You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இராக்கில் உள்ள துருக்கிய தூதரகம் மீது தாக்குதல்: துருக்கி கண்டனம்

இராக்கின் மொசூல் நகரில் உள்ள தனது தூதரகம் மீதான தாக்குதலுக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூதரக அதிகாரிகளுக்கும் தூதரக பணிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது இராக்கின் பொறுப்பு மற்றும் கடமை ஆகும் என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பிரசாந்த் முத்துராமன்

  1. செஸ் ஒலிம்பியாட்: மோதி படத்துடன் தயார் நிலையில் மேடை - கடைசி நேர பரபரப்பு

  2. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.

    இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:

    • நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர் அமளி காரணமாக திமுக எம்.பிக்கள் 6 பேர் உட்பட 19 எம்.பிக்கள் இடைநீக்கம்
    • செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழாவுக்காக பிரதமர் நரேந்திர மோதி நாளை சென்னை வருகை
    • எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    • மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் 4 காங்கிரஸ் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
    • தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தொடர்பாக அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது.
    • பாஸ்போர்ட் மோசடி தொடர்பான வழக்கில் டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
    • இராக்கின் மொசூல் நகரில் உள்ள தனது தூதரகம் மீதான தாக்குதலுக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • பாலியல் குற்ற நிகழ்வுக்கு ஆண் பாலியல் இச்சைக்கு அடிமையாவதால், ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கிவிட்டது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.

  3. "டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர்" - பாஸ்போர்ட் வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவு

  4. செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழச்சி - காங்கிரஸ் கமிட்டி புறக்கணிப்பு

    பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, அக்னிபத் திட்டம், முறையற்ற ஜி.எஸ்.டி வரி போன்ற மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு துணை போகும் ஒன்றிய அரசுக்கு எதிராக இந்த போட்டி நிகழ்ச்சிகளை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த புறக்கணிப்பு ஜனநாயகத்திற்கு விரோதமான அரசை நடத்தும் பிரதமர் மோதிக்கு எதிரானது தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிராக அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  5. விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆலங்குளம் பகுதியில் உள்ள வளையப்பட்டி கிராமத்தில் துலுக்கன்குறிச்சியைச் சேர்ந்த தவிட்டுராஜன் (48) என்பவருக்கு சொந்தமான முத்துமீனா பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலை 25 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள், சுமார் 10க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது உராய்வினால் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விசாரணையில் உயிரிழந்தவர் திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன், மற்றும் காயமடைந்தவர் வெம்பக்கோட்டை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த பவானிஸ்வரன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  6. பாஸ்போர்ட் மோசடியில் டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

    பாஸ்போர்ட் மோசடி தொடர்பான வழக்கில் டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்த மோசடி நடந்த காலத்தில், மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என்றும், மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்கள் வரை மட்டுமே தொடர்பிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

    மேலும், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டியதோடு அவர் இல்லையெனில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிடப்பட்டது.

  7. தமிழ்நாட்டில் 2 வாரங்களில் 6 பள்ளி மாணவர்கள் மரணம்

    தமிழ்நாட்டில் 2 வாரங்களில் 6 பள்ளி மாணவர்கள் மரணம் - தற்கொலையாக வழக்குப்பதிவு. தொடர் மரணங்களுக்கு என்ன காரணம்?

    பிபிசி தமிழ் ட்விட்டர் பக்கத்தில் உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு - இருவர் உயிரிழப்பு

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். இந்த சீசனை அனுபவிப்பதற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்ததின் காரணமாக பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து வரத் துவங்கியது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்து சென்றனர். இந்த நிலையில் இன்று மாலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால பிரதான அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அருவியில் குளித்திருந்த பண்ருட்டியை சேர்ந்த கலாவதி (55) சென்னையைச் சேர்ந்த மல்லிகா (35) ஆகிய இருவரையும் தண்ணீர் அடித்து செல்லப்பட்டது. இவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

  9. "பெண் மீதான பாலியல் இச்சை ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கிவிட்டது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

    பாலியல் குற்ற நிகழ்வுக்கு ஆண் பாலியல் இச்சைக்கு அடிமையாவதால், ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கிவிட்டது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள கல்வெட்டாங்குழியில் வசித்து வரும் மணிகண்டன், கடந்த 2013ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று பேச்சிப்பாறை அணை கால்வாயில் குளிக்கச் சென்ற அதை பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் கால்வாயில் வைத்து பாலியல் வல்லுறவு செய்ய முயற்சி செய்துள்ளார். இதை அடுத்து அந்த பெண் கூச்சலிடவும் அதே கால்வாயில் தண்ணீரில் மூழ்கடித்து அந்த பெண்ணை கொலை செய்கிறார்.

    இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் கோரி மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி பி என் பிரகாஷ் , ஹேமலதா அடங்கிய அமரவு விசாரித்து தீர்ப்பளிக்கபட்டது.

    நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கால்வாயில் குளிக்கச் சென்ற பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற போது பெண் சத்தமிட்டதை அடுத்து அவரை கொலை செய்துள்ளார்.

    இந்த கொலையில் ஈடுபட்டதற்கான சாட்சிகள், ஆதாரங்கள் மருத்துவர் வாக்குமூலம் மற்றும் மருத்துவ சான்று தெளிவாக உள்ளது என்ற அடிப்படையில் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

    பெண் மீதான பாலியல் இச்சை காரணமாக ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கிவிட்டது.

    எனவே இந்த வழக்கில் நீதிமன்றம் குற்றவாளிக்கு தயவு தாட்சண்யம் காட்ட எந்த முகாந்திரமும் இல்லை. ஆகையால் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்கிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

  10. செந்தில் பாலாஜி: "அண்ணாமலை தைரியமானவராக இருந்தால் வழக்கு தொடரட்டும்"

  11. தமிழகத்தில் அதிகம் பொய் சொல்லக் கூடிய அமைச்சராக முதலமைச்சர் முதல் இடத்திலும், அடுத்த இடத்தில் செந்தில்பாலாஜி உள்ளார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

    தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்ப்பில் கரூரில் கண்டன ஆர்ப்பட்டம் இன்று நடைபெற்றது.

    இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில்,

    "மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த கடிதம் எழுதியுள்ளதாக செந்தில் பாலாஜி கூறுகிறார். அந்த கடிதத்தை செந்தில்பாலாஜி காட்ட வேண்டும்.

    மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் 20 சதவிகித கமிஷன் பெறுகிறார்கள். தமிழகத்தில் அதிகம் பொய் சொல்லக் கூடிய போட்டி வைத்தால் முதலமைச்சர் முதல் இடத்திலும், அடுத்த இடத்தில் செந்தில்பாலாஜி வெற்றி பெறுவார்.

    தமிழகத்தில் மின் உற்பத்தி திறனை அரசு குறைத்து, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி கமிஷன் பெறுகிறார்கள்.

    மே, ஜூன் 2 மாதங்களில் 4,600 கோடிக்கு தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி 4 சதவிகித கமிஷனாக 220 கோடி பெறுகிறார்கள். 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 54 சதவிகிதம் கட்டணம் உயருகிறது.

    மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஒவ்வொரு மாதமும் ஒரு பொய் சொல்கிறார். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 492 கோடிக்கு நிலக்கரி தமிழகத்தில் வாங்கப்பட்டுள்ளது.

    பணத்தை வைத்து ஜனநாயகத்தை விலை பேசும் அரசியல்வாதி தமிழகத்தில் இருக்க கூடாது." என்று தெரிவித்தார்.

  12. இராக்கில் உள்ள தனது தூதரகம் மீதான தாக்குதலுக்கு துருக்கி கண்டனம்

    இராக்கின் மொசூல் நகரில் உள்ள தனது தூதரகம் மீதான தாக்குதலுக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூதரக அதிகாரிகளுக்கும் தூதரக பணிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது இராக்கின் பொறுப்பு மற்றும் கடமை ஆகும் என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

    மொசூலில் உள்ள துருக்கியின் தூதரகம் ஜூலை 27 காலை தாக்கப்பட்டதாக அதன் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும் இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும் என இராக்கிடம் துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கூடிவரும் வேளையில், இராக்கின் கோரிக்கையை முன்வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது மேலும் கவலைக்குரிய விடயம் என வெளிவிவகார அமைச்சகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

    பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் கவனம் செலுத்தி அங்கிருக்கும் பயங்கரவாதிகளை ஒழிக்குமாறு இராக்கிடம் துருக்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

    சமீபத்தில், செவ்வாயன்று, ஈராக்கின் டுஹோக் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து கூட்டு விசாரணைக்கு துருக்கியும் இராக்கும் ஒப்புக்கொண்டுள்ளதாக பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்திருந்தது. இராக் ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கோரியிருந்தது.

    கடந்த ஜூலை 20 அன்று, இராக் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் ஒன்பது இராக்கிய சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு துருக்கி ராணுவம் தான் காரணம் என ஈராக் குற்றம் சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை துருக்கி நாடு மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  13. கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 'போலீசார் விசாரணையில் குறைபாடு'

  14. தமிழ்நாடு சித்த மருத்துவமனை பல்கலைக்கழக மசோதா: ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காதது ஏன்?

  15. தமிழ்நாடு: ஒரே நாளில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  16. திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்.

    மதுரையில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தேமுதிக சார்பில் ஆரப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக துணை பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகையில்," தமிழகத்தில் ஆளும் கட்சி திமுக அரசு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனால் தேர்தலில் கொடுக்காத வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.

    மின்கட்டணத்தை உயர்த்துவோம் என்று தேர்தலுக்கு முன்பு அவர்கள் சொல்லவில்லை. கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் மீது மத்திய-மாநில அரசுகள் வரி என்ற பெயரில் வலியை ஏற்படுத்துகின்றது. எதற்காக மக்களிடம் அதிக வரி வசூலிக்கிறீர்கள்.

    கலைஞருக்கு நினைவாக கடலில் பேனா சிலை வைப்பதற்கு 80 கோடி ரூபாய் செலவு என்கிறீர்கள். இந்த மாதிரி தனிப்பட்ட விஷயத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

    கலைஞர் நினைவாக ஏற்கனவே பல கோடி ரூபாய் செலவில் மெரினா கடற்கரையில் நினைவகம் அமைக்கப்பட்டது. இது போக நடிகர் சங்கத்தின் மூலம் கலைஞருக்கு நினைவாக ஏற்கனவே பிரம்மாண்ட பேனாவை கலைஞருக்கு வழங்கப்பட்டது. அதை மீறி ஒரு பேனா வைக்க வேண்டும் என்றால் திமுகவின் அறக்கட்டளை சார்பில் அண்ணா அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு மக்கள் வரிப்பணத்தில் சிலை வைப்பது எந்த வகையில் நியாயம்." என்று பேசினார்.

  17. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மரணம் - மேலும் 2 ஆசிரியர்களிடம் விசாரணை

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு தொடர்பாக, நீதிமன்ற காவலில் உள்ள பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் தவிர, மேலும் 2 ஆசிரியர்களை ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் இருந்த பள்ளியின் தாளாளர், செயலாளர் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளது. இதனை ஏற்று ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி ஒரு நாள் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென முன் வைத்த கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்துள்ளார்.

  18. சிங்கப்பூரில் கோட்டாபய ராஜபக்ஷ: மேலும் 14 நாட்களுக்கு விசா நீட்டிப்பு

  19. பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் - அரசாணை வெளியீடு

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தொடர்பாக அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளியில் (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) பயிலும் 1,14, 095 தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  20. அப்துல் கலாம் 7ஆம் ஆண்டு நினைவு தினம் - நினைவிடத்தில் பொது மக்கள் அஞ்சலி

    மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேக்கரும்புவில் அமைந்துள்ள தேசிய நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், விஞ்ஞானியாக உயர்ந்தார். அக்னி நாயகனான அவரின் திறமையை பாராட்டி இந்திய நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கலாம், மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். இந்நிலையில் கடந்த 2015 இதே நாளில் மறைந்தார்.

    இதனையடுத்து, ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்புவில் கலாம் தேசிய நினைவிடம் கட்டப்பட்டது.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலர் கலாம் நினைவிடத்தை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று காலை கலாம் குடும்ப உறுப்பினர்கள் கலாம் தேசிய நினைவகத்தில் உள்ள அப்துல் கலாமின் சமாதியில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் மலர் வளையம் வைத்த அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து பொது மக்கள், மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மேலும், கலாம் நினைவிடத்தில் துவக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட உள் கட்டமைப்புகளை தவிர மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மற்ற புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. குறிப்பாக அறிவுசார் மையம், டிஜிட்டல் நூலகம் உட்பட ஆராய்ச்சியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என பொது மக்கள் மற்றும் கலாம் குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.