ஆபாச பட தயாரிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபரும், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆபாச பட காணொளிகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் ராஜ் குந்த்ராவை மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.
இதையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த அவரின் காவலை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்குமாறு காவல்துறை சார்பில் மும்பை நீதிமன்றத்தில் இன்று கோரப்பட்டது.
ஆனால், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது, இதுவரை நடந்த விசாரணையில், ராஜ் குந்த்ராவின் நிறுவனம் அவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பேரில் வங்கியில் வரவு வைத்திருந்த ரூ. 1.13 கோடி பணத்தை கண்டறிந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து ரூ. 1.64 கோடிக்கு ராஜ் குந்த்ரா நிறுவனம் பணம் பெற்றுள்ளதாகவும், கூகுள் நிறுவனம் தொடர்பான பணப்பரிவர்த்தனையை விசாரித்து வருவதாகவும் காவல்துறை தரப்பு நீதிமன்றத்தில் கூறியது.
ராஜ் குந்த்ரா நிறுவனத்தால் ஆபாச படம் எடுக்கப்பட்டவர்களில் சிலர் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளிக்க விரும்பவதாகவும் இதுவரை அப்படி இருவரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையின்போது ராஜ் குந்த்ரா தரப்பு வழக்கறிஞர் ஆபாத் பொண்டா, "இந்த விவகாரத்தில் முறைப்படி ராஜ் குந்த்ராவுக்கு அழைப்பாணை அனுப்பி விசாரித்திருந்தால், அவர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருப்பார்.
ஆனால், இரண்டு பிணையில் வர முடியாத குற்றச்சாட்டுகள் நீங்கலாக காவல்துறை தரப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பிணையில் விடுவிக்கப்படக்கூடியவை," என்று முறையிட்டார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ராஜ் குந்த்ராவை நீதிமன்ற காவலில் 14 நாட்களுக்கு வைக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார். இதற்கிடையே, ராஜ் குந்த்ராவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மும்பை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் புதன்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளது.