You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: 71.79 சதவீத வாக்குப்பதிவு - சென்னையில் குறைந்த பட்ச வாக்குப்பதிவு

தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி!

    தமிழக, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் அசாம் குறித்த தேர்தல் செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொண்டீர்கள். எங்களுடன் இணைந்ததற்கு நன்றி!

  2. வாக்கு சதவீதம்

    தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 78 சதவீதமும் சென்னையில் குறைபட்சமாக 59.40 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

  3. புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் மொத்தமாக 81.63 % வாக்குகள் பதிவாகியுள்ளது

    புதுச்சேரி - 81.91 %

    காரைக்கால் - 80.08%

    மாஹே - 73.53%

    ஏனாம் - 90.72 %

  4. கனிமொழி அவசர ஊர்தியில் வந்து பிபிஇ உடையுடன் வாக்களிப்பு

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, 7 மணி வரையிலான நிலவரம்

    தமிழகத்தில் 7 மணி நேர நிலவரப்படி 71.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

  6. முழுக்க முழுக்க பெண்கள் பொறுப்பில் இருந்த வாக்குச்சாவடி

    சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் மணக்காடு மகளிர்மேல்நிலைப்பள்ளியில் 12 ஆவது டிவிஷனுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 75, பெண்களுக்கான வாக்குச்சாவடியாக நிர்ணயிக்கப்பட்டது.

    தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட முகவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் என அந்த வாக்குச்சாவடி மையம் முழுவதும் பெண்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கத்து.

    இந்த வாக்குச்சாவடி மையத்தில் மொத்தம் 587 பெண் வாக்காளர்கள் இருந்த நிலையில் 382 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

    முழுக்க முழுக்க பெண்களே வாக்குச்சாவடி மையத்தில் இருந்ததால் இந்த வாக்குச்சாவடி மையம் முழுவதும் பலூன் மற்றும் பூக்கள் உள்ளிட்ட பொருட்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

  7. குறைந்த வாக்குப்பதிவு யாருக்கு சாதகம்? பிபிசி தமிழ் சிறப்பு நேரலை

  8. சத்தியமங்கலம் அருகே 49பி சட்டப்பிரிவு மூலம் வாக்கை பதிவு செய்த இளைஞர்

    சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் 32 வயது சரவணன், ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிசெய்து வருகிறார்.

    இன்று பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெஞ்சனூர்அரசு பள்ளியில் பாகம் எண் 128, வரிசை எண் 285-ல் சரவணன் வாக்களிக்க சென்று தனது அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அப்போது அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் உங்களது வாக்கை வேறு ஒருவர் பதிவு செய்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.

    எனவே அதிர்ச்சியடைந்த சரவணன் எனது வாக்கை வேறு ஒருவர் எப்படி பதிவு செய்யலாம் என கேட்டு வாக்குவாதம் செய்தார்.

    இது குறித்து பேசிய சரவணன்,“ஒவ்வொரு தேர்தலின் போதும் தவறாமல் வாக்களித்து வருகிறேன். இன்றுவாக்கு பதிவு செய்ய வந்த போது எனது வாக்கை மற்றொருவர் பதிவு செய்து உள்ளார் என கூறியதை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.அதிகாரிகள் சர்வ சாதாரணமாக போட்டோவை எல்லாம் சரிபார்க்க மாட்டோம் எனதெரிவித்துவிட்டனர். பின்பு நான் கலெக்டர் அலுவலகத்தில் பணி செய்கிறேன் என விவரத்தை கூறி அடையாள அட்டையை காண்பித்த பிறகு என்னை சமாதானம் செய்து தேர்தல் சட்ட பிரிவு 49 பி-ன் படி படிவம் 17 பி யை நிரப்பி டெண்டர் ஓட்டு போட அனுமதித்தனர்.” என்று தெரிவித்தார்.

  9. தமிழ்நாடு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திரமாநிலத்தைசேர்ந்த காவலர் ஒருவர் வாக்குப்பதிவு செய்ய வந்த பெண் ஒருவரின் ஒரு மாத குழந்தையை அவர் வரும் வரை கையில் தூக்கிவைத்துகவனித்துக்கொண்டார். இந்த தகவலை ஆந்திர மாநில காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

  10. ஆர்வமாக வாக்களித்த 105 வயது முதியவர்

    கொரோனா காலத்திலும் தவறாது நேரில் வந்து வாக்குப்பதிவு செய்த கோவையை சேர்ந்த 105 வயது தாத்தா சொல்வது என்ன?

  11. அசாமில் மூன்றாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, வாக்குப்பதிவு நிறைவடைந்தது

    இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழகத்தில் பதிவாகிய வாக்கு சதவீதம் சற்று நேரத்தில் அறிவிக்கப்படும்.

  13. புதுச்சேரிகலாப்பட்டுதொகுதியில்கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட59 வயது ஆரம்ப சுகாதாரத்துறை மூத்த செவிலியர் ஒருவர் பாதுகாப்பு கவச உடையணிந்து தனதுவாக்கினைபதிவு செய்தார்.

  14. தேர்தல் நாளன்றும் சபரிமலை பற்றி விவாதம்

    கேரளா சட்டமன்ற தேர்தலில் சபரி மலைக்குள் பெண்கள் நுழைய அனுமதிக்கப்பட்டது ஒரு முக்கிய பேசுபொருளாக உள்ளது.

    மக்களின் நலனுக்காக பாடுபட்ட இடதுசாரி அரசின் பக்கம் சபரிமலை ஐயப்பனும் பிற கடவுள்களும் உள்ளதாக இன்று கூறியுள்ளார் முதலமைச்சர் பினராயி விஜயன்.

    ஐயப்பன் மற்றும் அவரது பக்தர்களின் கோபத்தை நிச்சயம் இடதுசாரி அரசு எதிர்கொள்ளும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க் கட்சித் ரமேஷ் செனித்தலா கூறியுள்ளார்.

    மூன்று ஆண்டுகளுக்கு முன் விஜயன் சபரிமலையில் செய்தவை 'சாத்தானின் காரியங்கள்' என்று பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரனும் இன்று விமர்சித்துள்ளார்.

  15. "இளைஞர்கள் வாக்களிக்க வரவேண்டும்"

    "இளைஞர்கள் வாக்களிக்க வரவேண்டும். இளைய சமுதாயத்தினரிடம் மட்டுமே நாங்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தை எதிர்பார்க்கிறோம்,"

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, பிபிஇ கிட் அணிந்து வாக்களித்தார் கனிமொழி

    திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்களித்துள்ளார்.

    கொரோனா நோயாளிகள் மாலை 6 -7 மணி வரை வாக்களிக்கலாம் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  17. மேற்கு வங்கத்தில் நரேந்திர மோதி பரப்புரை

    மேற்கு வங்க மாநிலத்தில் சில தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் அதே வேளையில் நான்கு முதல் எட்டாம் கட்டம் வரை தேர்தலை எதிர்கொள்ளும் தொகுதிகளுக்கு பரப்புரை நடந்து வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோதி இன்று மேற்கு வங்க மாநிலம் ஹௌராவில் நடந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

    தேர்தலில் அவருக்கு வரவுள்ள தோல்வி உண்டாக்கிய வெறுப்பால் மாநில முதல்வர் மமதா பானர்ஜி தம்மைத் தாக்கிப் பேசுவதாக அப்போது நரேந்திர மோதி தெரிவித்தார்.

  18. தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரம்

    தமிழ்நாட்டில் மாலை 5 மணி வரை 63.60% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

    அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79 % வாக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 69.6 % வாக்குப்பதிவு நடந்துள்ளது.

    குறைந்தபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 50.05 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

  19. தமிழ்நாட்டில் இன்று நடந்தவை - ஓர் அலசல்

    தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து பிபிசி தமிழின் சிறப்பு ஃபேஸ்புக் நேரலை.

  20. முதல்வர் சொந்த ஊரில் வாக்களித்த மூதாட்டி

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட, சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வாக்களித்தனர்.

    அப்போது சிலுவம்பாளையத்தை சேர்ந்த 97 வயதான லட்சுமி பாட்டி சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து தன் ஜனநாயக கடமையாற்றினார்