கே.என்.நேருவின் கல்லூரிக்கு கடன்பாக்கி
காரணமாக ஜப்தி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், யார்
பணத்தில் ரூ. 5 கோடிக்கு கார் வந்தது என்று ப.குமார்
கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும்
தி.மு.க. அரசை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில்
மணப்பாறை பெரியார் சிலை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு
மாவட்ட செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ப.குமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார்
பேசும்போது, “மின் வாரியத்தை சீர்திருத்தம் செய்யுங்கள் என மத்திய அரசு
கூறியதற்கு ஏற்ப மின் உற்பத்தி நிலையங்களை மேம்படுத்தாமல், மின்
கட்டணத்தை உயர்த்தியுள்ளது விடியா தி.மு.க. அரசு. அடுத்த ஆட்சி அ.தி.மு.க. தான்.
நாடாளுமன்ற தேர்தலிலேயே மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறக்குமதியாக உள்ள, விலையே நிர்ணயம் செய்யாத, 5 கோடி ரூபாய் சொகுசு காரில் அமைச்சர் கே.ன்.நேரு செல்கிறார். அவரது கல்லூரிக்கு கடன்பாக்கி காரணமாக ஜப்தி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், யார் பணத்தில் ரூ.5 கோடிக்கு கார் வந்தது.
திருச்சி பஞ்சப்பூரில் புதிய பேருந்துநிலையம், திருச்சி மாநகராட்சியின் ரூ.50 கோடி மக்கள் வரி பணத்தில் ரூ.20 கோடிக்கு கிராவல் மண் நிரப்புவதாக டெண்டர் விடப்பட்டதை மறைத்து, திருச்சி குளங்களில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணைக் கொண்டு புதிய பேருந்து நிலையம் கட்ட அடித்தளத்திற்கான மண் நிரப்பப்படுகிறது.
கே.என்.நேருவின் இடங்கள், சொத்துக்கள் புதிய பேருந்துநிலையம் அமையவுள்ள இடத்தைச் சுற்றியுள்ளது. இவை அதிக விலைபோகும் என்ற கணக்கில் பாதுகாப்பில்லாத பேருந்து நிலையத்தைக் கொண்டுவரப் பார்க்கிறார். அவரது சுயநலத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியரும்மாநகராட்சி ஆணையரும் உடந்தையாகதுணைபோகக் கூடாது,” எனப் பேசினார்.
அதேபோல் முன்னாள் அமைச்சரும்மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். கையில் அரிக்கேன் விளக்கை ஏந்தியும்இனி இதன் விற்பனை சூடு பிடிக்கும் எனக் கூறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “மின் கட்டண உயர்வை நியாப்படுத்தி வருகிறார்கள். மின் உயர்வுக்கு மத்திய அரசு மீது பழியைப் போடுகிறார்கள்.
ஆட்சிக்கு வந்த பிறகு சொத்து வரி, மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து அடுத்ததாக விரைவில் பேருந்து கட்டணமும் உயரும். நிச்சயமாக அடுத்தது பேருந்து கட்டணம் உயரும்,” என்றார்.
மேலும், “நம்ம ஊர் அமைச்சர் மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார். அடுத்து ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துகிறோம் எனச் சொல்லி கொள்ளையில் ஈடுபடுவார். பொய்யை மட்டுமே எழுதிய கலைஞரின் பேனாவிற்கு கடலில் சிலை வைக்க வேண்டுமா?,” என்றார்.