ட்விட்டரின் விளக்கம் அடிப்படையற்றது, தவறானது - இந்திய அரசு

உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவிலான அண்மைய செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவு பெற்றது

    நேயர்களுக்கு வணக்கம்,பிபிசி தமிழ் சேவையின் இன்றைய நேரலை தகவல்களை இத்துடன் நிறைவு செய்கிறோம். மீண்டும் நாளை (30 மே 2021, ஞாயிற்றுக்கிழமை) சந்திப்போம். உலகம் மற்றும் தேசிய செய்திகளுக்கு பிபிசி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள். நன்றி.

  2. வடகொரிய சுரங்கங்களில் குழந்தைப் பணியாளர்கள்: குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் அரசு

    வட கொரியாவில் இருக்கும் ஆதரவற்றவர்கள், தன்னார்வலர்களாக முன் வந்து அரசாங்கத்தின் சுரங்கங்கள் மற்றும் பண்ணைகளில் பணியாற்றுவதாக வட கொரிய அரசு ஊடகம் கூறுகிறது.

    நல்ல அறிவும், தைரியமும் உள்ள இளமை காலத்தில், நூற்றுக்கணக்கான சிறுவர்கள், அரசு நடத்தும் நிறுவனங்களில் உடல் உழைப்பைக் கொடுக்க தீர்மானித்து இருக்கிறார்கள் என 'தி கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி' (KCNA) என்றழைக்கப்படும் அரசு ஊடகம் கூறுகிறது.

    அவர்கள் வயது குறித்து தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை, ஆனால் படங்களைப் பார்க்கும் போது அவர்கள், தங்களின் பதின் வயதில் இருப்பது போலத் தோன்றுகிறது.

    வட கொரியா குழந்தைகளை கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துவதாக மனித உரிமை குழுவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். அதை வட கொரிய அரசு மறுத்து வருகிறது.

    குழந்தைகள்

    பட மூலாதாரம், MINJU CHOSUN

  3. இன்றைய நேரலை நிறைவு பெற்றது

    நேயர்களுக்கு வணக்கம்,

    பிபிசி தமிழ் சேவையின் இன்றைய நேரலை தகவல்களை இத்துடன் நிறைவு செய்கிறோம். மீண்டும் வெள்ளிக்கிழமை சந்திப்போம். முக்கிய உலகம், தேசிய நிகழ்வுகளுக்கு பிபிசி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள். நன்றி.

  4. கருப்புப்பூஞ்சை நோயை அபாயகர தொற்று நோயாக அறிவித்தது டெல்லி அரசு

    டெல்லியில் வேகமாகப் பரவி வரும் கருப்புப்பூஞ்சை நோயை அபாயகரமான தொற்று நோயாக அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக டெல்லி அரசு வியாழக்கிழமை இரவு வெளியிட்டுள்ள அரசாணையில், "எதிர்ப்பு சக்திகுறைந்த நோயாளிகள், குறிப்பாக கொரோனா நோயாளிகள் ஸ்டிராய்டு மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளை எளிதாக தாக்குகிறது.

    எனவே இந்த அறிவிப்பாணை வெளியாகும் நாளில் இருந்து ஓராண்டுக்கு கருப்புபூஞ்சை நோய் அபாயகர தொற்றாக அறிவிக்கப்படுகிறது," என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த தொற்றுக்கான பரிசோதனை, சிகிச்சை முறைகள் அனைத்தும் இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி நடக்க வேண்டும்,

    மியூகோர்மைகோசிஸ் பற்றி வேறு எவரும் தவறான தகவல்களை பரப்பக்கூடாது என்று டெல்லி அரசு கூறியுள்ளது.

    டெல்லி அரசு

    பட மூலாதாரம், Delhi Government

  5. ட்விட்டரின் விளக்கம் அடிப்படையற்றது, அவமதிப்பு: "சட்டத்துக்கு கட்டுப்பட இந்திய அரசு வலியுறுத்தல்

    இந்திய அரசு

    பட மூலாதாரம், MEIT

    இந்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு அடிபணிவது தொடர்பான ட்விட்டர் நிறுவனத்தின் விளக்கம், அடிப்படையற்றது, தவறானது மற்றும் இந்திய அரசை அவமதிப்பது போன்றது என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் ட்விட்டர் நிறுவன செய்தித்தொடர்பாளர் விரிவான விளக்கத்தைக் கொடுத்து, அதில் இந்தியாவில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு சாத்தியமான ஆபத்து நிலவுவதாக கூறியிருந்தார்.

    மேலும், அரசின் புதிய விதிகளுக்கு கட்டுப்பட குறைந்தது மூன்று மாதங்களாவது அவகாசம் தேவை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ட்விட்டர் நிறுவனம் சுற்றி வளைத்துப் பதில் சொல்லத் தேவையில்லை.

    சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுங்கள். இறையாண்மையுள்ள நாட்டில் சட்டத்தை உருவாக்குவதும் கொள்கைகளை வகுப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை.

    இந்த விஷயத்தில் ட்விட்டர் நிறுவனம் வெறும் சமூக ஊடக தளம் மட்டுமே. இந்தியாவின் சட்ட கொள்கை வகுப்பு அமைப்புமுறையில் இதை செய்யுங்கள் என்று பேசுவதற்கு அந்நிறுவனத்துக்கு எந்த உரிமையும் இல்லை," என்று கூறப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. லட்சத்தீவு விவகாரம்: பிரதமர் மோதி தலையிட ராகுல் காந்தி வலியுறுத்தல்

    Rahul

    பட மூலாதாரம், TWITTER

    லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை வரைவில், அந்த தீவின் புனிதத்தன்மை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், அதை சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகி பிரஃபுல் கோடா படேல் செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோதிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், "மக்கள் பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அந்த நிர்வாகி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது போன்றவை எல்லாம் ஜனநாயக எதிர்ப்பு செயல்பாடு," என்று கூறியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக பிரதமர் நரேந்திர மோதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  7. யாஸ் புயல் விளைவுகளை பார்வையிட பிரதமர் நாளை ஒடிஷா, மேற்கு வங்கம் பயணம்

    யாஷ் புயலால் சமீபத்தில் கடும் சேதத்தை அனுபவித்த ஒடிஷா, மேற்கு வங்க மாநிலத்தின் கடலோர மாவட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோதி வெள்ளிக்கிழமை பார்வையிட திட்டமிட்டுள்ளார்.

    ஒடிஷாவின் பாலசூர், பத்ராக் மாவட்டங்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் புர்பா மெதினிபூர் ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோதி வான் வழியாக ஆய்வு செய்யவுள்ளார்.

    இதையொட்டி டெல்லியில் இருந்து புவனேஸ்வர் செல்லும் பிரதமர் மோதி, அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு வான் வழி ஆய்வை மேற்கொள்கிறார்.

    முன்னதாக, புயல் பாதிப்பு தொடர்பான நிலவரம் குறித்து வியாழக்கிழமை பிற்பகலில் அதிகாரிகளுடன் பிரதமர் மோதி ஆலோசனை நடத்தினார். புயல் பாதித்த இடங்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டதாகவும், சரிந்து விழுந்த 2,500 மரங்கள அப்புறப்படுத்தப்பட்டு சாலை போக்குவரத்து சரி செய்யப்பட்டதாகவும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

    இரு மாநிலங்களிலும் புயல் பாதிப்பு விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருவதால் சேத மதிப்பீடு முழுமை பெறவில்லை.

  8. புதிய டிஜிட்டல் விதிகள்: ஆன்லைன் செய்தி இணையதளங்கள் 15 நாட்களில் கட்டுப்படும் முடிவை தெரிவிக்க கெடு: இந்திய அரசு

    intenet

    பட மூலாதாரம், Getty Images

    சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய டிஜிட்டில் விதிகளின்படி சமூக ஊடகங்கள் மே 26 முதல் இயங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது செய்தி இணையதளங்கள் அந்த விதிகளுக்கு உடன்படுவது தொடர்பான தங்களின் முடிவை 15 நாட்களுக்குள் தரும்படி இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

    இந்த புதிய விதிகள் தொடர்பான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி சமூக ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்கள், ஓடிடி தளங்கள் போன்றவற்றுக்கான புதிய விதிகள் மே 26 அமலுக்கு வந்தன.

    இந்த நிலையில், புதிய விதிகளுக்கு கட்டுப்படுவது தொடர்பான தங்களின் முடிவை டிஜிட்டல் ஆன்லைன் செய்தி ஊடகங்கள் தெரிவிக்க 15 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி அனைத்து டிஜிட்டல் ஊடக தளங்களும் அவற்றுக்கு வரும் புகார்களுக்கு தீர்வு காண ஒரு கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி, புகார்கள் மீதான தீர்வை கண்டறிவது, ஆட்சேபகர இடுகைகளை தணிக்கை செய்து நீக்குவது, அவை தொடர்பான அறிக்கையை பராமரிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய விதிகள் அனைத்தும் இந்திய பத்திரிகை கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டதாக தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    செய்தி இன்டர்நெட் தளங்களை பொறுத்தவரை, பதிப்பகத்தார் சுயமாக இந்த விதிகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிப்பக அமைப்புகள் மூலம் அவை மேற்பார்வையிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு மேற்பார்வை குழுவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதி இடம்பெறுவார் என்றும் அதில் அரசின் விதிகள், கோட்பாடுகள் போன்றவை பின்பற்றப்படுகின்றவை என்பது கண்காணிக்கப்படும்.

    ஊடகங்கள் மீதான புகார்கள் தொடர்பாக பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு குறைதீர் விசாரணை கூட்டங்களை நடத்தும். சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெறும் பக்கத்தை முடக்கும் உத்தரவை பிறப்பிக்க, இணைச்செயலாளர் அந்தஸ்தில் ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று அரசு அறிவித்துள்ளது.

    அரசின் இந்த புதிய விதிகள், கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் பேச்சு சுதந்திரத்துக்கு முரணானது என்றும் பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள், சமூக ஊடக தளங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. ஆனால், இது முற்போக்கான, சுதந்திரமான, பலதரப்பட்ட மக்களின் தனியுரிமையை பாதுகாக்கும் நடவடிக்கை என்று இந்திய அரசு கூறியுள்ளது.

  9. கன்னியாகுமரியில் கன மழையால் நீர் வரத்து அதிகரிப்பு

    யாஸ்
    யாஸ் புயல்

    ஒடிஷா அருகே யாஸ் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்த வேளையில், புயல் தாக்கம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்தது.

    கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நீர்பிடிப்புு் பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இருந்து 8,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் இருந்து 1,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சிற்றாறு 1,2 அணைகளில் இருந்து இரண்டாயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் இரண்டாவது நாளாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர பகுதிகளான சிதறால், திக்குறிச்சி, குழித்துறை, மங்காடு, பரக்காணி, முஞ்சிறை, பார்திவபுரம், வைக்கலூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததால் 100 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.

    பல இடங்களில் மரங்கள் முறிந்தது. சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளம் புகுந்தது தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியான முஞ்சிறை, மங்காடு , பார்வதிபுரம் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் நீர் புகுந்தது.

    குமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாழை, ரப்பர், நெல் உட்பட விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை 15 வீடுகள் இடிந்துள்ளன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளன. அதிகபட்சமாக மயிலாடியில் 93.4 மி.மீ, பேச்சிபாறையில் 90.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

    யாஸ் புயல்
    யாஸ் புயல்
  10. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தர முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

    தடுப்பூசி

    பட மூலாதாரம், TNDIPR

    செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தருமாறு மத்திய அரசிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை முழுமையாக தமிழக அரசுக்கு மத்திய அரசு குத்தகையாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் அங்கு உடனடியாக தடுப்பூசி தயாரிப்பை தமிழக அரசால் தொடங்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த கடிதத்துடன் டெல்லி வந்த தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலுவுடன் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து ஒரு வாரத்தில் மத்திய அரசு பதில் தரும் என்று அமைச்சர் கூறினார்," என்று தெரிவித்தார்.

    "தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் சென்னை அருகேயே உள்ளது. அந்த நிறுவனத்தை நேரடியாக முதல்வர் போய் பார்த்துள்ளார். அது செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது. அதனால் அதை தமிழக அரசே நடத்த வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆராய மத்திய அமசை்சர்கள் பியூஷ் கோயல், மாண்டேவியா ஆகியோரை சந்தித்துப் பேசினோம். அதை மாநில அரசே எடுத்து நடத்த வேண்டுமானால் ரூ. 300 கோடி தேவை. அந்த நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்," என்று டி.ஆர். பாலு கூறினார்.

    கடிதத்தின் விவரம்:

    "சென்னையை அடுத்த செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஹெச்எல்எல் பயோ டெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே அதில் ரூ. 700 கோடி அளவுக்கு இந்திய அரசு முதலீடு செய்துள்ளது."

    "ஆனால், கூடுதல் நிதி தேவை காரணமாக அந்த மையம் செயல்பாட்டுக்கு வரவில்லை. தடுப்பூசி மையத்தை செயல்படுத்த தனியார் கூட்டாளியை சேர்த்துக் கொள்ளும் சமீபத்திய முயற்சி, எந்த பங்கேற்பாளரும் கிடைக்காததால் பலன் கொடுக்கவில்லை. அந்த மையத்தை மாநிலத்தின் நலன் கருதி ஏற்று நடத்த தமிழக அரசு விரும்புகிறது. அதன் மூலம் தடுப்பூசி உற்பத்தித் திறனை அதிகரித்து நாட்டுக்கும் குறிப்பாக தமிழகத்துக்கும் தேவையான தடுப்பூசியை பெறலாம்."

    "எனவே, விரைவாக எவ்வித இழப்பீடு கோரலும் இல்லாமல் முழுமையான கட்டுப்பாட்டுடன் அந்த தடுப்பூசி மையத்தை தமிழக அரசிடம் வழங்கினால், உரிய தனியார் கூட்டாளியை தேர்வு செய்து விரைவாக தடுப்பூசி பணியை தொடங்குவோம். அந்த மையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் தேவையான முதலீட்டு நிதி்க்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்தால் உதவியாக இருக்கும்," என்று கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    VACCINATION
  11. கருப்புப் பூஞ்சை நோய் மருந்தை வரியில்லாமல் இறக்குமதி செய்ய நீதிமன்றம் அனுமதி

    கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சையில் பயன்படும் ஆம்போடெரிசின் பி என்ற மருந்தை இறக்குமதியாளர்கள் வரியில்லாமல் இறக்குமதி செய்துகொள்ள வாக்குறுதி அடிப்படையில் அனுமதி தந்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அரசு வரிவிலக்கு அளிக்கும் வரை இந்த முறை தொடரும். உயிர்களைக் காக்க இந்த மருந்து அவசியம் என்று குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், இந்த மருந்து பற்றாக்குறையாக உள்ளவரை இந்த மருந்தின் இறக்குமதிக்கு சுங்க வரியில் இருந்து அரசு விலக்கு அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. ஐடி விதிகள் பயனர்களை பாதுகாக்கவே - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

    இந்தியா

    பட மூலாதாரம், PIB

    சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை, பயனர்களின் தனி உரிமையை பாதுகாக்கவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வியாழக்கிழமை lஒரு விளக்கத்தை அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மக்களின் தனி உரிமையை அரசு முழுமையாக மதிக்கிறது," என்று அவர் கூறியுள்ளார்.

    இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் குற்றச்செயலில் ஈடுபடும் நபரை கண்டுபிடிக்கும் நோக்கத்துடனேயே அறிமுகப்படுத்தப்பட்டன. சமூக ஊடக தளங்களை சில விஷமிகள் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கவே புதிய விதிகள் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விஷயத்தில் வாட்ஸ்அப்பின் சாதாரண பயனர்கள் கவலை கொள்ளத்தேவையில்லை. விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களில் ஈடுபட்ட அந்த நபரை கண்டறியவே இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

    சரியான கேள்விகளை எழுப்பும் மக்களையும் தரமான விமர்சனங்களையும் அரசு வரவேற்கும் என்று கூறிய ரவிசங்கர் பிரசாத், அரசின் சமூக ஊடக கட்டுப்பாடுகள், அவற்றை பயன்படுத்தும் மக்களுக்கு ஒருவகையில் அதிகாரமளிக்கவே செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

    அரசின் புதிய விதிகளின்படி சமூக ஊடக தளங்கள், பொதுமக்கள் தரும் புகார்களை பதிவு செய்து அவர்களின் குறைகளை தீர்க்க ஒரு குறைதீர் அதிகாரியை கட்டாயம் நியமித்திருக்க வேண்டும்.

    அந்த அதிகாரி 24 மணி நேரத்தில் புகாரை பதிவு செய்து 15 நாட்களுக்குள் அதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஊடக நிறுவனங்கள்,

    அரசின் விதிகளை ஏற்றுச் செயல்படுவதை உறுதிப்படுத்த அமைக்கும் குழுவில் அந்த நிறுவனத்தின் அதிகாரி, ஒரு குறைதீர் அதிகாரி போன்றோர் இடம்பெற்றிருக்க வேண்டும். இவர்கள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு மாதமும் தமது நிறுவனத்குக்கு வரும் புகார்களை சரிபார்த்து அவை தீர்க்கப்படுகிறதா என்பதை இந்த குழு உறுதிப்படுத்த வேண்டும். இந்த புதிய விதிகளை சமூக ஊடக நிறுவனங்கள் சில ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன.

    ஆனால், வாட்ஸ்அப் நிறுவனம், இந்த புதிய விதிகளை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. புதிய விதிகள், தனி நபர்களின் சமூக ஊடக பயன்பாட்டு தனி உரிமையை மீறும் வகையில் உள்ளதாக வாட்ஸ்அப் கூறியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. ஜெஃப் பெசோஸ் அமெசான் சிஇஓ பதவியில் இருந்து ஜூலை 5 விலகல்

    அமெசான்

    பட மூலாதாரம், Getty Images

    அமெசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து ஜெஃப் பெசோஸ் ஜூலை 5ஆம் தேதி விலகுவதாக அறிவித்துள்ளார்.

    ஆன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட அமெசான் நிறுவனம் இன்று உலகின் முன்னோடி மின்னணு வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு முன்பு 1994ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதே தினத்தில் தமது பதவியில் இருந்து விலகும் அறிவிப்பை ஜெஃப் பெசோஸ் வெளியிட்டிருக்கிறார்.

    அவரது பொறுப்பை ஆண்டி ஜெஸ்ஸி ஏற்றுக் கொள்வார் என்று பெசோஸ் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்தில் தமது முடிவை பெசோஸ் வெளியிட்டதாக மூத்த தொழில்நுட்ப செய்தியாளர் டேவ் லீ தெரிவித்துள்ளார்.

    இனி பெசோஸ் என்ன செய்வார்?

    கடந்த பிப்ரவரி மாதமே, தமது பதவி விலகல் தொடர்பான முடிவை ஜெஃப் பெசோஸ் வெளியிட்டிருந்தார். ஆனால், எப்போது அவர் அந்த முடிவை அமல்படுத்துவார் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

    அவரது பொறுப்பை ஏற்கவிருக்கும் ஆண்டி, கிளெட் கம்ப்யூட்டிங் தொழிலை கவனித்து வருகிறார். 53 வயதாகும் ஆண்டி ஜெஸ்ஸி, ஹார்வர்டில் படித்த பிறகு, அமெசான் நிறுவனத்தில் 1997ஆம் ஆண்டில் சேர்ந்தார். தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினாலும், நிறுவனத்தின் செயல் தலைவர் பதவியில் தொடரும் ஜெஃப் பெசோஸ்,

    நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் மற்றும் பிரசார மேம்பாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார்.

    விண்வெளி ஆராய்ச்சியில் இவரது ப்ளூ ஆரிஜின் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதால், பதவி விலகுக்கு பிறகு அதில் ஜெஃப் பெசோஸ் கூடுதல் நேரத்தை செலவிடுவார் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி கூறுகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. இந்தியாவில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா பரவல் - 24 மணி நேரத்தில் 3,847 பேர் பலி

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    ஒரே நாளில் 3,847 வைரஸ் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 73 லட்சத்து 69 ஆயிரத்து 93 ஆக பதிவாகியுள்ளது.

    மொத்த . உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 15 ஆயிரத்து 235 ஆக பதிவாகியுள்ளது.

  15. வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை: சிபிஐ

    Mehul Choksi

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,600 கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நீரவ் மோதியுடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்டுள்ள மெஹுல் சோக்ஸி டொமினிகா நாட்டில் பிடிபட்டதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி டொமினியா அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ தெரிவித்துள்ளது.

    ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள மெஹுல் சோக்ஸி, 2018ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில், கியூபா செல்லும் திட்டத்திடன் அங்கிருந்து தப்பித்து டொமினிகா நாட்டுக்கு படகில் சென்றபோது இன்டர்போல் அதிகாரிகளிடம் அவர் பிடிபட்டார்.

    அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு டொனினிகா அரசை மெஹுல் குடியுரிமை பெற்றுள்ள ஆன்டிகுவா நாட்டின் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  16. கொரோனா உருவானது எங்கே என கண்டறிய உளவு அமைப்புகளுக்கு பைடன் உத்தரவு

    கொரோனா தொற்று உருவானது எப்படி என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உளவு அமைப்புகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

    உளவுத்துறை தங்களின் நடவடிக்கைகளை இருமடங்கு துரிதப்படுத்த வேண்டும் என கூறியுள்ள ஜோ பைடன் 90 நாட்களில் கொரோனா வைரஸ் உருவானது எவ்வாறு என்பது குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

    கொரோனா பெருந்தொற்று முதன்முதலாக 2019ஆம் ஆண்டு சீனாவின் ஹுவான் நகரில் கண்டறியப்பட்டது.

    கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் 35 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    ஹுவானின் கடல் உயிரினங்களை விற்கும் சந்தையிலிருந்து இந்த தொற்று பரவி இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் சமீபமாக சீனாவின் ஆய்வகம் ஒன்றிலிருந்து வைரஸ் உருவான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க ஊகடங்கள் தெரிவித்திருந்தன.

  17. உ.பி. கொரோனா தடுப்பூசி: 20 பேருக்கு 2ஆவது டோஸை மாற்றிப் போட்ட விவகாரம்

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    உத்தர பிரதேச மாநிலத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தின் ஒளதாஹி காலா கிராமத்தைச் சேர்ந்த 18 பேர் மற்றும் அதன் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் இரண்டு பேருக்கு கொரோனா இரண்டாவது தடுப்பூசி மருந்து மாற்றிப்போடப்பட்டுள்ளது.

    இந்த 20 பேரும் முதல் டோஸ் தடுப்பூசி மருந்தாக கோவிஷீல்டை போட்டிருந்தனர். ஒரு மாத இடைவெளி விட்டு தடுப்பூசி போட பார்னி வளாகத்துக்கு வந்த அவர்களுக்கு அங்கிருந்த ஊழியர்கள் கோவேக்சின் தடுப்பூசி போட்டு அனுப்பியுள்ளனர்.

    இந்த தகவல் பின்னர் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, தவறு எங்கு நடந்தது என்பதை கண்டறிய மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் செளத்ரி, "தகவல் கிடைத்ததும் ஒரு குழுவை இரு கிராமங்களுக்கும் அனுப்பி சம்பந்தப்பட்டவர்களை பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தோம். அவர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அறிந்தோம். அவர்களுக்கு கடந்த மே 14ஆம் தேதி இரண்டாவது டோஸ் போடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக உதவி தலைமை மருத்துவ அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது," என்று கூறினார்.

    முதல் கட்ட நடவடிக்கையாக, தடுப்பூசி டோஸை தவறாக போட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் செவிலியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அங்கு பொறுப்பு மருத்துவராக பணியில் இருந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சந்தீப் செளத்ரி தெரிவித்தார்.

  18. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை

    தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    மாநில அரசு தலைமை செயலாளர், உள்துறைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகல், காவல்துறை உயரதிகாரிகள் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

  19. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு `கோல்டன் விசா' வழங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசா: 10 வருடங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வந்து போக வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தனக்கு வழங்கிய கோல்டன் விசா தகவலை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.

    இந்த விசாவை தனக்கு வழங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உயரதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு எமிரேட்ஸ் அரசிடம் இருந்து நுழைவு அனுமதி கிடைத்திருப்பது பெருமையளிக்கிறது என்று சஞ்சய் தத் கூறியுள்ளார்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணை அதிபர், பிரதமர் மற்றும் துபை எமிரேட் ஆன ஷேக் மொஹம்மத் பின் ரஷித் அல் மக்தூம், தொழில்முறை திறன் வாய்ந்த சிறந்த நபர்ளுக்கு தமது நாட்டில் 10 ஆண்டுகளுக்கு கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை 2019ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்.

    இதன் மூலம் துபை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை கட்டமைககும் தமது முயற்சியில் இந்த நபர்கள் பங்களிப்பை வழங்குவார்கள் என்று அவர் அப்போது கூறியிருந்தார்.

    இந்த விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் படிக்கலாம், வேலை செய்யலாம், வசிக்கலாம். அங்குள்ள தொழில்களில் 100 சதவீத முதலீடுகளை செய்யலாம். ஐந்து முதல் பத்து ஆண்டுகள்வரை வழங்கப்படும் இந்த விசா காலாவதியாகும்போது அரசின் கொள்கை முடிவுக்கு ஏற்ப அது தாமாகவே புதுப்பிக்கப்படும்.

    கடைசியாக சஞ்சய் தத் தூர்பாஸ் என்ற நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான படத்தில் நடித்திருந்தார். அது கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி ஓடிடி பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. கேஜிஎஃப் இரண்டாம் பாகம், ஷம்ஷெரா, ப்ரித்விராஜ் மற்றும் புஜ்: ப்ரைட் ஆஃப் இந்தியா ஆகிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

  20. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு

    அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பயணிகள் ரயில் நிலைய பணிமனை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் எட்டுபேரை சுட்டுக் கொன்றுள்ளார்.

    உள்ளூர் நேரப்படி காலை 6.45 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இந்த சம்பவம், சான் ஜோன்ஸில் உள்ள சாண்டா க்ளாரா வேலி போக்குவரத்து மையத்தில் நடைபெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவரின் பெயர் சாமூவேல் காசிடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு வயது 57 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அந்த பணிமனையின் ஊழியர்.

    ஊழியர்கள் கூட்டத்தில்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு முன் சந்தேக நபர் தனது வீட்டை தீயிட்டு கொளுத்தியுள்ளார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த வருடத்தில் அமெரிக்கா முழுவதும் இதுவரை 230 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.