மாநிலங்களுக்கான தடுப்பு மருந்தின் விலையை 400ரூபாயிலிருந்து 300ரூபாயாக குறைப்பதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக உள்ளது. முன்பை விட பாதிப்புகளும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. அதோடு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்துள்ள செய்திகளும் வெளியாகின. கடந்த நான்கு நாட்களாக இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ராமநாதபுரம்: கொரோனாவால் முடங்கியது சுற்றுலா தலம், பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக, ராமநாதபுரத்தில் இருந்து

    ராமநாதபுரம்
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பொதுமக்களுக்கு பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு இரண்டாவது அலையில் அதிகமான பொதுமக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று வரை 687 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 317 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    எஞ்சியுள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் 27 குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், சாலைகளில் அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிதல், முகக்கவசம் அணியாதவர்கள் என மொத்தமாக 42 லட்சம் ரூபாய் சுகாதாரத்துறை சார்பில் அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தொழில் மீன்பிடித்தொழில். அடுத்தது சுற்றுலா தொழில். ராமேஸ்வரத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவது வழக்கம்.

    ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு ஊரடங்கு அறிவித்ததின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் பொதுமக்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலாப் பயணிகளை நம்பி வருவாய் ஈட்டிவந்த சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. அதேபோல் கொரோனா ஊரடங்கால் ஆன்மீக தலங்களுக்கு பக்தர்கள் செல்லஅனுமதி ரத்து செய்யப்பட்டதால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலை நம்பி வாழ்ந்துவந்த 500க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

  2. மாதவிடாய் நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா?

    மாதவிடாய்

    பட மூலாதாரம், Getty Images

    18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2021 மே 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக மக்களுக்குச் செலுத்த இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

    இந்த நேரத்தில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டாம், அப்படி செலுத்திக் கொள்வது பெண்களுக்கு பாதுகாப்பற்றது என ஒரு செய்தி பல்வேறு தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

    அப்படி அந்த செய்தியில் என்ன கூறப்பட்டிருக்கிறது? அந்த செய்தி உண்மையா?

  3. கொரோனா பாதிப்பு: புதுச்சேரியில் என்ன நிலை?

    இந்தியாவில் பிற மாநிலங்களுடன்‌ ஒப்பிடும் போது புதுச்சேரி மிகச் சிறிய யூனியன் பிரதேசமாக இருக்கிறது. குறிப்பாக புதுச்சேரி அருகே தமிழகத்தைச் சேர்ந்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைக் காட்டிலும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததுள்ளது.

    காணொளிக் குறிப்பு, கொரோனா பாதிப்பு: புதுச்சேரியில் என்ன நிலை?
  4. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை, மெய்யம்மை, பிபிசி தமிழுக்காக, மதுரையில் இருந்து

    மதுரை

    பட மூலாதாரம், Getty Images

    ஓராண்டு காலத்தில் ஆக்சிஜன் சேமிப்பை வெகுவாக துரிதப்படுத்திய மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 15.15 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அரசு மருத்துவமனைகளில் 346 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 203 பேரும் ஆக்சிஜன் கருவி உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முறையே 848 மற்றும் 706 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 6000 லிட்டர் திரவ வாயுக்கான கொள்கலன் மட்டுமே இருந்தது. அதன் மூலம் 400 படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வைத்த கோரிக்கையை அடுத்து மாவட்ட சிறப்பு அதிகாரி டாக்டர் பி. சந்திரமோகனும், அன்றைய மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய்யும் தேவையான அனுமதியை பெற்று ஆக்சிஜன் கொள்கலனை 20,000 லிட்டர் கொள்கலனாக மாற்றினர். அதனால் கூடுதலாக படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது கிடைத்த தகவலின்படி அரசு மருத்துவமனைகளில் உள்ள மொத்தம் 345 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுகளில் 42 பேருக்கும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள மொத்தம் 235 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுகளில் 96 பேருக்கும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 500 என்ற அளவில் கூடுகிறது. ஏப்ரல் 26-ம் தேதி மட்டும் மாவட்டத்தில் 524 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3622 ஆக அதிகரித்துள்ளது.

    மதுரை மாநகரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 15 ஆக இருந்த நோய் கட்டுப்பாட்டு பகுதி, தற்போது 57 ஆக அதிகரித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது கொரோனா தொற்று எண்ணிக்கை மதுரை மாவட்டத்தில் மிதமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

  5. உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையும் அறிகுறிகள் இல்லை, சமீராத்மஜ் மிஷ்ரா, பிபிசி இந்திக்காக

    உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையும் அறிகுறிகள் இல்லை

    பட மூலாதாரம், Reuters

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 32,993 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

    265 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட 30,000 க்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளதாக உ.பி.யின் சுகாதார குடும்பநலத்துறையின் கூடுதல் தலைமை செயலர் அமித்மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    மாநிலத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் தலைநகர் லக்னெள தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. லக்னெளவில், கடந்த 24 மணிநேரத்தில் 4437 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன, 39 பேர் இறந்துள்ளனர்.

    மாநிலத்தில் மொத்தம் மூன்று லட்சம் பேர் தற்போது கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 11,678 பேர் தொற்று காரணமாக இறந்துள்ளனர். தற்போது லக்னெளவில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 50,000 ஆக உள்ளது.

    மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தலின் கீழ் இருக்கிறார் . மாநில அரசு அதிகாரிகளுடன் அவர் காணொளி மூலமாக கூட்டங்களை நடத்துகிறார்.

    மறுபுறம், ஆறு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்த துணை முதலமைச்சர் தினேஷ் வர்மா, செவ்வாய்க்கிழமை லக்னெளவில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அண்மையில் கொரோனா தொற்று காரணமாக பாஜகவின் இரண்டு எம்எல்ஏக்கள் உயிரிழந்துள்ளனர்.

    மாநில அரசு சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டுவரும் போதிலும், கொரோனா நோயாளிகள், சிகிச்சை, மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜனைப் பெற தீவிரமாக அலைய வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர்.

    ஒரு நோயாளி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பே, காலியாகும் அந்தப் படுக்கைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வரிசையில் காத்திருக்கும் அளவிற்கு, லக்னெளவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

    இருப்பினும், ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து சேர்ந்த பிறகு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளன.

    ஆனால் தொற்றுநோய் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணமாக ஆக்ஸிஜனைப் பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை இப்போதும் காண முடிகிறது.

  6. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கோவை - கள நிலவரம்

    கொரோனா பெருந்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து வருகிறது.

    காணொளிக் குறிப்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கோவை - கள நிலவரம்
  7. புதுச்சேரியில் அதிகரிக்கும் உயிரிழப்புகள், நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக, புதுச்சேரியிலிருந்து

    புதுச்சேரியில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்
    புதுச்சேரியில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

    இந்தியாவில் பிற மாநிலங்களுடன்‌ ஒப்பிடும் போது புதுச்சேரி மிகச் சிறிய யூனியன் பிரதேசமாக இருக்கிறது. குறிப்பாக புதுச்சேரி அருகே தமிழகத்தைச் சேர்ந்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைக் காட்டிலும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததுள்ளது.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கொரோனா இரண்டாவது அலை அதிக அளவில் பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதம் இறுதி வரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 30க்கும் குறைவாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டனர். இதனிடையே கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதுச்சேரியில் தொற்று பாதிப்பு படிப்படியாகஅதிகரித்துள்ளது.

    இதில் குறிப்பிட்டு சொன்னால், கடந்த நான்கு நாட்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில், 750க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அரசு சார்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கொரோனா தளர்வுகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இதன் மூலமாக இரவு நேர ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை அமல்படுத்தி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் புதுச்சேரியில் கடந்த திங்கட்கிழமை முதல் வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள், பொது அரங்குகள், சலூன் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய கடைகள் தவித்து மற்ற அனைத்து கடைகளும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 30ஆம் தேதி வரை அனைத்து விதமான மதுக்கடைகள் மூட கலால் துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது.

    இரண்டாம் அலை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளுடம் கூடிய படுக்கைகள், வெண்டிலேட்டர் கருவிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அதிகப்படுத்துமாறு அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றொருபுறம் பொது மக்களுக்கு கொரோனா‌ தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சுற்றுலாவை மையமாகக் கொண்டு செயல்படும் அனைத்து விதமான செயல்பாடுகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடைபாதை வியாபாரிகள், ரிக்ஷா தொழிலாளர்கள், உணவகம் மற்றும் இதர கடைகளில் பணியாற்றும்தினக்கூலி ஊழியர்கள் வாழ்வாதாரம்பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் பிரபலமான ஞாயிறு சந்தையை (Sunday Market) நம்பி தொழில் செய்யும் 1000க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

  8. டெல்லியின் அவலநிலை - காணொளி

    ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி மருத்துவமனைகளில் நடக்கும் அவலநிலையை காண்பிக்கும் காணொளி இது.

    காணொளிக் குறிப்பு, ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி மருத்துவமனைகளில் நடக்கும் அவலநிலை
  9. நடுங்க வைக்கும் டெல்லி கொரோனா மரணங்கள், ஜுபைர் அஹமத், பிபிசி நிருபர், தில்லி

    டெல்லி

    பட மூலாதாரம், Getty Images

    இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சிதைகள் ஒரே நேரத்தில் இப்படி எரிவதை நான் முதல் முறையாகக் காண்கிறேன்.

    ஒரே நாளில், தில்லியின் மூன்று மயானங்களில் கண்ட இந்த துக்கமும் வேதனையும் நிறைந்த கொடூரக் காட்சி மனதை உருக்குவதாக உள்ளது. எரிகிறவை அனைத்தும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்கள்.

    டெல்லியின் புள்ளிவிவரங்கள் வேறு மாதிரியாக இருந்தாலும், அங்கு எரியும் சடலங்கள் கூறும் கொடுமை உண்மையான நிலையை காண்பிக்கிறது.

  10. ஆக்சிஜன் கொள்ளளவை ஒரே ஆண்டில் அதிகரித்த மதுரை: எப்படி?, முரளிதரன் காசிவிஸ்வநாதன், பிபிசி தமிழ்

    மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள்.
    படக்குறிப்பு, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள்.

    நாடு முழுவதும் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் திணறிவரும் நிலையில்,மதுரை அரசு தலைமை மருத்துமனையில் ஆக்சிஜன் சேமிப்பு வசதி அதிகரிக்கப்பட்டு, ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது நடந்தது எப்படி?

  11. கொரோனாவின் கோரப்பிடியில் கோவை நகரம், ஹரிஹரன், பிபிசி தமிழுக்காக, கோவையிலிருந்து

    கோவை

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா பெருந்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து வருகிறது. கடந்த 7 நாட்களாக, மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 59 சதவீதம் பேர் கோவை மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் தொகை அதிகமாகக் கொண்ட கோவைமாநகரப்பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது பொதுமக்களை மட்டுமின்றி, அரசு நிர்வாகத்தையும் திக்குமுக்காடச் செய்துள்ளது.

    அரசின் பொதுமுடக்க கட்டுப்பாடுகளின்படி வணிக வளாகங்களும், திரையரங்கங்களும் மூடப்பட்டாலும் கோவை நகரப்பகுதியில் அமைந்துள்ள பேருந்துநிலையங்கள், காய்கறிச்சந்தைகள் மற்றும் மலர்சந்தை ஆகிய பகுதிகளில் கூடும் மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரும் திணறிவருகின்றனர்.

    இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறைந்த கோவையில், மீண்டும் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகமாகி வருவதால் உற்பத்தி தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துறையையே வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் வடமாநிலத்தொழிலாளர்கள் பலர் மீண்டும் சொந்த மாநிலங்களுக்கு செல்லத்துவங்கியுள்ளனர்.

    இதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை உற்பத்தி தொழில்துறையினரும், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை சார்ந்தவர்களும் வருவாய் இழந்து வருகின்றனர்.

    கோவையில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் மட்டுமின்றி கொடிசியா தொழில் வளாகம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் திருமண மண்டபங்களில் சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் கைஇருப்பு அதிகமாகவே இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக தற்போது அரசுத்துறைகள் காட்டும் அக்கறையை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் காட்டியிருக்கலாம் என கோவை மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    கடந்த பிப்ரவரி மாதத்தில், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தலைமையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் கோவையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  12. ஆக்சிஜன் தட்டுப்பாடு: எங்கே தவறவிட்டது இந்தியா? ஏன் இந்த நிலை?

    மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா, குஜராத், வட இந்தியாவின் ஹரியாணா, நடுப் பகுதியின் மத்தியப் பிரதேசம் என பல மாநிலங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒருசில மருத்துவமனைகளின் வாசல்களில் "ஆக்சிஜன் இருப்பு இல்லை" என்ற அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் தலைநகரான லக்னோ மருத்துவமனைகள் நோயாளிகள் வேறு இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றன.

    ஆக்சிஜன் தட்டுப்பாடு: எங்கே தவறவிட்டது இந்தியா? ஏன் இந்த நிலை?

    பட மூலாதாரம், Getty Images

  13. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

    தடுப்பூசி

    பட மூலாதாரம், Getty Images

    மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி வழங்கப்படும்.

    இதில் நேரடியாக மருத்துவமனைக்கோ, தடுப்பூசி மையத்திற்கோ சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாது. அதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

    - www.cowin.gov.in என்ற பக்கத்திற்கு சென்று உங்கள் மொபைல் நம்பரை டைப் செய்யுங்கள்

    - உங்களுக்கு ஒரு OTP எண் வரும்.

    - OTP எண்ணை பதிவிட்ட பிறகு, உங்களை ஒரு பதிவு விண்ணப்பம் பக்கத்திற்கு அழைத்து செல்லும்.

    - அதில் உங்களது தகவல்களை நீங்கள் கொடுத்து, புகைப்படத்துடனான அடையாள அட்டையையும் பதிவிட வேண்டும்.

    - அனைத்து தகவல்களையும் கொடுத்த பிறகு, ரெஜிஸ்டர் என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

    - அதற்கு பிறகு உங்கள் கணக்கை நீங்கள் பார்க்கலாம்.

    இதற்கு முன்பும் இவ்வாறு பதிவு செய்யக்கூடிய தளத்தை அரசு செய்து கொடுத்திருந்தாலும், இது கட்டாயமாக்கப்படவில்லை. உதாரணமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதில் பதிவு செய்யாமல் கூட நேரடியாக மருத்துவமனைக்கோ அல்லது தடுப்பூசி மையத்திற்கோ சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

    ஆனால், தற்போது மூன்றாம் கட்டத்தில் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    எனினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்யாமல் நேரடியாக சென்று கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

  14. கொரோனா இரண்டாவது அலை: நோயாளிகள் உடலில் என்ன நடக்கிறது?

    தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் என்ன வித்தியாசம்? எவ்விதமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது?

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

  15. இந்தியாவில் கொரோனா நிலவரம்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    இன்று இந்த நேரலை பக்கத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு நிலை குறித்து நாம் பார்க்கவிருக்கிறோம்.

    கடந்த 4 நாட்களாக தொடர்ந்து இந்தியாவின் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி வருகிறது.

    இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நிலைமை சற்று மோசமாகவே உள்ளது. படுக்கை, ஆக்சிஜன் போன்றவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

    இன்று இந்த நேரலை பக்கத்தில் கொரோனா பாதிப்பு நிலை, மருத்துவர்களின் அறிவுரைகள் உள்ளிட்ட பல விஷயங்களை பிபிசி தமிழ் வழங்குகிறது.