You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இராக்கில் உள்ள துருக்கிய தூதரகம் மீது தாக்குதல்: துருக்கி கண்டனம்

இராக்கின் மொசூல் நகரில் உள்ள தனது தூதரகம் மீதான தாக்குதலுக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூதரக அதிகாரிகளுக்கும் தூதரக பணிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது இராக்கின் பொறுப்பு மற்றும் கடமை ஆகும் என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பிரசாந்த் முத்துராமன்

  1. சாலையில் சென்றுகொண்டிருந்த காரை துரத்திய யானை

  2. படிப்பைத் தொடர முடியாததால் +2 முடித்த மாணவி தற்கொலை

    விழுப்புரம் மாவட்டம் எஸ்.பில்ராம்பட்டு கிராமத்தில் திருமணம் செய்து கொண்டு கல்லூரி படிப்பினை தொடர பெற்றோர்கள் கூறியதால் திருமணத்தில் விருப்பம் இல்லாத மாணவி தன்னால் படிக்க முடியவில்லை என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எஸ்.பில்ராம்பட்டு பகுதியை சேர்ந்த நல்லேந்திரன், சுதா தம்பதியர். இவர்கள் இருவருமே விவசாய கூலி மற்றும் செங்கல் சூளையில் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முதல் இரண்டு மகன்களும் கல்லூரி முடித்துவிட்டு வேலை செய்து வருகின்றனர்.

    மூன்றாவதாக இருக்கும் மகள், கண்டச்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் படித்து முடித்துள்ளார். இதனிடையே மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்த மகளை மேற்கொண்டு படிக்க வைக்க முடியாத சூழலில் பெற்றோர் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் மாணவிக்கு, பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பாக திருமணம் செய்து கொண்டு மேல்படிப்பைத் தொடர பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் திருமணத்தில் விருப்பம் இல்லாத அவர் தன்னால் மேற்படிப்பு படிக்க முடியவில்லை என்ற மன வேதனையில் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

  3. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அரிய பொருட்கள் கண்டுபிடிப்பு

    ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் இரும்பாலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த தொல்லியல் அகழாய்வு பணியின் போது தங்க காதணி, மண்டை ஓடு உள்ளிட்ட எலும்பு கூடுகள், தங்க நெற்றி பட்டயம் கண்டெடுக்கபட்ட நிலையில், தற்போது 3 மீட்டர் ஆழத்தில் 160 செண்டிமீட்டர் நீளமுள்ள இரும்பால் செய்யப்பட்ட நீளமான ஈட்டி போன்ற ஆயுதம், இடுக்கி போன்ற இரும்பு பொருளும், இதன் மீது நெல்லின் உமி படிமங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    அதே குழியில் இரும்பால் செய்யப்பட்ட பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரும்பு பாத்திரத்தில் நெல் உமிகள் ஒட்டிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு பொருள் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

    மேலும் ஒரு குழியில் உள்ள 135 செமீ நீளம் கொண்ட இரும்பால் செய்யப்பட்ட பாதாள கரண்டி எனப்படும் பொருளையும் கண்டெடுத்தனர். சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் பொருட்கள் கிணறுகளில் தவறி விழுந்தால் அதை எடுப்பதற்கு இந்த பாதாள கரண்டியை பயன்படுத்தி உள்ளதாக அகழ்வராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

  4. கள்ளக்குறிச்சி மாணவி மரண "விசாரணையில் குறைபாடு உண்டு" - தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

    கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விசாரணையில் சில குறைபாடு இருப்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக, உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடமும் பள்ளியிலும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை செய்து வருகின்றது.

    முதலில், பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள உயிரிழந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து ஒரு மணி நேரம் விசாரணை செய்த பின்னர், மாணவி உயிரிழந்த, பள்ளி விடுதிக்கு விசாரணைக்காக சென்றனர்.

    வேப்பூரில் உள்ள உயிரிழந்த மாணவி வீட்டில் விசாரணை செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங் கானூங்கோ கூறியதாவது, "பெற்றோருடன் பேசினோம். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை செய்ய உள்ளோம். மாணவி மரணம் தொடர்பான விசாரணையில் முகாந்திரமாக சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. மேற்கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக மாணவி தங்கியிருந்த விடுதியில் விசாரணை செய்ய உள்ளோம். மேலும் ஆரம்பத்தில் இருந்து இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், விசாரணை அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்டோரை சந்தித்து விசாரணை செய்த பிறகு முழு அறிக்கையை சமர்ப்போம்," என்று தெரிவித்துள்ளார்.

  5. கச்சநத்தம் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு... பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு

    சிவகங்கை நீதிமன்றத்தில் கடந்த நான்கு வருடங்களாக நடந்து வந்த கச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கில் இன்று தீர்ப்பையொட்டி, கச்சநத்தம் கிராமம்,சிவகங்கை நீதிமன்ற வளாகம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஆதிதிராவிட சமூகத்தினர் அதிகம் வசித்து வலுகின்றனர். இக்கிராமத்திற்கு அருகே உள்ளது ஆவாரங்காடு கிராமம்.

    இந்த இரண்டு கிராமத்தினர்களுக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 28 .5.2018 அன்று கச்சநத்தம் கிராம கோவிலில் திருவிழா நடந்தது.

    திருவிழாவின் போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் எழுந்து, பின் ஆவரங்காடு கிராம இளைஞர்கள் மீது பழையனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நள்ளிரவு கச்சநத்தம் கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, பலரையும் வெட்டினர்.

    மேலும் வீட்டில் உள்ள பொருட்களையும் அடுத்து நொறுக்கிவிட்டு தப்பியோடினர்.இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூன்று பேர் பலியாயினர்.

    இச்சம்பவம் தொடர்பாக பழையனூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த நான்கு வருடங்களாக நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.

    தீர்ப்பையொட்டி, திருப்புவனத்தில் இருந்து கச்சநத்தம் கிராமம் வரை மானாமதுரை காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  6. சிவகங்கை: பெற்றோர் திட்டியதால் மாணவர் தற்கொலை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் சுடர் ராஜ்-மேகலா தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுடைய இளைய மகன் செல்வகுமார் சாக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரனா தொற்று காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது பள்ளிகள் திறந்த நிலையில் மாணவன் சரியாக படிக்கவில்லை என தெரியவருகிறது.

    இதனால் பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது மாணவனின் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சாக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  7. கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி நிர்வாகிகளை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை

    சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக கைதான ஐந்து பேரை சிபிசிஐடி போலீசார் அழைத்துச் சென்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கணியாமூர் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி மரணமடைந்தார்.

    மாணவி மரணம் தொடர்பாக சம்பவம் நடைபெற்ற பள்ளித் தாளாளர் ரவிக்குமார் மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன் , பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

    இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து இன்று அதிகாலை 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறையில் இருந்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சிபிசிஐடி போலீசார் அழைத்துச் செல்லப்பட்டனர்.

  8. பலூன்கள் பறக்க முதல்முறையாக குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தடை

    செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ஜூலை 28-ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் நரேந்திரமோதி பங்கேற்று போட்டியைத் தொடக்கி வைக்கிறாா். அன்று தமிழ்நாடு ஆளுநா் மாளிகையில் தங்கும் பிரதமா் மோதி, மறு நாள் ஜூலை 29-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

    பிரதமா் நரேந்திர மோதி வருகையையொட்டி, சென்னையில் இரு நாள்கள் பலூன்களை பறக்கவிடுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் காவல்துறை தடை விதித்துள்ளது.

    பலூன்கள் பறக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப் படுவது இதுவே முதல் முறை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இத்துடன் இன்றைய நாளில் கவனிக்க வேண்டிய செய்திகளை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

  9. சென்னை வந்த சர்வதேச சதுரங்க வீரர்கள்

    இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெறுவதற்காக சர்வதேச சதுரங்க வீர்ரகள் சென்னை வந்துள்ளனர். பல்வேறு நாடுகளிலிருந்து தொடர்ந்து வீரர்கள் வந்த வண்ணமே உள்ள நிலையில், தங்கள் வருகையை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.

  10. 19 எம்.பிக்கள் இடைநீக்கம்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு அவைகளிலுமே விலையேற்றம், ஜிஎஸ்டி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வலியுறுத்தி தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சியினர் குரலெழுப்பி வருகின்றனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் (ஜூலை 25) மக்களவையில் 4 எம்.பிக்கள் இடநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று (ஜூலை 26) மாநிலங்களவையில் திமுக எம்.பிக்கள் 6 பேர் உட்பட 19 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் நடத்தப்படும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடாளுமன்றம் அருகேயுள்ள விஜய் சௌக் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

  11. சிவகாசியில் பள்ளி மாணவி மரணம்

    சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி பகுதியில், பள்ளி சென்று வீடு திரும்பிய 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரும் இவரது மனைவியும் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களது இரண்டாம் மகள் அய்யம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு மாணவி வந்துள்ளார்.

    பின்னர், மாணவியின் பாட்டி வெளியே சென்று வீடு திரும்பிய இடைவெளியில், அதற்குள்ளாக மாணவி தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து மாறனேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அய்யம்பட்டி பகுதியில் பள்ளி சென்று திரும்பிய மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  12. வணக்கம் நேயர்களே!

    ஜூலை 26ஆம் தேதிவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    • திருச்சியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.
    • எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்க மாட்டார் என்று இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் ராஜிவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
    • கரூரில் 44 ஆவது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தொடர்புடைய விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
    • மக்களவையில் அவை அலுவலுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட நால்வர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு மறுதினமே மாநிலங்களவையில் இருந்து 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    • நெல்லை அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். பெற்றோர் கைபேசி கொடுக்காத கவலையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை புதன்கிழமை மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.
  13. வணக்கம் நேயர்களே!

    நான் பிரசாந்த் முத்துராமன். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய தினம் நாடாளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தமிழ்நாடு செஸ் ஒலிம்பியாட் விவரங்கள் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் ட்விட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலைப்பக்கத்தைஇந்த இணைப்பில்பார்க்கலாம்