"நீதித் துறையைக் களங்கப்படுத்தும் கீழ்த்தரமான செயல்": ஓபிஎஸ்-க்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

தங்கள் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் கோரியது நீதித்துறையைக் களங்கப்படுத்தும் கீழ்த்தரமான செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. முன்னறிவிப்பின்றி அணைகளில் அதிக நீர் திறப்பு கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், @CMOTamilnadu / Twitter

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை குறித்து திருச்சி, கரூர், சேலம் உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது,

    • காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் உடனே தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
    • பயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டிருந்தால் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
    • மேற்கண்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.
    • போதிய உள்ளூர் அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக் கூடாது என்றும், குறிப்பாக இரவு நேரத்தில் தண்ணீர் அளவினை வெளியேற்றுவதை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
    • பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கு பால், ரொட்டி போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யவும் தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை அமைக்கவும் தேவைப்படும் இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கிடவும் அறிவுறுத்தினார்.
  2. இலங்கை கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி சூடு

    துப்பாக்கிச்சூடு

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    கொழும்பு புறநகர் பகுதியான கல்கிஸ்ஸை பகுதியிலுள்ள நீதிமன்ற கட்டிடத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

    போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. விசாரணை கூட்டில் பிரதிவாதி இருந்தவாறு, வாக்குமூலம் வழங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளார்.

    பிரதிவாதியை இலக்கு வைத்து, இரண்டு தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும், எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

    அதனைத் தொடர்ந்து, மேல் நோக்கி மற்றுமொரு துப்பாக்கி சூட்டை நடத்தியவாறு, சந்தேகநபர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

  3. தமிழ்நாடு மீனவர்கள் 6 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை

    கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 6 பேரை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது.

    கடந்த ஜூலை 20ம் தேதி தூதர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற தங்கபாண்டி, பாலமுருகன், மடுகு பிச்சை, அந்தோணி உட்பட ஆறு பேரையும் அவர்கள் சென்ற ஒரு படகையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனர்.

    இந்த மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நிரஞ்சனி முரளிதரன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

    மேலும் மீனவர்கள் பயன்படுத்திய படகுக்கான வழக்கு வரும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் படகு உரிமையாளர் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் படகின் உரிமையாளர் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் படகு இலங்கை அரசுடைமையாக்கப்படும் என தீர்ப்பளித்தார்.

    இதனையடுத்து வவுனியா சிறையில் இருந்து 6 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறு பேரும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  4. தைவானில் பன்னாட்டு விமானங்கள் ரத்து

    தைவான்

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி தைவானுக்கு சென்றுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானின் கிழக்கு கடற்கரையை நோக்கி சீனா ஏவுகணை வீசியுள்ளதாகவும், அது இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் சீன அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    தைவானைச் சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் சீன ராணுவம் இப்போது தைவான் நீரிணையில் குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அப்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, தைவானின் தௌயுவான் சர்வதேச விமான நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பன்னாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த விமானங்களில் தைவானுக்கு வரும் 26 விமானங்களும் தௌயுவான் விமான நிலையத்திலிருந்து புறப்படும் 25 விமானங்களும் அடக்கம்.

    தென்கொரியாவைச் சேர்ந்த கொரிய விமான சேவையும் தைவானுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஆக. 05, 06) செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளது. அதேபோன்று, வெள்ளிக்கிழமை தைவானுக்கு நேரடியாக செல்லும் விமானத்தை ஏசியானா ஏர்லைன்ஸ் ரத்து செய்துள்ளது.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, தைவானை நோக்கி ஏவுகணை வீசிய சீனா

    சீனா - தைவான்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி தைவானுக்கு சென்றுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானின் கிழக்கு கடற்கரையை நோக்கி சீனா ஏவுகணை வீசியுள்ளதாகவும், அது இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் சீன அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    தைவான் தங்களது ஆட்சிக்கு உள்பட்ட பிரதேசம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அமெரிக்கா இதை ஏற்கவில்லை.

    கடந்த 25 ஆண்டுகளில் தைவானுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் மிக மூத்த அமெரிக்க அரசியல்வாதி நான்சி பெலோசி.

    "நான்சி பெலோசியின் பயணம் சர்ச்சையையோ, மோதலையோ ஏற்படுத்துவதற்கான எந்தக் காரணமும் இல்லை" என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புச் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

    தைவானில் வந்திறங்கிய நான்சி பெலோசி, தனது பயணம் நீண்ட கால அமெரிக்காவின் கொள்கைக்கு இசைவானது என்றும் எந்த நாட்டின் இறையாண்மையையும் மீறவில்லை என்றும் கூறியுள்ளார்.

    நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவானுக்குச் சென்றிருக்கிறார். இது மிகவும் ஆபத்தானது என்று சீனா முன்னதாக கூறியிருந்தது.

    இந்நிலையில், நான்சி பெலோசி தைவானுக்கு சென்றுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா ஏவுகணை வீசியுள்ளது.

    தைவானை சுற்றி வளைத்த சீனா: போர் ஒத்திகையால் பதற்றம் ஏற்பட்டுள்ளதை விவரிக்கும் கட்டுரையை படிக்க இங்கே சொடுக்குங்கள்:

  6. இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில் மோதி 45 யானைகள் பலி

    யானை உயிரிழப்பு

    பட மூலாதாரம், GETTY IMAGES

    இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 45 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் யானைகள் இறப்பு தொடர்பாகவும் அதனை தடுக்க ரயில்வே அமைச்சகம் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் எதுவும் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

    அதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சகம் யானைகள் இறப்பை தடுக்க சுரங்கப்பாதை அமைக்க எந்தத் திட்டமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், மண்டல வாரியாக கடந்த மூன்று ஆண்டுகளில் 45 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    யானைகள் உயிரிழப்பு

    பட மூலாதாரம், Ramalingam S, MP

    படக்குறிப்பு, யானைகள் உயிரிழப்பு விவரம்
  7. கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் பலி, தனியார் மருத்துவமனைக்கு சீல்

    கள்ளக்குறிச்சியில் மூன்றாவது முறையாக கருக்கலைப்பு செய்த போது உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருந்த நிலையில், மருத்துவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சட்டத்துக்கு புறமாக கருக்கலைப்பு செய்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  8. வைகை அணை: ஏழு மதகுகள் வழியாக உபரி நீர் திறப்பு - ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    வைகை அணை

    வைகை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் 136 அடியை தாண்டியது.

    இதைத்தொடர்ந்து ரூல்கர்வ் (நீர்தேக்கத்தில் நிலைநிறுத்தக்கூடிய நீர் அளவு மற்றும் செயல்பாடு அட்டவணை) நடைமுறைப்படுத்தப்பட்டு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனிடையே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வராக நதி மற்றும் மூல வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன்காரணமாக வைகை அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    வைகை அணை

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 70 அடிக்கு தண்ணீர் அதிகரித்துள்ளதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வைகை ஆற்றின் ஐந்து மாவட்டங்களைச் சார்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை இரண்டு கட்டங்களாக விடுக்கப்பட்ட நிலையில், இன்று இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வெள்ளை அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

    தற்போது அணைக்கு 1,190 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், நீர்மட்டம் நேற்று மாலை 70 அடி வரை உயர்ந்த நிலையில், உபரி நீர் அணையின் 7 மதகுகள் வழியாக இன்று காலை திறக்கப்பட்டது.

    எனவே, பொதுமக்கள் யாரும் குளிப்பதற்கோ துணி துவைப்பதற்கோ வைகை ஆற்றின் கரையோரம் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  9. பிலிகுண்டுலுவிற்கு வரும் காவிரி நீரின் அளவு விநாடிக்கு 2,00,000 கன அடியாக உயர்வு

    தமிழ்நாட்டில் காவிரி நுழையும் இடமான பிலிகுண்டுலுவிற்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,75,000 கன அடியிலிருந்து 2,00,000 கன அடியாக உயர்வு. மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

  10. தமிழ்நாடு அரசின் ஆழியாறு - ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை எதிர்த்து கேரளாவில் கடையடைப்பு

    கடையடைப்புப் போராட்டம்

    பட மூலாதாரம், Sumesh Achuthan

    தமிழ்நாடு அரசின் ஆழியாறு - ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை எதிர்த்து கேரளாவில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது ஆழியாறு அணை. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடியது ஆழியாறு அணை.

    தமிழ்நாடு அரசு சமீபத்தில் ஆழியாறு அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுத்துச் செல்ல புதிய திட்டத்தை அறிவித்திருந்தது. ரூ.930 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், ஆழியாறு - ஒட்டன்சத்திரம் திட்டத்திற்கு பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் இந்தத் திட்டத்திற்கு கேரளாவிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்தத் திட்டம் தமிழ்நாடு, கேரள அரசின் பரம்பிக்குளம் - ஆழியாறு இரு மாநில ஒப்பந்தத்திற்கு விரோதமாக அமைந்துள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பாலக்காடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகளும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    ஆனால், கேரள அரசு இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை கைவிட ஏற்கெனவே பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், இன்று பாலக்காடு மாவட்டம் சித்தூர், நெம்மாறை தாலுகாவில் ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    ஆழியாறு - ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு ஏன் என்பது குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே சொடுக்குங்கள்:

  11. அருவியில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர் வழுக்கி விழுந்து மாயம்

    அருவியில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர் மாயம்

    திண்டுக்கல் அருகே பெரும்பாறை புல்லாவெளி நீர்வீழ்ச்சி பகுதியில் அஜய் பாண்டியன் என்ற இளைஞர் கொஞ்சம், கொஞ்சமாக கீழே இறங்கி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். திடீரென பாறையில் கால் வழுக்கி அவர் நீர்வீழ்ச்சிக்குள் தவறி விழுந்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் மற்றும் ஆத்தூர் தீயணைப்பு துறையினர் அஜய் பாண்டியை தேடும் முயற்சியில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக நேற்று (ஆக. 03) தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று (ஆக. 04) திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு மழை பொழிவதால் அருவியில் அதிக அளவு தண்ணீர் வருகிறது. இந்த நேரத்தில் வனத்துறை சோதனைச்சாவடி வழியாக நீர்வீழ்ச்சிக்கு வரும் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  12. குற்ற வழக்குகளில் எத்தனை பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன? - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

    குற்ற வழக்குகளில் எத்தனை பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன, எத்தனை பரிசோதனை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என, 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் அருண் சுவாமிநாதன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அரசு மருத்துவமனைகளில் தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் தான் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

    ஆனால், மதுரை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய 3 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே தடயவியல் நிபுணர்கள் பணிபுரிகின்றனர். பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என 2008ம் ஆண்டின் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வு, "குற்ற வழக்குகளில் எத்தனை பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன? எத்தனை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன?" என்பது குறித்து மதுரை தலைமை குற்றவியல் நடுவர் 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

  13. வணக்கம் நேயர்களே

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை எம். ஆர். ஷோபனா வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். தொடர்ந்து இணைந்திருங்கள்.

  14. கோவையில் 100 ஆண்டுகள் பழமையான கோயில் சுவர் இடிப்பு - எதிர்ப்பால் பரபரப்பு

    கோவை

    கோவை மாவட்டம் அவினாசி சாலையில் அமைந்துள்ள கே.எம்.சி.ஹச் மருத்துவமனை அருகே நூறு ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் ஒன்றை மாநகராட்சி அதிகாரிகள் இடிப்பதாக தகவல் பரவிய நிலையில் இந்து முன்னணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கோவிலை இடிக்கவில்லை, கோவில் சுற்றுச் சுவரைதான் இடிப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் தாக்கல் செய்த வழக்கில் கோவில் சுற்றுச் சுவரை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    நீதிமன்றத்தின் உத்தரவையே அமல்படுத்துவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன் பின்னர், கோவிலின் சுற்றுச்சுவரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

    கோவை
  15. முதல் முறையாக விடுதியில் தங்கிய மாணவி - மன உளைச்சலில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி

    திண்டுக்கல் மாவட்டம்

    திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரி விடுதியில் சேர்ந்துள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், புதிதாக சேர்ந்த விடுதியில் பெற்றோரின் நினைவாகவே இருந்துள்ளார். வீட்டு நினைவால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் திடீர் என்று விடுதி மாடியில் இருந்து குதித்து உள்ளார்.

    இதில் அவருக்கு கால் எலும்பு மற்றும் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. காயமடைந்த அவரை விடுதி நிர்வாகிகள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

    தகவல் அறிந்த திருச்சி கோட்டை போலீசார் மாணவி, விடுதி நிர்வாகிகள் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணை முழுமையாக நடந்து முடிந்த நிலையில் கல்லுாரி நிர்வாகமோ, பெற்றோரோ புகார் அளிக்க முன்வராததால் திருச்சி மாநகர போலீசார் இது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

  16. இந்திய மீனவர்கள் 6 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    இந்திய மீனவர்கள்

    கடந்த 20ந்தேதி தூதர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற தங்கபாண்டி, பாலமுருகன், மடுகு பிச்சை, அந்தோணி, உட்பட ஆறு பேரையும் அவர்கள் சென்ற ஒரு படகையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனர்.

    மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி நிரஞ்சனி முரளிதரன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய படகுக்கான வழக்கு வரும் செப்டம்பர் மாதம் 29ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் படகு உரிமையாளர் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் படகின் உரிமையாளர் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகா விட்டால் படகு இலங்கை அரசுடமையாக்கப்படும் என தீர்ப்பளித்தார். இதனையடுத்து வவுனிய சிறையில் இருந்து 6 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறு பேரும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

  17. மனைவியின் ஆசைக்காக பிரமாண்டமாக இறுதி ஊர்வலம் நடத்திய கணவன்

    குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில் வசிக்கும் ஸ்ரீநாத் சோலங்கி, தன் காதல் மனைவி மோனிகாவின் ஆசைக்காக, பிரமாண்டமாக மேள தாளங்களுடன் இறுதி ஊர்வலம் நடத்தியுள்ளார்.

    காணொளிக் குறிப்பு, மனைவியின் ஆசைக்காக பிரமாண்டமாக இறுதி ஊர்வலம் நடத்திய கணவன்
  18. பெரியார் சிலையை உடைக்கச் சொல்லிய கனல் கண்ணன் மீது வழக்கு

    கனல் கண்ணன்

    பட மூலாதாரம், SCREENGRAB

    திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநிலச் செயலாளருமான கனல் கண்ணன் மீது சென்னை சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இந்து முன்னணி அமைப்பு கடந்த ஒரு மாதமாக‘இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம்’ என்ற தொடர் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இந்தப் பிரச்சார பயணம் நிறைவடைந்ததை ஒட்டி, சென்னை மதுரவாயலில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனல் கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.

    அவர் பேசும்போது, "ஸ்ரீ ரங்கநாதனைக் கும்பிட ஒரு லட்சம் பேர் சாமி கும்பிட்டுவிட்டு வருகிறார்கள். அங்கே எதிரே இருக்கின்ற ஒரு சிலை, கடவுளே இல்லை என்று சொன்னவருடைய சிலை. அது என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்," என்று பேசினார்.

    அவருடைய இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது. இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

    அந்தப் புகாரின் அடிப்படையில் 153, 505/1b (கலகம் செய்யத் தூண்டுதல், பொது அமைதியை சீர்குலைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    கனல் கண்ணனின் இந்தப் பேச்சுக்கு, அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கண்டனம் தெரிவித்திருந்தார். பெரியாரின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பவர்களையோ, அவருடைய சிலையை சேதப்படுத்த நினைப்பவர்களையோ தி.மு.க. அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

  19. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் 'சனாதன தர்மம்' படிப்பு துவக்கம்

    உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சனாதன தர்மம் பற்றிய படிப்பு தொடங்கியுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் உமர் சலீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "அலிகார் பல்கலைக்கழகத்தில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் வந்து படிக்கிறார்கள். அதனால், இஸ்லாமிய படிப்புகளுக்கான பிரிவில் எம்.ஏ சனாதன தர்மம் படிப்பை தொடங்கியுள்ளோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. நேட்டோவில் பின்லாந்து, ஸ்வீடன் இணைய அமெரிக்கா ஒப்புதல்

    நேட்டோ

    பட மூலாதாரம், Getty Images

    நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

    முன்னதாக, நேட்டோ அமைப்பில் பின்லாந்து, ஸ்வீடன் இணைந்தால், ரஷ்யா தகுந்த பதிலடி அளிக்கும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்தார். இந்நிலையில், இந்த இரு நாடுகளும் இணைய அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளதாக ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது.