இந்தோனீசியாவின் ஜகார்த்தா சிறையில் தீ - 41 பேர் பலி

பட மூலாதாரம், Getty Images
இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியில் உள்ள டாங்கரெங் சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ காரணமாக குறைந்தபட்சம் 41 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலையில் நடந்துள்ளது. அப்போது பெரும்பாலான கைதிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
தீ ஏற்பட்ட சி பிளாக் பகுதியில் 122 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த சிறை அறைகள், 40 கைதிகளை அடைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்தது என்றும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைதானவர்கள் அவற்றில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் சிக்கிய பன்னிரண்டுக்கும் அதிகமானோர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரித்து வருவதாக சிறைத்துறை செய்தித்தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.


