நரேந்திர மோதி இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமரானார்; 57 பேர் அமைச்சர் பதவியேற்பு
இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமராக மீண்டும் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்க இருக்கிறார் நரேந்திர மோதி. இந்த நிகழ்வில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரும் விருந்தினர்கள்
பாஜக மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர், தொழில் அதிபர் ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, ஜக்கி வாசுதேவ், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருக்கும் முக்கியப் பிரமுகர்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்துள்ளனர்.
யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி?
முந்தைய அமைச்சரவையில் அங்கம் வகித்த நிதின் கட்கரி, சதானந்த கௌடா, தர்மேந்திர பிரதான், முக்தர் அப்பாஸ் நக்வி, கிரிராஜ் சிங், பாபுல் சுப்ரியோ உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கிறது.
பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பிரகாஷ் ஜாவடேகர், சந்தோஷ் கங்வார், உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ரமேஷ் பொகாரியா நிஷாங்க், மக்களவைக்கு தேர்வாகியுள்ள அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் பதவியேற்பு விழாவின்போது இருக்கும்படி தங்களுக்கு அழைப்பு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர் என்று ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
ரகாஷ் ஜாவடேகர், சந்தோஷ் கங்வார் ஆகியோர் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நிதின் கட்கரி
குடியரசுத் தலைவர்கள் மாளிகைக்கு வருகை
பதவியேற்பு விழாவுக்காக டெல்லி வந்துள்ள வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தர தொடங்கியுள்ளனர்.
டெல்லி வந்த இலங்கை அதிபர்
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, நரேந்திர மோதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள
டெல்லி வந்துள்ளார். அவரை இந்திய வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
பட மூலாதாரம், PMD News
அமைச்சரவையில் அமித் ஷா
குஜராத் மாநில பாஜக தலைவர் ஜித்து வாகனி நரேந்திர மோதியின் அமைச்சரவையில் பங்கேற்கவுள்ள அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பதவியேற்பு விழாவுக்கு தயாராகி வரும் குடியரசுத் தலைவர் மாளிகை
இன்று மாலை ஏழு மணிக்கு இந்திய பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்க உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பட மூலாதாரம், ANI
பட மூலாதாரம், ANI
பட மூலாதாரம், ANI
நேபாள பிரதமர் டெல்லி வருகை
நரேந்திர
மோதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நேபாள பிரதமர் கே.பி ஷர்மா இந்தியாவுக்கு
வந்துள்ளார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, நேபாள் பிரதமர் கே.பி ஷர்மா
கடைசி கட்ட ஆலோசனையில் மோதி – ஷா
நாட்டின் பிரதமராக
நரேந்திர மோதி இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில், பாஜக தலைவர் அமித் ஷாவுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தி
வருகிறார். அமைச்சரவை அமைப்பது குறித்து அவர்கள் பேசி வருகின்றனர்.
கேபினட்
அமைச்சர்கள் விரைவில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்வார்கள் என்று தெரிகிறது. நடந்து
முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், நரேந்திர மோதி இரண்டாவது முறையாக மாலை ஏழு மணிக்கு பதவி ஏற்கவுள்ளார். அப்போது
அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்வார்கள்.
புதிய அமைச்சரவை
அமைப்பக்கப்பட உள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக
மோதி மற்றும் அமித் ஷா பல கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
புதிய அமைச்சரவையில் பெரும்பாலும் கூட்டணி கட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்றும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள புதிய பலத்தை இது
பிரதிபலிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம்,
அதிமுக, லோக் ஜனசக்தி கட்சி, அகாலி தளம்,
அப்னா தளம் உள்ளிட்ட பாஜகவின் கூட்டணி கட்சிகள் இதில் இடம்
பெற உள்ளனர்.
பாஜகவுடன்
கைக்கோர்த்த ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் ஒரு அமைச்சரவை பதவி வழங்கப்படும் என்று
தெரிகிறது.
மும்பையில்
காங்கிரஸின் மிலிந்த் தியோராவை வீழ்த்தி வெற்றி பெற்ற சிவசேனாவின் அரவிந்த
சாவந்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறதாக அக்கட்சி உறுதிபடுத்தியுள்ளது.
அதே போல லோக்
ஜனசக்தி கட்சியின் ராம் விலாஸ் பஸ்வானும் அமைச்சரவையில் இடம் பெற அக்கட்சி
பரிந்துரைத்துள்ளது.
நிதி அமைச்சராக
இருந்த அருண் ஜேட்லி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவரது இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு முன்பு பட்ஜெட்
தாக்கல் செய்து ஜேட்லிக்கு பதிலாக அந்த பொறுப்பை வகித்த சுரேஷ் பிரபு, இதற்கு முக்கிய
போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.
காந்திநகர்
மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று, பாஜகவின் இமாலய
வெற்றிக்கு காரணமாக கூறப்படும் அமித் ஷாவுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம்
என்று பேச்சுவார்த்தை நிலவுகிறது.
அப்படி அமித்ஷாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றால், நிதித்துறை,
உள்துறை, பாதுகாப்பு அல்லது
வெளியுறவுத்துறை என்ற நான்கு முக்கிய துறைகளில் ஒன்று அவருக்கு வழங்கப்படலாம்
என்று தெரிகிறது.
கடந்த
அமைச்சரவையில் இடம்பெற்ற அக்கட்சியின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி,
நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் டோமர், பிரகாஷ் ஜவதேகர்,
ரவி சங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான்
மற்றும் ஸ்மிரிதி இரானி ஆகியோர் இதில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸின்
கோட்டையாக கருதப்பட்ட அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஸ்மிரிதி
இரானி தோற்கடித்தார்.
இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள இந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில், வங்காள வரிகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள நாட்டுத் தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்கள்
உள்ளிட்ட சுமார்
8000 விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
நரேந்திர மோதி
மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து
வைப்பார்.