  15. உத்தராகண்ட் மழை வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு

    உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள குமாயோன் பகுதியில் பல வீடுகள் மழை காரணமாக பலவீனம் அடைந்து இடிந்து சேதமடைந்துள்ளன. செவ்வாயன்று 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.

    உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி முதல்வர் தாமியிடம் தொலைபேசியில் பேசியபோது, மத்திய அரசு தரப்பில் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

    உத்தராகண்டின் ருத்ரபிரயாக், நைனிடால், மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசிய முதலமைச்சர் தாமி, நெருக்கடியான கட்டத்தில் மக்கள் பொறுமையுடனும் கவனமாகவும் இருக்குமாறு கேட்டுக் கொண்டார். மழை, வெள்ளத்தால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

  16. இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவது விஷ்ணுபு்ரியா, மணிகண்டன், பரணிதரன்நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்