You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் ஓரிரு வாரங்களாக தினசரி உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கொரோனா வைரசும், இஸ்லாமிய வெறுப்பும், விஷ்வ இந்து பரிஷத் நிர்வாக தலைவர் அலோக் குமார் நேர்காணல்

    கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன.

    முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டிக்காரர்களிடம் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

    இதுபோன்ற முஸ்லிம் எதிர்ப்பு காணொளிகள் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா, பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களின் பல இடங்களிலிருந்து வெளிவருகின்றன. 'முஸ்லிம்கள் கொரோனாவைப் பரப்புகிறார்கள்' என்பது போன்ற வதந்திகளும் பரப்பப்படுகின்றன.

    ஜாம்ஷெட்பூரில் விஷ்வ இந்து பரிஷத்தின் பதாகை மற்றும் நாலந்தாவில் பஜ்ரங் தளத்தின் காவிக் கொடிகள் மூலம், காய்கனிகளை விற்பவர்களுக்கு 'இந்துக்களின் கடை' என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விஷயம் சூடுபிடித்தபோது, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சுகாதார நெருக்கடியின் தற்போதைய கடினமான காலகட்டத்திலும் பிரிவினைவாதம் பரப்புவது ஏன்?

  2. ’இந்த ஆண்டிற்குள் அமெரிக்காவிடம் தடுப்பு மருந்து’

    அமெரிக்காவிடம் 2021ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து இருக்கும் என தான் நம்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    “இந்த வருடத்தின் இறுதிக்குள் எங்களிடம் தடுப்பு மருந்து இருக்கும் என நான் உறுதியாக இருக்கிறேன்,” என அவர் ஃபாக்ஸ் நியூஸ் டைவுன் ஹால் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

    உலகமுழுவதும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இருப்பினும் கிட்டதட்ட அனைத்து விஞ்ஞானிகளும், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து 2021 ஆம் ஆண்டுதான் பொது மக்களுக்கு வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

    தனது மருத்துவ ஆலோசகர்களைக்காட்டிலும் தான் முன்னதாக இதை அறிவிப்பதாக ஒப்புக் கொண்ட டிரம்ப், “நீங்கள் அதை கூறக்கூடாது என மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் நான் என்ன நினைக்கிறேனோ அதை நான் சொல்லுவேன்.” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

  3. கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்த பின் இந்தியா எந்த திசையில் பயணிக்கும்?

  4. உலக நாடுகளில் நிலவரம் என்ன?

    பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் பல வாரங்களாக கொரோனோ வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் தினசரி எண்ணிக்கை குறைந்துள்ளது.

    இந்த நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுத்துள்ளன.

    பிரான்ஸில் 135 பேர் உயிரிழந்துள்ளனர்; ஸ்பெயினில் 164 பேர் உயிரிழந்துள்ளனர்; இத்தாலியில் 174 பேர் உயிரிழந்துள்ளனர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

    ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. அந்த நாட்டில் புதிதாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ரஷ்யாவில் இதுவரை 1280 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

    பிரிட்டனில் புதிதாக 315 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக பிரிட்டனில்தான் கொரோனா தொற்றால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர்.இருப்பினும் பிரிட்டனில் கொரோனா தொற்று உச்சநிலையைக் கடந்துவிட்டது என்றும், புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  5. தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயா்ந்தது

  6. கொரோனா வைரஸ்: ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது அனைவருக்கும் கட்டாயமா?

    கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலகின் அனைத்து நாடுகளைப் போலவே, இந்தியாவும் பொது முடக்கநிலை முறையை பின்பற்றியுள்ளது. மார்ச் 25 முதல் நாட்டில் முடக்கநிலை அமலில் உள்ளது. தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசு, தொற்று பரவாமல் தடுப்பதற்காக தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது.

    இந்திய அரசு ஏப்ரல் 2ம் தேதி ஆரோக்கிய சேது செயலியை அறிமுகப்படுத்தியது.

    இந்த செயலியின் உதவியால், அருகிலுள்ள கோவிட் 19 நோயாளிகள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

    மத்திய அரசின் பத்திரிகை தொடர்பு அமைப்பின் (PIB) இணையதளத்தில் உள்ள ஆரோக்ய சேது செயலி தொடர்பான தகவல்களின்படி, கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதற்கான அபாயத்தை மதிப்பிடுவதற்கும், தேவைப்பட்டால் தனிமைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் இந்த செயலி உதவியாக இருக்கும்.

  7. கொரோனா வைரஸ் குறித்த நேற்றைய முக்கிய செய்திகள்

    · சிங்கப்பூரில் புதிதாக 657 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மொத்த எண்ணிக்கை 18,205ஆக அதிகரித்தது.

    · தாய்லாந்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அமலில் உள்ள முடக்க நிலையை தளர்த்தும் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகள், முடித்திருந்தகங்கள், சில விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன.

    · இரானில் கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக மார்ச் மாதத்தின் மத்திய பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ள சில மசூதிகள் இன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    · கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கடந்த மார்ச் 18ஆம் தேதியிலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மிக குறைந்த தினசரி உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

    · ரஷ்யாவில் நேற்று மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ரஷ்யாவில் ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச பாதிப்பு இதுவே ஆகும்.

    · இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263ஆக அதிகரித்துள்ளது நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 2,487 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

    · தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 203 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  8. காலை வணக்கம் நேயர்களே, பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

    கொரோனா வைரஸ் தொடர்பான தமிழக, இந்திய மற்றும் சர்வதேச செய்திகளை உங்களுக்காக பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்கள் மு. நியாஸ் அகமதுவும், விஷ்ணுப்ரியா ராஜசேகரும் தொகுத்து வழங்குகிறோம்.

    கொரோனா தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.