"ஓ. பன்னீர்செல்வம் அவராகத்தான் வெளியேறினார்
என்றும் இல்லாவிட்டால் தான் சிறை சென்றபோது அவரைத்தான் அமரவைத்துவிட்டுப்
போயிருப்பேன்" என ஜெயலலிதாவின் தோழி சசிகலா
தெரிவித்திருக்கிறார்.
மறைந்த
முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா கடந்த சில நாட்களாக தொண்டர்களுடன்
தொலைபேசியில் உரையாடும் ஆடியோக்கள் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு
வெளியிடப்பட்டுவருகின்றன. அதேபோல இன்றும் எட்டுக்கும் மேற்பட்ட தொலைபேசி
உரையாடல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
1987க்குப் பிறகு இது இரண்டாவது முறை
இதில் ஒரு
ஆடியோவில் திருநெல்வேலியைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணுடன் பேசுகிறார் சசிகலா.
அதில் தொண்டர்கள் தன்னுடன் இருப்பதாகவும் நிச்சயம் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு
வரப்போவதாகவும் சசிகலா குறிப்பிடுகிறார்.
சசிகலாவுடன்
தொலைபேசியில் பேசியதற்காக நேற்று 15 பேர்
அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்துப் பேசும் சசிகலா, "எதிர்க்கட்சியாக இருக்கும்போதுகூட கட்சியை
விட்டு நீக்குவதுதான் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் என்னால், கட்சியை சரிப்படுத்திக் கொண்டுவரமுடியும் என்ற
நம்பிக்கை இருக்கிறது. தொண்டர்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள். 1987ல் தலைவர் மறைவுக்குப் பிறகு தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதா பின்னால்
இருந்தார்கள். அதுபோலத்தான் இப்போதும். 1987ல் இருந்து
பார்த்து வந்திருக்கிறேன். இது இரண்டாவது முறையாக நடக்கிறது. இதிலிருந்தும் மீண்டு வர முடியும். தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள்" என்கிறார் சசிகலா.
"ஓ.பி.எஸ். தானாகத்தான் வெளியேறினார்"
பிறகு தேனியைச்
சேர்ந்த சிவ நேசன் என்பவருடனான நீண்ட உரையாடலில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து
கொள்கிறார் சசிகலா. முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் தானாகத்தான்
வெளியேறினார் என்கிறார் சசிகலா.
"அந்த சமயத்தில் அவராகத்தான் போனார்.
இல்லாவிட்டால் அவரைத்தானே உட்கார வைத்துவிட்டுப் போயிருப்பேன். இப்போது ரொம்ப ஜாதி
ரீதியாகச் செல்கிறார்கள் என்று எல்லா ஊரில் இருந்தும் சொல்கிறார்கள். பேசுபவர்கள்
எல்லோரும் இதைத்தான் முதல் புகாராகச் சொல்கிறார்கள். நான் வரணும் என்கிறார்கள். எம்.ஜி.ஆர். காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் இது
எல்லோருக்கும் பொதுவான கட்சியாக இருந்தது. அதை இந்த
அளவுக்கு கொண்டு போய்விட்டார்கள். இதே நிலைமை தொடர்ந்தால் என்ன ஆகும் என்பது
எல்லோருக்கும் தெரியும்" என்று அந்த உரையாடலில் குறிப்பிட்டார் சசிகலா.
மேலும், கட்சி வீணாகிக் கொண்டிருப்பதைத் தன்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க
முடியாது என்றும் குறிப்பிடுகிறார் சசிகலா. "இந்த முறையும்
ஆட்சி தொடர்ந்திருக்கக்கூடும். ஆனால் அதற்கான வேலையைப் பார்க்கவில்லை. எல்லோரும்
ஒன்று சேர்ந்தால்தான் கட்சியைக் காப்பாற்றமுடியும்.
அதுதான் தொண்டர்களின் கவலை. அப்படியிருக்கும்போது தொண்டர்களின் தாயாக நான் என்ன
சொல்ல முடியும்?" என்கிறார் சசிகலா.
மேலும், "100 ஆண்டுகளானாலும் கட்சி இருக்க வேண்டும். என் கண்
முன்னால் அது வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்கள் வெற்றிபெறட்டும்
என்று ஒதுங்கியிருந்தேன். ஆனால், தொண்டர்கள் அழும்போது எப்படி சும்மா இருக்க
முடியும்? அதனால் வருகிறேன் என்று சொன்னேன். அதற்காக கட்சியிலிருந்து நீக்கினால் எப்படி. ஒருவர், இருவர் சுயநலத்திற்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா... இது கட்சி
நடத்துவர்களுக்கு அழகா...?" என்று கேள்வி எழுப்பும் சசிகலா, தன் முதுகில் குத்துவதற்கு இனி இடமே இல்லை என்கிறார்.
"எனக்கு முதுகுல குத்திகுத்தி, முதுகுல இனி இடமே இல்லை.. இப்போது தொண்டர்களையும் அப்படிச் செய்தால் அதை
எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? கஷ்டமான
காலத்தில் இந்தக் கட்சியைக் மேலே கொண்டுவர ஜெயலலிதா எவ்வளவு பாடுபட்டிருப்பார்? அவரோடு சேர்ந்து நானும் எவ்வளவு பாடுபட்டிருப்பேன்? இனிமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தொண்டர்கள் நினைப்பதை செய்து
காட்ட வேண்டும். எனக்கென இனிமேல் என்ன இருக்கிறது... தொண்டர்கள்தான்.. கடைசிவரை
அவர்களோடு இருந்துவிட்டு போறேன். கட்சியைக்
காப்பாற்ற நான் உறுதியாக வருவேன். அடிமட்ட தொண்டர்களின் விருப்பம் அதுதான்." என அந்த உரையாடலை முடிக்கிறார் சசிகலா.
அதேபோல
சேலத்திலிருந்து பேசும் ஒருவரிடம் "கட்சியை நிச்சயம்
காப்பாத்துவேன். கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி. சிதறிப்போக, தொண்டர்களிடமிருந்து விலகிப் போக விடமாட்டேன். என் உயிர் இருக்கும்வரை
அ.தி.மு.கவில்தான் இருப்பேன். நான் வந்தால்தான் கட்சியைக் காப்பாற்ற
முடியுமென்றால்நான் வருவேன். நிச்சயம் தொண்டர்களோடு
இருப்பேன். அவர்கள் துணையோடு எல்லாவற்றையும் செய்வேன். இவர்கள் புரியாமல்
செய்துகொண்டிருக்கிறார்கள்" என்று குறிப்பிடுகிறார் சசிகலா.
கடந்த மூன்று
நாட்களுக்கும் மேலாக இதுபோல சசிகலா பேசும் ஆடியோக்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டு
வருகின்றன. துவக்கத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச்
சேர்ந்தவர்கள்தான் சசிகலாவோடு பேசுகிறார்கள் என ஒதுக்கிய அ.தி.மு.க. தலைமை, பிறகு சசிகலாவோடு பேசியதாகக்கூறி 15 பேரைக் கட்சியிலிருந்து நீக்கியது.