அரசு, தனியார் பள்ளிகளில் போக்சோ குழு அமையுங்கள்: ரவிக்குமார் எம்.பி

சென்னை பள்ளியில் நடந்தது போன்ற பாலியல் முறைகேடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறக் கூடும். எனவே ஒரு கால நிர்ணயம் செய்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் போக்சோ சட்ட விதிகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது பற்றிய அறிக்கையை தமிழக அமைச்சர் கேட்டுப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ரவிக்குமார் எம்.பி.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. சென்னை தனியார் பள்ளி ஆசிரியரை காவலில் எடுக்க முடிவு

    பாலியல்

    பட மூலாதாரம், Getty Images

    சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் மீது முன்னாள் மாணவர்கள் குழு அளித்த பாலியல் புகார் தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் அந்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

    அவரை ஜூன் 8ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து, செங்கல்பட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, அந்த ஆசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கை சென்னை நகருக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை ஆணையர் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.

    சம்பந்தப்பட்ட ஆசிரியர் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் அதை மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர் வெளியிட முன்வருமாறு நகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அவர்களின் அடையாளம் ரகிசயமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

  2. கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு 60 வயதுவரை முழு சம்பளம்: டாடா ஸ்டீல்

    India

    பட மூலாதாரம், Tata Steel ltd

    கொரோனாவால் உயிரிழந்த தமது வீரர்களின் குடும்பத்துக்கு அந்த ஊழியரின் 60 வயது வரை முழு சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது டாடா ஸ்டீல் நிறுவனம்.

    இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொரோனாவால் உயிரிழந்த ஊழியரின் 60 வயது வரை முழு சம்பளம், அவரது வீட்டு வசதி, மருத்துவ பலன்கள், பிள்ளைகள் பட்டப்படிப்பு படிக்கும்வரை அவர்களின் கல்விச்செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  3. தேடப்படும் குற்றவாளி மெகுல் சோக்சியை காணவில்லை

    இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள வைர வியாபாரி மெகுல் சோக்சி ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டில் காணாமல் போயுள்ளதாக அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

    இவர் வைர வியாபாரி நீரவ் மோதியின் உறவினர் ஆவார். பஞ்சாப் நேஷனல் வங்கியை பல்லாயிரம் கோடி ரூபாய் ஏமாற்றியதில் அவருடன் சேர்ந்து மெகுல் சோக்சி சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று கூறி இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத் துறை இயக்குநரகம் ஆகியவை அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன.

    அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் நீதிமன்றம் ஒன்று முன்னர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    mekul choksi

    பட மூலாதாரம், Getty Images

  4. கொரோனில் மருந்தை விநியோகிக்க ஹரியானா அரசு முடிவு

    சாமியார் பாபா ராம்தேவின் 'பதஞ்சலி ஆயுர்வேத்' நிறுவனம் தயாரித்த 'கொரோனில்' மருந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள கோவிட்-19 தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் சுகாதார அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

    இந்த மருந்தை வழங்குவதற்கான பாதி செலவை பதஞ்சலி நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என்றும் மீதி பணம் மாநில அரசின் கோவிட் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    முதலில் இந்த கொரோனில் மருந்து கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் என்று கூறி அறிமுகம் செய்த பதஞ்சலி நிறுவனம், பின்னர் அது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதற்கான மருந்து என்று கூறியது.

    அலோபதி மருத்துவ முறை காலாவதியானது மற்றும் அறிவிலித்தனமானது என்று சாமியார் ராம்தேவ் சமீபத்தில் கூறியது சர்ச்சையை கிளப்பி இருந்தது. கொரோனாவால் இறப்பதைவிட இந்தியாவில் அலோபதி மருத்துவ முறையால் இறப்பவர்கள்தான் அதிகம் என்று அவர் கூறியிருந்தார்.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்த மருத்துவ சங்கங்கள் அவர் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தன. இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அவரது கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது என்று பாபா ராம்தேவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அதன் பின்பு தமது கருத்தை ராம்தேவ் திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறி இருந்தார்.

    coronil
  5. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    சர்வதேச அளவிலும், இந்திய மற்றும் இலங்கை அளவிலும், தமிழ்நாட்டிலும் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு இந்தப் பக்கத்தில் செய்தியாகத் தொகுத்து வழங்குகிறோம்.