கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு: எஸ்.ஆர்.பொம்மை மகன்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் தொடர்ந்து நேரலையாக வழங்குகிறோம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலையில் எங்களோடு இணைந்திருந்தமைக்கு நன்றி. நேரலையை நிறைவு செய்து விடைபெறுவது பிபிசி தமிழின் அ.தா.பாலசுப்ரமணியன். எப்போதும் பிபிசி தமிழ் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் முகப்புப் பக்கத்துக்கு வாருங்கள். நாளை வேறொரு நேரலைப் பக்கத்தில் சந்திப்போம். இந்த இரவு இனியதாகட்டும்.

  2. கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு, எஸ்.ஆர்.பொம்மையின் மகன்

    பசவராஜ் பொம்மை - பி.எஸ்.எடியூரப்பா.

    பட மூலாதாரம், Karnataka BJP

    படக்குறிப்பு, முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட பசவராஜ் பொம்மை - பதவி விலகிய பி.எஸ்.எடியூரப்பா.

    கர்நாடக முதல்வர் பதவிக்கு பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார்.

    முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து பொம்மையை தேர்வு செய்தது பாஜக எம்.எல்.ஏ.க்கள் குழு.

    இவர் முன்னாள் முதல்வரும், வி.பி.சிங் தொடங்கிய ஜனதா தளத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான எஸ்.ஆர். பொம்மையின் மகன்.

    பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர்.பொம்மை தொடர்ந்த வழக்கில்தான் மாநில அரசுகளை அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவின் கீழ் கலைப்பதற்கு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அதன் பிறகே மனம்போனபடி மாநில அரசுகளைக் கலைப்பது முடிவுக்கு வந்தது.

    முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, "இந்த சூழ்நிலையில் இது மிகப் பெரிய பொறுப்பு. ஏழைகளின் நலனுக்குப் பாடுபட முயல்வேன். இது மக்களுக்கான, ஏழை மக்களுக்கான அரசாக இருக்கும்" என்று தெரிவித்தார் பசவராஜ் பொம்மை.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. இந்திய வீரர் க்ருனால் பாண்ட்யாவுக்கு கோவிட், இந்தியா - இலங்கை டி20 ஒத்திவைப்பு

    இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியா - இலங்கை இரண்டாவது டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  4. மோதியை சந்தித்த மம்தா: மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை

    மம்தா பானர்ஜி - நரேந்திர மோதி சந்திப்பு.

    பட மூலாதாரம், PMO

    படக்குறிப்பு, மம்தா பானர்ஜி - நரேந்திர மோதி சந்திப்பு.

    டெல்லி வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், இந்த சந்திப்பின்போது மாநிலத்துக்கு அதிக அளவில் கோவிட் தடுப்பூசி, மருந்துகள், வழங்கவேண்டும் என்றும், மாநிலத்தின் பெயரை மாற்றவேண்டும் என்ற பழைய கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்ததாக கூறினார்.

    இந்த கோரிக்கைக்கு, "பார்க்கலாம்" என்று பிரதமர் நரேந்திர மோதி பதில் அளித்ததாக மம்தா கூறினார்.

    பிறகு செய்தியாளர்களிடம் பெகாசஸ் உளவு சர்ச்சை குறித்துப் பேசிய மம்தா பானர்ஜி இந்த விஷயத்தில் பிரதமர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

  5. ராஜ் குந்த்ராவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு

    ராஜ் குந்த்ரா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ராஜ் குந்த்ரா (இடமிருந்து 2ஆவது)

    ஆபாச பட தயாரிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபரும், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆபாச பட காணொளிகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் ராஜ் குந்த்ராவை மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.

    இதையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த அவரின் காவலை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்குமாறு காவல்துறை சார்பில் மும்பை நீதிமன்றத்தில் இன்று கோரப்பட்டது.

    ஆனால், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது, இதுவரை நடந்த விசாரணையில், ராஜ் குந்த்ராவின் நிறுவனம் அவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பேரில் வங்கியில் வரவு வைத்திருந்த ரூ. 1.13 கோடி பணத்தை கண்டறிந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து ரூ. 1.64 கோடிக்கு ராஜ் குந்த்ரா நிறுவனம் பணம் பெற்றுள்ளதாகவும், கூகுள் நிறுவனம் தொடர்பான பணப்பரிவர்த்தனையை விசாரித்து வருவதாகவும் காவல்துறை தரப்பு நீதிமன்றத்தில் கூறியது.

    ராஜ் குந்த்ரா நிறுவனத்தால் ஆபாச படம் எடுக்கப்பட்டவர்களில் சிலர் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளிக்க விரும்பவதாகவும் இதுவரை அப்படி இருவரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

    இந்த விசாரணையின்போது ராஜ் குந்த்ரா தரப்பு வழக்கறிஞர் ஆபாத் பொண்டா, "இந்த விவகாரத்தில் முறைப்படி ராஜ் குந்த்ராவுக்கு அழைப்பாணை அனுப்பி விசாரித்திருந்தால், அவர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருப்பார்.

    ஆனால், இரண்டு பிணையில் வர முடியாத குற்றச்சாட்டுகள் நீங்கலாக காவல்துறை தரப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பிணையில் விடுவிக்கப்படக்கூடியவை," என்று முறையிட்டார்.

    இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ராஜ் குந்த்ராவை நீதிமன்ற காவலில் 14 நாட்களுக்கு வைக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார். இதற்கிடையே, ராஜ் குந்த்ராவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மும்பை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் புதன்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளது.

  6. ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்தியாவின் ஆடவர் இணை வெளியேற்றம்

    பேட்மிண்டன்

    பட மூலாதாரம், Getty Images

    டோக்யோ ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் போட்டிகளில் இருந்து இந்தியாவின் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை வெளியேறியது.

    கடைசி போட்டியில் பிரிட்டன் இணைக்கு எதிராக வெற்றி பெற்ற போதிலும் சராசரியின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இந்திய இணை இழந்தது.

    ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா, சீன தைபே, இந்தோனீசியா ஆகிய அணிகள் இரண்டு போட்டிகளில் வென்றிருந்தன. சராசரியின்படி இந்தோனேசியா காலிறுதிக்குத் தகுதிபெற்றது.

  7. அப்துல் கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று: பூர்விக இடத்தில் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி, பிரபுராவ்ஆனந்தன்

    அப்துல் கலாம்
    படக்குறிப்பு, ராமேஸ்வரத்தில் இந்திய குடியரசு முன்னாள் தலைவர் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்.

    இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இதையொட்டி பேக்கரும்புவில் உள்ள தேசிய நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர்; கலாமின் குடும்பத்தினர், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    ராமேஸ்வரத்தில் 1931 அக்.15ல் பிறந்த ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், விஞ்ஞானியாக உயர்ந்தார். அக்னி நாயகனாக அவரது திறமையை அங்கீகரித்த இந்திய அரசுக்கு, நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது.

    இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்ற கலாம், தனது எளிமையால் மக்கள் குடியரசு தலைவர் என்று அழைக்கப்பட்டார்.

    2015ஆம் ஆண்டு ஜூலை 27ல் பொது நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மேடையிலேயே சரிந்து காலமானார்.

  8. ஒலிம்பிக் குத்துச் சண்டை: காலிறுதியில் இந்திய வீராங்கனை

    லவ்லினா

    பட மூலாதாரம், Ramsey Cardy/Sportsfile via Getty Images

    டோக்யோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோகெய்ன் 69 கிலோ எடைப் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை நடீனை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    மூன்று சுற்றுகளும் இழுபறியாக நீடித்த நிலையில், நடுவர்களின் 3:2 முடிவின்படி லவ்லினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் காலிறுதிப் போட்டியில் சீன தைபேயின் நீன் சின் சென்னை லவ்லினா எதிர்கொள்ள இருக்கிறார்.

  9. பெகாசஸ் உளவுபார்க்கும் செயலி குறித்து இந்து என். ராம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

    பெகாசஸ் இந்தியா இஸ்ரேல்

    பட மூலாதாரம், SCI

    பெகாசஸ் என்ற செயலி மூலம் பலரது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டிருப்பது தொடர்பாக தற்போது பதவியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்து என். ராம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு பார்க்கும் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்ட அல்லது இலக்கு வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொலைபேசி எண்கள் சில நாட்களுக்கு முன்பாக அம்பலமாயின. இந்தச் செயலி மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய அரசியல் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    பத்து நாட்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் 17 ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து இது தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல் தலைவர்கள், தேர்தல் வியூக வகுப்பாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் என பத்து மேற்பட்டவர்களின் தொலைபேசிகள்இந்த உளவுசெயலியால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில், இது தொடர்பாக தி இந்து குழுமத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய இயக்குநர்களில் ஒருவருமான என். ராம், சென்னையின் ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தைச் சேர்ந்த சசிகுமாரும் இணைந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

    பெகாசஸ் உளவு பார்க்கும் செயலிக்கான உரிமத்தை இந்திய அரசோ அல்லது இந்திய அரசின் ஏதாவது ஒரு அமைப்போ பெற்றிருக்கிறதா என்பதைத் தெரிவிக்கவும் அந்தச் செயலியை வைத்து எந்த ஒரு இந்தியக் குடிமகனாவது உளவு பார்க்கப்பட்டார்களா என்பதைத் தெரிவிக்கவும் இந்திய அரசுக்கு உத்தரவிடும்படிஅந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

  10. தென் கொரியா, வடகொரியா இடையே மீண்டும் ஹாட்லைன் வசதி

    தென் கொரியா, வடகொரியா

    பட மூலாதாரம், Getty Images

    தென் கொரியா மற்றும் வட கொரியா இடையிலான ஹாட்லைன் தொலைப்பேசி வசதி மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. இந்த வசதியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வட கொரியா துண்டித்தது.

    இரு நாட்டுத் தலைவர்களும் உறவை மேம்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இரு தலைவர்களும் பல கடிதங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளதாகவும் தென் கொரிய அதிபர் அலுவலகமான ப்ளூ ஹவுஸ் கூறியுள்ளது.

    இரு நாடுகளுக்கிடையில் தோல்வியுற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், உறவுகளில் விரிசல் ஏற்பட்டதால் 2020 ஜூன் மாதம் ஹாட்லைன் தொலைப்பேசி வசதியை வட கொரியா துண்டித்தது.

    தென் கொரியா மற்றும் வடகொரியாவும் தொடர்புகொள்வதற்காக, இரு நாட்டு எல்லை அருகே கட்டப்பட்ட ஒரு அலுவலகத்தையும் அப்போது வட கொரியா தகர்த்தியது.

    ``உயர்மட்ட தலைவர்களுக்கிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஜூலை 27 அன்று 10:00 மணி முதல் இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான தொலைத் தொடர்பு இணைப்புகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது`` என வடகொரியாவின் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுக்கவும், நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    இரு நாட்டுப் பிரதிநிதிகளும் மூன்று நிமிடங்கள் தொலைப்பேசியில் பேசியதாக தென் கொரியாவின் ஒற்றுமை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மற்றொரு அழைப்பு மேற்கொள்ளப்படும் என்றும், இனி தினமும் ஹாட்லைன் மூலம் பேசப்படும் என்றும் ஒற்றுமை அமைச்சகம் கூறியுள்ளது.

    2018-ம் ஆண்டு தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னும், வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னும் மூன்று முறை சந்தித்துப் பேசினார். இதனால் இருநாட்டு உறவுகளும் மேம்பட்டது. ஆனால், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் உடனான இரண்டாவது உச்சி மாநாடு தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து வட மற்றும் தென் கொரியா இடையிலான உறவுகள் உடைந்தது.

    வட கொரியாவிலிருந்து தப்பித்து தென்கொரியாவில் வாழும் மக்கள், எல்லையில் வட கொரியா நோக்கி பிரசார காகிதங்கள் மற்றும் பலூன்களை அனுப்பியதால் இரு நாடுகள் இடையிலான பதற்றங்கள் மோசமடைந்தது. இதனால் கோவமடைந்த வட கொரியா, தென் கொரியா உடனான ஹாட்லைன், ராணுவம் மற்றும் அரசியல் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டது.

  11. அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

    அமித் ஷா

    பட மூலாதாரம், MHA

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்துப் பேசினர்.

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை நேற்று சந்தித்த இந்த இருவரும் தமிழக நலன் சார்ந்த ஐந்து முக்கிய கோரிக்கைகளுடன் பிரதமரை சந்தித்துப் பேசியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

    அப்போது அமித் ஷாவை பார்ப்பீர்களா என்று கேட்டபோது, இதுவரை திட்டமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்த நிலையில், அமித் ஷாவை இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

  12. ஒலிம்பிக் டென்னிஸ்: ஜப்பானின் ஒசாகா அதிர்ச்சித் தோல்வி

    ஒசாகா

    பட மூலாதாரம், g

    படக்குறிப்பு, நவோமி ஓசாகா

    ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காகவே கிராண்ஸ்லாம் போட்டிகளைத் தவிர்த்த ஜப்பானின் டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாகா அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

    மூன்றாவது சுற்றுப் போட்டியில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த மார்க்கெட்டா வோன்ட்ரோஸோவாவுடன் மோதிய ஓசாகா 1-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார்.

    தர வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஒசாகா ஜப்பானில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர். ஒலிம்பிக் போட்டிகளில் ஜப்பான் சார்பில் பங்கேற்பது பெருமையளிப்பதாக அவர் கூறியிருந்தார்.

    ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஜோதியை ஏற்றும் பெருமை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

  13. ஓலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர்கள் ஏமாற்றம்

    மனு

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மனு பாக்கர்

    ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் மற்றும் 10 மீட்டர் ரைபிள் பிரிவுகளில் இந்திய வீரர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர்.

    10 மீட்டர் ஏர்பிஸ்டர் பிரிவு கலப்பு அணி போட்டியில் சவ்ரவ் சவுத்ரி மற்றும மனு பாக்கர் அணி முதல் சுற்றில் தகுதி பெற்றாலும் இரண்டாவது சுற்றில் வெற்றிபெறவில்லை.

    அதே பிரிவில் அபிMேக் மற்றும் யாஷஸ்வினி அணி முதல் சற்றிலேயே வெளியேறியது.

    தமிழகத்தைச் சேர்ந்த இளவேனிஸ் வாலறிவன் மற்றும் திவ்யன்ஷ் அணி 10 மீட்டர் ரைபிள் பிரிவின் இரண்டவது சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

    பெரும் நம்பிக்கையுடன் டோக்கியோ சென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் அணி முக்கியப் பிரிவுகளில் பதக்கச் சுற்றுகளுக்கே தகுதி பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  14. ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: போராடி தோற்றார் சரத் கமல்

    சரத்

    பட மூலாதாரம், Getty Images

    ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சரத் கமல் தோல்வியடைந்தார்.

    ஓலிம்பிக் சாம்பியனான சீனாவின் மா லாங்குடன் மோதிய சரத் கமல் 1-4 என்ற கணக்கில் வெற்றிவாய்ப்பை இழந்தார்.

    முதல் கேமை 7-11 என்ற புள்ளிகளில் இழந்த சரத், இரண்டாவது கேமில் மீண்டு வந்து 11-8 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். மூன்றாவது கேம் இழுபறியாக நீடித்தது. முடிவில் 13-11 என்ற புள்ளிகளில் லாங் கைப்பற்றினார்.

    நான்காவது கேமில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய லாங் 11-4 என்ற புள்ளிகளில் அதைக் கைப்பற்றினார். அடுத்த கேமையும் அதே புள்ளிக் கணக்கில் கைப்பற்றி மா லாங் வெற்றி பெற்றார்.

    ஏற்கெனவே சரத், மணிகா பத்ரா இணை கலப்பு இரட்டையர் போட்டியில் தோல்வியடைந்தது. ஒற்றையர் ஆட்டத்தில் சத்யன் குணசேகரன், மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் வெளியேறிவிட்டனர்.

  15. டோக்யோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி வெற்றி

    டோக்யோ ஒலிம்பிக்

    பட மூலாதாரம், HINDUSTAN TIMES/GETTY IMAGES

    டோக்யோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, ஸ்பெயினை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது.

    முதல் கால்பகுதி ஆட்டத்தில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பின்னர் நான்காம் கால் பகுதியில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது.

    அடுத்த போட்டியில் அர்ஜென்டினாவை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.

  16. இராக்கில் இருந்து வெளியேறும் அமெரிக்க படைகள்

    அமெரிக்கப் படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் இராக்கில் இருந்து வெளியேறும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    ஆனால், இராக் ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி மற்றும் ஆலோசனைகளை அமெரிக்கா வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    வெள்ளை மாளிகையில் நடந்த அதிபர் ஜோ பைடன் மற்றும் இராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    இராக்கில் தற்போது 2,500 அமெரிக்க துருப்புக்கள் உள்ளன. ஐ.எஸ் குழுக்கு எதிரான சண்டையில், உள்ளூர் படைகளுக்கு அவர்கள் உதவி வருகின்றனர்.

    அமெரிக்கப் படைகள்

    பட மூலாதாரம், ANADOLU AGENCY

  17. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!

    இன்றைய நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, ஒலிம்பிக் உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் தொடர்ந்து நேரலையாக வழங்குகிறோம்.