அரசு, தனியார் பள்ளிகளில் போக்சோ குழு அமையுங்கள்: ரவிக்குமார் எம்.பி

சென்னை பள்ளியில் நடந்தது போன்ற பாலியல் முறைகேடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறக் கூடும். எனவே ஒரு கால நிர்ணயம் செய்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் போக்சோ சட்ட விதிகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது பற்றிய அறிக்கையை தமிழக அமைச்சர் கேட்டுப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ரவிக்குமார் எம்.பி.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இன்று காலை முதல் பல முக்கிய செய்திகளை இந்த பக்கத்தில் பகிர்ந்திருந்தோம். இத்துடன் இந்த நேரலை நிறைவடைகிறது. இணைந்ததற்கு நன்றி.

  2. வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

    கத்தார் நாட்டு கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள 20 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட 24 இந்திய மீனவர்களை உடனடியாக மீட்பதற்கான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  3. செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி ஆய்வகத்தில் முதல்வர் ஆய்வு

    செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி ஆய்வகத்தில் முதல்வர் ஆய்வு

    பட மூலாதாரம், Facebook

    செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை நேரில் ஆய்வு செய்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கிடும் முயற்சிகளை தான் மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றும் மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  4. கோவிஷீல்டு, கோவேக்சின் - பக்க விளைவுகள் என்னென்ன?

  5. பெண் பிரதமரை பதவியேற்க விடாமல் விரட்டிய எதிரணி

    ஃபியாமே நவோமி மட்டாட்டாஃபா

    பட மூலாதாரம், Getty Images

    பசிஃபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள தொலைதூர தீவுகளில் ஒன்றான சமோவா நாட்டில் புதிய பெண் பிரதமராக தேர்வான ஃபியாமே நவோமி மட்டாட்டாஃபாவை பதவியேற்க விடாமல் தேர்தலில் தோல்வியடைந்தவரின் ஆதரவாளர்கள் விரட்டியடித்துள்ளனர்.

    இதனால், பதவியேற்பு விழாவுக்கு நாட்டின் தலைமை நீதிபதியுடன் நாடாளுமன்றத்துக்குச் சென்ற அந்த பெண் பிரதமர், கடைசியில் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் அவசரகதியில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

  6. தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கிய எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் வருகை தந்தார்.

    மாவட்ட ஆட்சியர் கார்மேகத்தை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, டீன் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் மருத்துவர்களுடன் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அவர், “இன்றைக்கு கொரோனா நோய் பரவலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பது வேதனையளிக்கிறது. அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, வேகமாக பரவி வரும் 2-ம் அலையை கட்டுப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கினாலே உயிரிழப்பை தடுக்கலாம். மத்திய அரசிடம் பேசி கூடுதலாக ஆக்சிஜன் பெற்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும். ஏற்கனவே, நான் கடிதம் மூலமாக பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன்.

    எங்களுடைய அரசு எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்தாலே கொரோனாவை கட்டுப்படுத்தலாம்.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, தினசரி பாதிப்பு 6,500 என்பதே உச்சமாக இருந்தது. ஆனால் தற்போது தினசரி பாதிப்பு 35 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

    “ஒரு நாள் பாதிப்பு 36 ஆயிரமாக உயர்ந்துள்ள நிலையில், தினசரி பரிசோதனையை 3 லட்சமாக அதிகரிக்க வேண்டும். தற்போது நடைபெறும் பரிசோதனைகள் போதாது. பரிசோதனை மையங்களையும் அதிகரித்து, 24 மணி நேரத்தில் முடிவுகளை அறிவிக்க வேண்டும். தற்போது 3 நாட்கள் வரை ஆவதால், நோய் பாதிப்பு அதிகமாகிறது. நாங்கள் 24 மணி நேரத்தில் கொடுத்தது போல விரைவாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நோய் பாதிப்பில் இருந்து குணமாக சிகிச்சையளிக்க முடியும்.”

  7. தமிழகத்தில் மேலும் 34,285 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 34,285 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,11,496ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 4,041 பேருக்கும் கோவையில் 3,632 பேருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 468 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21,340ஆக உயர்ந்துள்ளது.

  8. கருப்பு பூஞ்சை தாக்கம்: ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கும் தமிழக அரசு

    கருப்பு பூஞ்சை தாக்கம்: ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கும் தமிழக அரசு

    பட மூலாதாரம், Getty Images

    தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தாக்கம் எதனால் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய 10 வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களில் இந்த குழுவினர் ஆய்வை தொடங்க உள்ளதாகவும் தூத்துக்குடியில் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று தமிழகத்தின் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது, மேல கூட்டுடன்காடு கிராமத்தில் கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளவர்களின் உடல் நிலை, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். இதே போன்று மாவட்டம் முழுவதும் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

    முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பரவல் தமிழகத்தில் பெருமளவில் குறைந்துள்ளது. சென்னையில் மிக வேகமாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் போதுமான அளவிற்கு உள்ளது. ஆக்சிஜன் தேவை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருந்த இக்கட்டான சூழ்நிலை தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 வயது முதல் 45 வயது உடையவர்களுக்கு செலுத்துவதற்கு 12 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அது செய்தித்தாள் விநியோகிப்பவர்கள், காய்கறி விற்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் என்ற முன்னுரிமை அடிப்படையில் பிரித்து தரப்பட்டுள்ளது.

    கருப்பு பூஞ்சை என்பது நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்கனவே வந்துள்ளது. ஆனால், தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு எதன் அடிப்படையில் கருப்பு பூஞ்சை நோய் வருகிறது என்று ஆராய்வதற்கு தமிழகத்திலுள்ள வல்லுநர்களுடன் ஆய்வு செய்ய இருக்கிறோம். அதற்காக இப்போது பத்திற்கும் மேற்பட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் கலந்து பேசி விட்டு இன்னும் இரு தினங்களில் இதுகுறித்த ஆய்வு தொடங்கப்படும்” என்று அவர் கூறினார்.

  9. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 156 கொரோனா உயிரிழப்புகள்

    இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 156 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

    அதே சமயம், தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,568 ஆக பதிவாகியுள்ளது என்று டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  10. ஸ்புட்னிக் தடுப்பூசி: "இந்திய மாநிலங்களின் கோரிக்கை பரிசீலனை"

    ஸ்புட்னிக் தடுப்பூசி

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் அரசுகள் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை கோரிய நிலையில் அவற்றை தடுப்பூசி நிறுவனங்கள் பலவும் நிராகரித்துவிட்டன. இந்திய அரசின் வழியாக மட்டுமே தடுப்பூசி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஃபைசர் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில், உலகில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை பெற இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள் விடுத்துள்ள கோரிக்கையை "மிகவும் கவனமாக" பரிசீலித்து வருவதாக ரஷ்ய துணை தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

  11. விசாகப்பட்டினம்: எச்பிசிஎல் ஆலையில் தீ

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    விசாகப்பட்டினத்த்தில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தில் (எச்பிசிஎல்) எண்ணெய் ஆலையில் தீ ஏற்பட்டுள்ளது.

    அதை அணைக்கும் பணியில் 20க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

  12. புதுச்சேரியில் நாளை புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

    புதுச்சேரியில் நாளை புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

    பட மூலாதாரம், NR CONGRESS

    புதுச்சேரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவியேற்கவுள்ளனர்.

    புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மட்டும் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார்.

    இதனிடையே ரங்கசாமி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போனது.

    இந்நிலையில் நாளை காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் புதுவை ஆளுநர் மாளிகையில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பேற்கவுள்ள, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணனுக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இதையடுத்து சட்டப்பேரவையில் காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

  13. மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

    பெருநகர சென்னை மாநகராட்சியில், மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று தகுந்த பாதுகாப்புடன் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள மாநகராட்சி அதற்குரிய உதவி எண்களையும் அறிவித்துள்ளது.

    மாற்றுத்திறனாளிகளின் உதவி எண்: 18004250111

    பேச்சு மற்றும் செவி திறனற்றவர்களின் உதவி எண்: 9700799993

  14. கொழும்பு துறைமுகம் அருகே கப்பலொன்றில் பாரிய வெடிப்பு

    கொழும்பு துறைமுகம் அருகே கப்பலொன்றில் பாரிய வெடிப்பு

    பட மூலாதாரம், SRI LANKA AIR FORCE

    கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் பர்ல் (X-PRESS PEARL) கப்பலில் தீ பரவியிருந்த நிலையில், இன்று காலை வெடிப்பு சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.

    இந்த கப்பலில் வைக்கப்பட்டிருந்த 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

    கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை அடுத்து, கப்பலில் இருந்த 25 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் இரண்டு இந்திய பிரஜைகள் காயமடைந்த நிலையில், அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

    தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    சிங்கப்பூருக்கு சொந்தமான இந்த கப்பலில், இரசாயன பொருட்கள் காணப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

    கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்த கப்பலில் கடந்த 19ம் தேதி தீ பரவியது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தொடர்ந்து முயற்சிகள் நடந்து வந்த நிலையில், இன்று காலை அந்த கப்பலில் வெடிப்பு சம்பவமொன்று நேர்ந்துள்ளது.

    இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் துறைமுக அதிகார சபை ஆகிய தரப்பினர் இணைந்து, கப்பலில் பரவியுள்ள தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

  15. சென்னை பள்ளி ஆசிரியர், பள்ளி முதல்வர், மாவட்ட கல்வி அதிகாரிக்கு சம்மன்

    சென்னை பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில், ஆசிரியர் ராஜகோபால், பள்ளி முதல்வர், நிர்வாகி, புகாரை பொதுவெளியில் பதிவிட்ட பெண், சென்னை மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் ஜூன் 4-ம் தேதி ஆஜராக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான மாநில ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

  16. அரசு, தனியார் பள்ளிகளில் போக்சோ கண்காணிப்பு குழு: அரசுக்கு ரவிக்குமார் எம்.பி யோசனை

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் போக்சோ விதிகளின் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சில யோசனைகளை வழங்கியுள்ளார்.

    தனியார் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்கள் செய்யப்படும்போது போக்சோ சட்ட வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் தனியார் பள்ளிகளுக்கு ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே தனிப்பட்ட முறையில் ஆசிரியரைப் பற்றிய கருத்துக்கள் கேட்டறியப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    சிறார்கள் பாதுகாப்புக்கான குழுவை அமைப்பது தொடர்பாக எட்டு அம்சங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை NIPCCD அளித்திருக்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் சிறார் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்; அவர்களின் முதன்மையான பணி மாணவர்கள் பாலியல் ரீதியாக சீரழிக்கப்படக்கூடாது என்பதை கண்காணிப்பதாக இருக்க வேண்டும். அந்தக் குழுவில் ஒரு உறுப்பினர் சிறார் உரிமைகள் தொடர்பான அனுபவம் கொண்ட ஒரு நபராக இருக்க வேண்டும். அவர் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களிலிருந்து ஒருவராக்க கூட இருக்கலாம். மாணவர் பிரதிநிதிகள் இருவர் அந்தக் குழுவில் இடம்பெற வேண்டும். அது ஆண் பெண் இருபாலரும் படிக்கிற பள்ளியாக இருந்தால் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் அதில் பிரதிநிதியாக இடம்பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ’ஆன்லைன்’ பாதுகாப்பு குறித்தும் அதில் 5 வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் இன்டர்நெட் நெறிமுறைகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பள்ளி தொடர்பான பணிகள் தவிர ஆசிரியர் வேறு எந்த விதத்திலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் எவ்விதமான தொடர்பும் அனுப்பக்கூடாது. மாணவர்களுக்கு ஆசிரியர் அனுப்பும் மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல் பரிமாற்றங்களின் படி ஒன்று அவர்களது பெற்றோர்களுக்கும் அனுப்பப்பட வேண்டும். சமூக ஊடகங்களில் மாணவர்களோடு எவ்வித உறவையும் ஆசிரியர்கள் பேணக்கூடாது. மாணவர்களின் சம்மதமின்றி அவர்களை புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது. அவர்களுக்கு சங்கடம் நேரும் விதத்தில் எந்தவிதமான ’ரெக்கார்டிங்கும்’ செய்யப்படக்கூடாது’ என்று அவ்விதிகளில் சொல்லப்பட்டுள்ளது.

    சென்னை பள்ளியில் நடந்தது போன்ற பாலியல் முறைகேடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறக் கூடும். எனவே ஒரு கால நிர்ணயம் செய்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் போக்சோ சட்ட விதிகள் சரியாக கடைபிடிக்க படுகின்றனவா என்பது பற்றிய அறிக்கையை அமைச்சர் கேட்டுப் பெற வேண்டும் என்று ரவிக்குமார் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

  17. ஒரே நாளில் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகள் - பழங்கள் விநியோகம்

    சென்னையில் 1,400 மெட்ரிக் டன்னும், இதர மாவட்டங்களில் 3500 மெட்ரிக் டன்னும் காய்கறி - பழங்கள் வாகனங்கள் மூலம் நேற்று நியாய விலையில் விநியோகிக்கப்பட்டதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  18. சர்ச்சைக்குரிய படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காவலர் பணி இடைநீக்கம்

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை அரை நிர்வாணமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய தக்கலை தீயணைப்பு காவல் நிலைய காவலர் ஹெரால்ட் பணி இடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

  19. டூல் கிட் விவகாரம்: இரு காங்கிரஸ் தலைவர்களுக்கு போலீஸ் அழைப்பாணை

    இந்தியாவில் ஆளும் அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட டூல்கிட் ஆவணம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் கெளடா, ரோஹன் குப்தா ஆகியோருக்கு டெல்லி காவல்துறை அழைப்பாணை அனுப்பியிருக்கிறது.

    ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் அங்குள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதால் தங்கள் தரப்பு விளக்கத்தை அந்தந்த மாநில காவல்துறையிடம் அளிக்கப்போவதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளோம் என்று இரு காங்கிரஸ் தலைவர்களும் கூறியுள்ளனர்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் நற்பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் டூல்கிட் ஆவணத்தை காங்கிரஸ் கட்சி ஜோடித்ததாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம்சாட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    அவரது பதிவில் இணைக்கப்பட்ட ஆவணத்தை சந்தேகத்துக்குரிய இணைப்பு என்று ட்விட்டர் கூறியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதேவேளை, இந்த ஆவணம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் எந்த அடிப்படையில் சந்தேக இணைப்பு என்று வகைப்படுத்தியது என்பதை அறிய ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் டெல்லி மற்றும் குருகிராம் அலுவலகங்களுக்கு டெல்லி காவல்துறையினர் திங்கட்கிழமை சென்று விசாரணை நடத்தினர்.

    டூல்கிட் விவகாரத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா உள்ளிட்ட சிலர் மீது காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் கெலடா, ரோஹன் குப்தா டெல்லி காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்

    அதன் அடிப்படையிலேயே விசாரணைக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர்களுக்கு தற்போது காவல்துறை அழைப்பாணை அனுப்பியிருக்கிறது.

  20. தமிழ்நாட்டில் 18-44 வயது வரை பயன்பெறும் முதல் கட்ட தடுப்பூசி பயனர்கள் யார்?

    தமிழ்நாட்டில் 18-44 வயது வரை பயன்பெறும் முதல் கட்ட கொரோனா தடுப்பூசி பயனர்களின் விவரத்தை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது.

    CORONA

    பட மூலாதாரம், TNDIPR