இந்தியாவில் கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு - அரசுக்குழு அறிக்கை
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது தவணை நிவாரணத் தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நன்றி நேயர்களே!
இத்துடன் இன்றைய நேரலை பக்கம் நிறைவு பெறுகிறது. நாளை (ஜூன் 16, 2021) காலை தொடங்கப்படும் புதிய நேரலை பக்கத்தில் உள்ளூர் முதல் உலகம் வரை பல்வேறு செய்திகளையும் தெரிந்துகொள்ளலாம். செய்திகளை துல்லியமாக, புதிய கண்ணோட்டத்துடன் விரைவாக தெரிந்துகொள்வதற்கு பிபிசி தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி.
"ஒ.பி.எஸ்சைத் தான் அமரவைத்துவிட்டுப் போயிருப்பேன்": சசிகலாவின் புதிய ஆடியோ
பட மூலாதாரம், Getty Images
"ஓ. பன்னீர்செல்வம் அவராகத்தான் வெளியேறினார்
என்றும் இல்லாவிட்டால் தான் சிறை சென்றபோது அவரைத்தான் அமரவைத்துவிட்டுப்
போயிருப்பேன்" என ஜெயலலிதாவின் தோழி சசிகலா
தெரிவித்திருக்கிறார்.
மறைந்த
முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா கடந்த சில நாட்களாக தொண்டர்களுடன்
தொலைபேசியில் உரையாடும் ஆடியோக்கள் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு
வெளியிடப்பட்டுவருகின்றன. அதேபோல இன்றும் எட்டுக்கும் மேற்பட்ட தொலைபேசி
உரையாடல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
1987க்குப் பிறகு இது இரண்டாவது முறை
இதில் ஒரு
ஆடியோவில் திருநெல்வேலியைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணுடன் பேசுகிறார் சசிகலா.
அதில் தொண்டர்கள் தன்னுடன் இருப்பதாகவும் நிச்சயம் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு
வரப்போவதாகவும் சசிகலா குறிப்பிடுகிறார்.
சசிகலாவுடன்
தொலைபேசியில் பேசியதற்காக நேற்று 15 பேர்
அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்துப் பேசும் சசிகலா, "எதிர்க்கட்சியாக இருக்கும்போதுகூட கட்சியை
விட்டு நீக்குவதுதான் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் என்னால், கட்சியை சரிப்படுத்திக் கொண்டுவரமுடியும் என்ற
நம்பிக்கை இருக்கிறது. தொண்டர்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள். 1987ல் தலைவர் மறைவுக்குப் பிறகு தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதா பின்னால்
இருந்தார்கள். அதுபோலத்தான் இப்போதும். 1987ல் இருந்து
பார்த்து வந்திருக்கிறேன். இது இரண்டாவது முறையாக நடக்கிறது. இதிலிருந்தும் மீண்டு வர முடியும். தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள்" என்கிறார் சசிகலா.
"ஓ.பி.எஸ். தானாகத்தான் வெளியேறினார்"
பிறகு தேனியைச்
சேர்ந்த சிவ நேசன் என்பவருடனான நீண்ட உரையாடலில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து
கொள்கிறார் சசிகலா. முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் தானாகத்தான்
வெளியேறினார் என்கிறார் சசிகலா.
"அந்த சமயத்தில் அவராகத்தான் போனார்.
இல்லாவிட்டால் அவரைத்தானே உட்கார வைத்துவிட்டுப் போயிருப்பேன். இப்போது ரொம்ப ஜாதி
ரீதியாகச் செல்கிறார்கள் என்று எல்லா ஊரில் இருந்தும் சொல்கிறார்கள். பேசுபவர்கள்
எல்லோரும் இதைத்தான் முதல் புகாராகச் சொல்கிறார்கள். நான் வரணும் என்கிறார்கள். எம்.ஜி.ஆர். காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் இது
எல்லோருக்கும் பொதுவான கட்சியாக இருந்தது. அதை இந்த
அளவுக்கு கொண்டு போய்விட்டார்கள். இதே நிலைமை தொடர்ந்தால் என்ன ஆகும் என்பது
எல்லோருக்கும் தெரியும்" என்று அந்த உரையாடலில் குறிப்பிட்டார் சசிகலா.
மேலும், கட்சி வீணாகிக் கொண்டிருப்பதைத் தன்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க
முடியாது என்றும் குறிப்பிடுகிறார் சசிகலா. "இந்த முறையும்
ஆட்சி தொடர்ந்திருக்கக்கூடும். ஆனால் அதற்கான வேலையைப் பார்க்கவில்லை. எல்லோரும்
ஒன்று சேர்ந்தால்தான் கட்சியைக் காப்பாற்றமுடியும்.
அதுதான் தொண்டர்களின் கவலை. அப்படியிருக்கும்போது தொண்டர்களின் தாயாக நான் என்ன
சொல்ல முடியும்?" என்கிறார் சசிகலா.
மேலும், "100 ஆண்டுகளானாலும் கட்சி இருக்க வேண்டும். என் கண்
முன்னால் அது வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்கள் வெற்றிபெறட்டும்
என்று ஒதுங்கியிருந்தேன். ஆனால், தொண்டர்கள் அழும்போது எப்படி சும்மா இருக்க
முடியும்? அதனால் வருகிறேன் என்று சொன்னேன். அதற்காக கட்சியிலிருந்து நீக்கினால் எப்படி. ஒருவர், இருவர் சுயநலத்திற்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா... இது கட்சி
நடத்துவர்களுக்கு அழகா...?" என்று கேள்வி எழுப்பும் சசிகலா, தன் முதுகில் குத்துவதற்கு இனி இடமே இல்லை என்கிறார்.
"எனக்கு முதுகுல குத்திகுத்தி, முதுகுல இனி இடமே இல்லை.. இப்போது தொண்டர்களையும் அப்படிச் செய்தால் அதை
எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? கஷ்டமான
காலத்தில் இந்தக் கட்சியைக் மேலே கொண்டுவர ஜெயலலிதா எவ்வளவு பாடுபட்டிருப்பார்? அவரோடு சேர்ந்து நானும் எவ்வளவு பாடுபட்டிருப்பேன்? இனிமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தொண்டர்கள் நினைப்பதை செய்து
காட்ட வேண்டும். எனக்கென இனிமேல் என்ன இருக்கிறது... தொண்டர்கள்தான்.. கடைசிவரை
அவர்களோடு இருந்துவிட்டு போறேன். கட்சியைக்
காப்பாற்ற நான் உறுதியாக வருவேன். அடிமட்ட தொண்டர்களின் விருப்பம் அதுதான்." என அந்த உரையாடலை முடிக்கிறார் சசிகலா.
அதேபோல
சேலத்திலிருந்து பேசும் ஒருவரிடம் "கட்சியை நிச்சயம்
காப்பாத்துவேன். கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி. சிதறிப்போக, தொண்டர்களிடமிருந்து விலகிப் போக விடமாட்டேன். என் உயிர் இருக்கும்வரை
அ.தி.மு.கவில்தான் இருப்பேன். நான் வந்தால்தான் கட்சியைக் காப்பாற்ற
முடியுமென்றால்நான் வருவேன். நிச்சயம் தொண்டர்களோடு
இருப்பேன். அவர்கள் துணையோடு எல்லாவற்றையும் செய்வேன். இவர்கள் புரியாமல்
செய்துகொண்டிருக்கிறார்கள்" என்று குறிப்பிடுகிறார் சசிகலா.
கடந்த மூன்று
நாட்களுக்கும் மேலாக இதுபோல சசிகலா பேசும் ஆடியோக்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டு
வருகின்றன. துவக்கத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச்
சேர்ந்தவர்கள்தான் சசிகலாவோடு பேசுகிறார்கள் என ஒதுக்கிய அ.தி.மு.க. தலைமை, பிறகு சசிகலாவோடு பேசியதாகக்கூறி 15 பேரைக் கட்சியிலிருந்து நீக்கியது.
தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை ஆராய ஆணையம்
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை விகிகத்தை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் கடந்த ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகக் குறைவாகவே சேர்ந்துள்ளதாகவும் இதனை மாற்ற வேண்டுமென்றும் தங்களுக்குக் கோரிக்கைகள் வந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆகவே இது தொடர்பாக ஆராய தில்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆணையமானது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்தும் இதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏதாவது இருந்தால் அவற்றைக் கண்டறியவும் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு தொழிற்கல்வி நிலையங்களில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை எப்படி இருந்தது என்பதை ஆராயவும் இந்த ஆணையத்திடம் கூறப்பட்டுள்ளது.
சமூக, பொருளாதாரக் காரணிகளால் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேரும் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அதனைச் சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த ஆணையம் பரிந்துரைக்கும். ஒரு மாத காலத்திற்குள் இந்த ஆணையம் தனது அறிக்கையை அரசிடம் அளிக்குமெனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து சிராக் பாஸ்வான் நீக்கம்
பட மூலாதாரம், TWITTER
லோக் ஜன சக்தி கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த லோக் ஜன சக்தி கட்சி, தனித்துப் போட்டியிட்டது. அங்கு பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
இந்த தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆளும் பாஜக தலைமையுடன் சுமூக உறவைப் பேணி வரும் சிராக் பாஸ்வானின் தலைமைக்கு எதிராக அக்கட்சியின் எம்.பி.க்கள், சிராக்கின் சித்தப்பாவும் எம்.பி.யுமான பசுபதி குமார் பராஸ் தலைமையில் குரல் கொடுத்தனர்.
மேலும், பசுபதி குமார் பராஸை கட்சியின் புதிய தலைவராக நியமிக்க வலியுறுத்தி சபாநாயகரிடமும் அவர்கள் கடிதம் கொடுத்தனர்.
இந்த நிலையில் கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து சிராக் பாஸ்வான் நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு - அரசு நியமித்த குழு அறிக்கை
பட மூலாதாரம், TWITTER
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள தகவலை அரசு நியமித்துள்ள தடுப்பூசிக்கு பிந்தைய கடுமையான பக்க விளைவுகளை ஆராயும் குழு (ஏஇஎஃப்ஐ) உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான அலெர்ஜி, ரத்தம் உறைவது உள்பட பக்க விளைவுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கான காரணத்தை மருத்துவர் என்.கே. அரோரா தலைமையிலான குழு ஆராய்ந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 8ஆம் தேதி 68 வயது நபர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு, அலெர்ஜி ஒவ்வாமை பாதிப்புக்கு ஆளானதாக ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் அவருக்கு அலெர்ஜி பாதிப்பு ஏற்பட்டது என தங்களுடைய ஆய்வில் கண்டறியப்பட்டதாக என்.கே. அரோரா தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு மேலும் மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், தற்போதைய நிலையில், முதலாவது உயிரிழப்புக்கான காரணத்தை மட்டுமே மருத்துவ ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதில் ஒருவரின் இறப்புக்கு தடுப்பூசி தயாரிப்புகள் தொடர்புடைய பக்க விளைவாக இருக்கலாம் என்றும், 20 வயதுகளில் உள்ள மேலும் இருவரின் இறப்பு, மருத்துவமனையில் இருந்து அவர்கள் வீடு திரும்பியதும் நடந்துள்ளது என்றும் ஆய்வுக்குழு கூறியுள்ளது.
இந்த ஆய்வுக்குழுவினர் 31 உயிரிழப்புகளுக்கான காரணத்தை ஆய்வு செய்தனர். அதில் 18 பேரின் இறப்பு, தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஏற்பட்டிருந்தாலும், அவர்கள் அதனால் இறக்கவில்லை என்றும் ஏழு பேரின் இறப்பு தீர்மானிக்க முடியாதவையாக உள்ளது என்றும் இருவரின் இறப்பு வகைப்படுத்த முடியாதவை என்றும் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
வகைப்படுத்த முடியாத நிகழ்வு என்பதை, சில நுட்பமான தகவல் கிடைக்காததால் போதுமான ஆதாரம் இல்லாத நிலை என மருத்துவத்துறையினர் அழைக்கின்றனர்.
கேரள மீனவர்கள் கொலை சம்பவம்: இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கை முடித்துக் கொள்ள உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்
பட மூலாதாரம், TWITTER
2012ஆம் ஆண்டில் கேரள கடலோர பகுதியில் இரண்டு மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இத்தாலிய கடற்படை வீரர்கள் மீதான வழக்கை இந்தியாவில் முடித்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது தங்களை நோக்கி வந்தது கடல் கொள்ளையர்கள் என தவறாக அனுமானித்து துப்பாக்கி சூடு நடத்தியதாக கடற்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இத்தாலிய அரசாங்கம் சார்பில் ரூ. 10 கோடி இழப்பீடு தருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையேற்று ரூ. 10 கோடியை நீதிமன்ற கருவூலத்தில் இத்தாலி அரசு தரப்பு செலுத்தியுள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.
இந்த நிலையில், கடற்படை வீரர்களுக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர் விசாரணையை தமது அரசாங்கமே ஏற்று நடத்தும் என்று சர்வதேச தீர்ப்பாயத்தில் இத்தாலி அரசு தெரிவித்துள்ளதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால், அதன் அடிப்படையில் இந்தியாவில் அந்த வீரர்களுக்கு எதிரான வழக்குகளை முடித்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங்கின் டெல்லி வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் முயற்சி
பட மூலாதாரம், ANI
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லியில் உள்ள தமது வீட்டில் அடையாளம் தெரியாத சிலர் தாக்க முயற்சித்துள்ளதாக கூறியுள்ளார். இதன் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சியினர் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையின் வடக்குப்பகுதி நுழைவாயில் அருகே உள்ளது நார்த் அவென்யூ என்ற எம்.பி.க்கள் குடியிருப்பு பகுதி. இங்கு ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் வசித்து வருகிறார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நிலம் வாங்கப்பட்ட நடவடிக்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பை நடத்தி பாஜகவினர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.
அந்த நில பேர விவகாரத்தை சிபிஐ, மத்திய அமலாக்கத் துறையினர் விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், சஞ்சய் சிங் வீட்டில் மர்ம நபர்கள் தாக்கியிருப்பதாக அவர் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து புது டெல்லி மாவட்ட காவல் துணை ஆணையாளர் தீபக் யாதவ் கூறும்போது, "எம்.பியின் வீட்டின் நுழைாயில் சுவற்றில் உள்ள பெயர் பலகையில் எழுத்துகளை அழிக்க முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவர் அடையாளம் காணப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் உடல் ரீதியாக காயம் ஏற்படவில்லை," என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
இந்தியாவில் தயாராகும் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பூசி 90% பலனளிக்கும்
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் தயாராக இருக்கும் இரண்டாவது தடுப்பூசியான நோவோவேக்ஸ் 90.4 சதவிகிதம் அளவுக்குப் பலனளிக்கும் என மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளில் தெரியவந்திருக்கிறது.
குறைந்த மற்றும் மிதமான பாதிப்புகளை 100 சதவிகிதம் அளவுக்கு தடுக்கும் என்றும் அந்த நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேரிலேண்டில் இருந்து இயங்கும் நோவாவேக்ஸ் நிறுவனம் அமெரிக்காவிலும் மெக்சிகோவிலும் 29,960 பேரிடம் தடுப்பூசியைப் பரிசோதனை செய்தது.
இதற்காக 119 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பயன்பாட்டு அனுமதிக்காக விண்ணப்பிக்க இருப்பதாக நோவாவேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் சுமார் 10 கோடி டோஸ்களை தயாரிக்க இருப்பதாகவும் ஆண்டு இறுதிக்குள் இது 15 கோடியாக அதிகரிக்கப்படும் என்று நம்புவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டுக்குள் ஏழை நாடுகளுக்கு நூறு கோடி டோஸ்களை தயாரித்து வழங்கவும் நோவேவேக்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
கொரோனா புரத நீட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தடுப்பூசியை கோவோவேக்ஸ் என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது
இந்திய பிரதமருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜூன் 17ல் சந்திப்பு
பட மூலாதாரம், TWITTER
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசவிருக்கிறார்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளி மாநிலம் மற்றும் டெல்லி பயணம் இதுவாகும்.
இந்த பயணத்தின்போது பிரதமர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தடுப்பூசி இறக்குமதி மற்றும் விநியோகம், நீட் தேர்வு விவகாரம், காவிரி நீர் பகிர்வு விவகாரம், ஜிஎஸ்டி நிதி ஒதுக்கீடு, பிற மத்திய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகத்தின் முக்கிய ஒப்பந்தங்கள் சீனாவுக்கு சென்றுள்ளதால் ஏற்படும் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தமது டெல்லி பயணத்தின்போது பிரதமர் மோதியுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் நிறுவன பிரதிநிதிகள் ஆஜராக இந்திய நாடாளுமன்ற குழு சம்மன்
பட மூலாதாரம், TWITTER
சமூக ஊடக பயனர்களின் உரிமைகள், டிஜிட்டல் தளத்தை பெண்கள் பாதுகாப்புக்குரிய தளமாக மாற்றுவது உள்ளிட்டவை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிகளுக்கு இந்திய தகவல் தொழில்நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.
அந்த நிறுவன பிரதிநிதிகள் வரும் 18ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமல்படுத்திய சமீபத்திய டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக விதிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த ட்விட்டர் நிறுவனம், புதிய வழிகாட்டுதல்களுக்கு உடன்படும் அதே சமயம், அதில் சில விதிகள் தனியுரிமைக்கு எதிரானவை ஆக கருதுவதாகவும் இது தொடர்பாக தொடர்ந்து அரசுடன் பேச்சு நடத்தப்படும் என்றும் தெரிவித்தது.
ஆனால், ட்விட்டர் நிறுவனத்தின் இந்த பதிலால் திருப்தியடையாத இந்திய அரசு, முதலில் விதிகளுக்கு கட்டுப்படுங்கள், பிறகு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று கூறியது.
இந்த நிலையில், இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் சம்மன் ட்விட்டர் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விவசாயிகளின் துயரத்தை அலட்சியப்படுத்தும் மத்திய அரசு: மமதா பானர்ஜி
பட மூலாதாரம், TWITTER
இந்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளின் துயரங்கள் அலட்சியப்படுத்தப்படுவதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வஙக்தத்தில் சிங்கூர் நில மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு மசோதா கொண்டு வரப்பட்டதன் 10ஆம் ஆண்டு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இடுகைகள் மூலம் தமது பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்துள்ளார் மமதா பானர்ஜி.
"நமது சமூகத்தின் முதுகெலும்பு விவசாயிகள்," என்று குறிப்பிட்டுள்ள அவர், "விவசாயிகளின் நீண்ட கால போராட்டத்தின் விளைவாக மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூர் நில மறுழாவ்வு மற்றும் மேம்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஒற்றுமையாக நாம் போராடி விவசாயிகளின் உரிமைகளை மீட்டோம். அது அவர்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆனால், இங்கே விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் அவர்களின் பிரச்னைகளை தீர்க்க முற்படும் வேளையில், அங்கே மத்திய அரசு அவர்களின் துயரங்களை அலட்சியப்படுத்தி வருகிறது," என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 2006இல் ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் அரசு, சிங்கூரில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தி டாடா குழுமத்திடம் வழங்கியது.
ஆனால், பின்னர் ஆட்சிக்கு வந்த மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு, அந்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக சட்டம் இயற்றியது.
ஆனால், நிலம் கையகப்படுத்தியது சரியே என்று விசாரணை நீதிமன்றமும், அதற்கு எதிராக சட்டமியற்றிய மாநில அரசின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் உயர் நீதிமன்றம் கூறின.
ஆனாலும் அந்த தீர்ப்பை எதிர்த்து விவசாயிகள் மேல்முறையீடு செய்ததில், அவர்களுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இன்று முதல் கொரோனா 2-ஆவது தவணை நிவாரணத் தொகை: எப்படிப் பெறுவது?
பட மூலாதாரம், Stalin/Facebook
படக்குறிப்பு, கோப்புக் காட்சி
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது தவணை நிவாரணத் தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது.
2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய பை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஜூன் 3-ந்தேதியில் இருந்து முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே முதல் தவணைத் தொகையைப் பெற முடியாதவர்கள் ஜூன் மாதம் முழுவதும் முதல் தவணைத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
தற்போது இரண்டாவது தவணைத் தொகையான ரூ.2 ஆயிரம் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. அத்துடன் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பையும் வழங்கப்படும்.
இதற்காக பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதிவரை இரண்டாவது தவணை நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.