டெல்லியில் குரங்கம்மை பாதித்தவருக்கு தொடர் சிகிச்சை - அதிகாரிகளுடன் எல்ஜி முக்கிய ஆலோசனை

மருத்துவ சேவைகள், மருத்துவமனை உள்கட்டமைப்பு, வைரஸ் பாதிப்போருடன் தொடர்பில் இருந்தவர்களின் அடையாளத்தை பின் தொடருதல், கண்காணிப்பு மற்றும் மருத்துவ வசதிகளை தயார்நிலை வைத்திருக்கும்படி அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் வினய் கே. சக்சேனா அறிவுறுத்தியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பிரசாந்த் முத்துராமன்

  1. பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பாம்புகள் பழிவாங்குமா?

  2. வணக்கம் நேயர்களே!

    ஜூலை 25ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • குடியரசு தலைவரால் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
    • “ஓபிஎஸ் உடன் சமரச பேச்சுவார்த்தைக்கு இடமே கிடையாது” என்று முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    • கனடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் திங்கள் கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
    • தேனி மாவட்டத்தில் அரசு நிலங்களை சட்டவிரோதமாக பட்டா போட்டு கொடுத்த வழக்கில் துணை தாசில்தார் மோகன் ராமுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
    • கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியை பெண்ணின் தந்தை வெட்டிக் கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட கடலோர பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு அளித்தனர்.

    பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில்அண்மைய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    முகப்பு பக்கத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்

  3. ரண்வீர் சிங் நிர்வாணப் படம் - போலீஸில் புகாரளித்த தன்னார்வ அமைப்பு

    ரண்வீர் சிங்

    பட மூலாதாரம், Ranveer Singh/Twitter

    பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் மீது சமூக வலைதளங்களில் நிர்வாண படங்களை வெளியிட்டு, பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    ஷியாம் மங்கரம் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், செம்பூர் காவல் நிலையத்தில் ஐடி சட்டத்தின் பிரிவு 67Aஇன் கீழ் இந்திய தண்டனைச் சட்டத்தின் 292, 293, 354 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு பெண்ணின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகவும், ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதித்ததாதவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    ஷியாம் மங்கரம் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செம்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட இந்த புகாரைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67A இன் கீழும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 292, 293, 354 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு பெண்ணின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகவும், ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதித்ததாகவும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  4. கனடாவில் துப்பாக்கிச்சூடு- பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல்

    கனடாவில் துப்பாக்கிச்சூடு- பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல்

    பட மூலாதாரம், Reuters

    கனடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் திங்கள் கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, அதிகாரிகள் முன்னதாக லாங்லி நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்தனர். குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவும் சம்பவம் நடந்த பகுதியிலிருந்து விலகியிருக்கவும் கேட்டுக்கொண்டனர்.

    ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் செய்தித் தொடர்பாளர் இந்தச் சம்பவத்தில், “பல பாதிக்கப்பட்டவர்கள்” இருப்பதாகக் கூறினார். ஆனால், எத்தனை பேர் என்ற விவரத்தைக் குறிப்பிடவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் இறந்துள்ளனர், எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்ற விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

    லோயர் மெயின்லேண்ட் பெருங்குற்றங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழுவிலிருந்து புலனாய்வாளர்கள் வரவழைக்கப்பட்டதாக மற்றொரு காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

    ராய்ட்டர்ஸின் நேரில் பார்த்த சாட்சி ஒருவர், துப்பாக்கிச் சூடு தளம் ஒன்றின் அருகே உள்ள ஒரு பள்ளத்தில், காவல்துறையின் அவசரகால பதிலளிப்புக் குழுக்கள் பயன்படுத்துவதைப் போன்ற இரண்டு கருப்பு எஸ்.யு.வி-களைக் கண்டுள்ளார். ஒரு வாகனத்தின் கண்ணாடியில் குண்டு துளைகள் இருந்தன.

  5. ஆற்றின் சுழலில் சிக்கிய புலி எதிர்நீச்சல் போடும் காணொளி வைரல்

  6. தன் குழந்தையுடன் ஆட்டோ ஓட்டும் பெண்ணின் போராட்டக் கதை

    காணொளிக் குறிப்பு, தன் குழந்தையுடன் ஆட்டோ ஓட்டும் ஜெய்ப்பூர் பெண்ணின் போராட்டமும் தன்னம்பிக்கையும்
  7. டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை - அதிகாரிகளுடன் எல்ஜி முக்கிய ஆலோசனை

    தலைநகர் டெல்லியில் குரங்கம்மை பாதிப்புக்கு ஒருவர் ஆளானதையடுத்து தலைநகரில் அந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் கே. சக்சேனா ஆலோசனை நடத்தினார்.

    இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், டெல்லி தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், டெல்லி பொது சுகாதார இயக்குநரக இயக்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் சேர்ந்து குரங்கம்மை தொடர்பாக ஆலோசனை நடத்தினேன் என்று கூறியுள்ளார்.

    மேலும், மருத்துவச் சேவைகள், மருத்துவமனை உள்கட்டமைப்பு, வைரஸ் பாதிப்போருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளத்தை பின் தொடருதல், பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் மருத்துவ நிர்வாக பணிகளுக்கு தேவையான வசதிகளை தயார்நிலை வைத்திருக்கும்படி கூட்டத்தில் அறிவுறுத்தினேன் என்று துணைநிலை ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

    மேற்கு டெல்லியின் பஸ்சிம் விஹாரை சேர்ந்த 34 வயது நபர், இரண்டு நாட்களுக்கு முன்பு லோக் நாயக் மருத்துவமனையில் சொறி அறிகுறியுடன் சேர்க்கப்பட்டார். அவர் தனக்கு இரண்டு வாரங்களாக நீடித்த காய்ச்சல் இருப்பதாக கூறியிருந்தார்.

    அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அவரது நண்பருக்கும் காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் அவரும் பரிசோனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. திருத்தணி: விவசாய கிணற்றில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் சடலம் மீட்பு

    விவசாய கிணற்றில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் சடலம் மீட்பு

    திருத்தணி நகராட்சியில் ஏரிக்கரை தெருவில் பாழடைந்த விவசாய கிணற்றில் பள்ளி மாணவர் சடலம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் திருத்தணி தீயணைப்பு துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் கொட்டும் மழையில் விவசாய கிணற்றில் இருந்த மாணவரின் சடலத்தை மூன்று மணி நேரம் போராடி வெளியே எடுத்தனர்.

    மாணவரின் உடலை திருத்தணி போலீசாரிடம் தீயணைப்புப் படை வீரர்கள் ஒப்படைத்தனர்.போலீசார் மாணவர் உடலை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த மாணவர் சூரிய பிரகாஷ் திருத்தணி காந்தி சாலையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இந்த விவசாய கிணற்றில் சக நண்பர்களுடன் குளிக்க வந்துள்ளார். இவருடன் குளித்த மற்ற நண்பர்கள் சூரிய பிரகாஷ் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். எதற்காக அவரது நண்பர்கள் தப்பிச் சென்றனர் என்ற விவரம் குறித்து தற்போது விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

  9. அரசு நிலங்களை சட்டவிரோதமாக பட்டா போட்ட வழக்கில் துணை தாசில்தாருக்கு ஜாமீன்

    தேனி மாவட்டத்தில் அரசு நிலங்களை சட்டவிரோதமாக பட்டா போட்டு கொடுத்த வழக்கில் துணை தாசில்தார் மோகன் ராமுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    தேனிமாவட்டம் பெரயகுளம்தாலுகா வடவீரநாயக்கன்பட்டி, தாமரைகுளம், கெங்குவார்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த ஆட்சியில் 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையோடு, அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட பலருக்கு முறைகேடாகபட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

    பெரியகுளம் கோட்டாட்சியர்களாக இருந்த ஆனந்தி, ஜெயப்பிரதா, தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, சர்வேயர்கள் பிச்சைமணி, சக்திவேல், விஏஓ சுரேஷ் குமார், அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்த அன்னப்பிரகாஷ், அதிமுக பிரமுகரின் உறவினர் முத்துவேல் பாண்டியன், அழகர், ரமேஷ்கண்ணன் உள்ளிட்டோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரிதுணை தாசில்தார் மோகன்ராம் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அரசுத் தரப்பில், மனுதாரருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிபதி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பலர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர் என்று கூறிமனுதாரருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

  10. கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதி வெட்டிக் கொலை – போலீசார் விசாரணை

    கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதி வெட்டிக் கொலை

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் ஆர்.சி தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50).

    இவரது மகள் ரேஸ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவரது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்னர் இருவரும் ஊருக்கு வந்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஊர் பஞ்சாயத்து மூலம் பேசி அவர்கள் இருவரையும் தனிக்குடித்தனம் வைத்துள்ளனர்.

    கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதி வெட்டிக் கொலை

    இந்நிலையில் இன்று மாலை ரேஷ்மா மற்றும் அவரது கணவர் மாணிக்கராஜாவும் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த முத்துக்குட்டி இருவரையும் சராமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக காவல்துறையினர் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.

    இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்தை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் அப்பகுதியில் விசாரணை நடத்தினார். மேலும் இது தொடர்பாக எட்டையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய முத்துக்குட்டியைத் தேடி வருகின்றனர்.

  11. மக்களவையில் 4 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு திமுக கடும் எதிர்ப்பு

    திமுக டி.ஆர். பாலு

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, டி.ஆர். பாலு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர்

    மக்களவையில் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தியதால் காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா கரிதாஸ், டி.என்.பிரதாபன் ஆகிய நான்கு பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் நடவடிக்கை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, "மக்களவைக்குள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக உறுப்பினர்கள் பல தருணங்களில் பதாகைகளை ஏந்தி குரல் எழுப்பியுள்ளனர்," என்று கூறினார்.

    கடந்த வாரம் அனைத்து கட்சி கூட்டத்திலும் சரி அவையிலும் சரி அக்னிபத் திட்டம், விலைவாசி உயர்வு, மீனவர்கள் பிரச்னை குறித்து பேசவேண்டும் என்று கூறினோம். அதை்ததானே இன்று நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்காமல் இடை நீக்கம் செய்வது எப்படி நியாயமாகும்? என்றார் டி.ஆர். பாலு.

    மக்களவையின் இத்தகைய முடிவு ஜநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று. இதுபோன்ற நிலை ஒத்துவராது. திமுக இந்த முடிவுக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறது. இடைநீக்கம் செய்யும் அளவுக்கு எம்பிக்கள் செய்தது பெரிய குற்றம் இல்லை என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

  12. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் - மீனவ மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் - மீனவ மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட கடலோர பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு அளித்தனர்.

    அப்போது மனு அளிக்க வந்த சோபியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலை மாசுவின் காரணமாக தூத்துக்குடியில் பாதிப்பு ஏற்பட்டது என்று தவறான தகவல்களைப் பரப்பியதால் நாங்கள் போராட்டத்திற்குச் சென்றோம்.

    இந்த ஆலையால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதால் கடலில் மீன்வளம் குறைவாக உள்ளது என்றும்எங்களிடம் தவறாக வதந்தி பரப்பப்பட்டது.

    ஆனால் கடந்த நான்கு வருடமாக ஆலை மூடப்பட்டுள்ள நிலையிலும் கடலில் அதே அளவு தான் மீன்வளம் கிடைக்கிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படவில்லை என்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம்.

    அது மட்டுமின்றி தூத்துக்குடி வாழ் மக்களுக்கு வேலை கிடைக்க ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

  13. “ரயில்வே நிர்வாகம் எடுக்கவேண்டிய முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” – உயர்நீதிமன்றம் மதுரை கிளை

    உயர்நீதிமன்றம் மதுரை கிளை

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் ரயில் பாதையின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கில், ரயில்வே நிர்வாகத்தினர் எடுக்க வேண்டிய முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    நாகர்கோவிலைச் சேர்ந்த அந்தோணி முத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இதுகுறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

    அதில், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் ரயில் பாதையின் குறுக்கே பேயன்குழி கிராமத்தில் இருந்து நுள்ளிவிளை கிராம ஊராட்சி சாலையை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக கள நிலவரத்தை ஆய்வு செய்து ரயில்வே நிர்வாகத்தினர் எடுக்க வேண்டிய முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

  14. விழுப்புரம்: தனியார் கல்லூரியில் மாடியிலிருந்து விழுந்த மாணவி

    விழுப்புரம்: தனியார் கல்லூரியில் மாடியிலிருந்து விழுந்த மாணவி

    விழுப்புரம் தனியார் கல்லூரியில் மாடியில் இருந்து விழுந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    விக்கிரவாண்டி அருகே தனியார் கல்லூரியில் முதல் தளத்திலிருந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எதற்காக விழுந்தார், ஏன் விழுந்தார் என்பது இதுவரை தெரியவில்லை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம் என்று காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் விழுப்புரம் கே.கே.ரோடு மணி நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் இளங்கலை மருந்தகவியல் முதலாமாண்டு பயின்று வருகிறார். வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவி திடீரென கல்லூரியின் முதல் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து கல்லூரியில் இருந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    விழுப்புரம்: தனியார் கல்லூரியில் மாடியிலிருந்து விழுந்த மாணவி

    அங்கு கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கல்லூரியில் மாணவி விழுந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வாயிலில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    "மாணவி எதற்காக விழுந்தார், எப்படி விழுந்தார் என்பது இதுவரை தெரியவில்லை. மாணவி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவர் தெளிவான பிறகு மாணவி விழுந்ததுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும்," என்று காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    மாணவி மாடியிலிருந்து கீழே விழுந்ததில் முதுகு விளா எலும்புகள் முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் கல்லூரி, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது விளக்கமளித்த அவர், "மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை. அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தற்போது மாடியிலிருந்து விழுந்த மாணவிக்கு உடலில் பலமாக அடிப்பட்டு ரத்த போக்கு அதிகமானதால், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சரியாக எந்த மாடியில் இருந்து விழுந்தார் என்பது தெரியவில்லை. மாணவி விழுந்ததை யாரும் பார்க்கவில்லை. தற்போது சிசிடிவி காட்சியைக் கொண்டு விசாரணை செய்து வருகிறோம்," என்று தெரிவித்தார்.

  15. "சிங்கங்கள் பாதுகாப்பு குறித்த மக்களவை கேள்விக்கான பதிலில் உச்சநீதிமன்ற உத்தரவு குறிப்பிடப்படவில்லை"

    "சிங்கங்கள் பாதுகாப்பு குறித்த மக்களவை கேள்விக்கான பதிலில் உச்சநீதிமன்ற உத்தரவு குறிப்பிடப்படவில்லை"

    பட மூலாதாரம், Getty Images

    மக்களவையில் ஆசிய சிங்கங்களின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் சிங்கங்களில் ஒரு பகுதியை குனோ காட்டுயிர் சரணாயலத்திற்கு இடம் மாற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு குறித்துக் குறிப்பிடப்படவே இல்லை என்று காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ரவி செல்லம் கூறுகிறார்.

    இன்று மக்களவையில், “ஆசிய சிங்கங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய அரசாங்கம் முயன்று வருவது உண்மையா?

    ஆசிய சிங்கங்களின் இடமாற்றத்திற்கு ஆதரவளிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள், அத்தகைய பாதுகாப்பு முயற்சிகளில் கணிசமான தாமதம் ஏற்பட்டுள்ளதா, அப்படியானால் அத்தகைய தாமதத்திற்கான காரணங்கள் ஆகிய விவரங்கள் என்ன?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் அஷ்வின் குமார் அளித்த பதிலில், “குஜராத்தில் சாத்தியமான இடங்களில் சிங்கங்கள் வாழக்கூடிய இடத்தின் பொருத்தத்தை மதிப்பிடுவதற்கும் இயற்கையான பரவலை எளிதாக்குவது தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கும் சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டது.

    "சிங்கங்கள் பாதுகாப்பு குறித்த மக்களவை கேள்விக்கான பதிலில் உச்சநீதிமன்ற உத்தரவு குறிப்பிடப்படவில்லை"

    பட மூலாதாரம், Lok Sabha

    குஜராத் மாநிலத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் சிங்கங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துதல், மக்களின் அதிக ஈடுபாடு, விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் திட்டங்கள், குறிப்பாக சிங்கங்கள் புதிதாக பரவியுள்ள பகுதிகளில் மக்கள் பங்கேற்பு மேலாண்மை அணுகுமுறையை குழு பரிந்துரைத்துள்ளது.

    வாழ்விட மேம்பாடு, நீர் மேலாண்மை, புல்வெளி மேம்பாடு, இரையைப் பெருக்குதல் உள்ளிட்ட சிங்கங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்காக குஜராத் மாநிலத்திற்கு அமைச்சகம் நிதியுதவி வழங்குகிறது. இந்த நடவடிக்கைகள் கிர் நிலப்பரப்பிற்கு வெளியே சிங்கங்களின் இயற்கையான பரவலை எளிதாக்கும்,” என்று கூறப்பட்டது.

    இதுகுறித்துப் பேசிய காட்டுயிர் உயிரியல் மற்றும் பாதுகாப்பு விஞ்ஞானியான ரவி செல்லம், “சிங்கங்களை குனோவுக்கு 6 மாதங்களுக்குள் இடமாற்றம் செய்யுமாறு ஏப்ரல் 2013-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவு அல்லது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உதவ உச்சநீதிமன்றம் நியமித்த குழு பற்றி இந்த பதிலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை,” என்று கூறுகிறார்.

    உச்சநீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு குனோ சரணாலயத்திற்கு மாற்ற வேண்டுமென்று உத்தரவிட்டது. இப்போது ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளை குனோ காட்டுயிர் சரணாலயத்திற்குக் கொண்டு வரும் திட்டத்திற்கான முயற்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  16. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல - தனியார் பள்ளி அறிவிப்பால் சர்ச்சை

    மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல

    கோயம்புத்தூரில் பீளமேட்டில் அமைந்துள்ளது ஜி.ஆர்.டி பப்ளிக் பள்ளி. ஜி.ஆர்.டி பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோரிடம் ஒரு படிவத்தைக் கொடுத்து கையெழுத்து வாங்குவது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

    பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு என்ன நடந்தாலும் அதற்கு நிர்வாகமோ ஆசிரியர்களோ பொறுப்பேற்க மாட்டார்கள். இதனால் ஏற்படும் பாதிப்பிற்கு இழப்பீடு கோர மாட்டோம் என இழப்பீட்டு மறுப்பு பத்திரம் வழங்கி கையெழுத்து கோரியுள்ளனர்.

    அந்தப் பத்திரத்தில், “நான் எந்தவொரு பாதிப்புகளுக்கும் பள்ளி நிர்வாகம், அதன் ஊழியர்கள், பிரதிநிதிகள் அல்லது பள்ளியால் நியமிக்கப்படும் எவரிடமும் இழப்பீடு கோரமாட்டேன்.

    மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல

    பள்ளியின் கட்டுப்பாட்டில் மாணவர் இருக்கின்றபோது ஏற்படக்கூடிய அபாயகரமான காயம் உட்பட எந்தவொரு காயம் அல்லது பாதிப்பிற்கும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் நானோ அல்லது பிற சட்டப்பூர்வ காப்பாளர்களோ இழப்பீடு கோர மாட்டார்கள் என ஒப்புக்கொள்கிறேன்.

    பள்ளி நிர்வாகமோ அல்லது அதன் ஊழியர்களோ எந்தவொரு இழப்பீடு தர வேண்டியதில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்,”எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    மாணவர்களின் பெற்றோர்களிடம் இத்தகைய படிவத்தில் பள்ளி நிர்வாகம் கையெழுத்து பெறுவது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் - குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லீனா

    லாவ்லீனா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, லாவ்லீனா

    டோக்யோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற லாவ்லினா போர்கோஹைன், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக மன உளைச்சலுக்கு தாம் ஆளாக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28ஆம் தேதி தொடங்குகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் தமது வேதனையை பதிவிட்டுள்ளார். அதன் விவரம்:

    இன்று எனக்கு நிறைய துன்புறுத்தல்கள் நடக்கின்றன என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூறுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற உதவிய எனது பயிற்சியாளர்கள்.

    எனது பயிற்சி மற்றும் போட்டியின் போது அவர்களை நீக்கி மீண்டும், மீண்டும் என்னை துன்புறுத்துகிறார்கள்.

    பயிற்சியாளர்களில் ஒருவரான சந்தியா குருங் ஜி துரோணாச்சார்யா விருது பெற்றவர். அவரே எனது பயிற்சியாளராக தொடர வேண்டும் என நான் விடுத்த கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதனஅ பிறகு எனக்கு வந்த பயிற்சியாளர்கள் இருவரும் மிகவும் தாமதமான நிலையில் பயிற்சி முகாமில் சேர்க்கப்பட்டனர்.

    இதனால் பயிற்சியில் பல சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. இத்தகைய போக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று லாவ்லீனா குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் எனது பயிற்சியாளர் சந்தியா குருங் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்துக்கு வெளியே இருக்கிறார். அவருக்கு நுழைவு அனுமதி கிடைக்கவில்லை. எனது பயிற்சி செயல்முறை எட்டு நாட்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது.

    எனது மற்ற பயிற்சியாளரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இப்படி இருந்தால் விளையாட்டில் நான் எப்படி கவனம் செலுத்துவது?

    இதனால் எனது உலக சாம்பியன்ஷிப் கனவும் கெட்டுப்போகிறது. இந்த அரசியலால் காமன்வெல்த் போட்டிகளை கெடுக்க விரும்பவில்லை. இந்த அரசியலை முறியடித்து என் நாட்டிற்காக பதக்கம் பெற முடியும் என்று இன்னமும் நம்புகிறேன். ஜெய் ஹிந்த் என்று லாவ்லீனா கூறியுள்ளார்.

  18. இளையராஜா எம்.பி பதவிப் பிரமாணம் எடுத்தபோது என்ன செய்தார்?

  19. இளையராஜா எம்.பி ஆனார் - சாதனை, சர்ச்சைகளுடன் 50 வருட திரைப்பயணம்

  20. “ஓபிஎஸ் உடன் சமரச பேச்சுவார்த்தைக்கு இடமே கிடையாது” – முன்னாள் அமைச்சர் சீனிவாசன்

    முன்னாள் அமைச்சர் சீனிவாசன்

    “ஓபிஎஸ் உடன் சமரச பேச்சுவார்த்தை என்பதற்கு இடமே கிடையாது. துரோகி ஓபிஎஸ் தரப்புக்கு இனி எப்போதும் அதிமுகவில் இடம் இல்லை,” என்று திண்டுக்கல்லில் நடந்த போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசியுள்ளார்.

    அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில் திண்டுக்கல் கல்லறை தோட்டம் பகுதியில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக பொருளாளரும்முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வு,மின் கட்டண உயர்வு, குடிநீர் வரி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    அப்போது, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது, “கல்லூரி மாணவர்கள் கல்லூரியை விட்டு மாலை நேரத்தில் டாஸ்மாக், கஞ்சா, போதை மாத்திரை பழக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதை எடப்பாடியார் சட்டசபையில் தெளிவாகக் கேட்டார். ஆனால் அதற்கு சரியான பதில் இல்லை. இப்போது கஞ்சா கல்லூரி மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கிறது. காவல்துறை கஞ்சா விற்பவர்களைக் கைது செய்து சொத்துகளை முடக்கி கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தனர். ஆனால் இப்போது ஒரு மணி நேரத்தில் கஞ்சா உடனே கிடைக்கும் அளவிற்கு மாணவர்களிடம் போதைப் பழக்கத்தை அரங்கேற்றி உள்ளது.

    சட்டம் ஒழுங்கு இந்த ஆட்சியில் கெட்டுப் போய்விட்டது. கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் உள்ளூர் காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் நன்றாகத் தெரியும். ஸ்காட்லாந்து போலீசாருக்கு ஈடான தமிழக காவல்துறை இருந்தாலும் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எதுவும் செய்யவில்லை.

    ஓபிஎஸ் ராஜா தேசிங்கு போல சென்று அதிமுக அலுவலகத்தை உடைத்து சூறையாடி அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்று விட்டார். இதற்கு காவல்துறை அவர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் என்பதால் பாதுகாப்பு கொடுத்ததாகச் சொல்கின்றனர். அவ்வாறு கல் வீச்சு சம்பவங்களுக்கு மத்தியில் அம்மா அலுவலகத்திற்குச் சென்றவர் அலுவலகத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு போய் தன் வீட்டில் வைத்துக் கொண்டார்.எடப்பாடியாருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது.

    அண்ணா திமுகவை காட்டிக் கொடுக்கும் நிலையில் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். ஒரே ஒரு பொதுச் செயலாளர் எம்ஜிஆர்-ஐ போல ஜெயலலிதாவை போல ஒற்றைத் தலைமை வேண்டும். இருவரையும் சமாதானப்படுத்துவதற்கு மேல் இடம் முயற்சி செய்கிறது என்கிறார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், சமாதானம் என்ற பேச்சு எடப்பாடி வாழ்க்கையில் கிடையாது. இனி சமரசப் பேச்சுக்கு இடமே கிடையாது. இனி துரோகி ஓபிஎஸ் கூட்டத்திற்கு அதிமுகவின் அனுமதியே கிடையாது.

    குறிப்பு:-கூட்டத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன் நீட் தேர்வு காரணமாக ஸ்ரீமதி இறந்ததாகக் கூறியது தவறு என்றும் அதை பத்திரிகையாளர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் இறப்பில் மர்ம மரணம் உள்ளது அதை விசாரிக்க வேண்டும் என்பதை மாற்றிக்கொள்ளவும் என்று கூட்டம் முடிந்தது பிறகு தெரிவித்தார்.