மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியேற்பு எப்போது? எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு?

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு இன்னும் 2 தொகுதிகளுக்கு முடிவு, இன்று அறிவிக்கப்படவுள்ளது. எனவே கள நிலவரம் குறித்த அண்மைய தகவல்களை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுக்கு வரவேற்பு

    STALIN

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாட்டின் புதிய முதல்வராகவிருக்கும் மு.க. ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை சென்றுள்ளார். இதையொட்டி தேர்தல் வெற்றிக்காக கோபாலபுரத்தில் உள்ள தாயாரின் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஸ்டாலின் ஆசி பெற்றார். பிறகு அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்ற ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    இதையடுத்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் ஸ்டாலின், திமுக சட்டப்பேரவை குழுவை கூட்டி அதன் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தவிருக்கிறார். இந்த வார இறுதிக்கு முன்பாக திமுக பதவியேற்பு விழாவை நடத்துவது குறித்தும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தக்கூடும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

    • நாளை 6 மணிக்கு சென்னையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
  2. புதுச்சேரியில் இனி ஊழலற்ற மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசு: அமித் ஷா

    AMIT SHAH

    பட மூலாதாரம், AMIT SHAH

    புதுச்சேரியில் இனி ஊழலற்ற மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசு அமையும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 16 இடங்களிலும் சுயேச்சை உறுப்பினர்கள் 6 இடங்களிலும் எதிரணியில் திமுக ஆறு இடங்களிலும் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

    இந்த நிலையில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில், புதுச்சேரியில் தேர்தல் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நரேந்திர மோதி தலைமையிலான வளர்ச்சி அரசியல் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த தேர்தல் முடிவு என்றும் இனி ஊழலற்ற மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசை புதுச்சேரி பார்க்கும் என்றும் கூறியுள்ளார்.

  3. தமிழக தேர்தலில் 16 அமைச்சர்கள் வெற்றி, 11 பேர் தோல்வி

    தேர்தல்

    பட மூலாதாரம், TWITTER

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் களம் கண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    அமைச்சர் சி.வி. சண்முகம், ஜெயகுமார், திருச்சி நடராஜன் உள்பட 11 பேர் தோல்வியடைந்துள்ளனர். அவர்களின் விவரமும் அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளும் வருமாறு:

    1. எடப்பாடி பழனிசாமி - எடப்பாடி தொகுதி

    2. ஓ.பன்னீர்செல்வம் - போடி நாயக்கனுார் தொகுதி

    3. சீனிவாசன் - திண்டுக்கல் தொகுதி

    4. செங்கோட்டையன் - கோபிசெட்டிபாளையம் தொகுதி

    5. செல்லுார் ராஜு - மதுரை மேற்குதொகுதி

    6. தங்கமணி - குமாரபாளையம் தொகுதி

    7. வேலுமணி - தொண்டாமுத்துார் தொகுதி

    8. அன்பழகன் - பாலக்கோடு தொகுதி

    9. கருப்பணன் - பவானி தொகுதி

    10. காமராஜ் - நன்னிலம் தொகுதி

    11. ஓ.எஸ்.மணியன் - வேதாரண்யம் தொகுதி

    12. உடுமலை ராதாகிருஷ்ணன் - உடுமலைப்பேட்டை தொகுதி

    13. சி.விஜயபாஸ்கர் - விராலிமலை தொகுதி

    14. கடம்பூர் ராஜு - கோவில்பட்டி தொகுதி

    15. ஆர்.பி.உதயகுமார் - திருமங்கலம்தொகுதி

    16. சேவூர் ராமச்சந்திரன் - ஆரணி தொகுதி

    தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள் விவரம் யார்?

    1. ஜெயகுமார் - ராயபுரம் தொகுதி

    2. சி.வி.சண்முகம் - விழுப்புரம் தொகுதி

    3. ராஜேந்திர பாலாஜி - ராஜபாளையம் தொகுதி

    4. பாண்டியராஜன் - ஆவடி தொகுதி

    5. கே.சி.வீரமணி - ஜோலார்பேட்டை தொகுதி

    6. எம்.சி.சம்பத் - கடலுார் தொகுதி

    7. நடராஜன் திருச்சி - கிழக்கு தொகுதி

    8. பெஞ்சமின் - மதுரவாயல் தொகுதி

    9. ராஜலட்சுமி - சங்கரன்கோவில் தொகுதி

    10. சரோஜா - ராசிபுரம் தொகுதி

    11. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - கரூர் தொகுதி

  4. மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறோம் - டாக்டர் ராமதாஸ்

    RAMADOSS

    பட மூலாதாரம், RAMADOSS

    தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளித்துள்ள முடிவுகளை மதித்து ஏற்கிறோம் என்று கூறியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பாமகவுக்கும், அக்கட்சி இடம் பெற்றிருந்த அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

    தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளித்தாலும் சோர்வளிக்கவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மக்களின் தீர்ப்பை பாமக முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

    சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தோல்வியடைந்ததற்கான காரணங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து அவற்றைச் சரி செய்யவும், அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை பாமக எடுக்கும்.

    பாமக கடந்த காலங்களைப் போன்று ஆக்கபூர்வமான கட்சியாக மக்கள் பணியைத் தொடரும். பாமக போட்டியிட்ட தொகுதிகளில் பாமக மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் அளித்த உழைப்பும், ஒத்துழைப்பும் இணையற்றவை.

    இத்தேர்தலில் அதிமுக தலைமையிலான அணிக்கு வாக்களித்த மக்களுக்கும், பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், களப்பணியாற்றிய அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,' என்று கூறியுள்ளார்.

  5. கோவில்பட்டியில் டி.டி.வி. தினகரன் தோல்வி

    dinakaran

    பட மூலாதாரம், TTV DINAKARAN

    கோவில்பட்டி தொகுதியில் களம் கண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தோல்வியடைந்தார்.

    அவரை எதிர்த்து தேர்தல் களம் கண்ட அதிமுக வேட்பாளர் கடம்பூர் ஜனார்தனன், 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    கடம்பூர் ஜனார்தனனுக்கு 586 தபால் வாக்குகள் உட்பட 67,970 வாக்குகளும் டி.டி.வி. தினகரனுக்கு 424 தபால் வாக்குகள் உட்பட 55,729 வாக்குகளும் கிடைத்துள்ளன.

    இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம். கோமதிக்கு 99 தபால் வாக்குகள் உட்பட 9,114 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கே. கதிரவனுக்கு 39 தபால் வாக்குகள் உட்பட 3,628 வாக்குகளும் கிடைத்துள்ளன.

    வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டா தேர்வுக்கு 18 தபால் வாக்குகள் உட்பட 1,106 வாக்குகள் கிடைத்துள்ளன.

  6. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் தோல்வி

    TAMILNADU

    பட மூலாதாரம், SEEMAN

    படக்குறிப்பு, சீமான்

    சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியடைந்தார்.

    அத்தொகுதியில் திமுக வேட்பாளர் கே.பி. சங்கர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே. குப்பனை விட 37,661 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    கே.பி. சங்கருக்கு 482 தபால் வாக்குகள் உட்பட 87,703 வாக்குகளும் குப்பனுக்கு 89 தபால் வாக்குகள் உட்பட 50,435 வாக்குகளும் கிடைத்துள்ளன.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 100 தபால் வாக்குகள் உட்பட 48,497 வாக்குகள் கிடைத்துள்ளன.

  7. மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி

    ADMK

    பட மூலாதாரம், SELLUR RAJU

    படக்குறிப்பு, செல்லூர் ராஜு

    தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சி. சின்னம்மாளை விட 9,121 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    செல்லூர் ராஜுக்கு 297 தபால் வாக்குகள் உட்பட 83,586 வாக்குகளும், சின்னம்மாளுக்கு 1,299 தபால் வாக்குகள் உட்பட 73,463 வாக்குகளும் கிடைத்தன.

  8. ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து

    தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அமைக்கவிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெருவெற்றி பெற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள் என்று கமல் கூறியுள்ளார்.

    கமல்ஹாசன்

    பட மூலாதாரம், KAMAL HASSAN

  9. பதவியேற்பு விழாவை ஆரவாரமின்றி நடத்துவேன் - மு.க. ஸ்டாலின்

    திமுக

    பட மூலாதாரம், M K STALIN

    படக்குறிப்பு, சென்னை கொளத்தூர் தொகுதியில் வெற்றிச்சான்றிதழை பெற்றுக் கொண்ட பிறகு அதை செய்தியாளர்களிடம் காண்பித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

    சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க. ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாமை விட 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த தேர்தலில் ஸ்டாலினுக்கு 1,217 தபால் வாக்குகள் சேர்த்து மொத்தம் 1,05,522 வாக்குகள் கிடைத்தன. அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமுக்கு 35,138 வாக்குகள் கிடைத்தன.

    இதைத்தொடர்ந்து தேர்தல் வெற்றிச்சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய அமைச்சரவை பதவியேற்பு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு மிக எளிமையாக ஆளுநர் மாளிகையிலேயே பதவியேற்பு விழாவை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

  10. புதுச்சேரி தேர்தல் முன்னிலை நிலவரம்

    தேசிய ஜனநாயகக் கூட்டணி - 16 வெற்றி

    என்.ஆர்.காங்கிரஸ் - 10 பாஜக - 6

    மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி - 8 வெற்றி

    காங்கிரஸ் - 2 திமுக - 6 சுயேட்சை - 5 வெற்றி

  11. புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தொகுதியில் கூட வெற்றி பொறாத அதிமுக

    புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் இணைந்து உப்பளம், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, காரைக்கால் தெற்கு உள்ளிட்ட ஐந்து இடங்களில் அதிமுக போட்டியிட்டது.

    இதில் அதிமுக ஐந்து இடங்களிலும் தோல்வியடைந்தது. இதன் மூலம், புதுச்சேரி வரலாற்றில் கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியுற்றள்ளது.

  12. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது

    தருமபுரி தொகுதி

    பாமக வேட்பாளார் வெங்கடேஸ்வரன் 26860 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் .

    பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி

    அதிமுக வேட்பாளார் A.கோவிந்தசாமி 36943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    பென்னாகரம் தொகுதி

    பாமக வேட்பாளார் ஜி.கே.மணி 21186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அரூர் (தனி) தொகுதி

    அதிமுக வேட்பாளர் V.சம்பத்குமார் 30362 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    பாலக்கோடு தொகுதி

    அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் 28100 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.

  13. வெற்றி சான்றிதழை பெற்றுக் கொள்ள வராத எடப்பாடி பழனிசாமி

    தலைமை முகவர் வழக்கறிஞர் தங்கமணி எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதற்கான சான்றிதழை பெற்றுகொண்டார் .

    பட மூலாதாரம், பிபிசி

    எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 654 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்

    திமுக வேட்பாளர் சம்பத்குமார் 69 ஆயிரத்து 93 வாக்குகள்பெற்றிருந்தார்.

    எடப்பாடி பழனிசாமி திமுக வேட்பாளரை காட்டிலும் 93 ஆயிரத்து 561 வாக்குகள் அதிகம்பெற்றுள்ளார்.

    இருப்பினும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்கவரவில்லை.

    அவரின் தலைமை முகவர் வழக்கறிஞர் தங்கமணி எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதற்கான சான்றிதழை பெற்றுகொண்டார் .

  14. புதுச்சேரி தேர்தல் முன்னிலை நிலவரம்

    தேசிய ஜனநாயகக் கூட்டணி - 15 வெற்றி

    என்.ஆர்.காங்கிரஸ் - 10 பாஜக - 5

    மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி - 7 வெற்றி

    காங்கிரஸ் - 2 திமுக - 5 சுயேட்சை - 5 வெற்றி

  15. மமதா பானர்ஜி தோற்றது உண்மையா?

    மேற்கு வங்க தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மொத்தம் உள்ள 294 இடங்களில் 200க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதையடுத்து, அக்கட்சி மீண்டும் அங்கு ஆட்சியை தக்க வைப்பது உறுதியாகி விட்டது.

    ஆனால், நந்திகிராம் தொகுதியில் தேர்தல் களம் கண்ட முதல்வர் மமதா பானர்ஜிக்கும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரான சுவேந்து அதிகாரிக்கும் இடையே தேர்தல் முடிவுகளில் யார் வென்றது என்ற சர்ச்சை தொடர்ந்து நிலவுகிறது.

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, கோவை தெற்கு தொகுதியில் பாஜக வெற்றி

    கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் 1728 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    தொகுதியில் மொத்தம் பதிவான 154765 வாக்குகள், 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவில் 53209 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முதலிடம் பிடித்துள்ளார். 51481 வாக்குகளைப் பெற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 42,383 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

  17. ஸ்டாலினை சந்தித்த தமிழக அதிகாரிகள்

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அரசு தலைமை செயலாலர் ராஜீவ் ரஞ்சன்.

    பட மூலாதாரம், TNDIPR

    தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பலத்தை பெறும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அரசு தலைமை செயலாலர் ராஜீவ் ரஞ்சன்.

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மாநில காவல்துறை டிஜிபி திரிபாதி.

    டிஜிபி திரிபாதி

    பட மூலாதாரம், TNDIPR

  18. இரு தொகுதியில் போட்டியிட்ட ரங்கசாமி; ஒன்றில் தோல்வி ஒன்றில் வெற்றி

    ரங்கசாமி

    பட மூலாதாரம், பிபிசி

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் தோல்வியும், மற்றொரு தொகுதியில் வெற்றியும் பெற்றுள்ளார்.

    ஏனாம் தொகுதியில் 16,477 வாக்குகள் பெற்ற ரங்கசாமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கொல்லப்பல்லி ஸ்ரீனிவாசன் அசோகிடம் 655 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதில், கொல்லப்பல்லி ஸ்ரீனிவாசன் அசோக் மொத்தமாக 17,132 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

    இதையடுத்து ரங்கசாமி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான தட்டாஞ்சாவடியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சேது செல்வத்தை விட 5456 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    கொல்லப்பல்லி ஸ்ரீனிவாசன்

    பட மூலாதாரம், பிபிசி

  19. கிருஷ்ணகிரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

    கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் அசோக் குமாரும் திமுக சார்பில் செங்குட்டுவனும் போட்டியிட்டனர்.

    கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சுமார் 800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தபால் வாக்குகளில் 450க்கும் மேற்பட்ட வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று கூறி திமுக வேட்பாளர் செங்குட்டுவன் புகார் தெரிவித்துள்ளதால் கிருஷ்ணகிரி தொகுதி முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    தொகுதியின் ஒட்டு மொத்த வாக்குகளை மீண்டும் எண்ண கோரிக்கை வைத்து திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  20. மேற்கு வங்கத்தில் பாஜகவின் ஆட்சிக் கனவு தகர்ந்தது ஏன்?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு